முகநூல் அபாயம்!! (மகளிர் பக்கம்)
விஜயலெட்சுமி தேவராஜன், சென்னையில் இயங்கும் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் மனிதவளத்துறை இயக்குநராக பொறுப்பில் இருக்கிறார். இந்தியாவில் உள்ள சிறந்த 100 பெண்களை தேர்வு செய்து, மினிஸ்ட்ரி ஆஃப் வுமன் அண்ட் சைல்ட் டெவலெப்மென்ட்(Ministry of Women and child development-‘women achievement award’) வழங்கிய, 2016ம் ஆண்டிற்கான “டாப் 100 வுமன் ஆஃப் இந்தியா” என்ற தலைப்பில் ஒருவராக ஜனாதிபதியின் கைகளால் விருதை பெற்றவர். பெண் சாதனையாளர். குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பிற்காக தொடர்ந்து செயலாற்றி வருபவர்.
பெண்கள் முன்னேற்றம், பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த மோட்டிவேஷனல் ஸ்பீச் மற்றும் தீர்வுகளை ஊடகங்களில் தொடர்ந்து கொடுத்து வருகிறார். அவரிடத்தில் சமூகவலைத் தளங்களில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் நலன் குறித்த கேள்விகளை முன்வைத்தபோது…‘‘நீங்கள் எந்நேரமும் முகநூலில் வலம் வருபவரா…? அப்படி என்றால் உங்களுக்கான செய்திதான் இது. திறந்த வெளியாய் இயங்கும் சமூக வலைத் தளங்களில் வலம் வருவது தவறில்லைதான். ஆனால் அதை பயன்படுத்தும் நாம் எந்த அளவு பாதுகாப்போடு இருக்கிறோம் என்பது அதைவிட முக்கியம்.
உலகம் கூரையாய் சுருங்கி, எங்கோ மூலையில் நடக்கும் நிகழ்வுகள் அடுத்த நொடியே கைகளுக்குள் வரும் அளவிற்கு வலைத்தளங்கள் பயனுள்ளதாய் இருக்க, அதில் ஆபத்துகளும் நிறைந்திருக்கிறது. பெரும்பாலும் இந்த டெக்னாலஜி க்ரைமர்கள் குறிவைத்துத் தாக்குவது பெண்களைத்தான். பெண்கள் முகநூல் வழியாக நிறைய பிரச்சனைகளில் மாட்டிக் கொள்கிறார்கள். அதுவும் திருமணமான பெண்கள், திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்களாக இருந்தால் வெளியில் சொல்ல முடியாத மன நெருக்கடியை அதிக அளவில் அனுபவிக்கிறார்கள். முகநூலை பயன்படுத்தாதீர்கள் என்று சொல்லமாட்டேன்.
ஆனால் பாதுகாப்பாகப் பயன்படுத்துங்கள் என்று சொல்கிறேன் என்றவர், உங்களின் மெசன்ஜரில் (Messenger) உங்களுக்கு முன்பின் தெரியாத நபர், ஃபீமேல் ஐ.டி.யில் இருந்து லிங்க் ஒன்றை அனுப்பி இந்த லிங்கை க்ளிக் செய்யுங்கள் என்பார்கள். பெரும்பாலும் அந்த லிங்கில் விவசாயிகளுக்கு ஹெல்ப் பண்ணுங்க, ஏழைகளுக்கு உதவுங்கள் என்ற முறையிலே சுருக்கமான வாசகம் இடம் பெற்றிருக்கும். நீங்கள் உடனே அந்த லிங்கை க்ளிக் செய்துவிடுவீர்கள். லிங்கை க்ளிக் செய்த அடுத்த நொடியே நமது மொத்த புரொஃபைல் போட்டோவும் அவர்களின் இன்பாக்ஸிற்குச் சென்றுவிடும்.
அதன் பிறகுதான் அவர்கள் தங்களுடைய ப்ளாக்மெயில் வேலையை உங்களிடம் மிகவும் மெதுவாகக் காட்டத் துவங்குவார்கள் என்கிறார் இவர். எப்படி என்றால்? உங்கள் புகைப்படங்களை செக்ஸுவல் பக்கங்களில் போட்டுவிடுவோம். உங்கள் கைபேசி எண்களை இணைத்துவிடுவோம். அப்படி போடாமல் இருக்க வேண்டும் என்றால் நான் சொல்வதை செய், பணத்தைக் கொடு என்பது மாதிரியான மிரட்டல்கள் உங்களுக்கு வரத் துவங்கும். இது கேட்பதற்கே ஒரு அதிர்ச்சிகரமான விசயம்தான். ஆனால் உங்களுக்குத் தெரியாமலே இந்த மாதிரியான சம்பவங்கள்,
உங்கள் அருகாமையிலேயே, முகம் தெரியாத யாரோ ஒரு பெண்ணிற்கு நடந்துகொண்டுதான் இருக்கிறது என்று அது தொடர்பான அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்றைச் சொல்கிறார். சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் அவர். அந்தப் பெண்ணிற்கு முகநூல் மெசென்ஜர் வழியாக லிங்க் ஒன்று வந்திருக்கிறது. அந்த லிங்கை அவர் கிளிக் செய்துவிட, அவரின் மொத்த புரொஃபைல் புகைப்படங்களும் லிங்க் அனுப்பியவரின் இன்பாக்ஸிற்குள் சென்றிருக்கிறது. லிங்கை அனுப்பியவன், பெண் பெயர் ஐ.டி.யில் இருந்து தொடர்ந்து இந்தப் பெண்ணிடம் நான் சொல்வதை நீ செய்யவில்லை என்றால் உன் புகைப்படங்களை செக்ஸுவல் பக்கங்களில் (Sexual pages) பதிவேற்றுவேன் என மிரட்டி இருக்கிறான்.
யார் எங்கிருந்து மிரட்டுகிறான் என்பதை இதில் கண்டுபிடிப்பது அத்தனை சுலபமில்லை. சைபர் க்ரைமை நீங்கள் அணுகினாலும் உங்கள் பிரச்சனைக்கு அவ்வளவு எளிதில் தீர்வு கிடைத்துவிடாது. உங்கள் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவேற்றுவதற்கு முன் நீங்கள் பாதுகாப்பாய் இருக்கிறீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்களின் புரொஃபைல் புகைப்படங்களை நீங்கள் லாக் செய்தாலும், அதில் பாதுகாப்பு எதுவும் இல்லை. அவற்றை ஸ்கிரீன் ஷாட் எடுத்து யார் வேண்டும் என்றாலும் எளிதாகப் பயன்படுத்த முடியும்.
முகநூல் பயன் பாட்டாளரின் பாதுகாப்பிற்காக முகநூல் நிர்வாகம் சமீபத்தில் இதற்கென ஒரு தீர்வைத் தந்து, புதிதாக ஒரு ஆப்ஷனை (option) அறிமுகப்படுத்தியுள்ளது. உங்கள் பயன்பாட்டில் உள்ள முகநூல் ஐ.டி.பக்கத்தில் வலது ஓரத்தில் உள்ள செட்டிங்கிற்குள் நுழைந்து இடது புறம் உள்ள பேஸ் ரெகக்னைஷன்(face recognition) ஆப்ஷனை க்ளிக் செய்யவும். அதில் Do you want Facebook to be able to recognise you in photos and videos? என்று இருக்கும். அதில் எஸ் (yes) என்ற ஆப்ஷனை க்ளிக் கொடுத்தால் உங்கள் முகப்பு பக்கத்தில் உள்ள உங்களின் படங்கள்,
வீடியோக்கள் அல்லது இணைய உலகின் ஏதோ ஓர் மூலையில், யார் உங்களைப்பற்றி எதைப் பதிவேற்றினாலும் அல்லது இணைத்தாலும் உடன் உங்களுக்கு உங்களின் முகப்பு பக்கத்தில் நோட்டிபிகேஷன் அலர்ட் வந்துவிடும். முகப்பு பக்கத்தின் வலது ஓரத்தில் உங்களுக்கு யாராவது லைக் அல்லது கமெண்ட் கொடுத்தால் எப்படி நோட்டிபிகேஷன் மெசேஜ் வருகிறதோ அதேபோல் யு ஹேவ் பீன் டேக்டு, யுவர் போட்டோ அல்லது யுவர் வீடியோ ஹேஸ் பீன் டேக்டு போன்ற நோட்டிபிகேஷன்கள் உங்களுக்கு வந்துவிடும். எந்த மாதிரியான பக்கத்தில், எங்கே பதிவேற்றினாலும் நோட்டிபிகேஷன் கிடைத்துவிடும்.
உடனடியாக நீங்கள் அந்த லிங்கை க்ளிக் செய்து யார் நம் புகைப்படத்தை, நமது வீடியோவை பதிவேற்றியிருக்கிறார்கள் அல்லது டேக் செய்திருக்கிறார்கள் என்பதை நொடியில் கண்டுபிடித்துவிடலாம். உங்களுக்கு அதில் உடன்பாடு அல்லது விருப்பம் இல்லை என்றால் உடனடியாக நீங்களே நீக்கிவிடவும் முடியும். முடியாத நிலையில் முகநூல் நிறுவனத்திற்கு ரிப்போர்ட் செய்யலாம். முகநூல் பயன்பாட்டாளர்களுக்கு இது மிக முக்கியமான தகவல். ஃபேஸ்புக் பக்கத்தில் இருக்கும் இந்த ஆப்ஷனை பெரும்பாலும் யாரும் பயன்படுத்துவதில்லை.
இந்த ஆப்ஷன் மிகவும் நுணுக்கமாகச் செயல்படக்கூடியது. அதேபோல் நீங்கள் பதிவேற்றும் போட்டோ, வீடியோ, தகவல்களை யாரெல்லாம் பார்க்க வேண்டும் யாரெல்லாம் பார்க்கக் கூடாது என்கிற ஆப்ஷன் நீங்கள் பதிவேற்றும்போதே செய்துவிடலாம். என்னிடம் வரும் பெண்களில் பெரும்பாலானவர்கள் சமூகவலைத் தளங்களால் பாதிக்கப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் யாரை அணுக வேண்டும், எப்படித் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆலோசனைகளை முடிந்த வரை ஆலோசனையாக வழங்குகிறேன்.
முகநூல் செயல்பாட்டின் வழியே தங்களை அழுத்தமாக காட்டிக்கொள்பவர்கள் 50 பேர் இணைந்து பிரச்சனைதரும் ஐ.டி.லிங்க் குறித்து முகநூல் நிறுவனத்திற்கு அவரவர் முகநூல் ஐ.டி.யில் இருந்து ரிப்போர்ட் பதிவு செய்தால், குறிப்பிட்ட அந்தப் பக்கம் முகநூல் நிறுவனத்தால் இயங்க முடியாமல் (Blocked) செய்யப்படும். அதற்குமேல் நீங்கள் சந்திக்கும் பிரச்சனைக்கு சைபர் க்ரைமில், எந்த மாதிரியான லீகல் டீமை அணுக வேண்டும் என்பதுவரை யோசனை கொடுத்து வழிகாட்டுகிறேன்’’என முடித்தார். ஃபேஸ் ரெகக்னைஷன் (face recognition) ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். பாதுகாப்பாய் இருங்கள். வலைத்தளங்களில் பாதுகாப்பாய் வலம் வரும் வரை உலகம் உங்கள் கைகளில்…
நம் வீட்டு குட்டீஸ் பாதுகாப்பிற்கு…
நம்மைச் சுற்றி நிறைய சைக்கோக்கள் இருக்கிறார்கள். குழந்தைகளை மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்வது நம் பொறுப்பு என குழந்தைகள் குறித்தும் பேசத் துவங்கினார் விஜயலெட்சுமி தேவராஜன்.‘‘பள்ளி முடிந்து வீடு திரும்பும் நம் குழந்தைகளை அமர வைத்து பெற்றோராகிய நாம் மனம்விட்டு பேசி இருக்கிறோமா..? அப்படியே பேசினாலும் அதிகபட்சம் அவர்களிடம் என்ன பேசுவோம்? மிஸ் இன்று ஸ்கூலில் என்ன சொல்லிக் கொடுத்தார்கள், என்ன ஹோம்வொர்க் கொடுத்தார்கள்? இதுதான் குழந்தையிடமான நமது உரையாடல். ஆனால் நம் செல்லக் குழந்தையிடத்தில், உனக்கு எதாவது பிரச்சனை இருக்கா?
யாராவது உனக்கு பிரச்சனை கொடுத்தார்களா என்ற கேள்விகளை முன் வைத்திருக்கிறோமா? இந்த மாதிரியான கேள்விகளையும், குழந்தைகளிடம் முன் வைத்து அவர்களுக்கு புரியும் விதத்தில் பேசத் துவங்குங்கள். நீங்கள் பேசுவது குழந்தைகளுக்கு கண்டிப்பாக புரியும். தேவையான விசயங்களை உண்மை யாக, போதுமான அளவுக்கு சொல்லிக் கொடுங்கள். எந்த மாதிரியான இக்கட்டான சூழலில் மாட்டினாலும், தன்னம்பிக்கை, தைரியத்தோடு சூழலை எதிர்கொள்ளும் விதத்தைச் சொல்லுங்கள். கையில் இருக்கும் சாதனங்களை முடிந்த அளவு பாதுகாப்பிற்கு பயன்படுத்த சொல்லித்தாருங்கள்.
பயம்…பதட்டம்…எல்லாவற்றையும் தாண்டி குழந்தைகள் எப்படி பாதுகாப்பாக இருக்க கற்றுத்தருதல் வேண்டும் என்பதிலும் பெற்றோர் மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும். நம்மைச் சுற்றி குற்றச் செயலைத் தூண்டும் நிறைய விஷயங்கள் எளிதாக வலம்வரத் தொடங்கிவிட்டன. பெண் பிள்ளைகளை தவறாக பயன்படுத்தும் நம் அண்டை வீட்டினர்… ஆசிரியர்கள் குறித்த செய்திகள் தினமும் வெளிச்சத்திற்கு வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஏதோ தினச் செய்தியாக நாளிதழிலும், தொலைக்காட்சியிலும் வருவதாக நினைத்து, கடந்து போகாமல், நம் குழந்தைக்கு என்ன நடக்கிறது என்ற விழிப்புணர்வோடு இருங்கள். இன்றைக்கு இருக்கும் சூழலில் ஆண், பெண் இருபாலரும் உழைக்கும் எண்ணத்தில் ஓடிக்கொண்டிருக்கிறோம்.
வீட்டில் பெரியவர்கள் இல்லாத நிலையில் எத்தனையோ குடும்பங்களில் குழந்தைகள் தனித்திருக்கும் நிலை உள்ளது. நகரங்களில் கேட்டெட் கம்யூனிட்டியாக தனித்து வாழும் மேட்டுக்குடித் தனங்கள் நிறைந்திருக்கின்றன. இச்சூழலில் தனித்து வளரும் குழந்தை களிடத்திலும், சிங்கிள் பேரன்டெட் குழந்தைகளிடத்திலும் பெற்றோர்கள் படிப்பைத் தாண்டி சமூகம் சார்ந்த விசயங்களை மனம் திறந்து பேசுங்கள். அப்போதுதான் குழந்தைகளின் பிரச்சனைகள் வெளியில் வரும். குழந்தைகளை பெற்றால் மட்டும் போதாது. ஆசிரியர்களால் பள்ளிகளில் நம் குழந்தைகளை ஓரளவுதான் பார்த்துக்கொள்ள முடியும்.. பெற்றோர்களால் மட்டுமே குழந்தைகளை முழுவதும் பார்க்கவும் உணரவும் முடியும். எல்லா இடங்களிலும் வன்முறை இருக்கிறதா எனத் தெரியாது. சில இடங்களில் இல்லாமலும் இருக்கலாம்.
Average Rating