உலகம் முழுவதும் போயிங் 737 விமானங்களுக்கு தடை!! (உலக செய்தி)
சில நாள்களுக்கு முன்பு எத்தியோப்பியாவிலும், ஐந்து மாதங்கள் முன்பு இந்தோனேசியாவிலும் நடுவானில் இருந்து நொறுங்கி விழுந்த போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களை உலகம் முழுவதிலும் நிறுத்திவைப்பதாக இந்த விமானங்களைத் தயாரித்த அமெரிக்க நிறுவனமான போயிங் அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் பறந்துகொண்டிருக்கும் இந்த ரகத்தைச் சேர்ந்த 371 விமானங்கள் இதன் மூலம் நிறுத்திவைக்கப்படும்.
எத்தியோப்பிய விமான விபத்தில் 157 பேரும், இந்தோனேசியா விமான விபத்தில் 189 பேரும் உயிரிழந்தனர். இந்த இரு சம்பவங்களிலும் விமானத்தில் இருந்த ஒருவர்கூட உயிர்பிழைக்கவில்லை.
எத்தியோப்பிய விபத்தைத் தொடர்ந்து ஏற்கெனவே இந்தியா, பிரிட்டன், சீனா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் இந்த விமானத்துக்கு தடை விதித்திருந்தன. ஆனால், இந்த விமானத்தில் குறைபாடு இருப்பதாக காட்டுவதற்கு ஆதாரம் இல்லை என்று கூறி அமெரிக்கா மட்டும் தடைவிதிக்க மறுப்புத் தெரிவித்து வந்தது.
இந்நிலையில், எத்தியோப்பிய விமான விபத்து தொடர்பாக புதிய ஆதாரம் ஒன்றை விசாரணையாளர்கள் கண்டுபிடித்ததையடுத்து இந்த விமானங்களை நிறுத்த அமெரிக்காவும் முடிவெடுத்தது.
எத்தியோப்பியன் எயார்லைன்ஸ் விமான விபத்து தொடர்பாக செயற்கைகோள் மூலமாக சீரிய புதிய தரவுகள் கிடைத்ததையடுத்து போயிங் மேக்ஸ் ரக விமானங்களை இயக்கத் தற்காலிகமாக தடை விதிப்பதாக அமெரிக்காவின் ஃபெடரல் விமான போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எத்தியோப்பியன் எயார்லைன்ஸ் விபத்துக்குள்ளான பகுதியில் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்துடன் இணைந்து எஃப் ஏ ஏ இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டது.
அமெரிக்க விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் தனது 737 மேக்ஸ் ரக விமானத்தின் பாதுகாப்பு விஷயங்கள் குறித்து முழு நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்துள்ளது.
எனினும் எஃப் ஏ ஏ மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் ஆகியவற்றுடன் நடத்திய ஆலோசனையின் பேரில் எச்சரிக்கை காரணமாகவும், விமான பாதுகாப்பு குறித்து அதில் பயணிக்கும் பொது மக்களுக்கு முழு உத்தரவாதமும் நம்பிக்கையும் அளிக்கும் பொருட்டு உலகம் முழுவதும் தனது மேக்ஸ் ரக விமானத்தின் இயக்கத்தை நிறுத்தி வைப்பதாக தெரிவித்துள்ளது.
´´விசாரணையாளர்களுடன் இணைந்து இந்த விபத்துக்கான காரணங்களை புரிந்துகொள்ள எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். பாதுகாப்பை மேம்படுத்தவும் மேலும் இது போன்ற நிகழ்வுகள் இனிமேல் நடக்காமல் இருக்க ஆவண செய்கிறோம்´´ என போயிங் நிறுவன தலைவர் டென்னிஸ் முலென்பர்க் தெரிவித்துள்ளார்.
போயிங் நிறுவனம் தனது மேக்ஸ் ரக விமான இயக்கத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்ததையடுத்து அதன் பங்குகள் சரிந்தன.
கடந்த வாரம் எத்தியோப்பியன் எயார்லைன்ஸ் விமான விபத்துக்குளானதில் இருந்தே போயிங் நிறுவனத்தின் சந்தை மதிப்பு கிட்டதட்ட 26 பில்லியன் டாலருக்கு குறைந்துள்ளது.
´´இதில் எத்தியோப்பியன் எயார்லைன்ஸ் மற்றும் சில மாதங்களுக்கு முன்பு விபத்துக்குள்ளான லயன் எயார் விமானம் ஆகியவற்றுக்கும் விபத்து தொடர்பாக மிக நெருங்கிய தொடர்பு இருப்பது தெளிவாக தெரிகிறது. அதாவது இரு விபத்திலும் விமானம் பறக்கத் தொடங்கிய பிறகு வான் வெளியில் அதன் வழித்தடத்தில் சென்ற பாங்கு கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்திருக்கிறது´´ என்கிறார் எஃப் ஏ ஏ செயல் நிர்வாகி டேன் எல்வேல்.
Average Rating