அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு முன் பதவி விலக தயார்! (உலக செய்தி)
பிரிட்டன் பிரதமர் தெரீசா மேயின் பிரெக்ஸிட் ஒப்பந்த வரைவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளிப்பதற்கு வலியுறுத்தும் முயற்சி நேற்று தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பிரெக்ஸிட் ஒப்பந்த வரைவுக்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கிடைத்தால், திட்டமிட்டுள்ளதைவிட விரைவாகவே பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து விலகுவேன் என்று தெரீசா மே அறிவித்த பின்னரும் இந்த முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தெரீசா மே விலகுவதாக அறிவித்திருப்பது பிரிட்டனின் முன்னாள் வெளியுறவு செயலாளர் போரிஸ் ஜான்சன் போன்ற சிலரை, தெரீசா மேயின் பக்கம் இழுத்துள்ளது.
அயர்லாந்துக்கு தடையாக இருப்பதால் தெரீசா மேயின் பிரெக்ஸிட் ஒப்பந்தத்திற்கு ஆதரவு அளிக்கப்போவதில்லை என்று வடக்கு அயர்லாந்தின் ஜனநாயக ஒன்றியக் கட்சி கூறியுள்ளதால், அதன் ஆதரவை தெரீசா மே பெறுவதற்கு பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், பிரெக்ஸிட்டுக்கு மாற்றாக நாடாளுமன்ற உறுப்பினர்களால் கொண்டுவரப்பட்ட எட்டு முன்மொழிவுகள், மக்கள் பிரதிநிதிகளின் பொது அவையில் ஆதரவு பெறவில்லை.
ஐரோப்பிய ஒன்றியத்தோடு சுங்கத்துறையில் இணைவு மற்றும் ஏதாவதொரு பிரெக்ஸிட் ஒப்பந்தம் தொடர்பான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு ஆகியவை ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு விலகுவதற்கு நல்ல பொதுக்கருத்தை உருவாக்க உதவலாம்.
இது தொடர்பாக பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்காவிட்டால், அமைச்சர்களின் பார்வையிலான ஒப்பந்தம் சிறந்த தெரிவாக அமையலாம் என்கிற கருத்துக்கு தற்போதைய நிலை வலுவூட்டுகிறது என பிரெக்ஸிட் செயலாளர் ஸ்டீபன் பார்கிளே கூறுகிறார்.
எந்தவொரு வகையிலும் பெரும்பான்மை இல்லாமல் இருப்பது “ஏமாற்றமளிக்கிறது” என்று இதற்கு முன்னர் வரலாற்றில் நடைபெறாத, தீர்மானத்தை கட்டுப்படுத்தாத நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்களிப்பை மேற்பார்வை செய்த கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சர் ஆலிவர் லெட்வின் கூறியுள்ளார்,
இந்த வாரம் பிரதமரின் பிரெக்ஸிட் ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்படாமல் இருந்தால், அடுத்த திங்கள்கிழமை நடைபெறுவதாக அவர் நம்புகின்ற மேலதிக தீர்மானத்தை கட்டுப்படுத்தாத நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்களிப்பு முடிவுகள் பற்றி எந்தவித அனுமானங்களும் தன்னிடம் இல்லை என்று பிபிசி வானொலி 4-ல் பேசிய அவர் கூறியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கான தனது ஒப்பந்த வரைவுக்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கிடைத்தால், திட்டமிட்டுள்ளதைவிட விரைவாகவே தான் பதவி விலகப்போவதாக தெரீசா மே கன்சர்வேட்டிவ் கட்சியினரோடு நடத்திய கூட்டத்தில் கூறியுள்ளார்.
“பிரெக்ஸிட்டின் இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தைக்கு புதியதொரு அணுகுமுறைக்கும் புதிய தலைமைக்கும் ஆவல் உள்ளதை அறிகிறேன். அந்த வழிக்கு தடையாக நான் இருக்கப்போவதில்லை” என்று தெரீசா மே தனது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறியுள்ளார்.
மே மாதம் 22 ஆம் திகதிக்கு பின்னர் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகி, அடுத்த புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கும் வரை பிரதமர் பதவியில் தொடரப்போவதாக தெரீசா மே கூறியுள்ளார்.
பிரதமர் மேயின் நிர்வாகத்திலிருந்து விலகிய முன்னாள் வெளியுறவுச் செயலர் போரிஸ் ஜான்சன், கன்சர்வேட்டிவ் கட்சியின் முன்னாள் தலைவர் ஐயின் டங்கன் ஸ்மித் ஆகியோர் பிரெக்ஸிட் ஒப்பந்தம்தான் குறைந்தபட்ச தெரிவு என கருதத் தொடங்கியுள்ளனர்.
Average Rating