காங்கிரசுடன் தொடர்புடைய 687 பக்கங்களை நீக்கியது பேஸ்புக்!! (உலக செய்தி)
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடைய 687 பக்கங்களை நீக்கியள்ளதாக ஃபேஸ்புக் கூறியுள்ளது.
´´ஒருங்கிணைக்கப்பட்ட நம்பகமற்ற நடத்தை´´ கொண்டிருந்த காரணத்தால் இந்த பக்கங்கள் தனது சமூக வலைதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன என பேஸ்புக் தெரிவித்துள்ளது என ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுளளது.
இந்தியாவில் 300 மில்லியன் பேஸ்புக் பயனர்கள் உள்ளநிலையில் ஒரு பிரபலமான கட்சிக்கு எதிரான அரிதான ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது பேஸ்புக் நிறுவனம்.
தனது விசாரணையில் இவ்விவகாரத்தை பொருத்தவரை தனிநபர்கள் சிலர் போலி கணக்குகளை துவக்கி வெவ்வேறு குழுக்களில் இணைந்து தங்களது கருத்துக்களை பரப்பியதையும் தமது ´என்கேஜ்மன்டை´ அதிகரித்துக் கொண்டதையும் கண்டறிந்துள்ளது.
பேஸ்புக் என்கேஜ்மென்ட் என்பது ஒரு பேஸ்புக் பதிவிற்கு பயனர்களின் ரியாக்ஷன், கமென்ட், ஷேர் ஆகியவற்றை குறிக்கும்.
´´இது போன்ற ஒருங்கிணைக்கப்பட்ட நம்பகத்தன்மையற்ற நடத்தையில் ஈடுபட்ட நபர்கள் தங்களது அடையாளத்தை மறைக்க முயற்சித்துள்ளார்கள். ஆனால் அவர்கள் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதை கண்டறிந்துள்ளோம்´´ என பேஸ்புக் நிறுவனத்தின் இணைய பாதுகாப்பு கொள்கையின் தலைவர் நாதனியல் கிளெய்ச்சர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
“இந்த பக்கங்களை நீக்கியதற்கு காரணம் அந்நபர்களின் நடத்தையே. அவர்கள் இட்டிருக்கும் பதிவுகளுக்காக இப்பக்கங்கள் நீக்கப்படவில்லை” என விளக்கமளித்துள்ளது பேஸ்புக்.
பிரதமர் மோதியின் முன்னெடுப்புகளை விமர்சித்தும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை ஆதரிக்கச் சொல்லியும் பதிவுகள் இடப்பட்டிருந்ததை பேஸ்புக் உதாரணம் காட்டியுள்ளது.
மேலும் பாகிஸ்தான் ராணுவத்துறையுடன் தொடர்புடைய ஊழியர்கள் சம்பந்தப்பட்டிருக்கும் ஒரு குழுவின் ´´ நம்பகமற்ற நடத்தையை´´ காரணம் காட்டி 103 பக்கங்கள், குழுக்கள் மற்றும் கணக்குகளை நீக்கியுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.
உலகம் முழுவதுமே பேஸ்புக் நிறுவனம் கடுமையான அழுத்தங்களை சந்தித்துவருகிறது. இந்திய அரசும் அழுத்தம் கொடுத்துவருகிறது. தேர்தல் வரவுள்ள நிலையில் பேஸ்புக் தளத்தை யாரும் அரசியல் ஆதாயங்களுக்காக பயன்படுத்தக்கூடாது, தவறான தகவல்களை பரப்ப இந்த தளங்களை பயன்படுத்தக் கூடாது. இதனை பேஸ்புக் நிறுவனம் உறுதி செய்ய வேண்டும் என இந்தியா அழுத்தம் கொடுத்திருக்கிறது.
பேஸ்புக் நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் தமது தளத்தில் செய்யப்படும் அரசியல் ரீதியான விளம்பரங்களில் தமது விதிகளை கடுமையாக்கியள்ளது மேலும் உலகம் முழுவதும் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க முயற்சி செய்து வருகிறது.
இந்த பக்கங்கள் மட்டுமின்றி தனியாக இந்தியாவில் 227 பக்கங்கள் மற்றும் 94 கணக்குகளை நீக்கியுள்ளது ஃபேஸ்புக் நிறுவனம். ஸ்பேம் மற்றும் தவறான பிரதிநிதித்துவத்துக்கு எதிரான தனது கொள்கையை இந்த 227 பக்கங்களும், 94 கணக்குகளும் மீறியுள்ளதாக கூறுகிறது பேஸ்புக்.
Average Rating