என்னது கல்யாணமா… அலறி ஓடும் இளைய தலைமுறை!! (மருத்துவம்)
திருமணம் என்பது ஓர் ஆணும், ஒரு பெண்ணும் இணைந்து இல்லறம் மேற்கொள்ள நடத்தப்படும் ஒரு வாழ்க்கை ஒப்பந்தம். மனிதனால் மனித சமுதாயத்தின் நலன் கருதிப் படைத்துக் கொள்ளப்பட்ட ஒரு ஒழுக்க முறை. பழங்காலத்தில் அது பொருளாதார ஏற்பாடாக இருந்தது. அதுவே பின்னர், ஆண், பெண் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பு மற்றும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திக்கொள்ளும் ஒரு வழியாக உருவானது.
தற்போது, ‘மில்லினியல்ஸ்(Millennials 1980-90-களில் பிறந்தவர்கள்) திருமணமே செய்து கொள்வதில்லை அல்லது மிகத் தாமதமாக திருமணம் செய்து கொள்வது என்று ஒரு புது கலாச்சாரத்தை உருவாக்கியிருக்கின்றனர்.மனநல ஆலோசகர் சித்ரா அரவிந்திடம் இதுபற்றிப் பேசினோம்…
‘‘18-ம் நூற்றாண்டில் குழந்தை திருமணத்தை தடை செய்யும் வகையில் ஆண்களின் திருமண வயது 18 ஆகவும், பெண்ணிற்கு 15 ஆகவும் நிர்ணயித்து, ‘சாரதா சட்டம்’ கொண்டு வரப்பட்டது. அதன்பின் திருமண வயது ஆணுக்கு 21 ஆகவும், பெண்ணுக்கு 18 ஆகவும் சட்டப்படி உயர்த்தப்பட்டது. பின்னர் 19-ம் நூற்றாண்டின் இறுதியிலேயே திருமணம் செய்துகொள்ளும் வயது படிப்படியாக உயர ஆரம்பித்து.
தற்போது, 40 வயதில் வந்து நிற்கிறது. சமீபத்திய Urban Institute வெளியிட்ட சர்வே அறிக்கையின்படி, 40 வயது ஆகியும், திருமணம் செய்து கொள்ளாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதாகக் கூறப்பட்டுள்ளது. இன்னும் போகப்போக திருமணம் செய்து கொள்பவர்கள் எண்ணிக்கை 70 சதவிகிதம் வரை குறைந்துவிடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 தலைமுறையினரைவிட 20 சதவிகிதம் குறைந்துள்ளது. ‘வரலாற்றிலேயே திருமண விகிதத்தில் இது மிகப்பெரிய வீழ்ச்சி’ என PEW என்னும் ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.
ஆராய்ச்சியெல்லாம் ஒரு புறமிருக்க பெற்றோரின் வற்புறுத்தலுக்கு பயந்து, திருமண வயதில் இருக்கும் இளைஞர்கள் குடும்பத்தைவிட்டே வெளியேறி தனியாக வாழ்க்கை நடத்தி வருவது சகஜமாகிவிட்டதையும் பார்க்க முடிகிறது. மேலும், சில மாதங்களுக்கு முன்பு, தன் பெற்றோர் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதற்காக கல்லூரி ஆசிரியை ஒருவர் தற்கொலை செய்து கொண்ட ஒரு சம்பவம் நம்மை மேலும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
திருமண அமைப்பை இன்றைய தலைமுறையினர் தேவையில்லாத சுமையாகப் பார்க்கிறார்கள்.
இதற்கு பல்வேறு காரணங்களை அவர்கள் முன் வைக்கிறார்கள். முன்பு திருமணத்திற்கு முன்பான உறவை சமூகம் அனுமதிக்கவில்லை. இப்போது சமூக அங்கீகாரத்துடன் திருமணத்திற்கு முன் பல உறவுகள் வைத்துக்கொள்வது சர்வ சாதாரணமாகிவிட்டது. தவறான பாதையில் செல்லும் தங்கள் பிள்ளைகளை திருத்துவதற்காக திருமணம் செய்து வைத்த பெற்றோர் இருந்தார்கள். இப்போது தங்கள் பாதையில், பெற்றோர் தலையிடுவதை பிள்ளைகள் விரும்புவதில்லை. பெற்றோரும், பிள்ளைகளின் போக்கில் விட்டுவிடுகிறார்கள்.
பெருநகரங்களில் ‘லிவிங் டு கெதர் ரிலேஷன்ஷிப்’ கலாச்சாரம் தலைதூக்கி உள்ளது. பிடிக்கவில்லையென்றால் எந்த நேரத்திலும் பிரிந்து
விடலாம். இதுவே திருமண உறவில், ஒருவரை ஒருவர் பிடிக்கவில்லை என்றால், டைவர்ஸ் ஒன்றே தீர்வாக இருக்கும். திருமண முறிவால் வரும் ஏமாற்றங்கள், சோகங்கள் போன்ற மனக்குழப்பங்களையும் தவிர்க்கலாம். ஒரு பெண்ணோ, ஆணோ பலரோடு உறவில் இருக்க முடிகிறது. திருமணத்திற்குப் பிறகு, இம்மாதிரியான உறவை தொடர முடியாது. தவிர, தான் திருமணம் செய்து கொண்டிருப்பவர் உண்மையாக இருப்பாரோ, தன்னை ஏமாற்றிவிடுவாரோ என்ற சந்தேகம் வேறு.
மேலும் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்த காலக்கட்டத்தில் தங்களின் பாலியல் தேவைக்கு பல வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கும் நிலையில், இளைஞர்களுக்கு திருமணம் ஒன்றே பாலியல் தேவையை நிறைவற்றக்கூடிய வாய்ப்பாக இருப்பதில்லை. போதாததற்கு அரசாங்கமும் ஓரின திருமணம், கூடுதல் உறவு போன்ற ஆண், பெண் உறவு சம்பந்தமான சட்ட வரையறைகளை தளர்த்தியிருப்பது, இவர்களுக்கு இன்னும் சௌகர்யமாகிவிட்டது.
இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்திக் கொள்பவர்கள் எண்ணிக்கையும் பெருகிவிட்டது. லெஸ்பியன் திருமணத்தை அரைகுறையாக புரிந்துகொண்டு, தன் பால் சார்ந்த நண்பர்களுடன் வாழ முடிவெடுத்து, அந்த சட்டத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கிவிட்டார்கள்.
பெண்களைப் பொறுத்தவரை முன்பு பொருளாதார பாதுகாப்பிற்காக ஓர் ஆணை திருமணம் செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்கள். நவீன பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் கிடைத்துவிட்டது.
‘யாரையும் சார்ந்து வாழ வேண்டியதில்லை எனும்போது எதற்காக நாம் சம்பாதிப்பதை கொடுத்துவிட்டு, அவர்களது கட்டுப்பாட்டில் ஏன் இருக்க வேண்டும்’ என யோசிக்கத் தொடங்கிவிட்டார்கள். குறிப்பிட்ட வயதை தாண்டிய பெண்கள், மிக சௌகரியமான நிலைக்கு வந்துவிடுவார்கள். பிற குடும்பத்திற்குள் சென்று அவர்களோடு அனுசரித்து செல்லும் பக்குவம் குறைந்துவிடும்.
இத்தனை நாள் ஆண், பெண் பேதமில்லாமல், நேரம், கால கட்டுப்பாடின்றி நண்பர்களோடு ஊர் சுற்றுவது, அரட்டை அடிப்பது என்று ஜாலியாக இருந்துவிட்டு, திருமணத்திற்குப்பின் ஒருவருக்கு பதில் சொல்ல வேண்டுமே என்ற பயம் வேறு. குடும்பம் என்று வந்துவிட்டால், விட்டுக் கொடுத்துப் போவது, தன்னுடைய உடமைகளை பிறருடன் பகிர்ந்து கொள்வது, மற்றவரின் கருத்துக்களை ஏற்றுக் கொள்வது தன்னுடைய கருத்துக்களை பொறுமையாக எடுத்துச் சொல்வது என கடுமையான அனுசரிப்பு விஷயங்களை செய்ய வேண்டியிருக்கும்.
இவற்றையெல்லாம் சந்திக்கும் பொறுமையோ, சகிப்புத்தன்மையோ இன்றைய இளம் பெண்களிடம் இருப்பதில்லை. உறவை நீண்டநாட்கள் பேணிக்காக்க வேண்டும் என்பதற்காக சிறு முயற்சியும் செய்ய முற்படுவதில்லை’’ என்றவரிடம், திருமண மறுப்பு என்பதற்காக தற்கொலை வரை செல்லவேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியை முன் வைத்தோம்…
‘‘திருமணத்தின் மீது இத்தனை மாறுபட்ட கருத்துகளை கொண்டிருக்கும் இளைஞர்களிடம், இதையெல்லாம் மீறி பெற்றோராலோ, சமூகத்தாலோ திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தப்படும்போது கடும் மன அழுத்தத்திற்கு ஆளாகிவிடுகிறார்கள். இதன் காரணமாக தற்கொலைவரை கூட சென்றுவிடுகிறார்கள். செய்திகளை மட்டும் மேம்போக்காக பார்த்து சொல்லிவிட முடியாது. அவர்களின் தற்கொலை முடிவிற்குப் பின்னால் ஏகப்பட்ட
காரணங்கள் இருக்கலாம்.
ஒரு ஆணிற்கோ அல்லது பெண்ணிற்கோ ‘ஓரினச்சேர்க்கை’ போன்று பாலியல் சார்ந்த நாட்டம் மாறுபடலாம். அவர்களை திருமணத்திற்கு வற்புறுத்தும்போது, தங்கள் உறவில் இருப்பவர்களை மறக்க முடியாமல் மன அழுத்தத்திற்கு ஆளாவார்கள். சிலருக்கு தங்களிடம் இருக்கும் குறையை அவமானமாகக் கருதி ஒரு கட்டத்தில் தற்கொலை வரை சென்றுவிடுகிறார்கள்.
திருமணம் செய்து கொள்ளாத பெண்ணோ, ஆணோ இன்றளவும் சமூகம் சார்ந்த அழுத்தங்களுக்கு ஆளாவது குறையவே இல்லை. அவனுக்கு / அவளுக்கு ஏதாவது நோய் இருக்குமோ என்ற நண்பர்கள் அல்லது உறவினர்களின் கேலிப்பேச்சை சந்திக்கிறார்கள். தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, நண்பர்கள், உறவினர்களின் வாழ்க்கையிலும் சரி, பல காதல் தோல்விகள், மண முறிவுகளை சந்திக்கும் இன்றைய தலைமுறையினரிடம் நம்பிக்கை என்பது அடியோடு போய்விட்டது.
பெண்களுக்கு ஒருவனை நம்பி நம் வாழ்க்கையை ஒப்படைக்க வேண்டுமா? என்ற கேள்வி அவர்கள் முன்னால் நிற்கிறது. 30 வயதைத் தாண்டியவர்களுக்கு, அதற்குமேல் ஒருவரிடம் காதல் வருவதும் சாத்தியமில்லை; காதல் திருமணத்திற்கும் வாய்ப்பில்லை. பெற்றோர் நிச்சயிக்கும் திருமணம் என்றால், தன்னுடைய விருப்பத்திற்கேற்ற மற்றும் பொருளாதார நிலைக்கேற்ற துணை அமைவதும் அரிதாகிவிடுகிறது என்ற நிலை வரும்போதும் இவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.
மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் பெற்றோர்களிடமும் சொல்லாமல், வெளியே சமூகத்திற்கு தெரிந்துவிடும், இனிமேல் நம் வாழ்க்கை அவ்வளவு தான் என்று அஞ்சி, தற்கொலைக்கு முயல்கிறார்கள்.நாளுக்கு நாள் அதிகரித்துவரும் திருமண விவாகரத்துகள் இளைஞர்களிடையே பயத்தை ஏற்படுத்தியுள்ளன. குழந்தைப் பருவத்தில் தன் பெற்றோர்களின் மணமுறிவை பார்த்தவர்கள், பின்னாளில் தங்கள் மண வாழ்விலும் இத்தகைய சம்பவங்களை சந்திக்க நேரிடுமோ என்ற பயத்தினாலும் திருமணத்தை தவிர்க்கிறார்கள்.
இதில் பொருளாதாரம் மிகப்பெரிய பங்கை வகிக்கிறது. திருமண செலவு, அதன் பின் குடும்ப நிர்வாக செலவு, குழந்தையை வளர்க்கும் பொறுப்பு, குழந்தைக்கான படிப்பு செலவு என எல்லாமும் இன்றைய தலைமுறையினர் எதிர்கொள்ள வேண்டிய மிகப்பெரிய சவால்களாகிவிட்டன. இதனால் திருமணம் இவர்களுக்கு வாழ்க்கையின் இலக்காகத் தெரியவில்லை. மேற்கத்திய நாடுகளைப் போலவே, ‘நான் எதற்காக பொறுப்புகளை சுமக்க வேண்டும்? நான் சந்தோஷமாக அனுபவிப்பதற்கானது என் வாழ்க்கை’ என்று எண்ணுகிற போக்கு இன்றைய தலைமுறையினரிடம்
அதிகரித்துவிட்டது.
இதுவும் ஆபத்தான நிலைதான். அமெரிக்காவில் கடந்த 20 வருடங்கள் இல்லாத அளவிற்கு பிறப்பு விகிதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. வேகமாக குறைந்துவரும் பிறப்பு விகிதம் எதிர்கால அமெரிக்க தொழிலாளர் சக்தியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பொருளாதார வல்லுனர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலை நாட்டு நாகரிகத்தை கண்மூடித்தனமாக பின்பற்றும் நாமும் இதைச் சந்திக்கப்போகும் நாள் வெகு தொலைவில் இல்லை. 2030-ல் நம் நாட்டிலும் திருமணம் செய்துகொள்ளாதவர்களின் எண்ணிக்கை அதிகபட்சத்தை எட்டும். திருமண உறவு அல்லாத வெளி உறவு வைத்துக் கொள்வதில் தவறில்லை என்ற எண்ணமும் அதிகரித்து வருகிறது. இதைப்பார்த்து வளரும் எதிர்கால சந்ததியினரும் இதே எண்ணத்தில் உருவாகின்றன.
இதன் தாக்கம் குழந்தைகளிடத்தில் மனநலப் பிரச்னைகளை உருவாக்கும். மாற்றத்தின் ஆரம்ப நிலையில் இருக்கும் இந்தகாலக்கட்டத்தை அபாய எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு, விழித்துக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம்’’ என்கிறார்.
‘சிங்கிளாக இருக்கிறேன்’ என்று சொல்லிக்கொண்டு தன்னுடைய பிரச்னைகளை யாருடனும் பகிர்ந்து கொள்ள முடியாமல், தனிமையில் விடப்பட்டு, அன்பிற்கு ஏங்கி மனநலப் பிரச்னையில் சிக்கிக் கொள்பவர்கள்தான் அதிகம். யாருடன், எங்கு சுற்றினாலும், வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் அன்பை பகிர்ந்து கொள்வது குடும்ப உறவாக மட்டுமே இருக்க முடியும் என்பதை இந்த தலைமுறையினர் புரிந்து கொள்ள வேண்டும்!
Average Rating