ஒரு பெண்ணின் யுத்தம்!! (கட்டுரை)
நம்முடைய இயற்கை வளங்களின் பெரும்பகுதி கார்ப்பரேட்களின் கைகளுக்குப் போய்விட்டது. பெரு நிறுவனங்களிலிருந்து வெளியாகும் நச்சுப்புகையாலும் கழிவுகளாலும் எஞ்சியிருக்கும் நிலப்பகுதிகள் விஷமாக, மனிதர்கள் வாழத் தகுதியற்ற ஓர் இடமாக மாறிவருகின்றன. என்றைக்கும் இல்லாத அளவிற்கு புற்றுநோய் உள்ளிட்ட உயிர்க்கொல்லி நோய்கள் நாலாப்பக்கமும் அதிகரித்துவிட்டன. இதற்கெல்லாம் காரணமான கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக மக்களின் போராட்டங்கள் வெடித்துச் சிதறினாலும் அதிகாரத்தால் அப்போராட்டங்கள் அடக்கி ஒடுக்கி வைக்கப்படுகின்றன. இருந்தாலும் கார்ப்பரேட்டுகளின் சுரண்டல்களும் மக்களின் போராட்டங்களும் நின்றபாடில்லை.
குறிப்பாக ஸ்டெர்லைட் விவகாரம் தலை தூக்கியிருக்கும் சூழலில் ‘woman at war’ மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு படமாக மிளிர்கிறது. நமக்குள் உறங்கிக்கிடக்கும் போராட்ட உணர்வை மென்மையாகத் தட்டியெழுப்பி நம்மை நமக்கே அடையாளம் காட்டுகிறது இப்படம். ஐஸ்லாந்து மலைப்பகுதிகளை விஷமாக்கி இயற்கை வளங்களைச் சீரழித்து வருகிறது ஒரு பெரிய அலுமினிய தொழிற்சாலை. அயல்நாட்டுக்குச் சொந்தமான அந்த தொழிற்சாலை அரசின் உதவியுடன் மிடுக்காக செயல்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கானோர் அங்கே வேலை செய்வதால் அதை எதிர்க்க யாரும் முன்வருவதில்லை. இந்நிலையில் அந்த தொழிற்சாலையை எதிர்த்து துணிச்சலுடன் போராடிய ஒரு பெண்மணியின் கதை தான் ‘Woman at War’.
ஐஸ்லாந்தின் நகர்ப்புறத்தில் வசித்துவரும் ஹல்லா ஒரு பாடகி. தன் வீட்டிலேயே ஓர் இசைக்குழுவையும் நடத்தி வருகிறார். ஐம்பது வயதான அவள் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால், குழந்தைகளின் மீது பெரும் ஈடுபாடு கொண்டவள். அதனால் உக்ரைன் போரில் பெற்றோரை இழந்து அனாதையாகிப் போன ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுக்க விண்ணப்பித்துக் காத்துக் கொண்டிருக்கிறாள். இவ்வளவு மென்மை யான ஹல்லாவிற்கு இன்னொரு ஆக் ரோஷமான பக்கமும் உள்ளது. அவள் நவீன வில்லையும் அம்பையும் ஏந்தி அதிகாரத்துக்கு எதிராக யுத்தம் செய்யும் ஒரு போராளி. இந்த யுத்தத்தை வெளியுலகிற்குத் தெரியாமல் ரகசியமாக செய்து வருகிறாள். அவளுக்குப் பக்க பலமாக ஒரு குழுவும் இயங்கி வருகிறது. ஹல்லா பிறந்து வளர்ந்த அழகான மலைப்பகுதிகள் அலுமினிய தொழிற்சாலையிலிருந்து வெளியாகும் நச்சுப்புகையாலும் கழிவுகளாலும் நாசமாகி வருவதையறிந்து அவளின் மனம் கொதிக்கிறது.
அதை அடியோடு தகர்க்க நினைக்கிறாள். ஆனால், அதற்கான ஆள் பலமும் அதிகார பலமும் அவளிடமில்லை. அதனால் தனியொரு மனுஷியாக அந்த தொழிற்சாலைக்குச் செல்லும் மின்சாரத்தைத் துண்டிக்கிறாள். நிறுவனமே இருளில் முடங்குகிறது. உற்பத்தி பாதிக்கிறது. இந்த நிகழ்வு ஐஸ்லாந்தின் நாளிதழ்களில் தலைப்புச் செய்தியாகிறது. காவல்துறை இரவு பகலாக வலைவீசி மின்சாரத்தைத் துண்டித்தவனைத் தேடுகிறது. அந்த தொழிற்சாலையால் அரசுக்கு நிறைய வருமானம் கிடைப்பதால் காவல்துறைக்கு நெருக்கடி அதிகமாகிறது. மின்சாரத்தை துண்டித்தவன் என ஒருவனைக் கைது செய்து விசாரிக்கையில், அவன் ஒரு சுற்றுலாப் பயணி, ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண் தான் இந்தச் செயலைச் செய்திருக்கிறாள் என்று காவல்துறைக்குத் தெரிய வருகிறது.
மின்சார இணைப்பு சரி செய்யப்பட்டு மீண்டும் தொழிற்சாலை இயங்கத்தொடங்குகிறது. மின்சார இணைப்பு இருக்கும் இடத்தில் பாதுகாப்புக்காக ஆட்கள் அமர்த்தப்படுகிறார்கள். நூல் கூட நுழைய முடியாத அந்த இடத்துக்குள் நுழைந்து, பாதுகாப்புப் படையினர் அசறும் வேளையில் மறுபடியும் மின்சார இணைப்பைத் துண்டித்துவிட்டு தப்பிக்கிறாள் ஹல்லா. வீடு வந்து சேர்ந்தவளுக்கு இன்ப அதிர்ச்சி. ஆம்; உக்ரைன் அரசு ஹல்லாவின் விண்ணப்பத்தை ஏற்று குழந்தையை அழைத்துச் செல்ல அனுமதி கடிதத்தை அனுப்பியிருக்கிறது. இந்நிகழ்வு அவளின் மனதை தடுமாற வைக்கிறது. காவல்துறை தன்னைத் தேடிக்கொண்டிருக்கும் வேளையில் எப்படி குழந்தையைத் தத்தெடுப்பது என யோசிக்கிறாள். தத்தெடுப்பதையே கைவிட நினைக்கிறாள். சரணடைந்து விடலாமா என்று கூட தடுமாறுகிறாள். ஹல்லா குழந்தையைத் தத்தெடுத்தாளா? காவல்துறையிடம் சரணடைந்தாளா? என்பதே பரபரப்பான கிளைமாக்ஸ்.
ஒரு சமகால பிரச்சனையை மையமாக வைத்து எல்லோரும் ரசிக்கும்படியாக திரைக்கதையை அமைத்து இப்படத்தை இயக்கியிருக்கிறார் Benedikt Erlingsson. அதிகாரத்துக்கு எதிராக ஒரு பெண்ணை ஆயுதம் ஏந்த வைத்திருப்பது இன்னும் சிறப்பு. ஹல்லாவாக நடித்த Halldora-ன் நடிப்பு அவ்வளவு இயல்பு. அதிகாரத்தை எதிர்க்கும் போராளியாகவும் குழந்தைக்காக ஏங்கிக் கிடக்கும் தாயாகவும் கண்களிலேயே உணர்வுகளை வெளிக்காட்டியிருப்பது அருமை. படத்தின் பின்னணி இசையும், ஐஸ்லாந்தின் நாட்டுப்புறப் பாடலும் நம் மனதை கொள்ளையடிக்கிறது. இப்படம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படுகிறது. ஸ்டெர்லைட் விவகாரம் சூடுபிடித்திருக்கும் நிலையில் இப்படம் தமிழில் வெளிவந்தால் நல்ல வரவேற்பைப் பெறும்.
Average Rating