விவரங்கள் வழங்காத புள்ளி விவரங்கள் !! (கட்டுரை)
தமிழ் நாட்டுக் கவிஞர் ஒருவரது ‘கைகூ’ கவிதை ஒன்றை, அண்மையில் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
மனதில் அப்படியே ஆழமாகப் பதிந்துவிட்டது. உங்களோடும் பகிர்ந்து கொள்கின்றேன். ‘பொய், பச்சைப் பொய், புள்ளிவிவரம்’ என்பதே அதுவாகும். வெறும் மூன்று வரிகளில், அழகான கருத்தை, அற்புதமாகக் கவிஞர் சொல்லி உள்ளார்.
அப்படியே விடயத்துக்கு வருவோம். கடந்த 25ஆம் திகதி, கொழும்பு பத்திரமுல்லயில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில், ஆளுநரால் ஊடகவியலாளர் மாநாடு நடத்தப்பட்டது. அவர், அங்கு பல விடயங்களைத் தெரிவித்து உள்ளார்.
வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருக்கும் 75 சதவீதமான காணிகள் விடுவிக்கப்பட்டு உள்ளதாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் கூறியிருக்கும் கருத்து, தவறானது என ஆளுநர் தெரிவித்தார். மாறாக, அங்கு 92சதவீதமான காணிகள் விடுவிக்கப்பட்டு உள்ளன எனத் தெரிவித்தார்.
சரி அப்படியே இருக்கட்டும்! ஆனால், அவ்வாறாக ஆளுநர் தெரிவிப்பது உண்மையெனின், முழுமையாக (100சதவீதம்) வடக்கு மாகாணத்தில் படையினரின் பிடியில் சிக்கியிருக்கும் தமிழ் மக்களது காணிகளது விவரம் மிகத்தெளிவாக அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும்.
அவை வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் என வடக்கில் உள்ள ஐந்து மாவட்டங்களினது விவரங்களும் கிராம அலுவலர் மட்டத்திலிருந்து ஒவ்வொரு பிரதேச செயலகம் வாரியாக, மாவட்ட அடிப்படையில் தனித்தனியே வெளிப்படுத்தப்பட வேண்டும்.
அவற்றில் அரசாங்கத்தின் காணிகள், தனியார் காணிகள் என்ற வகைப்படுத்தலும் வேண்டும். முக்கியமாகத் தமது பரம்பரைக் காணியை இழந்து, நித்தம் துன்பத்திலும் ஏக்கத்திலும் தவிக்கும் தமிழ் மக்களால், அந்தப் புள்ளிவிவரங்கள் பரிபூரணமாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.
ஆகவே, இதுவரை விடுவிக்கப்பட்ட 92 சதவீதமான காணிகள் எவை, இன்னமும் விடுவிக்கப்பட வேண்டிய மிகுதி எட்டு சதவீதமான காணிகள் எவை என இலகுவாக அனைவராலும் கண்டறியக் கூடியதாக இருக்க வேண்டும்.
இவ்வாறான தெளிவுபடுத்தல்கள், வெளிப்படுத்தல்கள், இலகுபடுத்தல்கள் என்பன எவையுமே இல்லாது, வெறுமனே வடக்கில் 92 சதவீதமான காணிகள் இதுவரை படையினரால் விடுவிக்கப்பட்டு உள்ளன என்றால், அந்தச் செய்தியின் உண்மைத் தன்மையை எவ்வாறு அளவிடலாம்?
இதே வேளை, கடந்த 29ஆம் திகதி, ஆளுநரின் ஒழுங்குபடுத்தலில் ஆளுநரின் தலைமையில் முதல் முறையாக வடக்கு மாகாணத்தில் (வவுனியாவில்) பௌத்த மாநாடு நடத்தப்பட்டு உள்ளது. அங்கு வடக்கில் பௌத்த மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், மதங்களுக்கூடாக நல்லிணக்கப் பொறிமுறைகள் எனப் பல விடயங்கள் ஆராயப்பட்டு உள்ளன.
வவுனியா தெற்கில் மாநாடு (மதங்களினூடாக நல்லிணக்கம்) நடந்து கொண்டிருக்கும் அதேவேளையில், வவுனியா வடக்கில், பாரியளவில் காடுகள் அழிக்கப்பட்டு, பெரும்பான்மையினக் குடியேற்றங்களுக்கான ஏற்பாடுகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
பௌத்த மதத்தவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றிய மாநாடு நடந்து கொண்டிருக்கையில், இந்து, கிறிஸ்தவ மக்களது (வவுனியா வடக்கு வாழ் தமிழ் மக்கள்) பாதுகாப்பு முற்றிலும் கேள்விக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது.
வீட்டுத்திட்ட வேலைகளுக்காக சிறு தடி வெட்டினாலே காடழிப்பு எனத் தமிழ் மக்கள் மீது பாயும் சட்டம், தற்போது மௌனம் காக்கின்றது. மேலும் ஒரு மாவட்டத்தின் இரு முனைகளில் முற்றிலும் முரண்பாடுகள் நிறைந்த இரு விடயங்கள் அரங்கேறுகின்றன.
இவ்வாறாகத் தமிழ் மக்கள், கடந்த காலங்களில் இழந்த, தற்போது இழந்து கொண்டிருக்கின்ற, இனியும் இழக்கப்போகின்ற காணிகளது விவரங்கள் எங்கே கணக்கு வைக்கப்படுகின்றது?
தனி மனித கௌரவம், தனது இனத்தினுடைய கௌரவம், தனது மதத்தினுடைய கௌரவம் என்பன அடிப்படை மனித உரிமைகளில் முதன்மையானவை. நிம்மதி இழப்பதற்கான முதல் காரணமே, நிலத்தை இழப்பதாகும்; நிலத்தைத் தொலைத்தலே ஆகும்.
விவசாய விரிவாக்கம், நீர்ப்பாசன விரிவாக்கம், நகர விரிவாக்கம் எனப் பல்வேறு போர்வைகளில் 1948ஆம் ஆண்டு முதல் இன்று வரை, தொடர்ச்சியாகத் தமிழினம் தனது நில(சுய)த்தை இழந்து வருகின்றது.
தமிழ் மக்களது காணிகளைச் சிங்களப் படையினரோ, சிங்கள மக்களோ என எவர் ஆக்கிரமித்தாலும் அது அராஜகமும் அத்துமீறலுமாகும். இவை இரண்டையுமே தமிழ் மக்கள் ஒன்றாகவே பார்க்கின்றார்கள். எப்படி வேறுபடுத்திப் பார்ப்பது?
எனவே, கடந்த காலங்களில் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழ் மக்களது காணிகள் விடுவிக்கப்படுவது மட்டும் விடுவிப்பு அல்ல. மாறாகச் சிங்களக் குடியேற்றங்களும் விடுவிக்கப்பட வேண்டும். பெரும்பான்மையின குடியேற்றங்களுக்காக ஒர் இரவில் தங்கள் ஊரை விட்டு, வற்புறுத்தித் துரத்தப்பட்ட தமிழ் மக்கள் கூட, நாதியற்றவர்களாக இன்றும் அலைந்து வரும் சூழ்நிலையே தொடர்கின்றது.
தமிழ் மக்களது வேண்டுகைகள், வேண்டுதல்கள் இவ்வாறு இருக்கையில் மீண்டும் மீண்டும் பெரும்பான்மையின மக்களைக் கூட்டிவந்து, குடியேற்றங்களை நிறுவி, அத்துமீறல்களையே தமிழ் மக்கள் மீது அரசாங்கம் நடத்துகின்றது. தமிழ் மக்கள் தங்கள் பரிதவிப்புகளைக் கூறுகையில், அதற்குப் பதில்களைக் கூட வழங்காது, காரியமே கண்ணாகச் செயற்படுகின்றார்கள்.
மேலும், போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட 2009 மே மாதம் வரை, தமிழ் மக்கள் நன்கு அறிந்திராத தொல்பொருள் திணைக்களம், இன்று தமிழ் மக்களால் அச்சத்துடன் பார்க்கப்படும் திணைக்களமாக உருவெடுத்துள்ளது.
அடுத்து, வடக்கு மாகாணத்தின் உண்மையான நிலைவரத்தை அறிய, புலம்பெயர்ந்து உள்ள தமிழர்கள் மீண்டும் வடபகுதி வர வேண்டும் என வடக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அதற்கான வசதிகளைச் செய்து தருவதாகவும் தெரிவித்து உள்ளார்.
புலம்பெயர் தமிழர்கள் கோவில் விழாக்கள், நண்பர்கள், உறவினர்களின் சுப காரியங்கள், துயர காரியங்கள், ஏனைய வைபவங்கள் என்பவற்றில் கலந்து கொள்ளும் பொருட்டு வந்து செல்கின்றார்கள்.
இதனைவிட, இன்றைய தொழில்நுட்ப வசதிகள் மூலம், இங்குள்ள புதினங்கள் அங்கு சில நொடிகளில் சென்றடைந்து விடுகின்றன. ஆனால், ஆளுநர் கூறுவது போல இங்கு வந்து பார்க்க என்ன இருக்கின்றது?
முல்லைத்தீவு, கேப்பாபுலவில் தங்களுடைய பிறந்த மண்ணை மீட்க ஆண்டுக்கணக்கில் வீதியில் தவம் இருக்கும் மக்களைக் காணவா? தாங்கள் ஒப்படைத்த த(எ)ங்கள் உறவுகள் எங்கே என கிளிநொச்சியில் வீதியில் ஒப்பாரியிடும் அப்பாவி மக்களைக் காணவா?
மன்னாரில் தோண்டத் தோண்ட எலும்புக்கூடுகள் வந்தாலும் அது தமிழ் மக்களுடையவை அல்ல 300 ஆண்டுகளுக்கு மேற்பட்டவை என்ற அறிக்கையை பார்க்கவா? வவுனியாவில் வேகமாக சிங்களத்துக்கு உருமாறும் தமிழ்க் கிராமங்களைக் காணவா? வாள் வெட்டில் வாயடைந்(த்)துப் போயிருக்கும் யாழ்ப்பாணத்தைக் காணவா? இவை துன்பங்களின் சில துளிகள் மாத்திரமே ஆகும்.
அல்லது, இதனை விட மேலும் பல உடல், உளக் காயங்களுடன் கண்டு கொள்ளப்படாது இருக்கும் கிழக்கு மாகாணத்தைக் காணவா? இதுவே ஈழத்தில் தமிழர்களின் உண்மை நிலைவரம். இதனைத் தமிழ் மக்கள் சொல்வதே உண்மை; அதுவே செய்தி. நாங்கள் (தமிழ் மக்கள்) நன்றாக இருப்பதாக ஏனையோர் சொன்னால் அது வெறும் வதந்தி.
தமிழ் மக்கள் புறத்தே ஆனந்தமாக இருப்பதாகக் காணப்பட்டாலும் (காட்டிக்கொண்டாலும்) அகத்திலே அதிர்ந்து கொண்டே இருக்கின்றார்கள்.
இவ்வாறாகப் போருக்குப் பிந்திய பத்து ஆண்டு காலங்களில், தமிழ் மக்களது அபிலாஷைகள், உள்ளக்கிடக்கைகள் எவராலுமே கண்டு கொள்ள முயற்சிகள் கூட எடுக்காததே பெருந்துயரம் ஆகும்.
மூன்று தசாப்த யுத்தத்தை முடித்தவர்கள் என்று (தற்)பெருமை பேசுபவர்கள் ஒரு தசாப்த காலமாக (2009 – 2019) நல்லிணக்கம், தீர்வுத்திட்டம், புதிய அரசமைப்பு எனப் பல்வேறு வார்த்தை ஜாடைகளில் ஏமாற்றுகின்றார்கள். ஆனால் உண்மையில், இவர்கள் இவை எவற்றிலுமே, அக்கறை அற்றவர்கள் என்பதையும் தமிழ் மக்கள் நன்கு அறிவர்.
பொதுவாக ஏழைகள், நோயாளிகள், பலவீனமானவர்கள் போன்றோர் மீது அனைவருமே அன்பு பாராட்டுவார்கள்; பாராட்ட வேண்டும். இதனையே அனைத்து மதங்களும் போதிக்கின்றன. ஆனால், கொடூரப் போர் தந்த விளைவுகள், இன்று தமிழ் மக்களை மேலே உள்ள அனைத்து நிலைகளிலும் வாழ நிர்ப்பந்தித்துள்ளது. வாழ்க்கையினுள் துன்பம் துன்பத்துக்குள் வாழ்க்கை எனச் சக்கரம் போல சுழலுகின்றது.
Average Rating