மழைக்காலத்தில் மின்விபத்து ஏற்பட்டால் செய்ய வேண்டியவை…!! (மகளிர் பக்கம்)
மழை நேரத்தின்போது, சாலைகளில் வாகன விபத்து மட்டுமின்றி, மின் விபத்துகளும் ஏற்படுகின்றன. மின்விபத்துகளை தடுக்க இதோ சில டிப்ஸ்…
* சாலையில், அறுந்து கிடந்த மின்கம்பிகளை கண்டால் உடனடியாக பக்கத்தில் இருக்கும் மின்சார அலுவலகத்தில் தகவல் தெரிவிப்பது நல்லது.
* மழைக்காலங்களில் கேபிள் பாக்ஸ், பில்லர் பாக்ஸ்கள் அருகே தண்ணீர் தேங்கியிருக்கும். இதன் அருகே யாரும் செல்லக்கூடாது.
n பழைய வீடுகளில், மழையின்போது சுவரில் ஈரம் பரவியிருக்கும். அப்படி ஈரம் பரவியிருக்கும் சுவர்களின் அருகில் இருக்கும் ஸ்விட்ச் பாக்சை தொடக்கூடாது.
* மாடியில் இருந்து உடைகளோ அல்லது வேறு ஏதேனும் பொருள்களோ பறந்து, கையால் எடுக்க முடியாத இடங்களில் விழுந்துவிட்டால், அதை இரும்பு கம்பிகளைக்கொண்டு எடுக்கக்கூடாது. மின்வாரியத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
* மின்சாரம் தொடர்பான எந்த புகாராக இருந்தாலும், உடனடியாக அருகில் உள்ள மின்சார அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம். 1912 என்கிற புகார் எண்ணுக்கு அழைத்தும் புகார் தெரிவிக்கலாம்.
* யாருக்காவது ஷாக் அடித்துவிட்டால் அருகில் இருப்பவர்கள் உடனடியாக `சி.பி.ஆர்’’ (Cardiopulmonary resuscitation) என்று சொல்லப்படும் இதயம் மற்றும் சுவாச இயக்க மீட்பு நடவடிக்கைகளை செய்ய வேண்டும்.
* மின்சாரத்தால் அதிகமாக பாதிப்புக்குள்ளான நபராக இருந்தால், அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவிடுவது நல்லது. 108 ஆம்புலன்ஸை வரச்சொல்லி, அதில் அழைத்துச் செல்லலாம்.
* மின்சாரத்தால் பாதிக்கப்பட்டவர்கள், மயக்கநிலையில் இருந்தால் அவர்களுக்கு வாய்வழியே எந்த ஆகாரமும் கொடுக்கக்கூடாது. அப்படி கொடுத்தால், அது நேரடியாக நுரையீரலுக்கு சென்றுவிடும். சாதாரணமாக இருக்கும்போது, நுரையீரலுக்கு தண்ணீர் சென்றால் புரையேறி இருமல், தும்மல் மூலமாக நீர் வெளியேறிவிடும். ஆனால், மயக்கநிலையில் இருப்பவர்களுக்கு புரையேறாது. தண்ணீர் வெளியேறாமல் நுறையீரலுக்கு சென்றுவிடும். தண்ணீர் அதிகமாக சென்றால் நிமோனியா ஏற்பட வாய்ப்புள்ளது. மருத்துவரை
அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது.
* நமக்கு அருகில் யாரையாவது மின்சாரம் தாக்கிக்கொண்டிருந்தால் அவர்களை நாம் கைகளால் தொடக்கூடாது. முதலில் மெயின் ஆப் செய்துவிட வேண்டும். பின்னர், ஷூ, செருப்பு அணிந்து மரத்தால் ஆன கட்டையால் அவர்களின் கையை தட்டிவிடலாம்.
* வீட்டில் என்றால் மெயின் ஸ்விட்ச் எங்கே இருக்கிறது என தெரியும். சாலைகளில் எங்கே இருக்கிறது என தெரிய வாய்ப்பில்லை. எனவே, ஏதாவது மரத்தால் ஆன பொருள்களைக்கொண்டு மீட்கலாம். அதேபோல். தண்ணீரில் நின்றுகொண்டிருக்கும்போது ஒருவர் மின்சார தாக்குதலுக்கு உள்ளானால், அவசரப்பட்டு தண்ணீரில் இறங்கி அவரை காப்பாற்ற முயற்சி செய்யக்கூடாது. தண்ணீர் முழுவதும் மின்சாரம் இருக்கும். எனவே, தூரத்தில் இருந்தபடிதான் அவரை காப்பாற்ற முயற்சி செய்ய வேண்டும்.
Average Rating