அழகான கூடு!! (மகளிர் பக்கம்)
வீடு என்பது அழகானதாக மட்டுமில்லாமல் சுகாதாரமாகவும் இருக்கவேண்டும். உண்மையில் வீட்டின் சுகாதாரம் நம் குளியலறையிலிருந்து தான் தொடங்குகிறது. எவ்வளவுதான் வீட்டை அழகுபடுத்தி வைத்திருந்தாலும், குளியலறை சரிவர பராமரிக்கப்படவில்லையென்றால் வீட்டிற்குள் நுழையவே முடியாது. முன்பெல்லாம் வீட்டிற்குப் பின்புறம் தான் குளியல் இடம் இருக்கும். காலைக்கடன்களை வெகுதூரத்திற்கு நடந்து சென்று முடித்து வருவர். பின் வீட்டிற்குள் ஓர் இடத்தில் குளியல் அறை, கழிப்பறை போன்றவை அமைக்கப்பட்டன.
ஆனால் இப்பொழுதோ ‘அட்டாச்ட் பாத்ரூம்’ என்ற நிலைமைதான். என்ன செய்ய? நகரங்களில் இடப்பற்றாக்குறை. அடுக்கு மாடிக் கட்டடங்கள் என்ற நிலை வந்த பிறகு அறையுடன் ஒட்டிய குளியலறைதான் அவசியம் என்ற மாற்றம் ஏற்பட்டு விட்டது. அதோடு மட்டுமில்லாமல் நம் நேரத்தையும் நடையையும் மிச்சப்படுத்த அறையுடன் ஒட்டிய குளியலறைதான் தேவைப்படுகிறது. அதனால்தான் வீட்டைப் பார்த்தவுடன் ‘அட்டாச்ட்’ இல்லையா என கேட்கத் ேதான்றுகிறது.
இப்படி நம் வீட்டின் உள்ளே அறைக்கு நெருக்கமாக இருக்கும் குளியலறை சுகாதாரத்துடன் இருக்க வேண்டாமா? குளியலறை என்றவுடன் நாம் முதலில் பார்க்க வேண்டியது அதன் தரைதான். பொதுவாகவே நீர் புழங்கும் இடம் குளியலறை, அந்த இடத்தில் மிகவும் வழுவழுப்பான தரையாகயிருந்தால், பராமரிப்பு மிகவும் கடினம். எனவே குளியலறையைப் பொறுத்தவரை ரொம்பவும் வழுக்காத டைல்ஸ் போடலாம்.
குறிப்பாக குழந்தைகள், பெரியவர்கள் பயன்படுத்தும் குளியலறை என்றால் நாம் சிறிது இவற்றை யோசித்துப் பின் செயலாக்கலாம். ஒருக்கால் குளியலறை சரியில்லாமல், வழுக்கும்படி இருந்தால் அதில் இரட்டை கவனம் தேவை. குளித்து முடித்து, துணிகள் துவைத்து முடித்து வேலைகள் முடிந்துவிட்டால், தரையை நன்கு துடைத்து காயவிட வேண்டும். முக்கியமாக காற்றோட்டம் இருக்க வேண்டும். மிகவும் சிறிய அறையாக இருந்தாலோ, காற்றோட்ட வசதியில்லாமல் இருந்தாலோ, மேலே சுவரில் ஒரு எக்ஸாஸ்ட் ஃபேன் போட்டு வைக்கலாம்.
இப்பொழுது கட்டும் புதிய வீடுகளில் பெரும்பாலும் சுவர் முழுவதும் டைல்ஸ் போடுகிறார்கள். பார்க்கவும் அழகு. பராமரிப்பதும் சுலபம். பாத் டப் வைத்திருப்பவர்கள் அதன் பராமரிப்பிலும் கவனம் செலுத்துவது அவசியம். சோப்பு ஓரங்களில் வழுவழுப்பு அடையாமல் பார்ப்பதும் அவசியமாகிறது. அவ்வப்பொழுது சுத்தம் செய்து பளபளவென்று வைத்தால்தான், பார்க்க அழுக்கின் சுவடே தெரியாமல் இருக்கும்.
அதே போல் வாஷ்பேஸினை தினமும் சுத்தப்படுத்த வேண்டும். நம் கண்களுக்குப் புலப்படாத ஓரங்களில் அழுக்கு அடையும். முதலில் ஓரங்களையும், அடிபாகத்தையும் சுத்தம் செய்து பின் மேலே குழாயுடன் சேர்த்து அலம்ப வேண்டும். வாஷ்பேஸின் மேலே சுவர், இருபுறமும் சுவர் பகுதி மற்றும் அடிப்பாகம் முழுவதையும் அலம்ப வேண்டும். இல்லாவிடில் அடிப்பாகங்களில் கிருமி உண்டாக வாய்ப்புண்டு. ஒட்டடையும் சேரும்.
சுத்தப்படுத்திய பின் அதனுள் வாசனைப் பொருட்கள் போட்டு வைக்கலாம். மற்றும் அதன் மேலே ஏர் ஃபிரஷ்னர் வைக்கலாம். அதனை அவ்வப்பொழுது மாற்றி வைக்க வேண்டும். குழாயைக்கூட சுத்தம் செய்து பார்க்க பளிச்சென வைக்க வேண்டும். குளியலறைக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் அதாவது சோப், துணி துவைக்கும் சோப் முதல் ஷாம்பூ, சீயக்காய் வரையிலான அனைத்தும் அழகுற அடுக்கி வைக்கும் வசதி மற்றும் டவல், சீப்பு போன்றவை வைக்கும் தனித்தனி தட்டுக்கள் அமையப்பட்ட சுவர் அலமாரி அமைக்கலாம்.
இது அந்தந்த குளியலறையின் அமைப்புக்கு ஏற்றவாறுதான் அமையும். சில பெரிய மற்றும் புதிய கட்டடங்களில், இதற்கான அழகிய அமைப்புகள் இப்பொழுது வந்துள்ளன. மேல்பாகம் அழகிய பாக்ஸ் போன்ற அமைப்பு, கீழே வாஷ்பேஸின், மீண்டும் வாஷ்பேஸினைச் சுற்றி கீழே பாக்ஸ் போன்ற அமைப்பு இவைதான் தற்போது எல்லோராலும் விரும்பப்படுவது.
காரணம், பார்க்க அழகு. அனைத்தும் அடுக்கி வைக்க வசதி, வெளிக்கு எதுவுமே தெரியாமல் போவதால் சுத்தமாக பராமரிக்கலாம். மேலும் பாக்ஸ் போன்று மேலும் கீழும் அமைவதால், ஒரு குளியலறையைக்கூட அழகுபடுத்திக் காட்டும் டெகரேஷன் போன்று திகழ்கிறது. மேல்பாகம் தண்ணீர் படாத இடத்தில் அழகிய லேமினேட் ஷீட்டுகளை அறையின் டைல்ஸ் நிறத்திற்கு ஏற்றவாறு ஒட்டியும் குளியலறையை அழகுபடுத்தலாம்.
இப்ெபாழுதெல்லாம் சித்திரங்கள் பதித்த டைல்ஸ் கூட காணக்கிடைக்கின்றன. குழந்தைகள் விரும்பும் பொம்மை சித்திரங்கள், பொதுவான படங்கள், குளியலறையாக இருப்பதால், அழகு அல்லது ஒப்பனை செய்து கொள்வது போன்ற சித்திரங்கள் கொண்ட டைல்ஸ்களும் கிடைக்கின்றன. நாமும், குறிப்பிட்ட அறையை பயன்படுத்துவோரை கருத்தில் கொண்டு அதற்கேற்ற டைல்ஸ் பதிக்கலாம். பொதுவாக அட்டாச்ட் பாத்ரூம் ஓரளவு நீள-அகலம் ெகாண்டதாகத்தான் இருக்கும்.
சில இடங்களில் குளியலறை, கழிப்பறை என பிரிப்பதற்காக உயரம் வைத்து அமைத்திருப்பர். அப்படி உயரம் வைக்கும் பொழுது, வீட்டில் முதியோர் இருக்கிறார்களா என்பதை கருத்தில் கொண்டு அமைக்கலாம். வயதானவர்கள் இருந்தால் சின்ன படி போன்று ஓர் அமைப்பு தரலாம். இது பெரும்பாலும் பழைய வீடுகளில் உள்ள ஒரு அமைப்பாகும். வாஷ்பேஸின் மேல் அலமாரிகளில் குளிக்கத் தேவையான பொருட்கள், குளித்து முடித்த பின் போடும் கிரீம்கள் போன்ற ெபாருட்களையும், கீழே சுத்தம் செய்ய தேவையான கிளீனிங் பொருட்களையும் அழகுற அடுக்கி வைக்கலாம்.
எப்படி மாதத்திற்கு மளிகைப்பொருட்கள் வாங்குகிறோமோ அதைப் போன்று கிளீனிங் செய்யத் தேவையான அனைத்துப் பொருட்களும் அவசியம் வாங்கி வைக்க வேண்டும். காரணம், பெட்ரூமை ஒட்டி குளியலறை அமைவதால் பாக்டீரியாக்கள் பரவாமல் தடுத்தல் அவசியம். வரவேற்பறைக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறோமோ, அதைவிட அதிகமான கவனம் குளியலறைக்குத் தேவைப்படுகிறது.
முன்பே கட்டப்பட்ட அறையாக இருந்தாலும் நிறைய ரெடிமேட் அலமாரிகள் கிடைப்பதால், இடத்திற்கு ஏற்றவாறு வாங்கி ‘செட்’ செய்து கொள்ளலாம். அழகிய பிளாஸ்டிக்கில் கூட ‘பாக்ஸ்’ அமைப்பு அலமாரிகள் நிறைய கிடைக்கின்றன. ரொம்பவும் பழைய குளியலறையாக இருந்தால் அந்தக் காலத்தில் சிமென்ட் தட்டுக்கள் போன்று அமைத்திருப்பர். நாம் அதை பிளைவுட் மூலம் மூடி பாக்ஸ் போன்ற அமைப்பு தந்துவிடலாம். அதனால் எப்படி யிருந்தாலும் புது லுக் தந்து அசத்தி விடலாம்.
தூய்மையும் சுகாதாரமும்தான் முக்கியமே தவிர, பழமையாக இருப்பதில் எந்த பாதிப்பும் வராது. நம் கற்பனையும் ரசனையும் சேர்ந்தால் குளியலறையும் பளபளக்கும். அதே போல் வாஷ்பேஸின், ஹேண்ட் ஷவர் போன்றவற்றை சுவர் நிறத்திற்கு ஏற்றவாறு தேர்ந்தெடுக்கலாம். வசதிக்காக அவரவர் விருப்பத்திற்கேற்றபடி டவல் போட்டு வைக்கும் ஸ்டாண்டை வாஷ்பேஸின் அருகில் போட்டுக் கொள்ளலாம்.
குளியலறை கதவின் பின்புறம், அதாவது உட்புறக் கதவில் ஹேங்கர் போன்று அமைப்பு தரலாம் அல்லது இப்பொழுதெல்லாம் வால் ஸ்டிக்கர்கள் நிறைய கிடைக்கின்றன. வாங்கிப் பொருத்தி வைத்தால் போதும்! ஆணி அடிக்கத் தேவையில்லை. வாரம் ஒரு முறை குளியலறை சுவர் முழுவதையும் கிளீனிங் ஆயில் மூலம் சுத்தம் செய்வது முக்கியம்.
ஷவர் கைப்பிடிகள், தரையின் ஓரங்கள், குழாய்கள் போன்றவற்றையும் சுத்தம் செய்து பளபளவென வைத்து ‘ரூம் ஸ்ப்ரே’ அடித்து வைத்தால் யாரும் ‘பாத்ரூம் தானே!’ என்று நினைக்க மாட்டார்கள். சில சமயங்களில் 2 அல்லது 3 குளியலறைகள் இருக்கும் வீடுகளில் ஒரு குளியலறையை பயன்படுத்தாமல் மூடி வைத்திருப்பர். குளியலறையைப் பொறுத்தவரை பயன்படுத்தாதது நன்றாக இருக்காது.
காரணம் அறையும் மூடி, ஜன்னல்களும் மூடி வைக்கும் பொழுது அங்கு பூஞ்சை வாடை வரும். எனவே தினசரி பயன்படுத்தாத குளியலறையாக இருந்தால்கூட அவ்வப்பொழுது திறந்து அலம்பி ஏர் ஃபிரஷ்னர் வைக்க வேண்டும். அப்பொழுதுதான் திடீரென யாரேனும் வந்தாலும் பயன்படுத்த முடியும். பாத்ரூமில் ரொம்பவும் வெளிச்சம் அல்லது வெயில் படும் பட்சத்தில், அழகான படங்கள் அல்லது கண்ணாடி ஃபிலிம் ஒட்டலாம். கூலாக இருப்பதுடன் கண்களுக்கும் வண்ணமயமாக இருக்கும்.
அது மட்டுமா? அலமாரிகளின் மேற்புறம் இடம் இருக்கிறதா? ஒரு பெயின்ட் செய்யப்பட்ட தொட்டியில் மணி பிளான்ட் வைத்து அழகாக படர விடலாம். கொத்துக் கொத்தாக தொங்க விடலாம். தொட்டி வைக்க முடியாதா? அழகிய ஃபேன்ஸி பவுலில் தண்ணீர் வைத்து மணி பிளான்ட் வைக்கலாம். அவ்வப்பொழுது தண்ணீரை மட்டும் மாற்றினால் போதும்.
ரப்பர் செடி கூட வைக்கலாம். இருப்பினும் நம் அறையின் வசதியைப் பொறுத்து, வேண்டிய அழகை தந்து விடலாம். இயற்கைச் செடிகள் அங்கு வைக்க இடமில்லையா? கவலையை விடுங்கள். வரவேற்பறையிலுள்ள பூங்கொத்துக்களோ, செயற்கைச் செடிகளோ பழசானால், அவற்றைத் தூக்கி எறியாமல் சுத்தம் செய்து குளியலறையில் வைத்து விடலாம்.
தண்ணீர் புழங்குமிடமாதலால் அவ்வப்பொழுது நீர் விட்டு அலம்பலாம். ஜன்னல் ஓரங்களில், சிறிய இலைகள் கொண்ட கொடிகளை (செயற்கை) பார்டர் போன்று அமைத்து அழகாக்கலாம். எல்லாம் நம் ரசனையைப் பொறுத்துதான். அழகை விட ஆரோக்கியம் முக்கியம். அதனால் சுத்தப்பராமரிப்பு அவசியம் என்பது நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை
Average Rating