பறவைகள் பலவிதம்… ஒவ்வொன்றும் ஒருவிதம்!! (மகளிர் பக்கம்)

Read Time:14 Minute, 9 Second

செல்லப்பிராணிகள் என்றதும் நம்முடைய மனத்திரையில் நாய், பூனை, ஆடு, மாடு, கோழி தான் நினைவுக்கு வரும். இவற்றைத் தான் நாம் பெரும்பாலும் வீட்டில் செல்லப்பிராணிகளாக வளர்த்து வந்தோம். ஆனால் இப்போது இக்வானா, ஹாம்ஸ்டர், மக்காவ்/ சன் கொன்னூர் காக்கட்டூ கிளி வகைகள், பர்மீஸ் பைத்தான் (மலைப்பாம்பு வகை), ரங்கூன்ஸ், ஹெட்ஜ்ஹாக்ஸ்… போன்ற கவர்ச்சிகரமான மிருகங்கள் மற்றும் பறவைகளை செல்லப்பிராணிகளாக வளர்க்க ஆரம்பித்துள்ளனர்.இது போன்ற கவர்ச்சிகரமான செல்லப் பிராணிகளை வளர்க்க என்ன காரணம்? தனிப்பட்ட விருப்பம் என்று சொல்லலாம். இது போன்ற அயல்நாட்டு செல்லப்பிராணிகளை நாம் வரவேற்கும் போது, அதனால் ஏற்படக்கூடிய அனைத்து விஷயங்களையும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும்.

எல்லாவற்றையும் விட இந்த செல்லப்பிராணிகளுக்காக பல மணி நேரம் அவசியம் செலவு செய்ய வேண்டும். பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். கடைசியாக அந்த செல்லப்பிராணிகளுக்கு செய்யவேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றி ஒவ்வொரு உரிமையாளரும் கண்டிப்பாக தெரிந்து கொண்டு இருப்பது அவசியம் என்கிறார் கால்நடை மருத்துவர் மற்றும் ‘சாராஸ் எக்சாடிக் பறவைகள் சரணாலய மையத்தின்’ நிர்வாகியான டாக்டர் ராணி மரியா தாமஸ். ‘‘என் அப்பா செல்லப்பிராணி பிரியர். அவர் வீட்டில் நாய், புறா, கிளி எல்லாம் வளர்த்து வந்தார். பதினைந்து வருடங்களுக்கு முன் எங்க வீட்டில் நிறைய பச்சைக் கிளிகள் இருந்தன. நான் அதனுடன் தான் வளர்ந்தேன்னு சொல்லலாம். என்னுடன் பிறந்தவர்கள் போல தான் அதனுடன் நான் பழகி வந்தேன். ஆனால் இப்போது பச்சைக் கிளிகளை வீட்டில் வளர்க்கக்கூடாது என்று தடை உள்ளது.

அதே சமயம் இது போன்ற கவர்ச்சிகரமான அயல்நாட்டு கிளிகள் மற்றும் மிருகங்களை வளர்க்க தடை இல்லை என்றாலும், அதனை பராமரிக்க முறையான உரிமம் பெற்று இருக்க வேண்டும். மேலும் அதை வளர்க்க கூடிய வகையில் நாம் அதற்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும். எல்லாவற்றையும் விட நான் கால்நடை மருத்துவம் படித்து இருப்பதால், என்னால் அவற்றின் உடல் நலத்தின் மேலும் கவனம் செலுத்த முடியும்’’ என்ற ராணி இவைகளை பார்த்துக் கொள்ளவே கால்நடை மருத்துவம் படித்துள்ளார்.‘‘நான் இந்த வீட்டில் பிறக்காமல் இருந்து இருந்தால், கண்டிப்பா கால்நடை மருத்துவம் படித்து இருக்க மாட்டேன். சின்ன வயசில் இருந்தே இதனுடன் பழகி வந்ததால், எனக்கு கால்நடை மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. அதன் பிறகு, பறவைகள் குறித்த சிறப்பு பட்டப்படிப்பு படிச்சேன். இதன் மூலம் ஒவ்வொரு பறவைகள் மற்றும் அதன் குணாதிசயங்கள் பற்றி ஆய்வும் செய்தேன்.

நான் சின்ன பொண்ணாக இருக்கும் போதே எங்க வீட்டில் நிறைய கிளிகள் இருக்கும். கைட் என்று அழைக்கப்படும் கழுகு வகை பறவை மற்றும் புறாக்கள் எங்க வீட்டில் இருந்தது. இதனுடன் நாரையும் வளர்த்து வந்தோம். வீட்டிலுள்ள தோட்டத்தில் இவை எல்லாம் சுதந்திரமாக சுற்றி வலம் வரும். நாங்க இதனை கூண்டில் அடைக்க மாட்டோம். எங்க தோட்டத்தில் அவை சுதந்திரமாக சுற்றி வரும். வனவிலங்கு சட்டத்தில், வீட்டில் பச்சைக் கிளிகள், புறாக்கள் மற்றும் பிற பறவைகளை வளர்க்கக் கூடாது என்று சட்டம் அமைத்து வளர்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. அதன் பிறகு தான் அப்பா கவர்ச்சிகரமான விலங்குகள் மற்றும் பறவைகளை வளர்க்க ஆரம்பித்தார். முதலில் ஒரு ஜோடி அயல்நாட்டு கிளியான பிரிஞ்சர்ஸ் வகை கிளியை வாங்கினார். அது நாளடைவில் பெருகியது. இப்போது எங்களிடம் 100 வகையான கிளிகள், பிரேசில் குரங்குகள், இக்வானா, மீன்கள் மற்றும் நாய்களும் உள்ளன’’ என்றவர் மிருகங்கள் பராமரிப்பு குறித்தும் பயிற்சி அளித்து வருகிறார்.

‘‘என்னோட சொந்த ஊர் ஆலப்புழா. நான் இப்போது மருத்துவத்தில் முதுகலைப் பட்டப்படிப்பு வயநாட்டில் படித்துக் கொண்டு இருக்கிறேன். விடுமுறையில் ஊருக்கு வரும் போது எல்லாம், அங்கு செல்லப்பிராணிகள் வைத்திருக்கும் விவசாயிகளின் வீடு அல்லது தோட்டத்திற்கு சென்று அவற்றை பராமரிப்பது வழக்கம். கேரளா பற்றி உங்களுக்கு அதிகம் சொல்ல வேண்டியதில்லை. இங்குள்ள சின்ன கிராமம் ஒரு மினி காடு போலத்தான் இயற்கையுடன் ஒன்றி இருக்கும். அதனால் எல்லாரும் ஏதாவது ஒரு விவசாயத்தில் ஈடுபட்டு இருப்பாங்க. அல்லது பெரிய அளவில் தோட்டம் வைத்து இருப்பாங்க. அங்கு இது போன்ற கவர்ச்சிகரமான மிருகங்கள் மற்றும் பறவைகளை வளர்க்க ஆரம்பித்துள்ளனர். நான் ஊருக்கு வந்தால், எல்லாவற்றையும் ஒரு ரவுண்ட் போய் பார்த்து விடுவேன். நான் பட்டப்படிப்பு படிச்சாலும், அவ்வப்போது ஆன்லைனில் பறவைகள் மருத்துவம் சார்ந்த டிப்ளமா படிப்பும் படிப்பேன். அதில் பறவைகளின் ஆரோக்கியம் மற்றும் தெரபெடிக் குறித்து படிச்சிருக்கேன்.

இதனால் இங்குள்ள விவசாயிகளுக்கு இது போன்ற வித்தியாசமான மிருகங்களை எவ்வாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பயிற்சி அளிப்பது மற்றும் அவைகளுக்கு உடல் நலத்தில் பிரச்னை ஏற்பட்டால் மருத்துவ உதவியும் செய்கிறேன். இது போன்ற ஏக்சாடிக் மிருகங்களை வளர்ப்பது இந்தியாவில் மட்டும் இல்லை உலகளவில் ஃபேஷனாகி வருகிறது. பலர் அதை விரும்பி வளர்க்கிறார்கள்,’’ என்ற ராணி ஃபேஷனுக்காக இல்லாமல் அன்போடு வளர்க்க வேண்டும் என்றார். ‘‘பொதுவாக பச்சைக் கிளிகள் நாம் சொல்வதை அப்படியே திரும்பி சொல்லக்கூடியவை. அதிலும் அயல்நாட்டு கிளிகள் நாம் சொல்வதை அப்படியே திரும்பி சொல்லும். பறவைகளுக்கு ஆங்கிலம், தமிழ், ஹிந்தின்னு மொழிகளை பிரித்துப் பார்த்து, வித்தியாசப்படத் தெரியாது. அவைகளுக்கு நாம் பேசுவது ஒரு வகையான சத்தம். அதனால் தான் நாம் எந்த மொழியில் பேசினாலும் அவை திரும்பி அப்படியே உச்சரிக்கிறது.

அதிலும் பச்சைக் கிளிகளை விட இந்த அயல்நாட்டு கிளிகள் உடனே நாம் பேசுவதை கூர்ந்து கவனித்து நாம் சொல்வதை அப்படியே திரும்ப சொல்லும். மக்காவ், அமேசான் மற்றும் கிரே கிளிகள் நன்றாகவே பேசக்கூடியவை. எங்க வீட்டில் இருக்கும் கிரே கிளி எல்லாரையும் பெயர் சொல்லித்தான் கூப்பிடும். வீட்டில் இருக்கும் மக்காவ் கிளியின் பெயர் காஃபி, நாயின் பெயர் ஜிஞ்சர்… இவற்றை இது பெயர் சொல்லித்தான் அழைக்கும். என்னை, அம்மாவை, அப்பாவைக்கூட பெயர் சொல்லித்தான் கூப்பிடும். இசையை கேட்டால் நன்றாக நடனமாடும். சேட்டையும் செய்யும்’’ என்றவர் தன்னுடைய வீட்டுத் தோட்டத்தை ‘சாராஸ்’ என்ற பெயரில் பறவைகளின் சரணாலயமாக மாற்றி அமைத்துள்ளார். ‘‘எங்களிடம் 100க்கும் மேற்பட்ட கிளிகள் உள்ளன. அதனால் இதனை அப்படியே பறக்க விட முடியாது. காரணம் என்னதான் வீட்டில் பெரிய அளவில் தோட்டம் இருந்தாலும், அது அவர்களின் இருப்பிடமான காட்டுக்கு ஈடாகாது. இவை அயல்நாட்டு கிளிகள் என்பதால், நம் ஊரின் சீதோஷ்ணநிலை இவைகளுக்கு பொருந்தும் என்று சொல்ல முடியாது.

ஆனால் அதற்கான வசதிகளை நாம் இவற்றுக்கு செய்து தரமுடியும். மேலும் வெளியே அப்படியே பறக்கவிட்டால், மற்ற விலங்குகளுக்கு இரையாகும் வாய்ப்பும் அதிகம். இந்த பறவைகளை அதன் வசதிக்கு ஏற்ப ஒரு பெரிய கூண்டில் வைத்து தான் பராமரித்து வருகிறோம். அது மட்டும் இல்லை சாராஸ் சரணாலயத்தை யார் வேண்டும் என்றாலும் வந்து பார்வையிடலாம். குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள். இவர்கள் ஒவ்வொரு கிளிகள் மற்றும் அதன் குணாதிசயங்கள் பற்றி தெரிந்துகொள்வது அவசியம். அது தான் எங்களின் விருப்பமும் கூட’’ என்றவர் இந்த பறவைகளை வளர்ப்பவர்கள் அதன் குணாதிசயங்கள் பற்றி தெரிந்துகொள்வது அவசியம். ‘‘நாங்க பெரும்பாலும் கொஞ்சம் வளர்ந்த ஜோடிப் பறவைகளை தான் வாங்குவோம்.

அதன் பிறகு அது குஞ்சு பொரித்து அதை பராமரித்து வருவோம். சிலர் விருப்பப்பட்டு எங்களிடம் இருந்து வளர்க்க வாங்கி செல்வது வழக்கம். பறவைகளை குறிப்பாக இது போன்ற அயல்நாட்டு பறவைகளை வாங்கி செல்வது பெரிய விஷயமில்லை. ஆனால் முறையாக பராமரிக்க வேண்டும். அது மட்டும் இல்லாமல் அதன் குணாதிசயங்களை பற்றி தெரிந்து இருக்க வேண்டும். உதாரணத்திற்கு சில பறவைகள் கோபம் வந்தா, கத்தி கூச்சல் போடும். அந்த சமயத்தில் அதை கட்டுப்படுத்த மற்றும் சமாதானப்படுத்த தெரிந்து இருக்கணும். காசு இருக்குன்னு இந்த பறவைகளை வாங்கிடலாம். அதற்காக இதை வளர்க்க கூடிய தகுதி உங்களுக்கு இருக்குன்னு சொல்லிட முடியாது. இதன் வாழ்விடம் மற்றும் உணவு எப்படி இருக்கவேண்டும்ன்னு முதலில் ஆய்வு செய்ய வேண்டும். இதன் ஆயுட்காலத்தை ஒவ்வொருவரும் கருத்தில் வைப்பது அவசியம்.

இதற்கு தேவையான அனைத்து சிறப்பு வசதிகளும் உங்களால் கொடுக்க முடியுமான்னு முதலில் பாருங்க. அதன் பிறகு இந்த பறவையினை வாங்குங்க. எந்த வகை செல்லப்பிராணிகளாக இருந்தாலும் அதற்குரிய மரியாதை மற்றும் முறையான பராமரிப்பு அவசியம். அதை மனதில் கொண்டு பிறகு உங்க வீட்டின் செல்லப்பிராணிகளை தேர்வு செய்யுங்க. இதன் நடத்தையில் சிறிது மாற்றம் தென்பட்டாலும் உடனடியாக கால்நடை மருத்துவரை அணுகுவது நல்லது. காரணம் இந்த பறவைகள் காட்டில் வாழ்வதால், உடல் நிலையில் சிறு பாதிப்பு ஏற்பட்டாலும் அதை வெளியே காண்பித்துக் கொள்ளாது. அது அதன் எதிராளிகளுக்கு சாதகமாக அமையும். அதனால் எக்சாடிக் செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்கள் எப்போதும் கால்நடை மருத்துவர்களுடன் நல்ல உறவு வைத்துக் கொள்வது அவசியம். இதன் மூலம் அவர்கள் உங்களின் செல்லப்பிராணிகளுக்கு உள்ள பிரச்னையை கண்டறிந்து உடனடித் தீர்வு கொடுக்க முடியும்’’ என்றார் பறவையின் காதலியான டாக்டர் ராணி மரியா தாமஸ்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இஞ்சி மாதிரி… ஆனா இஞ்சி இல்ல…!! (மருத்துவம்)
Next post முத்தம் கொடுத்து அடி வாங்கிய மணமகன்!! (வீடியோ)