சுய தொழில் வெற்றிக்கான வழிகாட்டல்! ( மகளிர் பக்கம்)
இன்றைய காலகட்டத்தில் வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெண்கள் வேலைக்கு செல்வதன் நோக்கமே குடும்ப வருமானத்தைப் பெருக்கி கொள்வதற்குதான். கிராமப்புறங்களில் பெண்கள் அதிக அளவில் விவசாய பணிகளுக்கும், கட்டிட வேலைகளுக்கும் செல்கின்றனர். நகர்ப்புறங்களில் நிறுவனங்கள் சார்ந்த பணிகளுக்கு அதிக அளவில் பெண்கள் செல்கின்றனர். அதே சமயத்தில் சுய தொழில் முனைவோர்களைப் பொறுத்தவரை பெண்களின் எண்ணிக்கை இந்தியாவில் குறைவுதான்.
ஆனால், கடந்த பத்து ஆண்டுகளாக சிறு, குறு தொழில் தொடங்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மகிழ்ச்சியளிக்கக்கூடியதாக உள்ளது. வீட்டில் தயாரிக்கப்படும் அப்பளம், ஊதுவர்த்தி முதல் நவீன பேப்பர் பேக், ஸ்கிரீன் பிரிண்டிங், வீட்டு அலங்காரப் பொருட்கள், கேலிகிராஃபி எனும் சித்திர எழுத்துக் கலை, உபயோகமற்ற பாட்டில் மற்றும் பொருட்களை அலங்கரித்து அழகுப் பொருட்களாக மாற்றுவது என பல்வேறு சிறு தொழில்கள் இன்றைக்கு உருவாக்கப்பட்டுள்ளன.
சென்னை அயனாவரத்தில் கிறிஸ்டினா ஆர்ட் ஸ்டியோ’ஸ் என்ற பெயரில் ஒரு கலைக்கூடத்தை நிர்வகித்து வருகிறார் கல்லூரி விரிவுரையாளரான கிறிஸ்டினா ரஞ்சன். இவர் வீட்டு உள் அலங்காரப் பொருட்கள், செயற்கைப் பூக்கள் என பல்வேறு கைத்தொழில் பயிற்சிகளை பெண்களுக்கு அளித்து வருகிறார். ‘‘ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆண்களின் பங்கைப் போலவே பெண்களின் பங்கும் முக்கியமானதாக உள்ளது. முன்னேறிய நாடுகளில் மூன்றில் ஒரு பகுதி பெண்கள் தொழில் முனைவோர்களாக இருக்கிறார்கள்.
பிரிட்டனில் கடந்த 30 வருடங்களில் பெண் தொழில் அதிபர்களின் எண்ணிக்கை 3 மடங்காக அதிகரித்துள்ளது. இதே நிலைதான் மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் நிலவுகிறது. சீனாவில் கூட புதிய தொழில்களை துவங்குவதில் பெண்கள் பெரும் ஆர்வம் காட்டுகின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை தொழில் நிறுவனங்களை இயக்குவதற்கு ஆண்கள்தான் தகுதியானவர்கள் என்ற எண்ணம் இருப்பதால், சிறு தொழில் முனைவோர்களாக பெண்கள் குறைவாக இருக்கிறார்கள்’’ என்றவர் ஒரு தொழில் துவங்கும் முன் என்ன செய்ய வேண்டும் என்று விவரித்தார்.
‘‘முதலில் என்ன தொழில் செய்ய இருக்கிறீர்கள் என்று திட்டமிடுங்கள். தொடங்க இருக்கும் தொழிலை குறித்து முழு ஆய்வு செய்வது அவசியம். அதாவது அந்த தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்கள், வாடிக்கையாளர்கள் யார், இதன் மார்க்கெட் நிலவரம் என்ன என்பது போன்ற அனைத்தும் குறித்து ஆய்வு செய்வது அவசியம். மேலும் இதில் நீங்கள் என்ன புதுமையை செயல்படுத்த போகிறீர்கள் என்பதையும் திட்டமிட வேண்டும். தொழில் மூலம் மாத வருமானம் குறித்தும் கணக்கிட வேண்டும்.
அதாவது, மாதம் 15 ஆயிரம் சம்பாதிக்கிறீர்கள் எனில், அசலுக்கும் வட்டிக்குமாகச் சேர்த்து ரூபாய் 10 ஆயிரம் போக, குறைந்தது ரூபாய் 5 ஆயிரம் உங்களிடம் இருந்தால்தான் தொடர்ந்து தொழிலை நடத்த முடியும். நீங்கள் செய்ய இருக்கும் தொழிலில் இந்த வருமானம் உள்ளதா என்பதை உறுதி செய்து கொண்டு, வங்கியை அணுகினால் கடன் கிடைக்கும். ஒவ்வொரு வங்கியும் ஆண்டுக்கு குறிப்பிட்ட தொகையை கடனாகக் கொடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்து செயல்படுகின்றன. அந்த இலக்குக்காக போட்டி போட்டுக் கொண்டு வங்கிகள் கடன் தருகின்றன.
ஆனாலும் தொழில் முனைவோருக்கு கடன் கிடைக்கவில்லை எனில் அதற்குக் காரணம், சரியான திட்டமிடல் இல்லாததுதான். தொழில் தொடங்கிய உடனே வெற்றியை ஈட்ட முடியாது. முறையாக திட்டமிட்டால் வெற்றி காணலாம். எல்லாவற்றையும் விட உங்கள் பொருள்கள் போட்டி நிறுவனங்களை விட தரமானது என்று வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையை வளர்க்க வேண்டும். இன்றைக்கு மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட தொழில் மையங்களில் பல்வேறு சுயதொழில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
டெய்லரிங் தொடங்கி உணவு பதப்படுத்துதல் வரை நூற்றுக்கணக்கான சுயதொழில் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. செலவுகளை திட்டமிடுதல், சேமிப்பு ஆற்றல், பொறுமை, சகிப்புத் தன்மை, விடாமுயற்சி போன்ற சிறந்த குணங்கள் இயற்கையாகவே பெண்களிடம் அமைந்துள்ளதால், தொழில் வெற்றிக்கு பெரிதும் உதவும். இவற்றுடன் கல்வியும் சேர்ந்தால் அந்த திறன்கள் முழுமை பெறும். பெண்கள் பணிக்கு செல்வதற்கு ஒத்துழைப்பு அளிக்க தயாராக இருக்கும் ஆண்கள், பெண்கள் தொழில் முனைவோராக உருவாவதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும். அப்போதுதான் நம் நாட்டில் பெண் தொழில் முனைவோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்’’ என்கிறார் கிறிஸ்டினா ரஞ்சன்.
Average Rating