இந்தியாவின் இளவரசி!! ( மகளிர் பக்கம்)
அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் உத்தரப்பிரதேச கிழக்குப் பகுதிக்கு பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் பிரியங்கா காந்தி. அவருக்கு நாடு முழுவதிலும் இருந்து வாழ்த்துச் செய்திகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. பிரியங்காவின் வருகை காங்கிரஸ் கட்சிக்கு உத்வேகத்தைக் கொடுத்துள்ளது என்று அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் பிரியங்காவின் அரசியல் பிரவேசத்தை கட்சித் தலைவர்கள் உட்பட பலரும் பலவிதங்களில் விமர்சித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பாராளுமன்ற தேர்தலுக்கு மூன்று மாதங்களே இருக்கும் நிலையில் அதிரடித் திருப்பமாக, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தனது சகோதரியான பிரியங்கா காந்திக்கு காங்கிரஸ் கட்சியில் புதிய பொறுப்பை வழங்கியுள்ளார். உத்தரப்பிரதேச பொதுத் தேர்தலில் முலாயமின் சமாஜ்வாதி கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், பிரியங்காவிற்கு வழங்கப்பட்டிருக்கும் இப்பொறுப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவும், இந்திய அரசியலில் மாபெரும் திருப்பமாகவும் அரசியல் விமர்சகர்களாலும், கட்சியின் தலைவர்களாலும் பார்க்கப்படுகிறது.
தலைநகர் டெல்லியில் 1972 ஆம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி ராஜீவ் காந்தி- சோனியா காந்தி தம்பதியின் மகளாகப் பிறந்தவர் பிரியங்கா காந்தி. சிறுவயதில் பாட்டி இந்திராவின் அரவணைப்பில் அண்ணன் ராகுலோடு வளர்ந்தார். தனது பாட்டி இந்திராவின் படுகொலைக்குப் பிறகு பள்ளிப் படிப்பை இருவராலும் தொடர முடியாமல் போகவே, ராகுலும்-பிரியங்காவும் வீட்டில் இருந்தே படிக்கும் நிலை உருவானது. எப்போதும் பாதுகாவலர்கள் பின்தொடர வலம் வந்த பிரியங்கா, தனது உளவியல் பட்டப் படிப்பை டெல்லி பல்கலைக்கழகத்தில் பெற்றுள்ளார்.
மேலும் பெளத்த மதத்தில் அதீத ஈடுபாடு ஏற்படவே, அதிலும் முதுகலைப் பட்டம் பெற்றார். புகைப்படங்களை எடுப்பதில் அலாதியான ஆர்வம் கொண்ட பிரியங்கா, புகைப்படக் கலையிலும் முறையாகத் தேர்ச்சி பெற்றுள்ளார். தொழிலதிபரான ராபர்ட் வதேராவை காதலித்து 1997ல் திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தனது பனிரெண்டாம் வயதில் பாட்டியையும், பத்தொன்பதாம் வயதில் தனது தந்தையையும் அரசியல் களத்தில் இழந்தவர் பிரியங்கா. தனது 16ம் வயதில் தேர்தல் பிரசாரப் பரப்புரை பயணத்தைத் தொடங்கிய பிரியங்கா, அன்றில் இருந்து இன்றுவரை தேர்தல் அரசியலோடு தொடர்பில்தான் இருந்து வருகிறார்.
2004ம் ஆண்டு தேர்தலின்போது தனது தாய் சோனியா காந்திக்காக தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது பிரியங்காவின் குரல் பாட்டி இந்திராவின் குரலைப் போல் ஓங்கி ஒலிப்பதாக அனைவராலும் பேசப்பட்டது. அவரின் தேர்தல் சுற்றுப்பயணப் பேச்சுகள் மிகவும் இயல்பாக இருந்தன. தனது கருத்துக்களை அனல் தெறிக்க முன் வைப்பதையும், எதிர் கட்சியினரை காமெடி கலந்த கிண்டலோடு விமர்சிப்பதையும் மிகவும் இலகுவாகவே செய்தார் பிரியங்கா. குழந்தைப் பருவத்தில் தனது தந்தை ராஜீவ் காந்தியின் கையைப் பிடித்துக் கொண்டு தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்ததை நினைவுப்படுத்தியவர், தற்போது தமது குழந்தைகள் தன்னுடைய கரங்களைப் பிடித்துக் கொண்டு வந்திருப்பதை மிகவும் நெகிழ்வுடன் மேடையில் பகிர்ந்தார்.
தனது பாட்டி இந்திராவுடன் பிரியங்கா அடிக்கடி ஒப்பிட்டு பார்க்கப்படுகிறார். 47 வயது நிறைந்த பிரியங்காவின் உடைகள், அவர் உடை உடுத்தும் பாணி, அவரது தலைமுடி அலங்காரம், அவர் பேசும் விதம் போன்றவை இந்திரா காந்தியைப்போல அமைந்திருப்பதாக கூறப்படுகிறது. எளிமையான காட்டன் புடவைகள்தான் பிரியங்காவின் அடையாளமாக எப்போதும் இருக்கிறது. சில நேரம் பாட்டி இந்திராவின் புடவைகளை உடுத்தி வலம் வருவதையும் பிரியங்காவிடம் காண நேர்கிறது. இந்திராவுக்கு அடுத்தபடியாக பிரியங்கா தற்போது எழுத்தாளர் அவதாரமும் எடுத்துள்ளார்.
Against Outrage எனும் நூலை எழுதி வருகிறார் பிரியங்கா. மார்ச் மாதம் வெளியாக உள்ள இந்நூல் ஆங்கிலம், ஹிந்தி மற்றும் இந்தியாவில் உள்ள அனைத்து பிராந்திய மொழிகளிலும் தயாராகி வருகிறது. தேர்தலுக்கு முன்பாகவே வெளியாக உள்ள இந்நூல் அரசியலில் பல தாக்கங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி அறக்கட்டளை நிறுவனத்தில் குழந்தைகளுக்கான நூலகம் ஒன்றை நிறுவி, அதை அனைத்துப் பள்ளி மாணவர்களும் பயன்படுத்தும் விதமாக உருவாக்கி வைத்துள்ளார் பிரியங்கா. ‘எனக்குப் பிறகு என் பேத்தி பிரியங்கா காந்தி, அடுத்த நூற்றாண்டில் அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக இருப்பார்.
பிரியங்காதான் தன்னுடைய நேரடி அரசியல் வாரிசு. நான் நீண்ட நாள் இருப்பேனா என்று தெரியவில்லை. பிரியங்கா வடிவத்தில் அன்றைய இந்தியா என்னைப் பார்க்கும். அவரது வெற்றிக்குப் பிறகு என்னை அரசியலில் மறந்துவிடுவார்கள். அவரே நிலைத்திருப்பார்’ என்று தான் கொலை செய்யப்படுவதற்கு முன்பாக 1984 அக்டோபர் மாதம் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தனது பேத்தியான பிரியங்கா பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அவரின் எண்ணம் போலவே, இந்திரா காந்தியின் அதிரடியையும் பிரியங்காவிடம் அப்படியே காண முடிவதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.
அவரின் தாயார் சோனியா காந்தியும், பிரியங்கா அரசியலுக்கு வருவது குறித்து அவர்தான் முடிவு செய்ய வேண்டும் என ஏற்கனவே கூறியுள்ளார். 1999ல் தேர்தல் பிரசாரத்துக்கு இடையே பத்திரிகையாளர்களிடம் பேசிய பிரியங்கா, தனது அரசியல் நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அதில், நான் தெளிவாக இருக்கிறேன். அரசியல் என்னை ஈர்க்கும் விஷயமல்ல, மக்கள் தான் என்னை ஈர்க்கிறார்கள். அவர்களுக்கு தேவையான எதையும் என்னால், அரசியலில் இல்லாமலேயே செய்ய முடியும் என்று கூறியிருந்தார். 20 ஆண்டுகளாக அரசியலில் இல்லாமலே மேடைகளில் பேசிவந்தார் பிரியங்கா.
கடந்த தேர்தலிலும் பா.ஜ.கவிற்கு எதிராக உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் பரப்புரையும் செய்தார். கடந்த தேர்தலின்போது மதவாதக் கருத்துக்களைப் பேசும் பா.ஜ.க.வில் உள்ள தனது தந்தை வழி சகோதரர் வருண் காந்தியை எதிர்த்து கடுமையாக விமர்சனங்களை வைத்தார். அப்போது பத்திரிகையாளர்கள் பிரியங்காவிடம் அதுபற்றி கேள்வி எழுப்பினர். இந்த தேசத்தின் ஒற்றுமைக்காக எனது தந்தையையே இழந்திருக்கிறேன். தேசத்தின் ஒற்றுமையைக் குழைக்கும் விதமாக நான் பெற்ற பிள்ளையே பேசினாலும் சகித்துக்கொள்ள மாட்டேன் என்றார். வாக்குச் சாவடிக்கு வாக்களிக்கச் செல்லும் பெண்கள் தனது வாக்குகளை செலுத்துவதற்கு முன்பாக, தங்களுக்கு பாதுகாப்புத் தரும் அரசு எது என்பதை சிந்தித்து தேர்ந்தெடுங்கள்.
பெண்களை மதிக்காத தலைவர்களை அரசியலை விட்டுத் தூக்கி எறியுங்கள் என்றார். ரேபரேலியில் தனது தாயார் சோனியாவிற்காக லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிக்கான வாக்குகளைச் சேகரித்திருக்கிறார் பிரியங்கா. தனது சகோதரர் ராகுலுக்காக அமேதியில் 16 பொதுக்கூட்டங்களை நிகழ்த்திக் காட்டினார். கத்துவா மற்றும் உனாவில் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டபோது, ஆளும் பாஜக அரசை தட்டி எழுப்ப, காங்கிரஸ் கட்சியினர் நிகழ்த்திய மெழுகுவர்த்தி பேரணி இந்தியா கேட் பகுதியில் நிகழ்ந்தபோது, தன்னோடு செல்ஃபி எடுக்க முயன்றவர்களிடம் கடுங்கோபத்துடன் சீறினார் பிரியங்கா.
‘செல்ஃபி எடுக்கும் நேரமா இது. நாம் எதற்காக இங்கே கூடியிருக்கிறோம் என்பதை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். அமைதியாக நடந்துகொள்ளுங்கள். விருப்பமின்றி சத்தமிடுபவர்கள் வீட்டுக்குச் செல்லுங்கள்’ என மக்களைப் பார்த்து மிகவும் கோபமாகப் பேசினார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடுமையான சவால்களை பிரியங்கா எதிர்கொள்ள இருக்கிறார். நேரு குடும்பத்தின் நேரடி வாரிசு என்கிற முறையில் பா.ஜ.க.வை எதிர்த்து பலம் வாய்ந்த ஒரு போட்டியை நிகழ்த்த இருக்கிறார் பிரியங்கா. இந்திராவின் தோற்ற சாயலில் உள்ள பிரியங்கா நேரடி அரசியலில் வெற்றி பெறுவாரா…? சவாலை சமாளிப்பாரா..? பொறுத்திருந்து பார்ப்போம்.
Average Rating