பூண்டு!! (மருத்துவம்)

Read Time:10 Minute, 47 Second

நம் அன்றாட உணவில் தவறாமல் இடம் பெறுகிற ஒரு பொருள் பூண்டு ஆகும். பூண்டும் இஞ்சியும் சேரும்போது பெரும் மணத்தையும் சுவையையும்
உணவுக்குத் தருகிறது. மேலும் உணவாகிற பூண்டு இன்றைய நவநாகரிக உலகில் மானுடத்தைத் தாக்குகிற பல நோய்களுக்கு மருந்தாகிப் பயனளிக்கிறது. இதற்குமுக்கியத்துவம் வாய்ந்த பூண்டைப் பற்றியும் அதன் குணங்கள் பற்றியும் மருத்துவப் பயன்கள் பற்றியும் இந்த கட்டுரையில் பார்ப்போம்.

பூண்டு மத்திய ஆசியாவைப் பிறப்பிடமாகக் கொண்டது என்பர். Allium sativum என்பது இதனது தாவரப் பெயர் ஆகும். ஆங்கிலத்தில் Garlic என்று அழைப்பர். ஆயுர்வேதத்தில் ரஸோனா, அரிஷ்டா, யவனேஷ்டா என்றெல்லாம் பெயர்கள் உண்டு. தமிழில் வெள்ளுள்ளி, உள்ளிப்பூண்டு, வெள்ளைப் பூண்டு என்ற பெயர்களாலும் கூறுவதுண்டு.

பூண்டின் குணம்

சித்த, ஆயுர்வேத நூல்களில் பூண்டின் மருத்துவ குணங்களைப் பற்றிச் சொல்கிறபோது, பூண்டு உடலை வளர்க்கக் கூடியது, விந்து வளர்ச்சிக்கு ஏற்றது, தாய்ப்பாலைப் பெருக்கக் கூடியது,செரிமானத்தைத் தூண்டக் கூடியது. எண்ணெய்ப் பசையும் உஷ்ணத் தன்மையும் கொண்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மருந்துக்கு புதியதாக விளைந்த பூண்டே பலன் தரக்கூடியது என்பர்.

பூண்டின் மருத்துவத் தன்மைகள்

*நோயைத் தணிப்பதில் பூண்டுஆண்டிபயாடிக் போன்றது.
*பலம் கொண்ட கிருமிநாசினி
*பூஞ்ைசக் காளான் கொல்லி
*வயிற்றுப் புழுக்கொல்லி
*ரத்த நாள அழற்சியைத் தடுப்பது
*ரத்த அழுத்தத்தைக் குறைப்பது
*ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும், கொழுப்புச் சத்தையும் குறைக்கக் கூடியது
*மேல் சுவாச அறைக் கோளாறுகளைக் கண்டிக்க கூடியது
*முதுமை காரணமாக ஏற்படும் ரத்த நாள அழற்சி, அடைப்பு ஆகியவற்றைத் தடுக்கக் கூடியது.
*சளியைக் கரைக்கக்கூடியது என பண்டைய மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன.

தமிழ் நூலில் பூண்டு பற்றிய பாடல்அதிகமான மருத்துவ குணங்களை உடைய பூண்டைப் பற்றி அகத்தியர் குணபாடம் என்னும் தமிழ் மருத்துவ நூலில் பின்வரும் பாடல் இடம் பெற்று இருக்கிறது. அதாவது

‘சன்னியொடு வாதந் தலைநோவு தாள்வலி
மன்னிவரு நீர்க்கோவை வன்சீதம் – அன்னமே
உள்ளுள்ளி கண்பால் உறைமூல ரோகமும் போம்
வெள்ஜன்னி தன்னால் வெருண்டு!’

சன்னி எனச் சொல்லப்படுகிற சீதளத்தால் வரும் கடுமையான காய்ச்சல், வாதத்தால் ஏற்படுகிற உடல்வலி, குத்தல், வாய்ப் பூட்டுகளில் ஏற்படுகிற வலி, தலையில் துன்பம் தரும்படி சேர்ந்துள்ள நீர்க்கோர்வை, தலை பாரம், தலைவலி, கடுமையான சீதபேதி, துன்பம் தருகிற மூலம் அத்தனையும் வெள்ளுள்ளி எனப்படும் பூண்டைக் கண்டதும் அஞ்சி நடுங்கி ஓடும் என்பது மேற்கண்ட பாடலின் பொருளாகும்.ஆயுர்வேதம் சொல்லும் பூண்டின் பயன்பசியைத் தூண்டுவது, உடலுக்கும் உரம் தருவது, உடல் தேற்றி, வெப்பமுண்டாக்கி, கோழை அகற்றி, சிறுநீர்ப் பெருக்கி, புழுக்கொல்லி என்றெல்லாம் ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது.

மேலும் Ayurvedic pharmacopoeia of india எனும் நூலில் பூண்டு மூளைக்கு பலம் தரவல்லது, காக்காய் வலிப்பைப் போக்கக் கூடியது, மனநிலைத் தடுமாற்றத்தைக் குணப்படுத்தவல்லது, நுண் கிருமிகளை அழிக்க வல்லது என பட்டியல்இடப்பட்டுள்ளது.

பூண்டின் சில மருத்துவ முறைகள்

*ஐந்து முதல் பத்து திரி வரையில் பூண்டைத் தோல் உரித்தெடுத்து, பாலில் வேகவைத்து நெய்யும் சர்க்கரையும் ேபாதிய அளவு ேசர்த்துப் பிசைந்து உள்ளுக்குச் சாப்பிட சீதக் கழிச்சல் குணமாகும்.

*ஒரு ஸ்பூன் நல்லெண்ணெயில் இரண்டு திரி பூண்டை நசுக்கிச் சேர்த்து காதில் ஓரிரு சொட்டுகள் விட்டு வர விரைவில் காதுவலி, காதில் சீழ் வடிதல் ஆகியன குணமாகும்.

*பூண்டை உரித்து சில திரிகளோடு கொஞ்சம் உப்பு சேர்த்துக் குழைத்து, மேலுக்குப் பூச சுளுக்கும் அதனால் ஏற்படும் கடும் வலியும் குணமாகும்.

*பூண்டை அரைத்து சிறிய கட்டிகளின் மேல் பூசி வர கட்டிகள் விரைவில் கரையும் அல்லது உடைந்து அதன் நச்சுக்கள் வெளியேறும்.

*பூண்டுச் சாறு தயாரித்து அதில் தினமும் 20 முதல் 30 துளி வரை அந்தி, சந்தி என இருவேளை சாப்பிட்டு வர இருமல், இரைப்பு என்கிற மேல்மூச்சு, ஆஸ்துமா என்கிற மூச்சு முட்டல் ஆகியன குணமாகும்.

*பூண்டை நசுக்கி அதன் சாற்றை எடுத்து, உடலில் ஏற்படும் படைகள் மீது கழுவிய பின் போட்டு வர படை, தேமல் முதலியன குணமாகும்.

*பூண்டை பாலில் இட்டு வேகவைத்து எடுத்துக் கடைந்து, அத்தோடு பனைவெல்லமும் தேனும் சிறிதளவு சுக்குத் தூளும் சேர்த்து லேகியம் போல் செய்து வைத்துக் கொண்டு ‘அந்தி, சந்தி’ என தினமும் இருவேளை உண்டு வர, வயிற்றைப் பெருக்க வைக்கும் வாயு வெளியேறும், வயிற்று வலியும் குணமாகும்.

*பூண்டை நசுக்கி சாறெடுத்து 20 – 30 துளிகள் வரை சர்க்கரை சேர்த்து உண்டுவர இருமல், சுவாசகாசம், காதுவலி, குளிர் சுரம் ஆகியன குணமாகும்.

*சிறுநீர் சரிவர இறங்காமல் அடிவயிறு பெருக்கும்போது பூண்டை நசுக்கி நீர்விட்டுக் கிளறி அடிவயிற்றில் வைத்துக் கட்ட சிறுநீர் வெளியேறி சுகம் சேரும்.

*கடும் காய்ச்சல், அம்மை இவை கண்டபோது தூக்கம் கெடுவதோடு வாய் பிதற்றல் காணும் நிலையில் பூண்டை நசுக்கி உள்ளங்காலில் வைத்துக்கட்ட, பிதற்றல் குறைந்து சுகமான நித்திரை உண்டாகும்.

*பூண்டைச் சாறு எடுத்து சிறிது நீருடன் சேர்த்து சீழ் பிடித்த ரணங்களைக் கழுவி வர விரைவில் புண்கள் ஆறும்.

*பூண்டுச் சாற்றை விரலால் தொட்டு உள்நாக்கு வளர்ச்சி கண்டபோது மேலே தடவி வர வீக்கம் சுருங்கிவலியும் தணியும்.

பூண்டின் மருத்துவப் பயன்கள்

*நாக்கு பூச்சி ரோகம் போகும்.

*மலத்தை இளக்கும்.

*உடலின் சிதைந்த பகுதிகளை ஒன்று சேர்க்கும்.

*குடலைத் தூய்மைப்படுத்தும்.

*பித்தம், ரத்தம் என்பனவற்றை வளர்க்கும்.

*உடல் வலிமை, நிறம் ஆகியவற்றை மேம்படுத்தும்.

*புத்தியை வளர்க்கும்.

*கண்களுக்கு நன்மை செய்யும்.

*ஊன், ரத்தம், மாமிசம், கொழுப்பு, எலும்பு, மூளை, விந்து ஆகிய உடல் தாதுக்கள் பூண்டால் செழிப்புறும்.

*இதய நோய்கள், பக்க சூலை, குன்மம், சுவையின்மை, சுபராக்கினி குறைவு ஆகியவற்றையும் குணமாக்கும்.

பூண்டை எப்போது பயன்படுத்தக்கூடாது?

பூண்டை உபயோகப்படுத்தும்போது சில விதிமுறைகளை மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன. அதாவது உடற்பயிற்சி செய்த உடனேயோ அல்லது வெயிலில் அலைந்து திரிந்து இல்லம் வந்த உடனேயோ கடும் கோபம் கொண்டிருக்கும்போதோ பூண்டு உண்பதைத் தவிர்க்க வேண்டும் என்று ஆயுர்வேதம் எச்சரிக்கிறது.

ஏனெனில், மேற்குறிப்பிட்ட மூன்று நிலைகளிலும் உடலின் வெப்பநிலை அதிகரித்து காணப்படும். அந்த சமயத்தில் பூண்டை உணவாக சேர்ப்பதால் மேலும் உடலின் வெப்பநிலை அதிகரித்து உடல் ஆரோக்கியத்துக்குத் தீங்கு நேரும் என்பதே காரணமாகும்.
அதேபோல், பூண்டை மேல் பூச்சாகப் பயன்படுத்தும்போது தோலில் எரிச்சல் கண்டால் உடனே கழுவி விட வேண்டும். இல்லாவிட்டால் கொப்புளங்கள் தோன்றும்.

முக்கியமாக அறுவை சிகிச்சைக்குத் தயாராகிற நோயாளிகள் சில நாட்கள் முன்பே பூண்டைத் தவிர்ப்பது நல்லது. இது ரத்தம் உறைகிற நேரத்தை அதிகப்படுத்தும் அல்லது Platelet என்கிற ரத்தத்தட்டுகளின் சேர்மானத்தைக் குறைக்கும். இதனால் காயம் குணமாகத் தாமதம் ஆகும். ரத்த சேதாரமும் ஆகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விமானத்தில் அனைவர் முன் இவர் செய்த அசிங்கத்தை நீங்களே பாருங்க!! (வீடியோ)
Next post ‘இந்திராவின் முழக்கம்’ தேர்தல் களத்தைத் திசை திருப்புமா? (கட்டுரை)