மூளையும் சில முக்கிய தகவல்களும்…!! (மருத்துவம்)
மனித உடலின் மிக முக்கியப் பகுதி மூளை. நம் உடலின் செயல்பாட்டைத் தீர்மானிக்கும் சக்தி கொண்டது என்பதால் இதனை தலைமைச் செயலகம் என்றும் வர்ணிக்கிறார்கள். இத்தகைய முக்கியத்துவம் கொண்ட மூளை பற்றிய முக்கிய குறிப்புகள் உங்களுக்காக இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.
மனிதனின் மூளை முதுகுத்தண்டில் இருந்து உருவாகிறது. முட்டைக்கோஸ் அல்லது வெங்காயம் போன்று தோல் அடுக்காக இந்த உறுப்பு மெல்லமெல்ல வளர்கிறது.
நமது மூளையில் காணப்படுகிற நியூரான்கள், உணவுவேளையின்போது நாம் எதுவும் சாப்பிடாமல் இருக்கும்பட்சத்தில், தங்களைத் தாங்களே உண்ணத் தொடங்குகின்றன. இதுதான் நம் பசிக்கான அறிகுறி. எனவேதான் அந்தச் சமயத்தில் கண்ணில் படுகிற உணவுப்பண்டங்களை எல்லாம் நாம் சாப்பிட ஆர்வம் கொள்கிறோம்.
10ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெவ்வேறு விதமான வாசனைகளைத் தனித்தனியே கண்டறியும் திறன் மனித மூளைக்கு உள்ளதாக மருத்துவ வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
மூளையினுடைய நரம்பு மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டதற்கான அறிகுறிதான் வலிப்பு நோய். தலையில் காயம், மூளையில் கட்டி, ரத்த ஓட்டம் தடைபடுதல், மூளைக்காய்ச்சல் போன்றவையும் வலிப்பு நோய்க்கான முக்கிய காரணங்களாக கருதப்படுகின்றன.
கவனக்குறைவு, செயல்திறன் குறைபாடு, அளவுக்கு மிஞ்சிய சுறுசுறுப்பு, வளர்ச்சி குறைபாடு முதலானவை ஆட்டிசம் நோய்க்கான அறிகுறிகள். மூளை அமைப்புரீதியாகப் பாதிக்கப்படுதலும், வேறுபட்ட செயல்திறன் கொண்டு இருப்பதும் இந்த நோயினுடைய முதன்மையான பின்புலங்களாக வரையறுக்கப்படுகின்றன.
மனித இனத்தில், ஆணின் மூளை சராசரியாக ஒன்றரை கிலோ எடை கொண்டதாகவும், பெண்ணின் மூளை சுமார் 1130 கிராம் எடை உடையதாகவும் காணப்படுகிறது. இந்த உறுப்பில் ஆயிரக்கணக்கான நுட்பம் வாய்ந்த உயிரணுக்கள் மற்றும் செல்கள் அமைந்துள்ளன.
நமது உடலின் ஒவ்வொரு உறுப்புகளும் படிப்படியாக வளர்ச்சி அடையும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. மூளையும் அவ்வாறே வளர்கிறது. பிறக்கும் போது காணப்படும் மூளையின் எடை, பருவமடையும் வயதில் மூன்று மடங்கு அதிகரிப்பதாக மருத்துவ வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
குழந்தைப் பருவத்தில் இருந்து இளமைப் பருவத்தை அடையும்வரை அதிகரித்துக் கொண்டே செல்லும் மூளையின் எடை முதுமையை நெருங்கும்பட்சத்தில், படிப்படியாக எடை குறைவதாகக் கண்டறியப் பட்டுள்ளது.
மனித மூளை சராசரியாக 140 மில்லி மீட்டர் அகலமும், 167 மில்லி மீட்டர் நீளமும் கொண்டதாக இருக்கிறது.
மூளையின் அடர்த்தி என்பது அதிலுள்ள மடிப்புகள் மற்றும் அவை பாளம்பாளமாக சுருங்கிக் காணப்படுவதைதான் குறிக்கும். இவைதான் ஒருவருடைய புத்திசாலித்தனத்தைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக திகழ்கின்றன.
மூளையின் ஒவ்வொரு செல்லிலும் கோடிக்கணக்கான நியூரான்கள், நரம்பு செல்கள் உள்ளன.
மூளை அளவில் வேறுபட்டாலும் கிட்டத்தட்ட 40 ஆயிரம் வருடங்களாக எந்தவிதமான மாறுபாடுகளும் அடையாமல் உள்ளது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இதனாலேயே விஞ்ஞானிகளுக்கு முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாத புரியாத புதிராக மூளை இருக்கிறது.
மனித மூளை பெரிய அக்ரூட் பழம் போன்று தோற்றம் கொண்டது. ஈரம் நிறைந்த அழுக்கு நிறத்தில் காணப்படும் இந்த உறுப்பை வைத்துதான் மனித இனத்தின் ஒவ்வொரு முன்னேற்றமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மூளையில் உள்ள ஒவ்வொரு செல்லையும் சிறிய மணல் துகள் அளவுக்குப் பெரிதாக்கினால், நமது மூளையில் உள்ள செல்களை வைக்க ஒரு லாரி போதாது.
நமது மூளையின் அளவுக்கும், புத்திசாலித்தனத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. ஒருவேளை இரண்டுக்கும் தொடர்பு இருந்தால், இன்று உலகிலேயே மிக அதிபுத்திசாலிகளாக எஸ்கிமோக்கள் இனத்தினர் தான் இருந்திருப்பார்கள். ஏனெனில், உலகில் வாழ்கிற மனிதர்களிலேயே இவர்களுடைய மூளைதான் அளவில் மிகப்பெரியது.
உலகிலேயே மிகவும் புத்திசாலித்தனமாக எழுதக்கூடிய படைப்பாளராகக் கருதப்படுகிற அனடோல் பிரான்ஸ் என்பவரின் மூளை அளவு மூளையின் சராசரி அளவைக்காட்டிலும் சிறியது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
யானையின் மூளை அளவு, மனிதனின் மூளையைவிட, மூன்றரை மடங்கு பெரியது. ஆனால், உடலோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, யானையின் மூளை அளவு மிகச் சிறியது. மனித உடலில் மூளை 2.5 சதவீதம் உள்ளது. அதேவேளையில், யானையின் உடம்பில் 0.2 சதவீதத்துக்குதான் மூளை அமைந்துள்ளது. எனவேதான், பிரமாண்ட உடலமைப்பைக் கொண்ட யானையை ஆறறிவு மனிதன் அடக்கி ஆள்கிறான்.
நமது மூளையின் கடைசி அடுக்குப் போர்வையை மருத்துவர்கள் ‘கார்டெக்ஸ்’ எனக் குறிப்பிடுகின்றனர். இந்த அடுக்கு வெறும் நாலரை மில்லி மீட்டர் பருமன் கொண்டது. இது மிகச் சிறிய அளவு என்றாலும், இந்தப் போர்வையில் மட்டும் 800 கோடி நரம்பு செல்கள் காணப்படுகின்றன.
மனித மூளை பெருமூளை, சிறுமூளை என இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. பெருமூளை, மடிப்பு மற்றும் மேடு பள்ளங்கள் நிறைந்து காணப்படும். இப்பகுதியில், உடலின் பல பாகங்களில் இருந்து பெறப்படும் உணர்ச்சிகள், தட்பவெப்பம் போன்ற தகவல்கள் பதிவு செய்யப்படுகின்றன. சிறுமூளை மனிதனின் குணம் மற்றும் பழக்க வழக்கங்களுக்குக் காரணமாக அமைகிறது.
Average Rating