சீனித்துளசி : மூலிகை ரகசியம்!! (மருத்துவம்)
துளசிக்கு நம் வாழ்வில் இருக்கும் மருத்துவரீதியான முக்கியத்துவம் பற்றித் தெரியும். இதேபோல் சீனித்துளசி என்று அழைக்கப்படும் ஸ்டீவியாவும் பல்வேறு மருத்துவப்பலன்களைத் தன்னகத்தே கொண்டது. அதைப் பற்றி சித்த மருத்துவர் சதீஷ் விளக்குகிறார்.
‘‘சீனித்துளசி இந்தியத் துணை கண்டத்துக்குச் சொந்தமானது. தென்கிழக்கு ஆகிய வெப்பமண்டலங்கள் முழுவதும் பரவலாக பயிரிடப்படும் தாவரமாக உள்ளது. இது மூலிகைப் பயிர் வகையைச் சேர்ந்தது. இத்துளசியின் தாயகம் பராகுவே நாடு. ஜப்பான், கொரியா, சீனா மற்றும் கனடாவிலும் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. அவை ரத்த சர்க்கரை, கொழுப்பு, ரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது. இது புற்றுநோய் எதிர்ப்பு சக்தி உள்ள மூலிகையாகவும் விளங்குகிறது. முதுமையைக் குறைக்கிறது. இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இப்பயிர் பரவலாக வளர்க்கப்பட்டு வருகிறது.
சீனித்துளசியின் இலைகளில் உள்ள ஸ்டீவியோசைடு (Stevioside) மற்றும் ரெபடையோசைடு(Rebaudioside) என்னும் வேதிப்பொருட்களே இனிப்புத்தன்மைக்கு முக்கிய காரணமாகும். Ocimum tenuiflorum என்பது இதன் தாவரவியல் பெயர். Stevia rebaudiana என்ற பெயராலும் குறிப்பிடப்படுகிறது. சீனித்துளசியில் பைட்டோகெமிக்கல்ஸ், Oleanolic அமிலம், Ursolic அமிலம், Rosmarinic அமிலம் போன்ற மூலக்கூறுகள் இருக்கின்றன.இதில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ போன்ற சத்துக்கள் உள்ளன. இனிப்புத் துளசியின் இலைகள் கொண்டுள்ள இனிப்பின் அளவை கரும்பு சர்க்கரையோடு ஒப்பிட்டு பார்த்தால் 30 மடங்கு அதிக இனிப்பு கொண்டுள்ளது.
மேலும், ஸ்டீவியோசைடில் உள்ள இனிப்பின் அளவு சர்க்கரையைவிட 200-300 மடங்கு அதிகமாக உள்ளது. இனிப்புத் துளசியின் உலராத இலைகளில் (Fresh leaves) 15-20 சதவிகிதம் என்ற அளவில் ஸ்டீவியோசைடு என்ற வேதிப்பொருள் காணப்படுகிறது. உலர் இலைகளில் (Dried leaves) ரெபடையோசைடு ஏ (Rebaudioside-A) 2-4 சதவிகிதமும் உள்ளது. மேலும் கார்போஹைட்ரேட், சோடியம், மெக்னிசியம், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ போன்ற சத்துக்களும் குறிப்பிட்ட அளவு உள்ளது.
இது 40 டிகிரி வெப்பம் வரை உள்ள பகுதிகளிலும் சீனித் துளசிச் செடியை வளர்க்க முடியும். தேநீர் தவிர வீட்டில் தயாரிக்கும் திண்பண்டங்கள் வரை இச்செடியின் இலைகளைப் பயன்படுத்தலாம். செயற்கையாகச் சேர்க்கப்படும் ரசாயண இனிப்பு வகைகளுக்கும் இது மாற்றாக இருக்கும். சீனி துளசி இலை வளர்ந்தவுடன் அதை பறித்து இதிலிருந்து சாறு எடுத்து இனிப்பு திண்பண்டங்கள் தயாரிக்கலாம். இச்செடியின் இலைகளைப் பறித்து காயவைத்து பொடியாக்கியும் பயன்படுத்தலாம். இதற்கு மருத்துவர்களிடமும் நல்ல வரவேற்பு உண்டு.’’
இதன் மருத்துவ பலன்கள் என்ன?
‘‘இனிப்பு துளசியானது கலோரிகளை உருவாக்குவதில்லை. எனவே இதனை Zero Calory food என்கிறார்கள். மற்றும் உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிப்பதில்லை. ஸ்டீவியா நுண்ணுயிரிகளை எதிர்க்கும் திறனை கொண்டுள்ளது. சர்க்கரை நோயாளிகள் இனிப்பு துளசியின் பொடியை டீ, காஃபி போன்ற குளிர்பானங்கள், ஐஸ்கிரீம், சாக்லேட், இனிப்புகள், பிஸ்கட், பாயாசம் மற்றும் பழச்சாறு போன்றவற்றில் சர்க்கரைக்குப் பதிலாக பயன்படுத்தலாம்.
சீனித்துளசியைப் பயன்படுத்துவதால் பக்கவிளைவுகள் இல்லை. நீரிழிவு நோய்க்கு பயன்படும் இயற்கை சர்க்கரை மிக குறைந்த கொழுப்பு சத்து கொண்ட சர்க்கரை உணவு. உணவு பொருட்களில் சேர்க்கப்படும் இயற்கை சர்க்கரை சுவை. ரத்தக்கொதிப்பை கட்டுப்படுத்துகிறது. ஜீரண சக்தியை இது சீராக்கும். அழகு சாதன பொருட்களிலும் ஸ்டீவியா பயன்படுகிறது. சரும நோய்களை தீர்க்கும் மருந்துகளிலும் சேர்க்கப்படுகிறது. இதய நோய் தொடர்புடைய மருந்துகளில் ஸ்டீவியா உள்ளது. குளிர்பானங்களில் பயன்படுகிறது.
சீனி துளசி செடி சாதாரண மரக்கன்றுகள், செடிகள் விற்றும் நிலையத்திலேயே கிடைக்கும். இதை மாடித்தோட்டம் அமைத்து வளர்க்கலாம். வசதிக்கேற்ப சிறிய தொட்டியில்கூட துளசி செடியை வளர்த்து பயன்பெறலாம்.’’
Average Rating