ஃபேஸ் யோகா! (மகளிர் பக்கம்)
உடலையும் மனதையும் ஒருங்கிணைத்து புத்துணர்வாக்கும் யோகா… உள்ளுறுப்புகளை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும்… ஆரோக்கியத்தை மேம்படுத்தும்… சுவாசத்தை சீராக்கும்… இளமையையும் நீடிக்கும்! யோகாவின் புதிய வரவான ஃபேஸ் யோகா இளம்பெண்களின் லேட்டஸ்ட் ட்ரெண்ட். முகத்துக்குப் பயிற்சி தரும் இந்த யோகா, அழகுக்கும் இளமைக்கும் உத்தரவாதம் தருவதால், நடிகைகள், மாடல்கள் என அழகிகளின்
ஆதரவுடன் பிரபலமாகிக்கொண்டிருக்கிறது.
‘‘யோகா என்பது வெறும் பயிற்சி மட்டுமே அல்ல. தன்னைத்தானே உணரும் கலை. யோகாவை தொடர்ந்து செய்து வந்தால், நம்மிடம் உள்ள எதிர்மறை எண்ணங்கள், கோபம் எல்லாமே குறையும்… நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். எடையை எந்தவித செயற்கை விஷயங்களும் இல்லாமல், இயற்கையாகவே கட்டுக்குள் வைக்கலாம். முகம் மற்றும் முகத்தைச் சுற்றியுள்ள தசைகளுக்கும் எலும்புகளுக்கும் தகுந்த பயிற்சிகளை கொடுப்பதன் மூலம், முகத்தைப் பொலிவுடன் காட்டுவதே ஃபேஸ் யோகா. இதை ஆண்களும் செய்யலாம். முகத்தில் உள்ள கண்கள், உதடுகளுக்கு ரத்த ஓட்டம் சரியான அளவில் செல்வதால், கண்களில் உள்ள கருவளையங்கள், சுருக்கங்கள் மறையும். உதடுகளைச் சுற்றியுள்ள தசைகளுக்கு பயிற்சி கிடைப்பதால் உதடுகள் பொலிவாகும். இதில் உள்ள சில பயிற்சிகள் தொண்டையிலுள்ள தசைகளை வலுப்படுத்தி சுருக்கங்களை மறையச் செய்யும்…’’ – ஃபேஸ் யோகாவின் பயன்கள் குறித்து பேசும் யோகா பயிற்சி நிபுணர் கண்மணி, அதிலுள்ள 14 பயிற்சி நிலைகள் குறித்து
விளக்குகிறார். ஃபேஸ் யோகா பயிற்சிகளை சுத்தமான, காற்றோட்டமான இடத்தில் செய்ய வேண்டும். காலையில் சூரியன் உதித்த பின், மாலையில் சூரியன் மறைவதற்கு முன் என தினம் இருமுறை செய்ய வேண்டும்.
1. வாயை இறுக மூடிக்கொள்ள வேண்டும். மூச்சுக் காற்றை ஒரு கன்னத்தின் பக்கமாக இழுத்து மறு கன்னத்தின் பக்கமாக விட வேண்டும். இதே போல மாறி மாறி செய்ய வேண்டும் (மவுத் வாஷ் பயன்படுத்தி வாய் கொப்புளிப்பது போல).இதனால் கன்னத்தில் இருக்கும் தேவையில்லாத சதைகள் நீங்கும். முகத்தசைகள் டைட் ஆகும்.
2. உதடுகளை ‘0’ போல குவித்து வைத்துக் கொண்டு, மூச்சுக்காற்றை வெளியேற்ற வேண்டும். உதட்டை சுற்றியுள்ள தசைகள் வலுவாகும்.
3. மீன் போல கன்னத்தையும் உதடுகளையும் குவித்து வைத்துக் கொண்டு சிரிக்க முயல வேண்டும். 5-10 நொடிகள் நிலையை பராமரிக்கவேண்டும். குறைந்தது 5 முறை செய்ய வேண்டும். உதடுகளையும் கன்னத்தையும் வலுப்
படுத்தும். உதடுகளை அழகாக்கும்.
4. முகத்தை முடிந்த அளவு மேல்நோக்கி மேற்கூரையை பார்த்தபடி மூச்சுக் காற்றை இழுத்து ஊத வேண்டும். தாடை அமைப்பையும் கன்னத்தையும் அழகாக்கும்.
5. கீழ் உதட்டைக் கொண்டு மேல் உதட்டைக் கவ்வ முயற்சி செய்ய வேண்டும். மூக்கு வரை கீழ் உதட்டைக் கொண்டு செல்ல முயலவேண்டும். 15 நொடிகளுக்கு இந்நிலையை பராமரிக்க வேண்டும். குறைந்தது 10 முறை செய்ய வேண்டும். கன்னத் தசைகளை வலுவாக்கும். அகலமான தாடை உடையவர்கள், இப்பயிற்சி செய்தால் தாடை சரியான வடிவத்துக்கு வரும்.
6. வாயை முடிந்த அளவு திறந்து நிறுத்தி வைக்க வேண்டும். முகத்தில் உள்ள அனைத்துத் தசைகளும் இதனால் செயல்படும். கன்ன எலும்புகளும் வலுவாகும். 5 நொடிகள் நிலையை பராமரிக்கவேண்டும்.
7. குளிர்பானத்தில் ஸ்டிரா போட்டு உறிஞ்சுவது போல காற்றை உள்ளிழுக்க வேண்டும். 15 நொடிகளுக்கு நிலையை பராமரிக்க வேண்டும். குறைந்தது 10 முறை செய்யவேண்டும். கன்னத்தில் உள்ள கொழுப்பை குறைக்கும். வடிவான முகத்துக்கு வழிவகுக்கும்.
8. மேல்நோக்கி பார்த்தபடி முடிந்த அளவு மூச்சுக்காற்றை உள்ளிழுக்க வேண்டும். அதன் பிறகு வெளியே விட வேண்டும். கன்னத்தையும் தாடையையும் வலுவாக்கும் பயிற்சி இது.
9. ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் கண்களுக்கு கீழே உள்ள கன்ன எலும்புகளில் வைத்தபடி மெதுவாக விரல்களை கண்களின் விளிம்பில் இருந்து கன்னங்கள் வரை மெதுவாக இழுக்கவேண்டும். இப்படி இழுத்தபடியே ‘ஷீ’ வடிவில் வாயை திறக்க வேண்டும். 10 நொடிகள் நிலையை பராமரிக்க வேண்டும். பிறகு கொஞ்சம் ரிலாக்ஸ் செய்துவிட்டு மறுபடியும் செய்ய வேண்டும். குறைந்தது 5 முறை செய்ய வேண்டும்.
10. முதல் நிலை…
ரிலாக்ஸாக உட்கார்ந்து மூச்சை இழுத்துப் பிடித்து, இரண்டு கை விரல்களையும் குவித்து இறுக்கமாகப் பிடித்து, கண்களை மூடிக்கொள்ள வேண்டும். முகத்தில் உள்ள தசைகள் இதனால் வலுவடையும்.
இரண்டாவது நிலை…
முதல் நிலையில் இருந்து மறுபடியும் தொடங்கி மூச்சை இழுத்து, கைகளை குவித்து வைத்துக் கொண்டு, கண்களை இறுக மூடிக் கொள்ள வேண்டும். பிறகு வாயைத் திறந்து மூச்சை விட்டபடி, நாக்கை வெளியே நீட்ட வேண்டும். கண்களை அகலத் திறக்க வேண்டும். இதனால் முகத்தசைகள் இறுகி பிறகு தளர்வாகும். இதற்கு ‘சிங்கமுக நிலை’ என்றும் பெயர். குறைந்தது 3 முறை செய்ய வேண்டும். தொண்டையில் உள்ள சதைகள் வலுவாகும். தைராய்டு பிரச்னை உள்ளவர்களுக்கு உதவியான பயிற்சி இது.
11. கண்களை அகல விரித்தபடி புருவங்களை உயர்த்த வேண்டும். உங்கள் முன் உள்ள பொருளில் பார்வையை குவிக்க வேண்டும். 10 நொடிகள் நிலையை பராமரிக்க வேண்டும். குறைந்தது 5 முறை செய்ய வேண்டும்.
12. ஆள்காட்டி விரலை இரண்டு கண்களின் விளிம்பில் வைத்து, பெருவிரலை உதட்டின் விளிம்பில் வைத்து, கன்னங்களை மெதுவாக இழுக்க வேண்டும். அப்படியே சிரிக்கவும் முயற்சிக்க வேண்டும். 5 நொடிகள் இந்த நிலையை பராமரித்து, ரிலாக்ஸ் செய்து, மறுபடியும் செய்ய வேண்டும். 5 முறை செய்வது அவசியம். முகத்தில் உள்ள சுருக்கங்களை மறையச் செய்யும். முகப்பொலிவை கூட்டும். உங்களின் புன்னகையை மேலும் அழகாக்கும் இந்தப் பயிற்சி.
13. மூக்கின் வழியாக மூச்சுக் காற்றை இழுத்து ‘ஹ்ம்ம்’ என்ற சத்தத்துடன் வெளியே விட வேண்டும். குறைந்தது 4 முறை திரும்ப செய்ய வேண்டும்.
14. புருவங்களை மெல்ல உயர்த்தி, உதடுகளை குவித்து, விரல்களால் உதட்டின் நுனியை பிடித்துக் கொள்ள வேண்டும். முத்தம் கொடுப்பது போல செய்ய வேண்டும். உதடுகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள தசைகள் வலுப்பெறும். உதடுகள் பொலிவாக தெரியும். இந்தப் பயிற்சிகளை எல்லாம் செய்த பிறகு, சம்மணம் இட்டு கண்களை மூடி அமைதியாக அமர வேண்டும். இந்த நிலைக்கு ‘புத்தர் முகம்’ என்று பெயர். இரண்டு உள்ளங்கைகளையும் கண்களுக்கு நேராக வைத்து, அதில்தான் விழிக்க வேண்டும். உள்ளங்கைகளை முகத்தில் மெதுவாக தடவி யோகா மூலம் கிடைத்த சக்தியை உள்வாங்கி முடிக்க வேண்டும்.
Average Rating