சுவாசமே சுகம்!! (மகளிர் பக்கம்)

Read Time:7 Minute, 9 Second

தொட்டிலில் குழந்தை அயர்ந்து உறங்கியது. வயிறு உப்பிப் புடைத்து மூச்சு ஏறி இறங்கியது. அழகான ஆழமான சுவாசம் அது. குழந்தைக்குத் தெரிந்தது பெரியவர்களுக்குத் தெரிவதில்லை. அல்லது மறந்துவிட்டது. காலம் செய்த கோலம்.ஒரு வேளை உணவைத் துண்டிக்க நினைத்தால் முடிவதில்லை. ‘தாக்குப் பிடிக்க முடியாது சாமி’ என்று உணவுக்காக வயிறு ஏங்கும். ஆனால், சுவாசத்துக்காக ஏங்குவதில்லை. மூச்சின் அருமை சுவாசத்துக்காகத் துடிப்பவர்களுக்குத் தெரியும். சுவாசம் இயல்பு என்று விட்டுவிடுகிறோம். தினமும் ஒரு கண நேரம் கூட மூச்சின் இயல்பை உணர்ந்ததில்லை.

அது வெம்மையாகவும், குளுமையாகவும் உள்நுழையும் நேரத்தைப் பலர் ஞாபகம் வைத்திருப்பதில்லை. ஆனால், சில வினாடிகள் மூச்சை நிறுத்த முனைந்தால், உடல் உயிருடன் மோதி விளையாடும். ‘என் சுவாசக் காற்றே’ என்று உடல் திக்குமுக்காடும். உயிரின் அழுத்தம் புரியும். சுவாசம் இல்லையேல் உயிர் இல்லை. உடலும், உயிரும் ஒப்பந்தம் செய்துகொள்வதை யோகா என்றழைக்கலாமா? அழைக்கலாம். யோகா என்றால் பிணைப்பு. அழகான இணைப்பு.

உடல் நைந்துபோகும்போது, இனியும் ஒத்துப்போக முடியாது என்று உயிர் பறக்கத் துடிக்கும். என்றாவது ஒருநாள் உயிர் பறந்துவிடும். ஆனால், உயிர் இருக்கும் வரை, அது இனிமையாக இருக்க வேண்டும். அதற்கு உடலையும், மனதையும் செம்மையாக வைத்திருக்க வேண்டும். உடலும், மனதும் தோழமையாக இருந்தால் அது ஆனந்தத் திளைப்பு. மூச்சை ஆழ இழுக்கும் இயல்பை மறப்பதே, இந்தத் தோழமையில் பிளவை ஏற்படுத்துகிறது. யோகா தெரிந்தால், அறிந்தால், புரிந்தால்… மனம் – உடல் நட்பு என்றும் கரைபுரண்டோடும்.

ஜூன் 21. ஐக்கிய நாடுகள் சபையே சர்வதேச யோகா தினமாக அங்கீகரித்திருக்கிறது. இதுதான் முதலாண்டு. இந்தியா கொண்டுவந்த தீர்மானம், 177 நாடுகளின் ஒத்துழைப்புடன் இந்தத் தினத்தை மலரச் செய்திருக்கிறது. பிரதமர் மோடி, யோகாவின் பெருமைகளை ஐ.நாவில் எடுத்துரைத்ததாலேயே யோகா பெருமை பெற்றதாகிவிடாது. யோகா மோடிக்கானதல்ல. யோகாவுக்கு மோடி வித்தை தெரியாது. யோகா என்பது இயல்பாய் இருத்தல். ஆனால், இயல்பாய் இருப்பதற்கும் பயிற்சி தேவைப்படுகிறது. செயற்கைத் தனம் பெருகிவிட்டதால், இயற்கை இனிமை அருகிவிட்டது.

சுவாசம் போல இயல்பு இயற்கை எனினும், நவீன உலகில் சுவாசமே கடினமாகிவிட்டதல்லவா… இந்தியாவின் பாரம்பரியமாகவே ஒரு காலத்தில் யோகா இருந்தது. ஆனால், அதன் அருமையைஉணரத் தவறியவர்களாகிவிட்டோம். ‘இதெல்லாம் நம்ம தேசத்துல வளர்ந்த கலை’ என்று சொல்லித்தான் தெரிய வேண்டியிருந்தது. யோகாவின் தன்மைகளை, அதன் நன்மைகளை மேற்கத்திய நாட்டினர் உணரத் துவங்கினர். ஏன்… அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் யோகப் பயிற்சி நிலையங்கள், கோடிக்கணக்கில் வர்த்தகத்தைத் தற்போது தாங்கி நிற்கின்றன.

கம்ப்யூட்டர்களைப் பிரித்து மேயத் தெரிந்த நவீனர்கள்கூட, மனித உடல் சூப்பர் கம்ப்யூட்டர் என்பதை உணரத் தவறிவிட்டார்கள். உள்ளுக்குள் என்ன இருக்கிறது என்று புரிந்துகொள்ளாமல் கம்ப்யூட்டரை வைத்துக்கொண்டிருந்தால் ஏதாவது பயன் இருக்கிறதா? மனிதர்களில் பலரும் அப்படித்தான். உடல், மன அறிவைப் புரிந்துகொள்ளாமல், இயங்கிக்கொண்டிருக்கிறோம். வெறும் உணவினால் மட்டும்தான் ஆற்றல் வருகிறது என்று நினைத்துக்கொண்டிருந்தால், மனிதன் சதைப்பிண்டம்தான். அறிவின் ஆற்றலே, அகத்தைப் புரிந்துகொள்வதுதான்.

அக உணர்வை அறிதலே யோகம். கம்ப்யூட்டரை ஆழமாய்ப் படித்தும், மனிதர்கள் தாங்கள் சூப்பர் கம்ப்யூட்டர் என்பதை அறிந்திருக்காதது விழிப்புணர்வு இன்மையே. உடல், மன மேன்மையை உணர்ந்துகொள்வதற்கான ஒரு துவக்கமாக சர்வதேச யோகா தினம் அமைகிறது.ஜூன் 21, புவியின் வட அரைக்கோளத்தில் ஆண்டின் நீண்ட நாள். அன்றைய பகல் பொழுது நீண்டிருக்கும். அது சர்வதேச யோகா தினமாக அழைக்கப்படுவது சிறப்புக்குரியது. ஆனால், யோகா என்பது அன்றைய தினத்துடன் முடிந்துவிடும் செயல் இல்லை.

அது என்றென்றும் இயல்பாக மாற்றிக்கொள்ள வேண்டியதை உணர்த்துவதற்கான நாளாக ஜூன் 21 அமைய வேண்டும்.
யோகா என்றால் உடலை வளைத்து நெளித்து மூச்சுக்காற்றை எப்படி எப்படியோ இழுத்துக்கொள்வதல்ல. அது ஒரு ஜிம்னாஸ்டிக் பயிற்சி அல்ல. உடலை முறுக்கினால், அது யோகப் பயிற்சியல்ல. எந்த வயதில், எவ்வளவு முடியுமோ அந்த அளவில் எளிய உடற்பயிற்சியாக அமைந்தால் போதுமானது.

ஆனால், யோகாவின் இயல்பே ஒழுக்கம் சார்ந்த வாழ்க்கை நெறி. அது யோக நெறிபழகப் பழக எளிதில் சாத்தியமாகிறது. ஜூன் 21ல் இந்தியா மட்டுமல்ல; உலகம் முழுக்க யோகா பயிற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அது கின்னஸ் சாதனையாகக் கூட அமைகிறது. ஆனால், நமது வாழ்வின் சாதனை மார்க்கமாக மாற்றிக்கொள்வதற்கான வழியாக இந்த நாளைக் கருதினால், யோகா தினத்துக்கு அது பெருமை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டெஸ்ட்டிங்… ஒன் டூ த்ரீ!! (மருத்துவம்)
Next post Adults Only!! (அவ்வப்போது கிளாமர்)