நியூஸிலாந்து தாக்குதலும் இலங்கை அனுபவமும் !! (கட்டுரை)
நியூசிலாந்து பள்ளிவாசல்களில், இம்மாத நடுப்பகுதியில் இடம்பெற்ற படுகொலைத் தாக்குதலானது, இஸ்லாத்தைப் பின்பற்றும் மக்கள் கூட்டத்தின் மீதான, ‘இஸ்லாமோபோபியா’ அல்லது வெறுப்பு உமிழப்பட்ட இன்னுமொரு சந்தர்ப்பமாகவே கருதப்படுகின்றது.
நியூசிலாந்து நாட்டுக்கும் அங்கு வாழும் முஸ்லிம்களுக்கும், இது புது அனுபவமாக இருந்தாலும் கூட, உலக முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில், இது புதுமையான சம்பவமல்ல. இலங்கை, இந்தியா, மியான்மார் தொடக்கம் அரபு நாடுகள் தொட்டு மேற்கத்தேய நாடுகள் வரை, எல்லா இடங்களிலும் வாழ்கின்ற முஸ்லிம்கள், இவ்விதமான வன்கொடுமைகளை வரலாறு நெடுகிலும் அனுபவித்தே வருகின்றனர்.
நியூசிலாந்து நாட்டில், இரண்டு பள்ளிவாசல்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், 49 பேர் பலியாகிய அதேவேளை, பலர் காயமடைந்தும் உள்ளனர். அத்துடன், நியூசிலாந்து உள்ளடங்கலாக, ஐரோப்பிய நாடுகளில் வாழும் முஸ்லிம்களின் மனங்களிலும், மீண்டும் ஓர் அச்ச உணர்வு தொற்றிக்கொண்டுள்ளது என்பதெல்லாம் உண்மைதான்.
ஆனால், எந்தச் சம்பவமும், எல்லாம் வல்ல இறைவனின் எண்ணத்தின் பிரகாரமே நடக்கிறதென்று நம்புகின்ற முஸ்லிம்கள் மீதான இந்தத் துப்பாக்கிச் சூட்டை அடுத்து, இறை நம்பிக்கையற்ற கணிசமான மக்களைக் கொண்டுள்ள நியூசிலாந்து நாட்டில் இடம்பெற்று வருகின்ற சம்பவங்கள், ‘கெட்டதிலும் ஒரு நல்லது நடந்தது போல’ ஆகியிருக்கின்றன எனலாம்.
குறிப்பாக, தமது நாட்டின் சனத்தொகையில், ஒரு சதவீதமான மக்களாகக் காணப்படுகின்ற, அதுவும் கணிசமான குடியேறிகளான மக்களை உள்ளடக்கிய முஸ்லிம்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்தப் பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து, நியூசிலாந்து அரசாங்கமும் அந்த நாட்டில் பெரும்பான்மையாக வாழ்கின்ற ஏனைய இன, மதக் குழுமங்களைச் சேர்ந்த மில்லியன் கணக்கான மக்களும் நடந்து கொண்ட விதம், உலகெங்கும் வாழ்கின்ற முஸ்லிம்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இலங்கை போன்ற கீழைத்தேய நாடுகளில், சிறுபான்மைச் சமூகங்கள் மீது மேற்கொள்ளப்படுகின்ற அட்டூழியங்களின் பின்னர், பொறுப்புவாய்ந்த அரசாங்கமும் அரசியல்வாதிகளும், பாதிக்கப்பட்ட மக்களுடன் எவ்விதம் நடந்து கொள்கின்றார்கள் என்பதை நாமறிவோம். அதனை அக்குவேறு ஆணிவேறாகச் சொல்ல வேண்டியதில்லை.
அந்தவகையில், ஒரு வெள்ளைக்கார நாடு, முஸ்லிம்களுக்கு அனுதாபம் காட்டிய முறை என்பது, இலங்கை போன்ற நாடுகளுக்கு, முன்மாதிரி என்றே கூற முடிகின்றது.
நியூசிலாந்தின் மொத்த மக்கள் தொகை 48 இலட்சமாகும். அங்கு சுமார் 50 ஆயிரம் முஸ்லிம்களே வாழ்வதாக, உத்தியோகபூர்வ தகவல்கள் கூறுகின்றன. இப்படியிருக்க, கிறைஸ்ட்சேர்ச் நகரில் உள்ள அந்நூர் பள்ளிவாசலிலும் லின்ட்வூட் பிரதேச பள்ளிவாசலிலும், மார்ச் 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்காக பள்ளிக்குள் காத்திருந்த முஸ்லிம்கள் மீது, துப்பாக்கிதாரிகள் நடத்திய சாரமாரியான தாக்குதலில், சிறுவர்கள் உட்பட 49 பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காயமடைந்த சம்பவம், நியூசிலாந்தையும் முஸ்லிம்களையும் மட்டுமன்றி உலகையே ஒருகணம் உறைய வைத்தது.
பள்ளிவாசலுக்குள் நவீன துப்பாக்கியுடன் நுழைந்த இப்பயங்கரவாதி, இறை வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மீது, காட்டுமிராண்டித் தனமாகச் சுட்டதுடன், தனது தலையில் பொருத்தியிருந்த கமெராவின் ஊடாக, அச்சம்பவத்தை நேரலையாக ஒளிபரப்புச் செய்திருக்கின்றார்.
இச்சம்பவத்தைச் செய்தவர், அவுஸ்திரேலிய நாட்டவரான பிரெண்டன் என்ற 28 வயது இளைஞனாவான். இவன், இதனை நன்கு திட்டமிட்டே செய்திருக்கிறான் என்பதற்கு, நிறைய ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
முதலில், பிரெண்டன் ஒரு மனநோயாளியல்ல என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அத்துடன், அவர் தற்செயலாகவோ ஆயுதக் குழுக்களின் தூண்டுதலாலோ இதைச் செய்ததாக எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
பிரெண்டன், பல நாள்களுக்கு முன்னரே, இதற்காகத் துப்பாக்கியைக் கொள்வனவு செய்தமை, உலகின் பல நாடுகளுக்குச் சென்றமை, பல பக்கங்களில் இதற்கான காரணத்தை விவரித்துள்ளமை, தற்போது சிறைவாசம் அனுபவிக்கும் அவன் வழங்கிய வாக்குமூலம் என்பவற்றிலிருந்து, இது ஒரு திட்டமிடப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் என்ற முடிவுக்கு உலகம் வந்திருக்கின்றது.
வெள்ளையின மேலாதிக்கச் சிந்தனையின் அடிப்படையில், இதை அவர் செய்திருக்கின்றார் என்றும் குடியேறிகளுக்கு எதிரான மனோநிலையே இதற்குக் காரணம் என்றும், ஒருகட்டத்தில் அனுமானிக்கப்பட்டது. ஆனால், அவர் கறுப்பினத்தவரையோ பொதுவான குடியேறிகளையோ குறிவைக்கவில்லை.
எனவே, பிரெண்டன், வெள்ளையின மேலாதிக்கவாதியாக, குடியேறிகளை எதிர்ப்பவராக இருந்தாலும் கூட, இஸ்லாத்துக்கு எதிரான மனோநிலையிலேயே கிறைஸ்ட்சேர்ச் படுகொலைகளை மேற்கொண்டுள்ளார். எனவே, இது உலகெங்கும் பரவியுள்ள புதுவகை மனநோயான ‘இஸ்லாமோபோபியா’வின்பாற்பட்டது என்ற முடிவுக்கே வந்தாக வேண்டியுள்ளது.
இந்த ஆயுததாரி, ஒரு வெள்ளிக்கிழமையன்று, பள்ளிவாசலுக்குள் புகுந்திருக்கின்றார். முஸ்லிம்களை மட்டுமே படுகொலை செய்திருக்கின்றார். இதற்காகப் பயன்படுத்தப்பட்டு, வேண்டுமென்றே பிரெண்டனால் விட்டுச் செல்லப்பட்ட துப்பாக்கியில் எழுதப்பட்டுள்ள வசனங்கள், முஸ்லிம்களே இலக்கு வைக்கப்பட்டார்கள் என்பதற்கு மேலும் சான்றுபகர்வதாக ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.
இந்தச் சம்பவம் நடைபெற்றதையடுத்து, நியூசிலாந்து அரசாங்கமும் மக்களும் எவ்வாறு நடந்துகொண்டார்கள் என்பதே இன்று முக்கியமாகின்றது. நமது படையினரைப் போல் தாமதிக்காமல், உடனடியாகவே சம்பவங்கள் இடம்பெற்ற பள்ளிவாசல்களுக்கு வந்த பொலிஸார், குற்றவாளிகளைத் துரத்திப் பிடித்தனர். அதில் எந்த அரசியல் அழுத்தமும் பிரயோகிக்கப்படவில்லை. அத்துடன், பள்ளிவாசல்களுக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
நியூசிலாந்து நாட்டின் பிரதமரான ஜெசிந்தா ஆர்டன், உடனடியாக ஸ்தலத்துக்கு வந்து பார்வையிட்டதுடன், முஸ்லிம்களுடன் கண்ணீர் மல்கி, தனது கவலையைப் பகிர்ந்துகொண்டார். முஸ்லிம்களின் பாதுகாப்பைப் பலப்படுத்தவும் துப்பாக்கிகளைத் தடை செய்யவும் நடவடிக்கை எடுத்தார்.
‘கிவி’ மக்கள் என்று செல்லமாக அழைக்கப்படும் முழு அவுஸ்திரேலியப் பிரஜைகளும், எவ்வித இன, மத பேதமும் இன்றி, முஸ்லிம்களுக்காக வீதிகளுக்கு வந்தனர்.
அதுமட்டுமன்றி, எவ்விதத் தயக்கமும் இன்றி, பிரதமர் ஜெசிந்தா ஆர்டன், “இது ஒரு பயங்கரவாதத் தாக்குதல்” என்றும் “இந்தத் தாக்குதலை நடத்தியவன் பயங்கரவாதி” என்றும் பகிரங்கமாக அறிவிப்புச் செய்தார். இவ்வாறு அறிவிப்பதால், தமது நாட்டில் வாழும் பெரும்பான்மை மக்கள் என்ன நினைப்பார்கள், அவுஸ்திரேலியா அரசாங்கம் என்ன நினைக்கும் என்று, ஜெசிந்தா அலட்டிக்கொள்ளவே இல்லை. அவர் ஒன்றை மட்டுமே பார்த்தார். இந்தத் தாக்குதல் யார் மீது, யாரால் மேற்கொள்ளப்பட்டாலும் மனிதாபிமானத்துக்கும் மனிதகுல நாகரிகத்துக்கும் நியூசிலாந்து கட்டிவளர்த்த மானுடவியல் பண்புகளுக்கு எதிரான, காட்டு மிராண்டித்தனமான செயல் என்பதை மட்டுமே பார்த்தார். இலங்கை, இந்தியா, மியான்மார் உள்ளடங்கலாக, பல உலக நாடுகளினது அரசாங்கங்களின் தலைவர்களுக்கும் இல்லாத ஒரு முன்மாதிரியை, ஜெசிந்தா மிகத் தைரியமாக வெளிப்படுத்தினார். அதேபோன்று, அவுஸ்திரேலியப் பிரதமரும், பிரெண்டனை பயங்கரவாதி என்றே குறிப்பிட்டுள்ளார்.
நியுசிலாந்துப் பள்ளிவாசல் படுகொலைகளைத் தொடர்ந்து, அந்த நாட்டில் உள்ள மில்லியன் கணக்கான மக்களும், முஸ்லிம்களுக்குத் தமது அனுதாபத்தையும் ஆதரவையும் தெரிவித்துள்ளனர். பிரதமரும் ஏனைய பெண்களும், முஸ்லிம்களைப் போலவே தலையை மூடியவாறு நடமாடுகின்றனர். பாதுகாப்புக்கு பொலிஸாரும் பொதுமக்களும் குவிந்துள்ள பள்ளிவாசல்களின் முன்னால், அஞ்சலி மலர்கள் இன்னும் குவிந்த வண்ணமுள்ளன.
‘கிவி’ மக்கள் அனைவரும், இச்சம்பவத்துக்காகத் துக்கம் அனுஷ்டித்தனர். தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. வெள்ளிக்கிழமைகளில் பள்ளிவாசல்களில் ஒலிக்கும் அதானை (பாங்கு ஒலியை), தேசியத் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்புச் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அத்துடன், இச்சம்பவத்துக்குப் பிறகு நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வுக்கு, முஸ்லிம் மதகுரு ஒருவர் அழைக்கப்பட்டு, குர்ஆன் வசனங்களுடன் அந்த அமர்வு ஆரம்பிக்கப்பட்டது.
இலங்கையிலும், சிறுபான்மை தமிழர்களும் முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டார்கள். அவ்வேளைகளில், அரசாங்கங்களும் பெரும்பான்மையினமும் எவ்வாறு நடந்து கொண்டன என்பதை இவ்விடத்தில் சிந்திக்க வேண்டியுள்ளது.
குறிப்பாக, இலங்கையில் பள்ளிவாசல்களுக்குள் தொழுதுகொண்டிருந்தோர், ஆயுதக் குழுக்களால் பலியெடுக்கப்பட்டனர்; கைக்குண்டுகள் வீசப்பட்டன. அத்துடன், திகண, அம்பாறை உள்ளிட்ட இடங்களில் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன; வேறுபல வழிகளிலும் முஸ்லிம்கள், இனவாத ஒடுக்குமுறைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
அப்படிப் பார்த்தால், இலங்கை அரசாங்கமும் பெருந்தேசியமும், இச்சந்தர்ப்பங்களில் நியூசிலாந்தைப் போல நடந்துகொள்ளவில்லை என்பது, மனதை வருத்துகின்றது.
எனவே, இலங்கை உள்ளிட்ட பல்லின சமூகங்களைக் கொண்ட நாடுகள், சிறுபான்மை மக்களின் இன, மத அடையாளங்களைப் பாதுகாப்பதும் சிறுபான்மை மக்களின் மனங்களை வெல்வதும் எவ்வாறு என்பதை, நியூசிலாந்துப் பிரதமரிடமிருந்தும் ‘கிவி’ மக்களிடமிருந்தும் கற்றுக்கொள்வது நல்லது என்றே தோன்றுகின்றது.
‘இஸ்லாமோபோபியா’ முஸ்லிம் வெறுப்புணர்வு
‘இஸ்லாமோபோபியா’ என்பது, இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றும் மக்களுக்கு எதிரான வெறுப்பைக் காண்பித்தல், அவர்களை அநீதியாக நடத்துதல், அச்சங்கொண்டு தாக்குதல் போன்ற பல குணங்குறிகளைக் கொண்ட ஒரு மனோநிலையாகும். ‘இஸ்லாத்துக்கு எதிரான சக்திகள் உருவேற்றிய ஒருவித மனநோய்’ என்றும் ஆய்வாளர்கள் இதைக் குறிப்பிடுவதுண்டு.
‘இஸ்லாமோபோபியா’ இன்று, நேற்று உருவானதல்ல. இது 1960களின் இறுதியில் இருந்தே, உலகின் பல பாகங்களிலும் இருந்து வந்திருக்கின்றது. ஆனால், 1997ஆம் ஆண்டு, முஸ்லிம்களுக்கு நடந்த ஓர் அநியாயத்தைப் பின்புலமாகக் கொண்டு, வெளிவந்த ‘இஸ்லாமிமோபோபியா: எம் அனைவருக்குமான ஒரு சவால்’ என்ற நூலே இச்சொற்றொடரை, உலகில் பிரபலமாக்கியதாகக் கூறப்படுகின்றது.
அதன்படி, அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், இஸ்ரேல், இலங்கை, இந்தியா, மியான்மார், வியட்நாம், அல்பேனியா, பெல்ஜியம், பொஸ்னியா, பிரேஸில், கனடா, சீனா, மத்திய ஆபிரிக்கா, டென்மார்க், பிரான்ஸ், ஜேர்மனி, நெதர்லாந்து, நோர்வே, இத்தாலி, ரஷ்யா, சுவிட்சர்லாந்து, சுவீடன், உக்ரைன் உள்ளடங்கலாக உலகின் பல தேசங்களில், ‘இஸ்லாமோபோபியா’ அடிப்படையிலானது என அடையாளப்படுத்தக்கூடிய ஒரு சம்பவமாவது இடம்பெற்றுள்ளமைக்கு தரவுகள் கிடைக்கின்றன.
யானை போன்ற சில மிருகங்கள், தமக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ என்று பயந்து, முன்னால் வருகின்ற மனிதர்களைத் தாக்கியழிப்பதைப் போல, இஸ்லாமிய மார்க்கத்தைக் கண்டு அஞ்சும் சக்திகள்தான், பெரும்பாலும் ‘இஸ்லாமோபோபியா’ சிந்தனைக்கு ஆட்பட்டு, இவ்வாறான அட்டூழியங்களை முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்திக்கொண்டு இருக்கின்றன என்றால் மிகையில்லை.
அமெரிக்கா, இஸ்ரேல் உட்பட அவற்றினது நேசநாடுகள், யூத தேசங்களில் பக்கபலத்துடன் முஸ்லிம்களுக்கு எதிரான உலக நிகழ்ச்சி நிரல் நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இது ‘இஸ்லாமோபோபியா’வின் இன்னுமொரு வடிவம் எனலாம்.
முஸ்லிம்கள் இவ்வாறு இலக்கு வைக்கப்படுவதற்குப் பிரதான காரணம், வரலாற்றினூடு அந்தச் சக்திகளுக்கு, சிம்மசொப்பனமாக இருந்த ஒரு மார்க்கத்தை முஸ்லிம்கள் பின்பற்றுவதே ஆகும்.
‘அரபு வசந்தம்’ என்ற பெயரில், முஸ்லிம் நாடுகள் ஆக்கிரமிக்கப்பட்டதும், லிபியா, யேமன், துருக்கி, ஈராக் உள்ளிட்ட தேசங்களில் ஜனநாயகத்தை நிலைநாட்டுதல் என்ற தோரணையில் மேற்கொள்ளப்பட்ட படை முன்னெடுப்புகளும் பெரும்பாலும் ஜனநாயகத்தின் தன்மைகளைக் கொண்டதல்ல என்பதும், அதன் பிரதான நோக்கம் என்னவென்பதையும் உலகறியும். அதற்காக, இஸ்லாமியப் பெயர்களை வைத்துக்கொண்டு, இஸ்லாத்துக்கு எதிரான சக்திகளோடு போர் தொடுப்பதாகச் சொல்லிக்கொண்டு, இஸ்லாம் வெறுக்கின்ற விதத்தில் அப்பாவிகளையும் சிறுவர்கள், பெண்களையும் படுகொலை செய்கின்ற இயக்கங்களை இவ்விடத்தில் எவ்விதத்திலும் சரி காணமுடியாது.
ஆனால், இஸ்லாமிய பெயர்தாங்கிய இயக்கங்களின் செயற்பாடுகளைக் காரணமாகக் காட்டி, ‘இஸ்லாமோபோபியா’வை வளர்ப்பதும் முஸ்லிம்களைப் பயங்கரவாதிகளாகச் சித்திரித்து, அவர்கள் மீது இன, மத வெறுப்பை வளர்ப்பதும், அவர்களைக் கொன்றொழிப்பதும் நிறுத்தப்பட வேண்டும். அத்துடன், இதற்கான களமாக நியூசிலாந்து போல, அமைதியாக இருக்கின்ற நாடுகள் தேர்ந்தெடுக்கப்படுவது, உடன் தடுக்கப்படவும் வேண்டும்.
Average Rating