‘இந்திராவின் முழக்கம்’ தேர்தல் களத்தைத் திசை திருப்புமா? (கட்டுரை)
‘வறுமை ஒழிப்பு’ இந்தியாவில் தேர்தல் பிரசாரமாகி இருக்கிறது. மாநிலக் கட்சிகளில் இருந்து, தேசியக் கட்சியான காங்கிரஸ் வரை, தேர்தல் விஞ்ஞாபனத்தில் முக்கிய அங்கமாக, ‘வறுமை ஒழிப்பு’ இருக்கின்றது.
1971இல் ‘வறுமை ஒழிப்பு’ முழக்கத்தை கையிலெடுத்து, அமோக வெற்றியைப் பெற்றார் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளராகக் களத்தில் நின்ற இந்திரா காந்தி. பிறகு ‘இந்தியாதான் இந்திரா; இந்திராதான் இந்தியா’ என்ற முழக்கங்கள் நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் கேட்கத் தொடங்கியது.
பாரதிய ஜனதாக் கட்சி போன்ற வலுவான தேசியக் கட்சி ஒன்று, அப்போது களத்தில் இல்லாத சூழல், மாநிலக் கட்சிகள் ஆங்காங்கே தலைதூக்கி, வெற்றிக் கொடி நாட்டிக் கொண்டிருந்த நேரம். ஆனாலும், இந்திரா காந்தியின் ‘கரிப் கட்டோ’ என்ற வறுமை ஒழிப்புத் திட்டம், இந்தியத் தேர்தலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது என்பதை, இப்போதுள்ள முதல் தலைமுறை வாக்காளர்கள் அறிந்திருக்க நியாயமில்லை.
நாடு, சுற்றுப்புறச் சூழல் சவால்களைச் சந்தித்துள்ளது. பூமி வெப்பமயமாகும் பிரச்சினைகள், உலக அளவில் வெகு தீவிரமாகப் பேசப்படுகிறது. ‘ரபேல் ஊழல்’ என்று, ஒருபுறம் காங்கிரஸ் கட்சி குரல் கொடுக்கிறது. வேலைவாய்ப்பு இல்லை என்றும், 45 வருடங்களுக்கு முன்பு இருந்தது போன்ற வேலைவாய்ப்பின்மை, இப்போது நாட்டில் தலையெடுத்து விட்டது என்றும் எதிர்க்கட்சிகள் ஆய்வு அறிக்கைகளை மேற்கோள் காட்டி, காட்டமான தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றன.
ஆனால், இவற்றை எல்லாம் புறந்தள்ளி நிற்கும் வகையில், ராகுல் காந்தி அறிவித்துள்ள ‘வறுமை ஒழிப்புத் திட்டம்’, இப்போது முன்னணியில் நிற்கிறது. இப்படியொரு, ‘சிக்சர்’ அடிப்பதற்கு தூண்டுதலாக அமைந்தது, பிரதமர் நரேந்திர மோடியின், ‘விவசாயிகளுக்கு வருடத்துக்கு ஆறாயிரம் ரூபாய் பணம் வழங்கும் திட்டம்’ ஆகும்.
தனது அரசாங்கத்தின், கடைசி நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம், ‘நாருடன் சேர்ந்த மலரும் மணம் வீசும்’ என்பது போன்ற சூழ்நிலையை, பா.ஜ.கவுக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. பிரதமரும், பா.ஜ.க தலைவர்களும் தங்களது அரசாங்கத்தின் மிகப்பெரிய சாதனையாக, விவசாயிகளுக்கு ஆறாயிரம் ரூபாய்த் திட்டத்தை முன் வைத்தார்கள். இதன் பிறகு, பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் என்பவை பா.ஜ.கவின் தேர்தல்க் களத்துக்கு உதவிடும் யுக்தியாக அமைந்தாலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழைகளுக்கு, வேலை வாய்ப்பில் பத்து சதவீத இட ஒதுக்கீடு என்று, அறிவிப்புகளைக் காங்கிரஸ் கட்சி விடுத்தது.
பா.ஜ.கவின் இந்த அறிவிப்புத் தாக்குதலை, சற்றும் எதிர்பாராத ராகுல் காந்தி, அதை ஆதரிப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஆனாலும், பா.ஜ.கவுக்கே அதன் பலன் போய்ச் சேரும் என்ற நிலை ஏற்பட்டது.
இந்நிலையில்தான் காங்கிரஸ் சற்று விழித்துக் கொண்டது. ஏதாவது ஒரு முழக்கத்தின் மூலம், பா.ஜ.க பெற்ற வாங்கு வங்கிப் பலனைத் திசைதிருப்ப வேண்டும் என்று முடிவு செய்தது. அதற்கு காங்கிரஸ் தரப்பிலிருந்து, விடப்பட்ட ஏவுகணைதான், இந்த ‘வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள ஏழைகளுக்கு, வருடத்துக்கு 72 ஆயிரம் ரூபாய்” என்ற திட்டம்.
ஆகவே, காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, ‘மீண்டும் இந்திரா காந்தியின் முழக்கம்’ என்றே, இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது. 48 ஆண்டுகளுக்கு முன்பு, இந்திரா காந்தி நாட்டுக்குக் கொடுத்த ‘வறுமை ஒழிப்பு’ முழக்கம், இன்றைக்கு அவரது பேரன் ராகுல் காந்திக்கு, கை கொடுத்திருக்கிறது.
இத்திட்டம் அறிவிக்கப்பட்டதில், பா.ஜ.க தலைவர்களும் ஏன் பிரதமருமே, முன்னோக்கி வைத்த காலை, ஓரடி பின் எடுத்து வைத்து நிற்க வேண்டிய, அபாயச் சங்குச் சத்தத்தை எழுப்பி விட்டது. “அதெல்லாம், இத்திட்டம் சாத்தியமில்லை” என்று நிதியமைச்சர் அருண்ஜேட்லி சொன்னாலும், ராகுல் காந்தியின் தேர்தல் வியூகத்தை, ‘சாயம் வெளுக்க’ வைக்க வேண்டும் என்று, அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்கள். கண்ணுக்குத் தெரிந்தவரை, உடனடியாக எந்தத் திட்டமும் கிடைக்கவில்லை என்றே தெரிகிறது.
திடீரென்று, மார்ச் 27ஆம் திகதி நாடு முழுவதும் ஒரே பரபரப்பு. பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு உரையாற்றப் போகிறார் என்பதுதான் அந்தப் பரபரப்பு. இதற்கு முன்பு, 2016ஆம் ஆண்டு நவம்பர் எட்டாம் திகதி, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அறிவிக்கப்பட்டதுதான் பண மதிப்பிழப்பு நடவடிக்கை.
ஆகவே, இந்தமுறை என்ன அறிவிப்பு செய்யப் போகிறார் என்று, நாட்டு மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், “குறைந்த உயரத்தில் பறந்து கொண்டிருந்த செயற்கைக்கோளை, ஏவுகணை மூலம் துல்லியமாகத் தாக்கி, வெற்றி கண்டுள்ளோம். இதற்கு முன்னர் இந்தச் சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியது அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் மட்டும்தான்’ என்றார் பிரதமர்.
இந்த அறிவிப்பு, பாதுகாப்பு விடயத்தில் பா.ஜ.க எவ்வளவு அக்கறையுடன் செயல்படுகிறது என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமைந்தாலும், அடுத்த சில நிமிடங்களிலேயே எதிர்தாக்குதல்களை எதிர்க்கட்சிகள் தொடங்கி விட்டன. “இந்தியாவுக்கு இந்தத் தகுதி, முன்பே இருக்கிறது. பிரதமர் சொல்வது ஒன்றும் புதிதல்ல” என்று சில செய்திகள் வௌிவந்தன.
“இந்தத் திட்டத்தைத் தொடக்கி வைத்ததே, பிரதமராக இருந்த மன்மோகன்சிங்தான். காங்கிரஸ் திட்டத்துக்கு மோடி சொந்தம் கொண்டாடுவதா” என்ற கேள்விகள் எழுந்தன.
இப்படி சமூக வலைத்தளங்களில் நையாண்டிச் செய்திகளும் நீச்சல் அடிக்கத் தொடங்கின. ஆனால், பா.ஜ.கவைப் பொறுத்தமட்டில், ஒரு சில நாள்கள், ராகுல் காந்தியின் வறுமை ஒழிப்புத் திட்ட அறிவிப்பைத் திசை திருப்பியிருக்கிறது என்றே திருப்தி அடைந்ததாகக் கருத முடிகிறது. உத்தர பிரதேச பிரசாரத்தில் கூட, “நாட்டின் பாதுகாப்புக்கு நான் காவலாளி” என்ற ரீதியில் பிரதமர் உரையாற்றி இருக்கிறரார்.
அதேநேரத்தில், இந்த 17ஆவது நாடாளுமன்றத் தேர்தல், வித்தியாசமான திருவிழாக் காட்சிகளைக் காண்கிறது. மாநிலங்களில் உள்ள கட்சிகள் கூட, ராகுல் காந்தியின் வறுமை ஒழிப்புத் திட்டத்தை வரவேற்றுள்ளன. குறிப்பாக, தமிழ்நாட்டில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் வரவேற்று, “ஜூன் மூன்றாம் திகதிக்குப் பிறகு, இந்தியாவில் அமையும் ஆட்சியில், ஏழைகள் இந்த நாட்டின் எஜமானர்கள்” என்ற நிலை உருவாகும் என்று, தேர்தல் பிரசாரத்திலேயே அறிவித்துள்ளார்.
இதற்குப் போட்டியாக, ஏற்கெனவே அ.தி.மு.க தேர்தல் விஞ்ஞாபனத்தில், வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள மக்களுக்கு, மாதம் 1,500 ரூபாய் கொடுக்கும் திட்டம் ஒன்று செயற்படுத்தப்படும் என்று அறிவித்து, அதற்கு ‘அம்மா தேசிய வறுமை ஒழிப்புத் திட்டம்’ என்று பெயர் சூட்டப்படும் என்றும் தேர்தல் வாக்குறுதி கொடுத்துள்ளது.
நாடு சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகளுக்குப் பிறகு, 48 ஆண்டுகளுக்கு முன்பு, தேர்தலில் பயன்படுத்திய, ‘வறுமை ஒழிப்பு’ முழக்கம் பயன்படுத்தப்படுவது வருத்தமான ஒன்று என்றாலும், இதில் இன்னொரு ‘கவர்ச்சித் திட்டம்’ இருக்கிறது.
கடந்த ஐந்தாண்டு கால, பா.ஜ.க ஆட்சியில், இந்தியாவில் அவ்வளவு தூரம் ஏழைகள் உருவாகி விட்டார்கள் என்றதொரு தோற்றத்தை உருவாக்க காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. பிரதமர் மோடியை ‘கோர்ப்பரேட் ஆட்சி’ நடத்தியவர் என்று, இதுவரை குற்றம் சாட்டி வந்த காங்கிரஸ் கட்சி, இந்த முழக்கத்தின் மூலம், ‘கோர்ப்பரேட் ஆட்சி’யால் இன்றைக்கு சாதாரண மனிதர்கள் பாதிக்கப்பட்டு விட்டார்கள் என்று, நாட்டு மக்கள் மத்தியில், தேர்தல் செய்தியொன்றைக் கொண்டு போய்ச் சேர்த்து விட்டது.
இதை முறியடிக்கும் வல்லமை, பா.ஜ.க தலைவர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. அவர்கள், “நாட்டின் பாதுகாப்புக்கு நாங்கள் தான் சாதனைகள் புரிந்தோம். எங்கள் கையில் நாடு பாதுகாப்பாக இருக்கிறது” என்ற முழக்கத்தை மட்டும்தான் முன்னெடுத்துச் செல்கிறார்கள். அதனால், களத்தில் ‘வறுமை ஒழிப்பு’ முழக்கம் பின்னுக்குப் போய்விட்டதாக உணர முடியவில்லை.
அதேசமயத்தில் பிரதமர் மோடிக்கு, காங்கிரஸின் இந்த முழக்கத்தைத் தூள் தூளாக்கும் பேச்சுத் திறமை இருக்கிறதா என்று கேட்டால், அது, 2014இல் இருந்த பிரதமர் வேட்பாளராக இருந்த மோடிக்கு இருந்தது. ஆனால், 2019இல் பிரதமராக இருக்கும் மோடிக்கு இல்லை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
ஏனென்றால், அந்த அளவுக்கு மோடியின் நன்மதிப்பைக் காயப்படுத்துவதில், காங்கிரஸ் கட்சி, மம்தா பானர்ஜி, ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு போன்ற மாநில அரசியல் தலைவர்கள் வெற்றி கண்டிருக்கிறார்கள்.
இந்த வெற்றி, தேர்தல் வெற்றியாக மாறுமேயானால், பா.ஜ.க மீண்டும் ஆட்சி அமைப்பது கேள்விக் குறியாகிவிடும். ஆனால், பிரதமர் நரேந்திர மோடியையும் பா.ஜ.கவையும் குறைத்து மதிப்பிட்டு விடவும் முடியாது.
கடைசி ஆயுதமாக, எதைக் கையில் வைத்திருக்கிறார்கள்? அந்த ஆயுதத்தை, எப்போது பிரயோகித்து, தேர்தல்க் களத்தைத் தங்களது வெற்றிக் களமாக மாற்றப் போகிறார்கள் என்பதை, இன்னும் சில வாரங்கள் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
Average Rating