ப்யூட்டி பாக்ஸ் ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது!! (மகளிர் பக்கம்)
ப்யூட்டி பாக்ஸ் தொடரின் நிறைவுப் பகுதியில் இருக்கிறோம். கடந்த ஓராண்டாக தோழி வாசகிகளுடன் பயணப்பட்டிருக்கிறேன். தின வாழ்க்கையில் அதிக பயன்பாட்டில் உள்ள அழகுக் கலையில், அழகு நிலையங்களில் பயன்படுத்தப்படும் அழகு சாதனப் பொருட்களின் வேலை என்ன? அவை எதற்காக நம் சருமத்தில் பயன்படுத்தப்படுகின்றன என்பதை ஒவ்வொரு இதழிலும் விளக்கியதோடு… பெண்கள் தங்களின் தலை முதல் பாதம் வரை ஆரோக்கியம் சார்ந்த பொருட்களைப் பயன்படுத்தி எவ்வாறு தங்களை அழகுப்படுத்தலாம் என்பதை மிக எளிமையாக வாசகர்கள் புரிந்து கொள்ளும் விதமாக விளக்கியிருந்தேன்.
தினந்தோறும் நமது உணவுடன் பயன்பாட்டில் இருக்கிற காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள், பூக்கள், மூலிகைகள் இவற்றோடு, மிக இலகுவாய் நமது வீட்டின் அஞ்சறைப் பெட்டியில் கிடைக்கக்கூடிய பொருட்களைக் கொண்டே அழகிய தோற்றப் பொலிவை பெறும் வழிமுறைகளையும் “ப்யூட்டி பாக்ஸ்” என்கிற இத்தொடரில் கடந்த ஒன்றரை வருடங்களாக வெளியிட்டு தொடர்ந்து உங்களோடு பயணப்பட்டுக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு இதழையும் படித்து கைபேசி வாயிலாகவும், கடிதம் வாயிலாகவும் நிறைய வாசகர்கள் பாராட்டுகளோடும் தங்களுக்கு எழும் சந்தேகங்களோடும் என்னைத் தொடர்பு கொண்டனர். தொடரின் நிறைவுப் பகுதியாக பாதங்களுக்கு வழங்கப்படும் மசாஜ், அதாவது ஃபுட் ரெஃப்லெக்ஸாலஜி பற்றி தெரிந்துகொள்ளப் போகிறோம். அதென்ன ஃபுட் ரெஃப்லெக்ஸாலஜி என்கிறீர்களா?
ஃபுட் ரெஃப்லெக்ஸாலஜி
நம் தலை முதல் கால்வரை மொத்த உடலையும், அதன் எடையையும் தாங்குவது கால்கள்தான். கால்களில் உள்ள பாதம் என்பது நமது உடலின் மொத்த அமைப்பையும் உள்ளடக்கியது. எடை மட்டுமல்ல, மொத்த இயக்கங்களையும் தூண்டும் ப்ரெஷ்ஷர் பாயிண்ட்கள் நமது பாதங்களில்தான் உள்ளது. உடல் பாகங்களின் உள் உறுப்பின் அத்தனை இயக்கங்கள் ஒவ்வொன்றும் இரண்டு பாதங்களின் நரம்புகளோடு இணைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இணைப்பின் முக்கிய பாயிண்டை அழுத்தி ப்ரஷ்ஷர் கொடுப்பதன் மூலமாக உடல் உறுப்பின் இயங்கச் செயல்பாட்டைத் தூண்டுவதே ஃபுட் ரெஃப்லெக்ஸாலஜி. சுருக்கமாக அதுவே ஃபுட் மசாஜ். புரியும் படிச் சொன்னால் கால் பாதங்களுக்கு மட்டுமே தரப்படும் ஒருவகையான மசாஜ். நமது உடல் பாகங்களின் ப்ரஷ்ஷர் பாயிண்டுகள் பாதங்களில் எங்கே இடம்பெற்றுள்ளது என்பதைத் துல்லியமாக அறிந்து அந்த இடத்தை அழுத்துவதன் மூலமாக குறிப்பிட்ட பாகத்தோடு தொடர்பில் இருக்கும் நரம்புகள், ரத்த நாளங்கள், சுரப்பிகள் தூண்டப்படுகிறது. இதுவும் ஒருவிதமான அக்குபங்சர் முறையே. ஆனால் இதில் நீடில் பயன்பாடு இல்லை. அதற்குப் பதிலாக விரல்கள் அழுத்தம் தருவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.
மசாஜ் கொடுக்கும்போது அழுத்தம் கொடுக்க முடியவில்லை என நினைப்பவர் கள் அதற்கென உள்ள மசாஜ் ஸ்ட்ரோக் (ஸ்டிக்) வைத்து அழுத்தத்தை கொடுக்கலாம். ஸ்டிக்கை பயன்படுத்தி அழுத்தம் தரும்போது சற்று கூடுதலாக தூண்டுதல் உணர்வு கிடைக்கிறது. சிறு குழந்தையில் தொடங்கி பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமென்றாலும் பாதங்களில் மசாஜ் எடுக்கலாம். ஃபுட் மசாஜ் எடுக்க நினைப்பவர்கள் எதுவும் நோய் தாக்குதலுக்கு உள்ளானவர்களா என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். பெண்களாக இருந்தால் மாதவிடாய் நேரங்களிலும், மெனோபாஸ் கால நேரத்திலும் எடுக்கக் கூடாது. இதய நோயின் பாதிப்புகள் உள்ளவர்கள் முற்றிலும் ஃபுட் மசாஜ் தவிர்த்தல் நல்லது. பிறந்த குழந்தையாக இருந்தால், குழந்தையை குளிக்க வைத்ததும் க்ரீம் தடவி சருமத்தின் தன்மைக்கு ஏற்ப மென்மையாக பாதங்களைக் கையாண்டு அழுத்தம் தருதல் வேண்டும். ஆனால் முறையாகத் தெரிந்து செய்தல் வேண்டும். இதனால் சோர்வாக உள்ள குழந்தைகள் உடல் வலி, சோர்வு முதலியவை நீங்கி புத்துணர்ச்சியோடு இருப்பார்கள். பாதம் என்பது நமது உடலில் தடிமனான தோல்களைக் கொண்ட பகுதி. பாதங்களுக்கு மசாஜ் கொடுப்பதற்கென சில வழிமுறைகள் உள்ளது.
மசாஜ் எடுப்பதற்கு முன்பாக இரண்டு கால்களையும் நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.
பாதங்களுக்கு கொடுக்கும் மசாஜை உட்கார்ந்த நிலையிலும் கொடுக்கலாம். படுக்க வைத்தும் கொடுக்கலாம்.
படத்தில் காட்டியுள்ளதுபோல் கால்களை எப்போதும் நேராக நீட்டிய நிலையில் வைத்தல் வேண்டும்.
கால்களில் ஏதாவது ஒரு ஆயில் அல்லது மசாஜ் க்ரீம் தடவிய பிறகே மசாஜ் கொடுக்க வேண்டும்.
முறைப்படி கற்றுத் தெரிந்தவர்களிடம் மட்டுமே ஃபுட் மசாஜ் எடுத்தல் வேண்டும். அவர்கள்தான் பாதங்களில் உள்ள ப்ரஷ்ஷர் பாயிண்ட் தெரிந்து அந்த இடங்களில் கை வைப்பார்கள்.
ஃபுட் மசாஜ் தெரிந்தவர்கள் செய்யும்போது அதை நம்மால் முழுமையாக உணர்ந்து உள்வாங்க முடியும். நமது உடலின் பாதிப் பகுதி வலது காலிலும், பாதிப் பகுதி இடது காலிலும் உள்ளது. பாதத்தின் இரண்டு கட்டை விரல்களும் சேர்ந்தது நமது தலை. இவற்றில் தான் மூளை மற்றும் சுவாச உறுப்பான மூக்கு போன்ற பகுதிகளின் இணைப்பு உள்ளது. அடுத்தடுத்து உள்ள இரண்டு விரல்களும் வலது மற்றும் இடது கண்களின் இணைப்பில் உள்ளவை. கடைசி விரலான சுண்டு விரல்களில்தான் காதுகளுக்கான இணைப்பு உள்ளது. விரல்களுக்கு கீழே உள்ள பாதத்தில் மேல் பகுதியில் தான் நுரையீரலின் இணைப்பு உள்ளது. சுண்டு விரலுக்கு அருகே கீழ் இறங்கும் பாதத்தில் தோள்பட்டை இணைப்புகள் உள்ளது. அதன் அருகே சற்று உள்பக்கமாக இதயத்தின் இணைப்புகள் உள்ளது. அதைத் தொடர்ந்து கல்லீரல், வயிற்றுப் பகுதி, சிறு நீரகப் பகுதிகள் இருக்கிறது. முழங்கால் மூட்டு எலும்புகளின் இணைப்பும் அதன் பக்கவாட்டில் அமைந்துள்ளது.
பாதத்தின் நடுப்பகுதி அதாவது உள்ளங்கால் இதனை ஆர்ச் பகுதி என அழைப்பார்கள். இங்குதான் பெருங்குடல் வயிற்றுப் பகுதி இணைப்பு உள்ளது. அதைத் தொடர்ந்து சிறுநீர் குழாய், கருப்பை இணைப்பு உள்ளது. பாதங்களின் ஓரங்களில் முதுகுதண்டுகளுக்கான இணைப்புகள் உள்ளது. பாதங்களில் குதிகால் என அழைக்கப்படும் பகுதிகளில் இடுப்பு எலும்புகளின் இணைப்பு உள்ளது. மேலும் ஹார்மோன்களின் சுரப்பி, நாளமில்லா சுரப்பி போன்ற சுரப்பிகளுக்கான ப்ரஷ்ஷர் பாயிண்ட்களும் பாதங்களில் உள்ளது. உடலின் எந்தப் பகுதியில் வலி, உபாதைகள் உள்ளதோ அந்த ப்ரஷ்ஷர் பாயிண்டை தெரிந்து அழுத்தும்போது நிவாரணம் முழுமையாகக் கிடைக்கும். மேலும் தைராய்ட் பிரச்சனை, சைனஸ் பிரச்சனை உள்ளவர்களுக்கும் ஃபுட் மசாஜ் எடுக்கும்போது பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கிறது. ஆனால் இதில் கிடைக்கும் வலி நிவாரணம் என்பது நிரந்தரம் இல்லை. தற்காலிகத் தீர்வுதான். தொடர்ந்து மசாஜ் எடுக்கும்போதுதான் மாற்றத்தை முழுமையாக உணர முடியும்.
இதயம், மூளை, கல்லீரல், நுரையீரல், சிறுநீரகம், கழுத்து, தலை, கண்கள், காதுகள், மூக்கு, கழுத்து என அனைத்து பாகங்களின் இணைப்புகள் பாதங்களில் இருப்பதால் ஃபுட் மசாஜ் மூலமாக இவைகள் தூண்டப்படுகின்றன. இது மசாஜ் என்பதைவிட உடலுக்குத் தரப்படும் ஒருவிதமான பயிற்சி எனவும் சொல்லலாம். இந்தப் பயிற்சியினைத் தொடர்ந்து எடுக்கும்போதுதான் உடலில் மாற்றம் கிடைக்கும். நடக்கும் போது சிலருக்கு கால்வலி பிரச்சனை இருக்கும்- மருத்துவர்கள் அதற்கென சிலவகை காலணிகளை பயன்படுத்த பரிந்துரைப்பார்கள். அந்தக் காலணிகளை சற்று உற்று நோக்கினால் நமக்குத் தெரியும். அதாவது நம் உடலின் ப்ரஷ்ஷர் பாயிண்டைத் தூண்டக்கூடிய மேக்னெட்டிக் இணைத்து அந்தக் காலணிகளைத் தயாரித்திருப்பார்கள். அந்தவகைக் காலணிகளை அணிவதே எப்போதும் மிகவும் நல்லது. ஃபுட் மசாஜ் என்பது பாதம் மட்டுமல்லாது தேவைப்பட்டால் முன்னங் கால்கள் வரையும் எடுக்கலாம். சிலவகை ஃபுட் மசாஜ்களை சிலர் தொடைப் பகுதி வரையும் எடுக்கிறார்கள். அவரவர் நேரத்தையும், பொருளாதார நிலையையும் பொருத்து உடற் பயிற்சியாக இதனை எடுத்துக் கொள்ளலாம்.
ஃபுட் மசாஜ் பிரிவுகள்
தம்ப் ரீடிங் (thumb reading)
நமது கை விரல்களில் உள்ள கட்டை விரல்களை வைத்து அழுத்தி மசாஜ் கொடுத்தல். இதை பாதங்கள் முழுவதும் செய்தல் வேண்டும்.
நக்லிங் (knuckling)
விரல்களை மடக்கி படத்தில் காட்டியுள்ளது போல் பாதங்களுக்கு அழுத்தம் கொடுப்பது.
ஃபிங்கர் ரீடிங் (figure reading)
பாதங்களைப் போன்றே விரல் நுணிகளும் விரல் இடுக்குகளும் மிகவும் முக்கியமானவை. சிலவகை சுரப்பிகளின் இணைப்புகள் இங்கிருந்து தொடங்குவதால், இவற்றின் இயக்கத் தூண்டுதலுக்கும் ப்ரஷ்ஷர் தேவைப்படுகிறது. அந்த இடங்களில் விரல் நுணிகளால் அழுத்தம் தருதல் வேண்டும். அவ்வப்போது வரும் வயிற்று வலி, தலை வலி, உடல் சோர்வு போன்றவை ஃபிங்கர் ரீடிங் மூலமாகத் தரப்படும் ப்ரஷ்ஷர் முலமாகவே களையப்படும்.
சர்க்கிள் (circle)
கட்டை விரல் கொண்டு சர்க்கிள், ஆன்டி சர்க்கிள் வடிவில் ப்ரஷ்ஷர் கொடுப்பது.
ஆங்கிள் ரொட்டேட்டிங் (Angle rotating)
படத்தில் காட்டியுள்ளது போல் கணுக் கால் எழும்புகளை கட்டைவிரலால் அழுத்தி ப்ரஷ்ஷர் கொடுப்பது.
Average Rating