கிச்சன் டிப்ஸ்!! ( மகளிர் பக்கம்)
பாகற்காய் துண்டுகளை அரைமணி நேரம் சுடு நீரில் ஊற வைத்த பிறகு எடுத்து சமைத்துச் சாப்பிட்டால் கசப்பு இருக்காது.
ஜாடியிலிருக்கும் புளியுடன் சிறிது உப்பைப் போட்டு வைத்தால் புளி எளிதில் கெடாது.
– ஆர். அம்மணி ரெங்கசாமி வடுகப்பட்டி.
ஜவ்வரிசி வடாம் துகள்கள் இருந்தால் அவற்றை பஜ்ஜி மாவில் இரண்டு நிமிடங்கள் ஊறப் போட்டு பிறகு பஜ்ஜி சுடுங்கள். சுவை பிரமாதமாக இருக்கும்.
எந்தத் துவையல் அரைத்தாலும் அவற்றுடன் சிறிது கொத்து மல்லித் தழையைப் போட்டு அரைத்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
வாழைப்பூ அடை செய்யும் போது பூவை அப்படியே நறுக்கிப் போடுவதற்குப் பதில் முக்கால் பதத்திற்கு வேக வைத்து ஒன்றிரண்டாக அரைத்து மாவில் கலந்து அடை வார்த்தால் சுவையே தனிதான்.
– ஆர். ராமலெட்சுமி திருநெல்வேலி.
கோதுமை ரவையை ஒரு மணி நேரம் மோரில் ஊற வைத்து மிளகாய், பெருங்காயம் போட்டு அரைத்து தோசை வார்த்து மிளகாய் சட்னியுடன் சாப்பிட்டால் அதன் சுவை பிரமாதமாக இருக்கும்.
– கே. பிரபாவதி, மேலகிருஷ்ணன் புதூர்.
மிளகாய்வற்றல் சேர்த்து எதையும் அம்மியிலோ கல்லிலோ அரைக்கும் போது முதலில் அதை ஊறவைத்து மசித்துக் கொண்டு பிறகு மற்ற பொருட்களை உடன் சேர்த்து வைத்து அரைக்க வேண்டும். சீக்கிரமாக மிளகாய் வற்றல் மசியும்.
– ஆர். அஜிதா, கம்பம்.
குடைமிளகாய், வெங்காயத்தை நீளமாக வெட்டவும். தக்காளியை வேகவைத்து தோல் உரித்து மசிக்கவும். கடாயில் எண்ணெய் சேர்த்து, சீரகம், வெங்காயம் வதக்கவும். உடன் குடைமிளகாயும் வதக்கவும். பின் தக்காளி சாறு, பூண்டு விழுது, உப்பு, சிவப்பு மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கவும். உடன் பனீர் துண்டுகள், கஸ்தூரி மேத்தியை சேர்த்து பனீர் வெந்ததும் சப்பாத்தியுடன் பரிமாறவும்.
– ஏ.எஸ்.கோவிந்தராஜன், சென்னை.
வேகவைத்த வேர்க்கடலை, பொரி, கேரட் துருவல், மல்லித்தழை, வதக்கிய தேங்காய் துண்டுகள், கருப்பட்டி கலந்து குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸாக கொடுக்கலாம்.
எலுமிச்சை இலையை எண்ணெயை விட்டு வதக்கி மிளகாய், புளி, பெருங்காயம், உப்பு சேர்த்து துவையலாக செய்து சாப்பிடலாம்.
– ஆர்.பிரபா, திருநெல்வேலி.
சீரான வாழ்வுக்கு சீரகம்!
* சீரகத்தை வாழைப்பழத்துடன் பிசைந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ரத்த மூலம் தீரும்.
* சீரகத்துடன் கற்கண்டை கலந்து மென்று தின்றால் இருமல் குணமாகும்.
* சீரகப்பொடியோடு எலுமிச்சைச் சாறு சேர்த்து குழைத்துச் சாப்பிட்டால் பித்தம் அகலும்.
* சீரகப்பொடியுடன் தேன், உப்பு, நெய் சேர்த்து தேள் கொட்டிய இடத்தில் பூசினால் விஷம் முறியும்.
* சீரகத்தை வறுத்து சுடு நீரில் போட்டு பால் கலந்து சாப்பிட பசி கூடும், மிளகுப்பொடியோடு கலந்து காய்ச்சி வடிகட்டிக் குடித்தால் அஜீரணம் நீங்கும்.
* சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை சேர்த்து, தூளாக்கி கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம், தினம் இரண்டு வேளை சாப்பிட்டால், உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும்.
* சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும், நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
* சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து நைசாக அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாகும்.
* பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் நோய்க்கு, சிறிது சீரகத்துடன் சின்ன வெங்காயம் வைத்து நைசாக அரைத்து, பசும்பாலில் கலந்து குடித்துவர, நல்ல பலன் கிடைக்கும்.
* சீரகத்தை தேயிலைத் தூளுடன் சேர்த்து கஷாயம் செய்து குடித்தால் சீதபேதி குணமாகும்.
* மஞ்சள் வாழைப்பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
* சீரகம், மிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.
* ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து சாப்பிட்டால் அதிக பேதி போக்கு நிற்கும்.
Average Rating