ஆரோக்கிய வாழ்வுக்கு சித்தர்களின் அறிவுரைகள்! (மருத்துவம்)
‘நவீன ஆராய்ச்சிகளின் வாயிலாகக் கண்டுபிடிக்கப்பட்ட பல மருத்துவ ரகசியங்களை, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சித்த மருத்துவம் கூறியிருப்பது வெளிநாட்டவர்களை எப்போதும் பிரமிக்க வைக்கும் விஷயமாகவே இருக்கிறது. இதனாலேயே, மதிப்புக்கும் வியப்புக்கும் உரிய மருத்துவ முறையாக உலகெங்கும் சித்த மருத்துவம் கொண்டாடப்பட்டு வருகிறது.
டெங்கு, சிக்குன்குன்யா, பன்றிக்காய்ச்சல், பறவைக்காய்ச்சல் என்று புதுப்புது காய்ச்சல்கள் உருவாகி மிரட்டிய சமீபகாலங்களில் நிலவேம்பு கஷாயம் பேருதவி செய்ததை யாரும் மறக்க முடியாது. பதஞ்சலி என்ற சித்தர் உருவாக்கிய யோகாசனங்கள் இன்று சர்வதேச அளவில் பின்பற்றப்பட்டு வருவதையும் நாம் உணர்ந்திருப்போம்.
இதுபோல் ஆரோக்கியமாக வாழ எண்ணற்ற வழிமுறைகளை சித்த மருத்துவத்தின் காரணகர்த்தாக்களான சித்தர்கள் உருவாக்கிச் சென்றிருக்கின்றனர். அவற்றைப் பின்பற்றினாலே நோயில்லாமல் நூறாண்டுகள் தாண்டியும் வாழலாம்’’ என்கிறார் சித்த மருத்துவர் ஜூலியட்.
‘‘சித்த மருத்துவத்தை உருவாக்கிய சித்தர்கள் யார் என்பதை முதலில் சொல்லிவிடுகிறேன். யோகம், ஞானம், வைத்தியம் எனும் மூன்றிலும் தேர்ச்சி பெற்றவர்களே சித்தர்கள். அதனால், சித்தர்கள் என்றாலே சாமியார்கள் என்று மதரீதியாக தொடர்பு படுத்திப் பார்க்க வேண்டியதில்லை.
சித்தர்கள் என்பவர்கள் முழுமை அடைந்தவர்கள், அலைபாயும் சித்தத்தை அடக்கியவர்கள், அதீத ஞானம் கொண்டவர்கள் என்று சொல்லலாம். உடலை நன்கு பேணிக்காப்பதன் மூலம் உயிரை நன்கு வளர்க்க முடியும் என்று கூறியவர்களே சித்தர்கள்.
சித்தர்கள் தமிழ்நாட்டின் பல இடங்களில் வாழ்ந்து சமாதி அடைந்துள்ளனர். குறிப்பாக திருமூலர், ராமதேவர், அகத்தியர், கொங்கணவர், பாம்பாட்டி சங்கரன், போகர், பதஞ்சலி, தன்வந்திரி, குதம்பைச் சித்தர் போன்ற சித்தர்கள் இங்கு வாழ்ந்திருக்கின்றனர். நோயில்லாமல் உடலைப் பேணிக்காக்க சித்தர்கள் எத்தனையோ வழிமுறைகளை வகுத்துச் சொல்லியிருக்கிறார்கள். அதில் இன்றைய அவசரகால நடைமுறைக்கு ஏற்றவைகளும் இருக்கின்றன.
காயகற்பம் – உடலைக்கல் போல் மாற்றும் முறையாகும்.
மூச்சுப்பயிற்சி – மூச்சை உள்ளடக்கி அதன் மூலம் ஆயுட்காலத்தைப் பெருக்கும் வழி. இவை இரண்டும் முக்கியமானவை. காயகற்பம் என்பது தினமும் நாம் சில வகை மூலிகைகளை தாதுப்பொருட்களை மருந்துகளை சில நியதிகளின்படி உண்ணும்போது எப்போதும் முதுமை வராமல் தடுக்க முடியும்.
எ.கா. இஞ்சித்தேன். இஞ்சியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, தேனில் ஒரு மாதம் ஊறவைத்து உண்டு வாழ்ந்ததாக தேரன் கூறுகிறார்.
மேலும், பிராணாயாமம் எனப்படும் மூச்சுப்பயிற்சியை தினமும் 20 நிமிடம் பழகும்போது எப்போதும் குழந்தை போல் இருக்கலாம் என்றும் கூறுகிறார்.
மேலும் நோய்கள் அணுகாதிருக்க, சித்தர்கள் கூறிய சில வாழ்க்கை முறைகளை நாம் பார்ப்போம்.அதிகாலை எழுதல்அதிகாலையில் எழுதல் அந்த நாளில் வேலையில் உள்ள சிக்கல்களைப் பகுத்தறிந்து, அதை சரி செய்யும் திறமையை ஊக்குவிக்கிறது.
அதிகாலையில் விழிப்பவர்கள் சத்துள்ள உணவுகளை மட்டுமே சாப்பிடுவதாகவும் Northwestern uni*ersity-யில் நடந்த ஆய்வும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே, அதிகாலையில் (4-5 மணிக்குள்) துயிலெழ வேண்டும். அதனால், மனம் தெளிவடைந்து உடலின் ஆற்றல் பெருகும். இன்றைய காலத்திலும்கூட உலகில் சாதனை படைத்த பலர் அதிகாலையில் எழும் பழக்கம் உடையவர்கள்.
மலச்சிக்கலால் பல நோய்கள் ஏற்படுகின்றன. அதைத் தீர்க்க அதிகாலையில் விழிக்க வேண்டும். சிறுகுடலுக்கான நேரம் 4-5 மணி. எனவே, அதிகாலையில் நம் உடலின் வெப்பம் குறைந்து மலம் இலகுவாகக் கழியும்.
காலைக்கடன்
மலம், சீறுநீர் இரண்டையும் அடக்கக்கூடாது. மலம், சிறுநீர் அடக்குவதால் கீழ்வாயு, நீர் எரிச்சல், வயிற்று உப்புசம் போன்ற உபாதைகள் ஏற்படும். ‘தினமும் மூன்று முறை மலமும் ஆறு முறை சிறுநீரும் கழிப்பது ஆரோக்கியத்துக்கு நல்லது’ என்றும் கூறியுள்ளனர். மல இலகுவாகக்கழிய இரவில் அத்திப்பழம், பேயன்வாழை, உலர்திராட்சை போன்றவற்றை உண்ண வேண்டும்.
குளியல்
காலையில் குளித்தலே சிறந்தது. இதனால் நல்ல பசி ஏற்படும். நோய்கள் எல்லாம் நீங்கும். பெண்கள் மஞ்சள் தேய்த்து குளிப்பதன் மூலம் அக்குளின் கற்றாழை நாற்றம், வியர்வை, முகத்தில் ஏற்படும் நோய்கள் இவை நீங்கும். இதையே ‘காலைக் குளிக்கின் கடும்பசி நோயும் போம்’ என்று கூறினர்.
மேலும் பஞ்சகற்ப விதிப்படி குளித்தால் எந்நாளும் பிணிகள் வராது. கடுக்காய் தோல், நெல்லிப்பருப்பு மிளகு இவற்றை பால் விட்டு அரைத்துக் கொதிக்கவைத்துத் தலையில் தேய்த்து முழுகி வர எந்த பிணியும் அணுகாது.
குளிப்பதற்கு சோப்புகள் பயன்படுத்துவதால் எந்த பயனும் இல்லை. இதற்கு மாற்றாக நலுங்குமாவு, பாசிப்பயிறு, வெட்டிவேர், சந்தனம் சோரைக்கிழங்கு முதலியவற்றைப் பூசிக் குளிக்க மேனி பளபளக்கும். சருமம் சம்பந்தமான பிணிகள் நெருங்காது. மேலும் சருமநோயுள்ளோரும் சோப்புகள் பயன்படுத்துவதைத்தவிர்தது இந்த நலுங்கு மாவினைப்பயன்படுத்தலாம்.
எண்ணெய் குளியல்
எண்ணெய் தேய்த்து தலைமுழுகி வருவது பஞ்சேந்திரியங்களுக்கு பலம். தெளிவு, சிரசு, முழங்கால்களுக்கு வன்மை, ரோம வளர்ச்சி, நல்ல தொனி இவை உண்டாகும். தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கும் இது சிறந்த மருந்து. எண்ணெய் தேய்த்து குளிக்கும்போது வெந்நீரில் குளிக்க வேண்டும், பகல் தூக்கம் கூடாது. வெயிலில் செல்லக்கூடாது என்றும் கூறியிருக்கின்றனர்.
உணவு
‘உண்பதிருபொழுதொழிய மூன்று பொழுதுண்ணோம்.’ஒரு நாளைக்கு நாம் உண்ணும் உணவு 2 முறைதான் உட்கொள்ள வேண்டும். 2 வேளை உண்ணும்போது உணவு, செரிமானம் ஆவதற்குத் தேவையான அளவு இடைவெளி கிடைக்கிறது. மல, நீர்கள் கழியவும் ஏதுவாகும்.
அதேபோல், முதல் நாள் சமைத்த உணவு அமுதாகவே இருந்தாலும் மறுநாள் உண்ணக்கூடாது என்றும் கூறியிருக்கிறார்கள். குளிர்பதனப் பெட்டியில் வைத்து உண்பதால் உணவில் நச்சுத்தன்மை சேர்ந்து ரத்த அழுத்தம், அதிகக் கொழுப்பு, உடல் பருமன் போன்ற நோய்கள் ஏற்படுகிறது.
நன்கு பசி எடுத்தபிறகுதான் உணவுகள் கொள்ள வேண்டும். சில உணவுப்பொருட்கள் சில உணவு வகையுடன் கலக்கும்போது உணவு விஷத்தன்மையடைய நேரிடும். அவற்றை சேர்த்தும் உண்ணலாகாது. உதாரணத்துக்கு, பாலும் மீனும் சேர்ந்தால் நஞ்சு. பால் அருந்தியதும் கீரை உண்பதும் தவறு. மீன் பொரித்த எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவதும் தவறு.
எப்பொழுதும் கொதித்து ஆறிய நீரைப்பருக வேண்டும். வெண்ணெய் நீக்கின மோரை அதிக நீர் சேர்த்துப் பருக வேண்டும். நெய்யை எப்போதும் உருக்கி உண்ண வேண்டும் என்பதை ‘நீர் சுருக்கி, மோர் பெருக்கி, நெய்யுருக்கி உண்பவர் தம் பேருரைக்கிற்போமே பிணி’ என்று சித்தர்கள் கூறியிருக்கின்றனர். நெய்யை உருக்கி உண்ணும்போது எந்த நோயும் வருவதில்லை என்று சமீபத்திய ஆய்வுகளும் கூறுகின்றன. பலாப்பழத்தை நெய் அல்லது தேனுடனும் வேர்க்கடலையை வெல்லத்துடன் சேர்த்து உண்பது நல்லது என்றும் கூறியுள்ளனர்.
காலை உணவு
காலையில் பயறு, கடலை, உளுந்து, காராமணி, எள்ளு, மொச்சை, கடுகு, மிளகு, சுக்கு, பெருங்காயம் இவற்றை உண்ணலாம்.
மதிய உணவு
மதிய வேளையில் கிழங்கு, பழவகைகள், கீரை, தயிர், மோர் இவற்றை உண்ணலாம். ஏனெனில், பகல் நேரம் பித்தத்தின் ஆதிக்க காலம். எனவே, உண்ணும் உணவு எளிதில் ஜீரணம் ஆகும். இரவு நேரத்தில் காய்கள், துவரம்பருப்பு, பால் இவை சேர்த்துக் கொள்ளலாம்.
மேலும் நாம் உண்கிற உணவுப்பொருளில் ஏலம், மஞ்சள், சீரகம், காயம், சுக்கு, வெந்தயம், பூண்டு, மிளகு இவற்றைச் சேர்த்து உண்ண வேண்டும்.
எடுத்துக்காட்டு
பருப்பு வகைகள் சமைக்கும்போது பூண்டு சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் எளிதில் செரிமானம் அடைவதோடு வாயுத்தொல்லையும் நீங்கும்.
பானம்
பானங்களில் மிகச் சிறந்தது பாலும், மாமிசரசமும்(Soup). இவை இரண்டும் உடனே உடலுக்கு பலத்தைத் தரும். மேலும் பானகம், நன்னாரி, வெட்டிவேர் ஊறிய நீர், இளநீர், சீரகநீர், பன்னீர் போன்றவை வெயிலின் தாக்கத்தைத் தடுக்க உதவும்.
பயன்படுத்த வேண்டிய பாத்திரங்கள்
நாம் குடிக்கும் நீரை வெண்கலப் பாத்திரத்தில் காய்ச்சினால் உதிரத்தைப் பெருக்கும். வெள்ளிக் கிண்ணத்தில் காய்ச்சி அருந்த
கப நோய்கள் தீரும். செம்புப் பாத்திரத்தில் காய்ச்சி அருந்த கண் நோய்கள் நீங்கும். வெண்கலம் மற்றும் தாமிர பாத்திரத்தில் ஊற்றி வைத்த நீரில் அதிக அளவு பாக்டீரியாக்கள் அழிக்கப்படுவதாகவும் நவீன மருத்துவம் கூறுகிறது. மண் பாத்திரத்தில் காய்ச்சின நீரைப் பருக, எதிர்க்கிற உணவு, புளி ஏப்பம் செரியாமை குன்மம் இவை தரும்.
வெண்கலப் பாத்திரத்தின் பயன்கள்
வெண்கலம், செம்பு, பித்தளைப் பாத்திரங்களில் நீரை சேகரித்துப் பயன்படுத்தும்போது நீரினால் ஏற்படும் தொற்றுநோய்க் கிருமிகள் அழிக்கப்படுகின்றன. பிளாஸ்டிக் மற்றும் பல இதர பாத்திரங்களில் நீர் சேகரிப்பதைவிட, செம்பு பாத்திரத்தில் சேகரிக்கும் நீர் தூய்மையானது. வேறு சுத்திகரிப்பு செய்ய வேண்டிய தேவையில்லை. இந்தப் பாத்திரத்தில் சேகரித்த நீரானது ஒரு போதும் கெட்டுப் போவதில்லை. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, முதுமையைக் குறைக்கும். மூட்டுவலி போன்ற நோய்கள் வருவதைத் தடுக்கிறது.
உப்பு
எல்லாவகை தேதிகளிலும் இந்துப்பை(Rok salt) பயன்படுத்துவது நன்று. ஏனெனில் இந்துப்பில் 84 வகையான உடலுக்குத் தேவையான நுண்தாதுக்கள் உள்ளன. அஜீரணம், வாந்தி, சுவையின்மை போன்ற உடல் உபாதைகளுக்கு இந்துப்பு சிறப்பாகப் பயன்படுகிறது. ரத்த அழுத்தத்தை வெகுவாகக் குறைக்கிறது. உப்பினால் பல நோய்கள் வரும் இன்றைய சூழலில் இந்துப்பைக் கொண்டு பல நோய்களை வெல்லலாம்.
பால் அருந்துதல்
பசும்பாலை அனுதினமும் பருகி வர, நோயற்று வாழலாம். காலையில் பால் கறந்து 4 நிமிடத்துக்குள் நாழிக்குள் பருகி வர காமாலை, கைகால் எரிவு நீங்கும். இதையே தற்கால ஆய்வுகளும் நிரூபிக்கின்றன. அதில் Probiotics அதிகம் இருப்பதால் உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தைத் தரும். மேலும், காய்ச்சின பாலை இரவில் குடித்துவிட்டு படுக்கும்போது, பகலின் பித்தத்தைக் குறைத்து, நல்ல தூக்கத்தை வரவழைத்துக் கொள்ள முடியும். ஏனெனில், பாலில் உள்ள Tryptophan என்ற அமினோ அமிலம் தூக்கத்தின் இயல்பை அதிகரிக்கும். பாலில் உள்ள மெக்னீசியம் நரம்பைப் பாதுகாத்து தசை, நரம்புகளின் இயக்கத்துக்கு உதவும்.
தூக்கம்
நாம் தினமும் உறங்கும்போது இடது கையை மடக்கி, இடது புறமாக ஒருக்களித்து உறங்க வேண்டும். தற்போது நடந்த ஆய்வுகளின்படி GERD, ஆஸ்துமா போன்ற நோய்கள் இடதுபுறமாகப் உறங்கும்போது குறைவதை உறுதிப்படுத்துகின்றன.
பகல் உறக்கம் கூடாது
இருள் சூழ்ந்ததும் உறங்கவும், சூரியனின் பகல் பொழுதில் விழித்திருக்கவும் நம் உடம்பில் உள்ள Circadian rhythm அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த இயற்கைக்கு மாறாக நாம் இரவில் கண் விழித்து பகலில் தூங்குவது அநேக தீமைகளைக் கொண்டு வருகிறது.
உறுதியான வாழ்வு வாழ…
காலை இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையிலே கடுக்காய் உண்ண வேண்டும். மேலும், 6 திங்களுக்கொரு முறை வாந்தி செய்விக்கக் கூடிய மருந்தையும், 4 திங்களுக்கு ஒருமுறை பேதி செய்விக்கக்கூடிய மருந்துகளையும், நான்கு நாட்களுக்கொரு முறை எண்ணெய் குளியலையும் கடைபிடிக்க வேண்டும்.
முக்கியமாக, தன் உடல்நலன் மீது அக்கறை உள்ளவர்களே தங்களுடைய வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்த முடியும்’’ என்கிறார்.
Average Rating