எல்லோருக்கும் வரும் எலும்பு வலி!! (மருத்துவம்)

Read Time:8 Minute, 28 Second

பறவைகள் பலவகை என்பது போல வலிகளிலும் பல வகை உண்டு. எலும்புகளில் மட்டும், தசைகளில் மட்டும், தசைநார்களில் மட்டும், நரம்புகளில் மட்டும்….. இப்படித் தனித்தனியாக உணரப்படுகிற வலிகளைத் தெரிந்து வைத்திருப்போம். ஆனால், ஒட்டுமொத்தமாக இவை எல்லாவற்றையும் பாதிக்கிற வலி ஒன்று உண்டு. அதை Musculoskeletal pain என்கிறோம். வாழ்க்கையில் எல்லோருக்கும் இந்த மஸ்குலோ ஸ்கெலிட்டல் பெயின் ஒருமுறையாவது ஏற்பட்டிருக்கும்.

மஸ்குலோ ஸ்கெலிட்டல் பெயின் திடீர் திடீரென வந்துபோகலாம் அல்லது வந்தால் நீண்ட காலத்துக்கு அவஸ்தையைத் தரலாம். அதேபோல உடலின் ஓர் இடத்தில் மட்டும் உணரப்படலாம் அல்லது உடல் முழுக்கவும் உணரப்படலாம். மஸ்குலோ ஸ்கெலிட்டல் பெயினுக்கு மிக சிறந்த உதாரணம் அடி முதுகுவலி. மஸ்குலோ ஸ்கெலிட்டல் பெயினில் பல வகைகள் உண்டு. அவை….

எலும்பு வலி

இது மிதமானதாக இருக்கலாம். சில சமயங்களில் மிக கடுமையாகவும், மற்ற பகுதிகளுக்கும் ஊடுருவுகிறது போன்றும் இருக்கலாம். எங்கேயாவது அடிபட்டுக் கொண்டாலோ, காயம் பட்டாலோ இந்த வலி வருவது சகஜம். எனவே, இந்த வலியை உணர்பவர்கள், அது எலும்பு முறிவு அல்லது கட்டிகளின் காரணமாக வந்ததல்ல என்பதை மருத்துவ பரிசோதனைகளின் மூலம் உறுதிபடுத்திக் கொள்வது அவசியம்.

தசை வலி

எலும்பு வலியோடு ஒப்பிடும்போது இதன் தீவிரம் சற்றே குறைவாக இருக்கும். ஆனாலும் இந்த வலி வந்தால் உடல் பலவீனமானது போல இருக்கும். தசை வலி ஏற்பட பல காரணங்கள் இருக்கலாம். எங்கேயாவது அடிபட்டுக் கொள்வது, ஆட்டோ இம்யூன் விளைவு, தசைகளுக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைவது, தொற்றுநோய், கட்டிகள் போன்று அந்த காரணங்கள் பல. இந்த வலியுடன் தசைப்பிடிப்பும், சுளுக்கும்கூட சேர்ந்து கொள்ளலாம்.

தசைநார் வலி

இந்த வலிக்கும் அடிபட்டு கொள்வதே முக்கிய காரணமாக இருக்கிறது. இதிலும் சுளுக்கு இருக்கலாம். பாதிக்கப்பட்ட பகுதியை அதிகம் பயன்படுத்தினாலோ, நகர்த்தினாலோ இந்த வலி இன்னும் அதிகமாகும்.

ஃபைப்ரோமயால்ஜியா(Fibromyalgia)

தசைகளிலும், தசை நார்களிலும் உணரப்படுகிற விசித்திரமான வலி இது. குறிப்பிட்ட ஓர் இடத்தில் மட்டும் இல்லாமல் உடலின் பல்வேறு பகுதிகளிலும் இந்த வலி இருக்கலாம். இந்த வலி இப்படிப்பட்டது என்று விவரிக்க முடியாமல் இருக்கும்.

மூட்டு வலி

மூட்டு பகுதிகளில் இறுக்கம், மற்றும் கடுமையான வலி இரண்டும் இதன் அறிகுறிகள். இதுவும் சிலருக்கு மிதமாகவும், சிலருக்கு மிக கடுமையாகவும் உணரப்படும். மூட்டுக்களை அசைக்கும்போது இன்னும் அதிகம் வலிக்கும். மூட்டுக்கள் வீங்கிக்கொள்ளும். மூட்டுக்களில் ஏற்படுகிற வீக்கம்தான் பெரும்பாலும் இந்த வலிக்கு காரணமாகிறது.

டன்னல் சின்ட்ரோம் (Tunnel syndrome)

நரம்புகள் அழுத்துவதால் தசைகளிலும், எலும்புகளிலும் ஏற்படுகிற பிரச்னைகள், அதை தொடர்ந்த வலியை இது குறிக்கும். இதில் கார்ப்பல் டன்னல் சிண்ட்ரோம், கியூபிட்டல் டன்னல் சிண்ட்ரோம் மற்றும் டார்சல் டன்னல் சின்ட்ரோம் என 3 வகைகள் உண்டு. நரம்பு செல்லும் பாதையில் இந்த வலி பரவும். சில சமயங்களில் எரிச்சல் உணர்வையும் ஏற்படுத்தும்.

மஸ்குலோ ஸ்கெலிட்டல் பெயினுக்கான காரணங்கள்….

வாழ்க்கையில் எல்லோருக்கும் இந்த வலி ஒருமுறையாவது ஏற்பட்டிருக்கும். எலும்புகள், தசைகள், நரம்புகள், மூட்டுக்கள், தசைநார்கள் போன்றவற்றில் அடிபடும்போது இந்த வலி ஏற்படும். கார் விபத்து, உயரத்திலிருந்து விழுவது, சுளுக்கு, மூட்டு நழுவுதல் போன்றவற்றால் இப்படி ஏற்படலாம். குறிப்பிட்ட பகுதியை அளவுக்கதிகமாக பயன்படுத்துவதும் இத்தகைய வலிகளுக்கு முக்கிய காரணம். அதிகப்படியான உபயோகத்தால் ஏற்படுகிற வலி 33 சதவிகிதத்தினரை பாதிக்கிறது. நீண்ட நேரத்துக்கு ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பதும், தவறான நிலைகளில் உட்கார்வது, நிற்பது, நடப்பது போன்றவையும்கூட இந்த வலிகளை ஏற்படுத்தலாம்.

அறிகுறிகள்

மஸ்குலோ ஸ்கெலிட்டல் பெயினின் அறிகுறியானது அது கீழே விழுந்து அடிபட்டதால் ஏற்பட்டதா, உடல் பகுதியை அதிகம் உபயோகித்ததன் விளைவால் ஏற்பட்டதா என்பதையும், வலி குறைவாக இருக்கிறதா, தீவிரமாக இருக்கிறதா என்பதையும் பொறுத்து வேறுபடலாம். தவிர அது நபருக்கு நபர் வித்தியாசப்படலாம். எனினும் பொதுவான அறிகுறிகளை இப்படி வகைப்படுத்தலாம். ஒரு இடத்தில் அல்லது உடல் முழுக்க வலி…. அதுவும் நகரும்போதும், அசையும்போதும் அதிகரிப்பது, உடல் முழுவதும் இறுக்கமாவது மற்றும் கடுமையான வலி, தசைகளை யாரோ இழுப்பது போன்ற உணர்வு, களைப்பு, தூக்கமின்மை, தசைகளில் எரிச்சல்.

பரிசோதனைகள்

எலும்பு மருத்துவரால் வலியுள்ள பகுதிகளை தொட்டு உணர்வதன் மூலமே காரணத்தை ஓரளவு கணிக்க முடியும். அதையும் தாண்டி துல்லியமாக தெரிந்து கொள்ள சில பரிசோதனைகளை செய்ய சொல்வார். ருமட்டாயிட் ஆர்த்தரைட்டிஸ் பிரச்னை உள்ளதா என்பதை கண்டறிய ரத்தப்பரிசோதனை எலும்புகளின் அமைப்பை அறிய எக்ஸ் ரே இன்னும் தெளிவான தகவல்களுக்கு சிடி ஸ்கேன் தசைகள், தசைநார்கள் போன்ற மென் திசுக்களை பற்றி தெரிந்து கொள்ள எம்.ஆர்.ஐ. ஸ்கேன் போன்ற சோதனைகள் தேவைப்படலாம்.

சிகிச்சைகள்

வலியின் காரணம் மற்றும் தீவிரத்தை பொறுத்து சிகிச்சைகளும் வேறுபடும். பிசியோதெரபி, பாதிக்கப்பட்ட பகுதியை மேலும் மேலும் அசைக்காமலிருக்க Splint என்கிற கருவியை பயன்படுத்துவது, வேலையை குறைத்துக்கொண்டு ஓய்வெடுப்பது, அக்குபஞ்சர் அல்லது அக்கு பிரஷர், வீக்கம் மற்றும் வலியை குறைக்கும் ஊசிகள், பாதித்த பகுதிக்கான வலுப்படுத்தும் பயிற்சிகள், மருத்துவ மசாஜ் போன்றவை பலனளிக்கலாம். ஃபைப்ரோமயால்ஜியா பிரச்னை உள்ளவர்களுக்கு உடலின் செரட்டோனின்(Serotonin) மற்றும் நார்எபினெஃப்ரின் (Norepinephrine) அளவுகளை அதிகரிக்கும் மருந்துகள் பரிந்துரைக்கப்படலாம். அவை தூக்கத்தை சீராக்கி வலியையும் குறைக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நியூசிலாந்தில் துப்பாக்கிகளுக்கு தடை – சட்டம் அறிமுகம் !! (உலக செய்தி)
Next post இளமை ரகசியத்தை சொல்லும் மந்த்ரா பேடி !!