விருப்பமில்லாத வேலை என்னவெல்லாம் செய்யும்?! (மருத்துவம்)
மனித வாழ்வில் வேலை இன்றியமையாதது. நமக்குப் பிடித்த துறையில் ஆர்வத்துடன் வேலை பார்ப்பவர்கள் அதை வேலை மாதிரி உணர மாட்டார்கள். அதுவே அவர்களுக்கு வாழ்க்கையாகிவிடும். அந்த வேலையை முடிப்பதற்கு நிறைய மெனக்கெட்டாலும் வேலையை முடித்த பின்னர் அதற்காகப் பட்ட கஷ்டமெல்லாம் சேர்ந்து இனிக்கும். அதுவே அவர்களது வாழ்வின் அடையாளமாகிப் போகும். தான் செய்யும் வேலையால் புகழையும் பெருமையையும் அடைவதும் சாத்தியப்படும். ஆனால், எத்தனை பேருக்கு இந்த வரம் வாழ்க்கையாகியுள்ளது. ஓர் அலுவலகத்தில் அல்லது நிறுவனத்தில் நுழைந்து கேட்டுப் பாருங்கள். அங்கு வேலை செய்து கொண்டிருப்பவர்களில் பலருக்கு அந்த வேலை மீது ஒரு சலிப்பு இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மற்றவர்களையும் உற்சாகம் இழக்கச் செய்யும் வகையில் புறம் பேசிக் கொண்டிருப்பார்கள். இப்படியே பேசிப் பேசி அவர்களோடு இன்னும் சிலரையும் கூட்டணி சேர்த்து அந்த நிறுவனத்துக்கே பிரச்னையாக மாறியிருப்பார்கள். இது அவர்கள் வாழ்க்கையையும் சவாலாக மாற்றியிருக்கும்.
இந்த கேள்வியை யாரிடம் வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள் அவர்கள் செய்யும் வேலை பிடிக்கிறதா என்று? குழந்தைகளுக்குப் பள்ளி செல்வது பிடிக்காது, அம்மாவுக்கு சமைக்க, அப்பாவுக்கு தினமும் ஷேவ் செய்ய என்று ஒவ்வொருவரிடமும் ஒரு லிஸ்ட் இருக்கும். ஒருவருக்கு ஓவியம் வரையப் பிடிக்கலாம். ஆனால், சிறு வயதில் இருந்தே ஓவியம் வரைந்தால் போதுமான ஊதியம் கிடைக்காது என அவரை பி.காம் படிக்க வீட்டில் கட்டாயப்படுத்தியிருப்பார்கள்.படிப்பை முடித்த பின்னும் அவர்களுக்குப் பிடிக்காத அக்கவுன்டன்ட் வேலையை செய்து கொண்டிருப்பார்கள். வாழ்க்கை எந்த சுவாரஸ்யமும் இல்லாமல் தன் பாட்டுக்குப் போகும். அவரது வேலை நெருக்கடிகள் மன உளைச்சலைத் தருவதுடன் பலவிதமான மனக்கசப்பு மற்றும் உடல்நிலைக் கோளாறுகளுக்கும் காரணமாகியிருக்கும். பிடிக்காத வேலையை தொடர்ந்து செய்வது சாதாரண விஷயமில்லை என்கிறார் மனநல ஆலோசகர் தேவிப்பிரியா.
‘‘குழந்தைப் பருவத்திலேயே இது துவங்கிவிடுகிறது. மேலும் அந்த விஷயத்தில் உள்ள போட்டி, மற்றவர்களுடனான ஒப்பீடு ஆகியவை படிப்பின் மீது குழந்தைகளுக்கு இயல்பான வெறுப்பினை ஏற்படுத்துகிறது. இதுவேலைக்கும் பொருந்தும். காலம் காலமாய் குறிப்பிட்ட பழக்கத்தை மற்றும் பின்பற்றி வரும் சமூகக் கட்டுமானங்கள் அந்த சமூகத்தை சேர்ந்த நபர்களுக்கான நெருக்கடியை அளிக்கிறது. பிடிக்கிறதோ பிடிக்கலையோ… குறிப்பிட்ட அளவு சம்பாதித்தே ஆக வேண்டும். தனது மகளின் திருமணத்துக்கு இவ்வளவு சீதனம் கொடுக்க வேண்டும் என்பவையும் அந்தளவு பணம் கொடுக்கும் பணியை செய்ய வேண்டிய கட்டாயத்தில் மனிதர்களைத் தள்ளுகிறது. பலவிதமான காரணங்களுக்காக அவர்கள் பிடிக்காத வேலையைச் செய்ய தங்களை அர்ப்பணித்து விடுகின்றனர். பெண்களைப் பொறுத்தவரை திருமணம், குழந்தைப் பிறப்பு, கணவரின் மனோபாவம் போன்ற காரணங்களால், வீட்டுக்குப் பக்கத்திலேயே அல்லது வீட்டிலேயே கிடைக்கும் வேலையைச் செய்ய பலர் நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.
குடும்பச் சுமைகளோடு வேலை சார்ந்த மன உளைச்சல்களும் பெண்களை பலவிதமாக பாதிக்கிறது. பிடித்த வேலைக்குச் செல்லும் பெண்கள் வீட்டில் ஏற்படும் மனச்சுமையை வேலை சூழலில் மறக்கின்றனர். வேலை அவர்களுக்கு புது உற்சாகத்தையும் நம்பிக்கையையும் தருகிறது. ஆனால், பிடிக்காத வேலை எல்லாச் சுமைகளையும் கூடுதலாக்குகிறது. ஒரு சில பெண்கள் எப்போதும் கோபமாகப் பேசிக் கொண்டிருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். இன்றைய வாழ்க்கைமுறை மற்றும் வேலைச் சூழல் இரண்டுமே பரபரப்பாகிவிட்டது. வேலை எப்போதும் மனிதர்களை ஒரு வித பதற்றத்திலேயே வைத்துள்ளது. ஒரு சில நிறுவனங்கள் தனது பணியாளர்களை பதற்றத்துடன் வைத்திருப்பதையே உக்தியாகவும் பின்பற்றுகின்றன. இதன் விளைவாக பெரும்பாலான மனிதர்கள் தங்களது வேலையின் மூலம் மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். இதனால் மனிதர்கள் கோபம், பயம், இயலாமை, கவலை, வெறுப்பு, வாழ்வதில் சலிப்பு போன்ற எல்லைகளுக்குச் செல்கின்றனர். இவர்கள் தங்களை ரிலாக்ஸ் செய்து கொள்ளாமல் தொடர்கின்றனர்.
இது இவர்களை இதய நோயாளியாகவோ, சர்க்கரை நோயாளியாகவோ புரொமோஷன் செய்கிறது. காரணங்கள் எதுவாக இருந்தாலும் வேலையை விட்டுவிடவும் முடியாது. எதனால் நமக்கு வெறுப்பு வருகிறது என்பதைக் கண்டறிய வேண்டும். அடுத்தவர்களைப் போல வாழவும், அடுத்தவர்களை விட ஒரு படி மேலே வர வேண்டும் என்று நினைப்பதும், ஆகிய இரண்டு விஷயங்களும் இன்றைய சூழலில் மனித இயல்பாக இருக்கிறது. பல போட்டி பிரச்னைகளுக்கும் இதுவே காரணமாக உள்ளது. போட்டி போடாமல் நமக்கு எது தேவை என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். மற்றவர்களுக்காக நடிப்பதை விட்டு விட்டு நமக்கான விஷயங்களைச் செய்ய ஆரம்பிக்கலாம். இதன் மூலம் பிடிக்காத வேலையில் மாட்டிக் கொள்வதைத் தவிர்க்க முடியும். நமக்குள் ஒரு மாதிரியும், வெளியில் ஒரு மாதிரியும் முரண்பட்டு வாழும் போதும் நமக்குள் ஒரு மன அழுத்தம் இருக்கும். வாழ்க்கை எப்போதும் போராட்டமாக இருந்தாலும் நமது படைப்பாற்றல் காணாமல் போய்விடும்.
ஒரு சில பெண்கள் பல திறமைகளைப் பூட்டிவைத்துக் கொண்டு வேறு வேலை கடனே என்று பார்ப்பதற்கும் இதுவே காரணம். மாணவர்கள் மத்தியில் அடுத்த மாணவரை விட அதிகமான மதிப்பெண் வாங்க வேண்டும் என்பதற்காக படி, படி என அழுத்தம் கொடுக்கும்போதும் குழந்தைகள் போராட்ட மனநிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதனால் அவர்களின் ஆற்றல் வீணாகிப் போகும். அவர்களது திறமையை வெளிப்படுத்தாமல் வேறு விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டி வரும். மனித வாழ்க்கைக்கு என்று விதிமுறைகளும், வரைமுறைகளும் உள்ளது. இதைப் பின்பற்றுவதில் உள்ள நெருக்கடிகளும் மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. ஒருவருக்கு வனவிலங்குகளைப் புகைப்படம் எடுப்பது பிடித்திருக்கலாம். இது வழக்கமான 8 மணி நேர வேலையில்லை. காடுகளில் மாதக்கணக்கில் அலைய வேண்டும். நீண்ட தூரம் பயணிக்க வேண்டும். இந்தப் பணியில் உயர்ந்த இடங்களைப் பிடிக்க வெளிநாடுகளில் பணிபுரிய நேரிடும். இதற்கெல்லாம் குடும்பத்தை மாதக்கணக்கில் பிரிந்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.
இதுபோன்ற சவால்களைக் காரணம் காட்டி அவர்களைக் குடும்பம் வேறு பணியில் அமர்த்தியிருக்கும். ஆனால், வனவிலங்கு போட்டோ கிராபி செய்வதற்கான வாய்ப்பையே இவர்கள் மனம் சுற்றிக் கொண்டிருக்கும். பிடிக்காத வேலையில் இருப்பதால் அவர்களிடம் ஏற்படும் மாற்றங்கள் இவைதான். அலுவலக எரிச்சல் வீட்டிலும் வெளிப்படும். காரணமே இல்லாமல் யார் மீதாவது எரிந்து விழுவார்கள். இதனால் குடும்ப உறவுகளின் இயல்பான அன்பை அவர்களால் புரிந்துகொள்ள முடியாது. மற்றவர்களால் வெறுக்கப்படும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். அழகான இரண்டு உடைகளில் எதைத் தேர்வு செய்யலாம் என்பது கூட அவர்களால் இயலாமல் போகும். அலுவலகத்திலும் இவர்களால் முழு ஈடுபாட்டுடன் வேலை பார்க்க முடியாது. யாரைப் பார்த்தாலும் எதிரிபோலவே பாவிப்பார்கள். இதனால் தனது பணியில் இவர்களால் உயர்ந்த இடங்களை எட்ட முடியாது. கொஞ்சம் அதிகம் உழைக்க வேண்டியிருந்தால் கூட வேலையை விட அதிக மன அழுத்தம் தரும். இது இவர்களைப் பணி ரீதியாக வளர விடாமல் பாதிக்கும். எதையோ இழந்த மாதிரியே காணப்படுவார்கள். விரைவில் மன அழுத்த நோயாளியாக மாறுகின்றனர்.
உடல் ரீதியான பாதிப்புகள்
மன அழுத்தம் மூளையில் துவங்கி, இதனோடு இணைந்து செயல்படும் நரம்பு மண்டலம், இதயம், ரத்த ஓட்டம், சிறுநீரகம், இனப்பெருக்க மண்டலம் அனைத்தையும் பாதிக்கிறது. இதனால் சுவாசக் கோளாறுகள் மற்றும் மாரடைப்பும் ஏற்படலாம். மன அழுத்தத்தால் இதயத்துடிப்பு அதிகரிப்பதால் டென்ஷனான நேரத்தில் படபடப்பாக உணர்வார்கள். இதயத் தசைகளின் வேலை அதிகரித்து ரத்தக்குழாய் வீக்கம் ஏற்பட்டு மாரடைப்புக்கு வழிவகுக்கும். மன அழுத்தம் உடலின் ஜீரண சக்தியையும் சேர்ந்து பாதிக்கிறது. இதனால் பசியின்மைப் பிரச்னை தோன்றும். அல்லது எதையாவது தொடர்ந்து சாப்பிட்டபடி இருப்பார்கள்.
மதுப்பழக்கத்துக்கு ஆளாவது, தொடர்ந்து புகைப்பிடிப்பது, அஜீரணக் கோளாறு மற்றும் நெஞ்சு எரிச்சல் ஏற்படலாம். இதனால் சோர்வாகக் காணப்படுவார்கள். மன அழுத்தத்துடன் பிடிக்காத வேலையைச் செய்யும் போது ஹார்மோன் சுரப்பிலும் மாற்றத்தை உண்டாக்குகிறது. இது இனப்பெருக்க மண்டலத்தை பாதிப்படையச் செய்கிறது. மன அழுத்தத்துடன் நீண்ட நாட்கள் பிடிக்காத வேலைச் சூழலில் இருக்கும் போது டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் மற்றும் விந்தணு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. பெண்களுக்கு சினைப்பை நீர்க்கட்டிகள் தோன்றும். இதனால் மாதவிலக்கு சுழற்சியில் மாற்றங்கள் ஏற்படலாம். தாம்பத்ய உறவில் ஈடுபாடு குறையும். இது கணவன் மனைவிக்கு இடையில் மனக்கசப்புகளை உண்டாக்கும். பிடிக்காத வேலையைச் செய்வதும் அதனால் உண்டாகும் மன அழுத்தமும் இத்தனை பாதிப்புக்களை உடலிலும் மனதிலும் உண்டாக்குகிறது. இத்தோடு சம்பந்தப்பட்ட நபரின் சமூக வாழ்க்கை வளர்ச்சி அனைத்தையுமே சிதைக்கிறது.
இதற்கான தீர்வுகள்
வேறு சில காரணங்களுக்காக பிடிக்காத வேலையைத் தேர்வு செய்வதை 100 சதவீதம் தவிர்த்திடுங்கள். வேலையில் கிட்டத்தட்ட உங்களது வாழ்வின் பெரும்பகுதி நாட்களை பயணிக்க வேண்டிய நிர்ப்பந்தம் கொண்டது.
எந்தெந்தக் காரணங்களுக்காக பிடிக்காத வேலையைத் தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறதோ, அந்தக்
காரணங்களை மாற்ற முயற்சி செய்யலாம்.
நாம் பிடித்த வேலையை விரைவில் அடைவோம் என்ற நம்பிக்கையை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
எந்த வேலைக்குச் சென்றாலும் அங்கு வழக்கமான அரசியல், போட்டிகள், வதந்திகள் இருந்தே தீரும். அவற்றைப் புறந்தள்ள வேண்டும்.
உங்களுக்குப் பிடிக்காத வேலையானாலும் முடிந்தளவு அதில் நான் பெஸ்ட் என்பதை வெளிப்படுத்த முயற்சிக்கலாம்.
நாம் இப்போதுள்ள வேலையின் பாசிட்டிவ் விஷயங்களை நினைவுகூறலாம். இது டென்ஷன் தவிர்க்கும்.
வேலையை மாற்றிக் கொள்ள முடியாதபோது பிடித்த விஷயத்தை ஹாபியாகச் செய்யலாம். எழுத்து, நடனம், பாட்டு, நடிப்பு, புகைப்படக்கலை என எதிலாவது விருப்பம் இருந்தால் ஒரு ஆண்டில் சில நாட்களாவது அதைச் செய்வதற்கு வாய்ப்பிருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
பிடித்த வேலையை மட்டும் செய்வதில் அதீத விருப்பம் உள்ளவர்கள் காத்திருந்து அந்த வேலைக்கு முயற்சிக்கலாம்.
வேலையால் உங்களது அன்றாட வாழ்வில் பாதிப்பு, உடன் நலக் கோளாறுகள் ஏற்பட்டால் மனநல ஆலோசகரிடம் மனம் திறந்து பேசுங்கள்.
வேலையிடத்தில் நல்ல நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொள்வதும், நெருக்கடியான நேரங்களில் மனதைப் பகிர்வதும் மன அழுத்தத்தைக் கரைக்கும்.
உங்களுக்கு என்று சில சிறப்புத் திறன்கள் இருக்கலாம். அதனை உங்கள் வேலையிலும் வெளிப்படுத்துங்கள். இது எந்தத் துறையில் இருந்தாலும் உயர்வை எட்ட வாய்ப்பளிக்கும். பிடிக்காத வேலையின் மீதும் பிரியம் கொள்ளச் செய்யும்.
வேலையைப் பற்றி மட்டும் யோசித்துக் கொண்டிருக்காமல் வெளிச்சூழல்களில் இயல்பாக இருங்கள்.
எந்த வேலையினையும் ரசனையோடு செய்ய விருப்பப்படுங்கள். நீங்கள் புகைப்படப் பித்தராக இருக்கலாம். அதற்கு வேலையில் வாய்ப்பில்லாமல் போகலாம். போட்டோகிராபியை ஹாபியாகச் செய்யுங்கள். மன அழுத்தம் குறையும்.
நீங்கள் நீங்களாக இருங்கள். உங்களுக்குப் பிடித்த வேலையை அடையும் முயற்சியோடு இருங்கள். வாழ்க்கை இனிதாகும்!
Average Rating