சம்பந்தன், சுமந்திரன்; சாதிப்பார்களா, சரிவார்களா? (கட்டுரை)
ஈழத்தமிழ் மக்களின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தின் மௌனத்துக்கு (2009) பின்னராகக் கடந்துவந்த பத்து ஆண்டுகளில், தமிழ் மக்களின் தலைமை, தமிழ் மக்களைச் சிறப்பான செல்நெறியில் வழிநடத்தத் தவறிவிட்டது.
இவ்வாறாக, தமிழ் மக்கள் தங்களுக்குள்ளும் பொது வெளியிலும் உள்ளம் குமுறுகின்றார்கள், மனம் வெதும்புகின்றார்கள். அவ்வாறெனின், தமிழ் மக்களின் தலைமை என்றால் யார்?
2009 மே 19க்குப் பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே, ஈழத்தமிழ் மக்களின் தலைமையைத் தத்தெடுத்தது. ஆனால் அவர்கள், தமிழ் மக்களது அபிலாஷைகளை அடையக்கூடிய வகையிலும் தமிழ் மக்கள், தங்களுடைய தலைமையை நம்பக்கூடிய வகையிலும் காய் நகர்த்துகின்றார்களா என்பது, தொடர்ந்தும் வினாக்குறிக்கு உட்பட்டே உள்ளது.
நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கையில், தமிழ் மக்களின் தலைமை – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே ஆகும். கூட்டமைப்பின் தலைமையாகத் தமிழரசுக் கட்சியைக் கருதலாம். தமிழரசுக் கட்சியின் தலைமையாக, நாடாளுமன்ற உறுப்பினர்களான சம்பந்தனும் சுமந்திரனும் இருப்பதாகவே நடப்பு நிலைமைகள் உள்ளன. இவர்கள் இருவருமே, முடிவுகளை மேற்கொள்ளும் முக்கியஸ்தர்களாக உள்ளனர். ஆகவே, கூட்டமைப்பின் இணைத் தலைவர்களாக இவர்கள் இருவரும் உள்ளனரென்று கூறினாலும் பிழையில்லை.
கடந்த ஒக்டோபர் 26இல் நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராக, சிறுபான்மைக் கட்சிகள் கிளர்ந்து எழுந்தன. ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும், அது சாகடிக்கப்படக் கூடாதெனக் கோஷமிட்டார்கள்.
இது, பிறிதொரு வகையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாகத் தோள் கொடுப்பது போன்றதே. இதில், கூட்டமைப்பின் பங்கு அளப்பரியது.
அதிலும், நாடாளுமன்ற உறுப்பினரான சுமந்திரனின் பங்கு மிகப்பெரியது. (இலங்கையில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டுமென, 1948ஆம் ஆண்டு தொடக்கம், இலங்கையர்கள் அனைவரும் உண்மையாகக் கோஷமிட்டிருந்தால் இனப்பிணக்கும் ஆயுத வன்முறையும் ஏற்பட்டிருக்காது.)
இவ்வாறாக அவர்களை அரியாசனத்தில் ஏற்றி அழகு பார்த்தவர்களால், இதற்கு மாற்றீடாகப் போரால் சிதைந்த தம் தமிழ்ச் சமூகத்துக்கு எவற்றைப் பெற்றுக்கொடுக்க முடிந்தது? கூட்டிக் கழித்துப் பார்த்தால், பூச்சியமாக அல்லது பூச்சியத்துக்கு அண்மித்தே விடை இருப்பதாக, தமிழ் மக்கள் கருதுகின்றார்கள், உணருகின்றார்கள்.
வடக்கு, கிழக்குத் தமிழர் பிரதேசங்களில், சுகாதாரத்துறை சார்ந்த வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்களாக, பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றார்கள்.
இதேவேளை, அப்பிரதேசங்களில் அவ்வேலையை நிரப்பக்கூடிய ஆளணியில், கடுமையான பற்றாக்குறை நிலவுகின்றது. ஆனாலும், வைத்திய சேவையானது, அத்தியாவசியத் தேவையாகக் காணப்படுவதால், இவ்வாறான நியமனங்களை அங்குள்ளவர்களால் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக உள்ளது.
ஆனால், வடக்குக் கிழக்கில் நல்லாட்சி நிலவும் இக்காலங்களில், சிற்றூழியர்கள், சாரதிகளாகக் கூட பெரும்பான்மை இனத்தவர்கள் பெருவாரியாக நியமிக்கப்பட்டு வருகின்றார்கள். இந்நிலையில், அங்கு வேலைவாய்ப்பின்றி பல ஆயிரம் இளைஞர்கள், யுவதிகள் வேலை தேடி அலைகின்றார்கள்.
ஆனால், இந்த அநியாயங்களைத் தடுத்து நிறுத்தி, தமிழ் இளைஞர்கள், யுவதிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க முடியாதவர்களாகவே, ஜனநாயகத்தைப் பாதுகாத்தவர்கள் உள்ளனர். வெறும் தொழில்வாய்ப்பே கைகூடாத நிலையில், புதிய அரசமைப்பு பற்றியும் புதிய தீர்வுத்திட்டம் பற்றியும் கதைப்பது, வெறும் வீணான காலவிரயமன்றி வேறு என்ன?
சர்வதேசத்துக்கு அளித்த வாக்கை இலங்கை நிறைவேற்ற வேண்டுமென, கடந்த வாரம் வரவு – செலவுத்திட்டம் மீதான விவாதத்தின் போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்திருந்தார்.
இலங்கை அரசாங்கம், தமிழர்கள் விடயத்தில் அற்ப விடயத்துக்குக் கொடுத்த வாக்கைக் கூட, நாணயம் தவறாது நிறைவேற்றுவதில், எந்தக் காலத்திலுமே பழக்கப்படவில்லை. சர்வதேசத்தாலேயே எம்மை ஒன்றும் செய்யமுடியாதென வெளிப்படையாகவே பேரினவாதம் கொக்கரிக்கின்றது.
ஆயுத யுத்தம் நடைபெற்ற காலங்களில், இலங்கையின் தலைநகர் கொழும்புக்கு அடுத்தபடியாக எல்லோராலும் நன்கு உச்சிரிக்கப்பட்ட இடமே கிளிநொச்சி ஆகும். அங்கேயே தமிழ் மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் சக்தி குடி(நிலை) கொண்டிருந்தது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடந்த மாதம் அங்கு சென்று சில அபிவிருத்தித் திட்டங்களை தொடக்கி வைத்தார். அதன் போது, கடந்தகாலப் போர்க்குற்றங்களை மறப்போம் மன்னிப்போம் என்றும் புதிய பாதையில் பயணிப்போம் என்றும் தெரிவித்திருந்தார்.
தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்ற அநீதிகளுக்கு, எதிர்காலத்தில் தீர்வைப் பெற்றுக்கொடுக்கவுள்ள பல்வேறு மூலங்களில், போர்க்குற்றங்கள் என்பது பிரதானமானது.
அதாவது, தமிழர் தரப்புக்கு பலமாக இருக்கக்கூடியதும் தமிழர் பக்கம் உலகின் கவனத்தைத் திருப்பக்கூடியதுமான போர்க்குற்றத்தை நீர்த்துப்போகச் சொல்லிக் கேட்கின்றார் பிரதமர் ரணில். அதையும், கிளிநொச்சியில் வைத்துக் கேட்கின்றார்.
நிலைமைகள் இவ்வாறு இருக்கையில், வன்னியில் நடைபெற்ற போர்க்குற்றங்களை, முழுமூச்சில் சர்வதேச அளவில் பெரும் பரப்புரை செய்ய, கூட்டமைப்பு தவறி விட்டது. செனல் 4 செய்த, செய்கின்ற காரியங்களைக் கூட, போரால் முற்றிலும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் தலைமைகள் ஆற்றத் தவறிவிட்டார்கள்.
இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களான சம்பந்தனும் சுமந்திரனும், போர்க்குற்ற விசாரனையை தீவிரப்படுத்தித் தீர்வைக் காண்பதிலும் பார்க்க, புதிய அரசாங்கம், புதிய அரசமைப்பின் ஊடாகப் புதுமையான தீர்வைக் காணமுடியுமெனக் கனவு கண்டார்கள். இதனால், அரசாங்கத்தை எவ்வித நிபந்தனைகளும் இன்றி ஆதரித்தார்கள்.
இவ்விடத்தில், சர்வதேச ரீதியாகப் போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ளுதல் ஊடாக, தமிழ் மக்களுக்கு நடந்த அக்கிரமங்களை அம்பலப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் அதேவேளை, உள்ளூரில் அரசமைப்பு விடயங்களிலும் கவனத்தைச் செலுத்தி, இரண்டு விடயங்களிலும், கூட்டமைப்பின் தலைமை சமாந்தரமாகச் சென்றிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறில்லாது, புதிய அரசமைப்பு என்ற ஒற்றைக் கயிற்றிலேயே இவர்கள் தொங்கியதால், தற்போது அறுந்து வீழ்ந்துள்ளார்கள்; அறுத்தி வீழ்த்தப்பட்டுள்ளார்கள்.
ஆகவே, நாடாளுமன்ற உறுப்பினர்களான சம்பந்தனாலும் சுமந்திரனாலும், அரசமைப்பு விடயங்களைக் கண்காணித்தல், ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் பங்கெடுத்தல், சர்வதேசப் போர்க்குற்ற விசாரனைகளுக்கு வலுவூட்டுவதென, தமிழர் அரசியல் சார்ந்த ஒட்டுமொத்த அனைத்து விடயங்களையும் தனியே கையாள முடியாது. இவ்விடத்திலேயே, பல தளங்களில் தமிழர் அரசியலை கொண்டு நடத்த, மீண்டும் ஒற்றுமை தேவைப்படுகின்றது.
இதற்கிடையில், எம் தேசத்தை விட்டுப் புலம்பெயர்ந்த உறவுகள், அவ்வப்போது அவர்களது தேவைகள் கருதி தாயகம் வருவார்கள். நம்நாட்டில் வாழும் எனது நண்பர் ஒருவர், அவ்வேளைகளில் அவர்களை அவர்களது இல்லம் தேடிச் சென்று சந்திப்பதில்லை. ஏனெனில், ஒருமுறை இவர் அவர்களது வதிவிடம் தேடிச் சென்று சந்தித்தவேளை, இவர் ஏதேனும் நிதி ரீதியான உதவிகளை நாடியே தம்மைத் தேடி வந்ததாக, அவர்கள் நினைத்துக் கொண்டார்களாம். இது, எனது நண்பரால் கசப்பான பட்டறிவாகக் கருதப்படுகின்றது. அன்று தொடக்கம், அவர்களது இருப்பிடம் தேடிச்செல்வதை உதறித் தள்ளிவிட்டார்.
ஆகவே, இது போல ஏனைய தமிழ் அரசியல் கட்சிகள், தலைவர்கள், கூட்டமைப்பை நாடிவரட்டும் எனப்பார்த்திராது, கூட்டமைப்பு அவர்களை நாடிச்செல்ல வேண்டும். தங்களது சொந்த கௌரவங்களைப் பொருட்படுத்தாது, தமிழ் மக்களது சுபீட்சம் என்பதை மட்டும் முன்னிறுத்தி, புதுமை படைக்க வேண்டும். ஏனைய கட்சிகளது தலைவர்கள் உறுப்பினர்களும், இதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
தமிழ் மக்களுக்காக, தமிழ் மண்ணுக்காகத் தங்கள் உயிர்களையே துறந்தவர்கள் வாழும் ஒப்பற்ற மண்ணில், தமிழ் மக்களுக்காக தமிழ் மண்ணுக்காக, தங்கள் சொந்த விருப்பு, வெறுப்புகளைத் துறந்து ஓரணியில் களமிறங்குதல், காலத்தின் முக்கிய தேவையாக உள்ளது.
காய்க்கின்ற மரத்துக்கே கல் எறிவார்கள். அது போலவே, தமிழ் மக்களது சுதந்திர வாழ்வு என்ற மரத்துக்கு, நாடாளுமன்ற உறுப்பினர்களான சம்பந்தனும் சுமந்திரனும் வேராக இருக்க வேண்டும் என்பதே, தமிழ் மக்களது பேரவா.
தமிழன் என்ற ஒற்றைச் சொல்லில் ஒன்றுபட்ட தமிழினத்தை, பல கூறுபோட பலர் வெளிக்கிளம்பியுள்ள வேளையில், உண்மையான தமிழக் கூட்டமைப்பை உருவாக்க வேண்டும்.
இதற்கு முன்னோடியாக, தமிழரசுக் கட்சியை முன்னிறுத்துவதைத் தூக்கியெறிந்து, கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவுசெய்யும் நடவடிக்கைகளைத் தூசு தட்ட வேண்டும்.
தட்டுவார்களா? ஒற்றுமை முழக்கம் கொட்டுவார்களா?
Average Rating