சூரிய நமஸ்காரம்!! (மகளிர் பக்கம்)
‘தினமும் காலையில வாக்கிங் போகணும் நீங்க!’’‘‘அதுக்கெல்லாம் இடமும் இல்லை, நேரமும் இல்லையே டாக்டர்!’’‘‘ஜாக்கிங்?’’‘‘ஐயோ, நாய் துரத்தும்!’’‘‘சைக்கிள் ஓட்டினா அதைவிட நல்லதாச்சே!’’‘‘என்ன டாக்டர், என்னைப் போய் சைக்கிள் ஓட்டச் சொல்றீங்க? நடக்கற விஷயமா!’’
– இப்படி தங்கள் உடல்நலத்துக்காக ஒதுக்கக்கூட நேரமில்லாமல், கடிகாரத்தை விழுங்கிவிட்டு ஓடிக் கொண்டிருக்கும் அவசர யுக மனிதர்களுக்காக நம் முன்னோர்கள் ஒரு அற்புத ரகசியத்தை அளித்துவிட்டுப் போயிருக்கிறார்கள்.
அது, சூரிய நமஸ்காரம்!உடல் என்பது நமக்குக் கிடைத்த வரம். ஸ்மார்ட்போன், வாஷிங் மெஷின், ஏ.சி என எல்லாமே ஒரு ஆபரேஷன் மேனுவலோடுதான் வருகிறது. அக்கறையாக அதன்படி பராமரிக்கிறோம்;
அவ்வப்போது சர்வீஸ் செய்கிறோம். நமது உடல் அதையெல்லாம் விட மிக நுணுக்கமான இணைப்புகளும் இயக்கங்களும் கொண்ட ஒரு அற்புதப் படைப்பு. இதற்கு உரிய மரியாதை தந்து வளப்படுத்துவதற்கு நம் முன்னோர்கள் உருவாக்கிய ஏராளமான ஃபிட்னஸ் மந்திரங்களில் சூரிய நமஸ்காரம் ஒரு அங்கம். இதனை இன்றைய உலகிற்கு – குறிப்பாக இளம் தலைமுறையினருக்கு – கொண்டு சேர்க்கும் தொடர் இது.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் உருவான இந்த நமஸ்காரம், இன்று உலகம் முழுதும் பரந்து விரிந்து ஆரோக்கியத்தை வித்தியாசமின்றி அட்சய பாத்திரம் போல் வழங்கிக் கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் இதன் எல்லை விரிந்துகொண்டே இருக்கிறது.
எத்தனையோ ஆயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்டபோதிலும், காலத்தால் தன்னை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது. மனிதர்களின் இன்றைய அவசர உலகை, அன்றே யூகித்ததுபோல குறைந்த நேரத்தில் உடல், மூச்சு, மனம் என அனைத்தையும் லேசாக்கி புத்துணர்வு ஊட்டுகிறது.
12 நிலைகள் கொண்ட சூரிய நமஸ்காரத்தை நீங்கள் எத்தனை ஆண்டுகள் செய்துவந்தாலும், ஒவ்வொரு தினத்திலும் அது உங்களுக்கு ஒரு புதிய அனுபவத்தைத் தரும். ஒவ்வொரு நாளும் புதிதாகப் பிறக்கலாம். அதனால்தான் இன்னும் அது புதியதாகவே இருக்கிறது; தினசரி வாழ்வுக்கு வளம் சேர்க்கிறது. உணர்வு தொடங்கி சக்தி வரை பல நலன்களைத் தந்து மேலும் தொடர்வதற்கு இடம் அளிக்கிறது.
சூரிய நமஸ்காரம் என்றால், அதை சூரியனைப் பார்த்தே செய்ய வேண்டுமா?‘‘சூரிய நமஸ்காரத்தை துவக்கத்தில் சூரியனைப் பார்த்துப் பார்த்து செய்த பின்பு, எங்கு எப்பொழுது செய்தாலும் அந்த அனுபவத்தை – தரத்தைக் கொண்டு வரவேண்டும். அது சூரியனைப் பார்த்துக் கொண்டே காலம் முழுவதும் செய்வதல்ல; நமக்குள் இருக்கும் சூரியனை – வெளிச்சத்தை வெளிக்கொண்டு வருவதுதான் நோக்கமாகவும் குறிக்கோளாகவும் இருக்க வேண்டும். அப்படி சூரியன் எழும்போது, உள்ளுக்குள் பெரும் மாற்றமும் ஆழ்ந்த தெளிவும் கிடைக்கும். இதன் மூலம் வாழ்க்கை பெருமளவு மாறும்’’ என்கிறார் எனது ஆசிரியர் ஜோஸ்னா நாராயணன் அவர்கள்.
எளிய, குறுகிய நேரப் பயிற்சியாக இருந்தாலும், அது உடல்நலன் தொடங்கி வாழ்க்கையை மாற்றிப் போடுவது வரை மகத்தான பல பலன்களை வாரித் தரக்கூடியது என்பதை உலகம் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. முறையாகவும் தொடர்ந்தும் செய்கிறபோது சில வாரங்களிலேயே நல்ல மாற்றங்களை நீங்கள் உணரத் தொடங்கலாம். சிலரது அனுபவங்கள் உங்களை யோசிக்க வைக்கும்; சில நுண்ணிய பயிற்சிகள், உங்களை ஆழமாய் கவனிக்க வைக்கும். பல்வேறு முறை சூரிய நமஸ்காரங்கள் உங்களை வியக்க வைக்கலாம்.
மனம் ஒட்டாமல் செய்கிற ஏதோ ஒரு உடற்பயிற்சியாக இதை நினைத்து, ஹெட்போனை காதில் மாட்டிக்கொண்டு ஏதோ ஒரு குத்துப் பாடலைக் கேட்டபடி கவனமின்றியோ, வேடிக்கையாகவோ இதைச் செய்யக் கூடாது. ஒரு புதிய வாழ்க்கைப் பயணத்திற்கான முன் தயாரிப்புகளோடு சூரிய நமஸ்காரம் செய்வதற்குத் தயாராக வேண்டும். இப்படி முழு நம்பிக்கையோடு தொடங்கும்போதே, இது பிற பயிற்சிகளிலிருந்து முற்றிலும் வேறானது என்று உணரலாம்.
ஒரு புதிய பயணத்துக்கு எப்படியெல்லாம் திட்டமிடுவீர்கள்! என்ன எடுத்துப் போவது, எங்கே தங்குவது, என்னென்ன முன்பதிவுகள் செய்வது, எங்கே சாப்பிடுவது… இப்படி எத்தனை எத்தனை!சூரிய நமஸ்காரத்துக்கும் இப்படி மனதால் திட்டமிட்டுத் தயாராகுங்கள்… ‘இது சாதாரணப் பயிற்சி இல்லை. நான் சூரிய நமஸ்காரத்தின் ஆழத்தையும் வலிமையையும் உணரப் போகிறேன். அதில் முழுதாய் என்னை ஈடுபடுத்திக் கொள்ளப்போகிறேன். அதன்மூலம் என் வாழ்வை மாற்றிக்கொள்ளப் போகிறேன்’ என நினைத்தபடி துவங்குங்கள்.
இந்த நினைப்பே உங்களை ஆரோக்கியப் பாதையில் நிறுத்தி விடும். காற்றில் மிதந்து செல்லும் இலவம்பஞ்சு போல மனம் லேசாகும். செய்யச் செய்ய உடலும் லேசாகும். பிறகு பயணத்தின் ஒவ்வொரு கணத்திலும் புதுப்புது அனுபவங்கள்தான்; கனவு மாதிரி எத்தனையோ மாற்றங்கள் வரலாம்; உங்களுக்கேகூட நீங்கள் புதியவராகத் தெரியலாம். சூரிய நமஸ்காரத்தில் எதுவும் சாத்தியம்; எதுவும் முடியும். இதை நம்புகிறவர்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் தினம் தினம் ஏறிக் கொண்டே இருக்கிறது. நீங்களும் அதில் ஒருவர் ஆகுங்கள்.
Average Rating