சுள் வெயிலுக்கு ஜில் டிப்ஸ்!! (மருத்துவம்)
விரும்புகிறோமோ, இல்லையோ கோடைக்காலத்தை ஆண்டுக்கு ஒருமுறை சந்தித்தே ஆக வேண்டும். இதைத்தான் காலத்தின் கட்டாயம் என்கிறீர்களா? கடந்த சில ஆண்டுகளாக புவி அதிகம் வெப்பமடைவதை கவனித்து வருகிறீர்களா? தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதுதான் இதற்கான அறிகுறி. மறுபுறம் வெயிலால் ஏற்படும் உடல்ரீதியிலான பிரச்னைகளை சமாளிக்க முடியாமல் திணறி வருவதும் நிஜம்தானே.
அதுக்காக வீட்டுக்குள்ளே முடங்கி கிடக்க முடியுமா? வெளியே போய்த்தானே ஆகணும்? சரி.. கோடைக்காலத்தில் சில எளிதான டிப்ஸ்களை கையாள்வோமா?முதலில் வீட்டில் இருக்கும்போது பெரும்பாலும் ஒரு மணி நேர இடைவெளியில் மண் பானை நீர் அல்லது காய்ச்சி நன்கு ஆறிய நீரை அவ்வப்போது குடித்து வர வேண்டும். வெளியே செல்லும்போது கட்டாயம் ஒரு பாட்டில் தண்ணீர் எடுத்து செல்வதை கட்டாயம் ஆக்குங்கள். கடும் வெயிலில் உடலில் நீர்ச்சத்து குறைந்தாலோ, மயக்கம் வருவது போல தோன்றினாலே முதலுதவி போல இது உதவும்.
அன்றாடம் காலை எழுந்தவுடன் 2, 3 டம்ளர் தண்ணீரை பருகவும். குளிக்கும் முன் எலுமிச்சம்பழத்தை உடலில் தேய்த்து அரை மணி நேரம் குளிக்கவும்.
பெரும்பாலும் பிரிட்ஜில் வைத்த தண்ணீர், குளிர்பானங்களை அருந்துவதை விட, உடனுக்குடன் நீர்ச்சத்துள்ள பழங்களை வாங்கி சாப்பிடவும். பிரிட்ஜ் ஐஸ் கட்டிகளை பயன்படுத்துவதை கூட தவிர்ப்பது நல்லது. பெரும்பாலும் இளநீர், நீர் மோர் சாப்பிடுவது உடலை குளிர்ச்சியாக்கும். தர்பூசணி, லெமன் ஜூஸ் போன்றவைகளையும் எடுத்துக் கொள்ளலாம். சமையலை பொறுத்தவரை பாசிப்பருப்பு போன்றவைகளை அதிகம் பயன்படுத்தவும். பல்லாரியை விட சின்ன வெங்காயத்தை அதிகம் பயன்படுத்தவும். பூண்டு, வெந்தய குழம்பு வைத்தும் சாப்பிடலாம். உணவில் காரத்தை கூடுமானவரை குறைக்கவும். மோர் குழம்பு வைத்தும் சாப்பிடலாம். கூடுமானவரை நீர்ச்சத்துள்ள சுரைக்காய், பூசணிக்காய், பீர்க்கங்காயை உணவில் பயன்படுத்துவது சிறந்தது.
உச்சி முதல் பாதம் வரை
* கோடைக்காலத்தில் உச்சி முதல் பாதம் வரை உஷ்ணம் போட்டு தாக்கும். எனவே, தலைமுடி முதல் பாதம் வரை பராமரிப்பது சிறந்தது.
* வாரம் இருமுறை நல்லெண்ணெயை உச்சி முதல் உள்ளங்கால் வரை அழுந்த தேய்த்து ஊற வைத்து குளிக்கவும்.
* ஒரு ஸ்பூன் தேன், அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து காலையில் அருந்துங்கள். உடல் சூடு பெருமளவு தணியும்.
* குளிர்ந்த நீரில் பாதத்தை அரை மணி நேரம் வைக்கவும். இதன்மூலம் வெயிலால் ஏற்படும் பாத வெடிப்புகள் நீங்கும்.
* குளிர்ந்த நீரில் லேசாக பாலை கலந்து அதனை முகத்தில் தடவி சிறிது நேரம் உலர விடவும். இதனால் சருமம் பாதிப்படையாமல் இருக்கும்.
* தயிரில் ஊற வைத்த வெள்ளரித் துண்டுகளை சாப்பிட்டு வந்தால் உடல் சூடும் குறையும்.
* இரவு வெட்கையால் தூக்கமின்மை பிரச்னை ஏற்படும். இதனால் ஏற்படும் கண்வளையத்தை தவிர்க்க, விளக்கெண்ணெயில் ஒரு ஸ்பூன் மஞ்சள் பொடி, சிறிது உப்பை கலந்து கண்களை சுற்றித் தடவி வந்தால் கருவளையம் காணாமல் போகும்.
* ஆண்களோ, பெண்களோ வெளியில் செல்லும்போது முடி பாதிப்படையாமல் இருக்க தொப்பி அணியவும்.
Average Rating