இவள் யாரோ? : குழந்தைகளுக்கான போர்ட் கேம்…!! (மகளிர் பக்கம்)
அவர் நோபல் பரிசு பெற்றவரா? கண்டுபிடிப்பாளரா? அவர் ஏதாவது புதுமையாக கண்டுபிடித்துள்ளாரா ? இந்த கேள்விகளை ஒவ்வோரு குழந்தைகளும் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். ஆனால் இப்போதுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியில் குழந்தைகள் வெளியே சென்று விளையாடவே மறந்துவிட்டனர். மாறாக அவர்களின் ஒவ்வொருவரின் கைகளிலும் செல்போன் தான் தவழ்ந்து கொண்டு இருக்கிறது. அதில் உள்ள விளையாட்டை தான் இவர்கள் விரும்பி விளையாடுகிறார்கள். போலந்து நாட்டைச் சேர்ந்த சுசியா கொசெர்ஸ்கா கிரார்ட் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விளையாடக்கூடிய Who’s She? போர்ட் கேமை அறிமுகம் செய்துள்ளார்.
‘‘பொதுவாக உலகில் புகழ் பெற்ற பிரபலமான பல பெண்களை பற்றி நமக்கு தெரிவதில்லை. இவர்கள் பல அற்புதமான விஷயங்களைச் செய்து இருப்பார்கள். ஆனால் அதை பற்றி எதுவுமே நமக்கு தெரிந்து இருக்காது’’ என்றார் சுசியா கொசெர்ஸ்கா கிரார்ட். ‘‘கிளாசிக் விளையாட்டான ‘Guess Who?’ போர்ட் கேம் போலவே தான் Who’s She? இதில் விளையாடும் இரண்டு நபர்களுக்கும் ஒவ்வொரு போர்ட்டு கொடுக்கப்பட்டு இருக்கும். அதில் பிரபலமான பல பெண்களுடைய சுயசரிதை பற்றிய விவரங்கள் குறிப்பிட்டு இருக்கும்.
ஒருவர் எதிரே உள்ள மற்றவரிடம் ஒவ்வொரு பெண்கள் பற்றிய சுயசரிதை குறிப்பினைக் கொண்டு கேள்விக் கணைகளை தொடுக்க வேண்டும். அவர் அந்த நபரை கண்டுபிடிக்கும் வரை அவரைப் பற்றிய குறிப்புகளை கொடுக்க வேண்டும். அவர் நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுஃப்சாவாக இருக்கலாம் அல்லது பிரெஞ்ச் உளவாளியான ஜோபின் பேக்கராக கூட இருக்கலாம்’’ என்ற கிரார்ட் இந்த விளையாட்டு பெண் குழந்தைகளுக்கு மட்டும் இல்ைல ஆண் குழந்தைகளும் விளையாடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
‘‘Who’s She? விளையாட்டினை யார் வேண்டும் என்றாலும் விளையாடலாம். இதை விளையாட வயது வரம்பு கிடையாது. அதே போல் இரு பாலினரும் விளையாடும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த விளையாட்டில் பிரபலமான பெண்கள் மட்டுமே இடம் பெற்று இருப்பார்கள். அதனால் விளையாடும் போது அவர்களை சுற்றி சக்தி வாய்ந்த பெண்கள் இருப்பது போல் உணருவார்கள். ஒவ்வொரு பெண்களுக்கும் விளையாடுபவர்கள் ஒரு ஹீரோவாக தெரிவார்கள். விஞ்ஞானிகள், அரசியல்வாதிகள், விளையாட்டு ஆதரவாளர்கள் மற்றும் கலைஞர்கள் என பல்வேறு துறையில் இருக்கும் பெண்கள் இப்போது சமூகத்திலும் அங்கீகரிக்கப்படுகிறார்கள். அவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட பெண்கள் 28 பேர்களை இந்த விளையாட்டில் சேர்த்து இருக்கிறேன். இவர்களின் புகைப்படங்கள் வாட்டர் கலர்கள் மூலம் சித்தரிக்கப்பட்டு உள்ளது’’ என்ற கிரார்ட் இந்த விளையாட்டினை வடிவமைக்க முக்கிய காரணம் அவரின் மூன்று வயது மகளாம்.
‘‘உலகளவில் ஆண்களுக்கு நிகராக ெபண்கள் பல துறைகளில் உள்ளனர். ஒரு மூன்று வயது குழந்தை தன்னைச் சுற்றி ஆண்கள் பல துறைகளில் இருப்பதை பார்க்கும் போது, அவளுடைய மனதில் ஆண்கள் தான் எல்லா வேலைகளில் ஈடுபடுவார்கள் என்று பதிந்துவிடும். ஆனால் பெண்களும் அவர்களுக்கு நிகராக பல துறைகளில் இருக்கிறார்கள் என்பதை அவர்கள் சிரமம் இல்லாமல் விளையாட்டு மூலம் எளிதில் தெரிந்து கொள்ளலாம். இந்த எண்ணம் என் மூன்று வயது குழந்தை விளையாடுவதை பார்த்த போது தான் எனக்கு தோன்றியது. காரணம் அவள் சாதனை படைத்த ஒரு பெண்ணை தாமாக பாவித்துக் கொண்டு விளையாடுவாள்.
மூன்று வயது குழந்தைக்கு இருக்கும் ஆர்வம் ஏன் மற்றவர்களுக்கு ஏற்படுத்தக்கூடாது என்ற எண்ணம் தான் என்னை இந்த விளையாட்டினை உருவாக்க தூண்டியது’’ என்றவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த விளையாட்டினை உலகம் முழுதும் அறிமுகம் செய்துள்ளார்.கிரார்டின் Who’s She? விளையாட்டினை தொடர்ந்து இந்தியாவில் உள்ள பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சகம் மற்றும் மனித உரிமை அமைப்பு இணைந்து இலக்கியம், கலை, விளையாட்டு, தொழில்நுட்பம்,வணிகம், சட்டம், அரசு, பொழுதுபோக்கு, ஃபேஷன், உடல்நலம், நிதி, உணவு மற்றும் சுற்றுச்சூழல் போன்ற பல துறைகளில் மிளிரும் பெண் நட்சத்திரங்களை பரிந்துரை செய்ய உள்ளது. பிரகாசிக்கட்டும் பெண்களின் சக்தி….
Average Rating