நீங்களும் தொழிலதிபர் ஆகலாம்! (மகளிர் பக்கம்)
ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் படிப்பை முடித்துவிட்டு வெளியேறுகிறார்கள். இவர்களின் எத்தனை பேருக்கு அவர்களின் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கிறது? அப்படியே கிடைத்தாலும் போட்டி நிறைந்த உலகில் அவர்கள் அடுத்தடுத்த பதவி உயர்வுக்கு செல்ல பெரிய போராட்டமே சந்திக்க வேண்டும். இது எல்லாம் வேண்டாம், சொந்தமா தொழில் செய்யலாம் என்று நினைப்பவர்கள், அதை எவ்வாறு துவங்குவது என்று தெரிவதில்லை. சொந்தமா தொழில் செய்கிறேன்னு ஆரம்பிப்பார்கள்.
ஆனால் – பலரால் அதை தொடர்ந்து செயல்படுத்த முடியாமல் பாதியிலேயே விட்டு விடும் நிலைமைக்கு தள்ளப்படுகிறார்கள். இனி அந்தப் பிரச்னை இல்லை. சொந்தமா தொழில் செய்ய விரும்புபவர்களுக்கு கைக்கொடுக்க நாங்க தயாரா இருக்கோம் என்கிறார் டை அமைப்பின் நிர்வாக இயக்குனர் அகிலா ராஜேஷ்வர். ‘‘டை (TiE), அரசு சாரா தொண்டு நிறுவனம். இந்த அமைப்பை 1992ல் கலிபோர்னியாவில் உள்ள சிலிக்கான் வேலியில் துவங்கினாங்க. அந்த காலக்கட்டத்தில் சென்னையில் இருந்து பலர் வேலைக்காக அமெரிக்கா மற்றும் பல வெளிநாடுகளுக்கு செல்வது வழக்கமாக இருந்தது.
மேலும் சிலர் அங்கு சொந்தமாக தொழில் துவங்கவும் செய்தாங்க. அதில் வெற்றியும் கண்டாங்க. என்னதான் வெற்றி பெற்ற தொழிலதிபர்களாக இருந்தாலும் அவர்களும் பல சேலஞ்சுகளை சந்திக்க வேண்டி இருந்தது. அவங்களின் பிரச்னை மற்றும் தொழில் முன்னேற்றத்துக்கு கை கொடுக்க சிறிய அளவில் ஆரம்பிச்சாங்க. அப்ப துவங்கியது இப்போது, பரந்து விரிந்து உலகம் முழுதும் 17 நாடுகளில், 61 கிளைகளாக படர்ந்துள்ளது. இந்தியாவில் மட்டுமே 18 கிளைகள் உள்ளன. 17 நாடுகளில் செயல்பட்டு வந்தாலும், சர்வதேச அளவில் இந்தியாவில் குறிப்பா சென்னை கிளை செயல்பாட்டில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது’’ என்றவர் இதன் செயல்பாட்டு திட்டத்தை குறித்து விவரித்தார்.
‘‘மாதம் தோறும் ஐந்து முதல் ஆறு நிகழ்ச்சிகளை நடத்துறோம். ஒவ்வொரு நிகழ்ச்சியின் போதும், தொழில் முனைவோர்களுக்கு தேவையான விவரங்கள் மற்றும் உதவிகளை வழங்கி வருகிறோம். நாங்க முக்கியமான ஐந்து விஷயங்களை கடைப்பிடிக்கிறோம். எந்தத் தொழிலாக இருந்தாலும், அதற்கு தொடர்பு மிகவும் அவசியம். ஒவ்வொரு தொடர்புகளும் தொழிலுக்கு முக்கிய மூலதனம். எங்களின் ஒவ்வொரு நிகழ்ச்சியின் போதும் அவர்களின் தொடர்பு வட்டாரம் விரிவடையும் போது, அவர்களின் தொழிலும் வளர்ச்சியும் மேம்படும்.
இரண்டு மணி நேர நிகழ்ச்சியில் என்ன தொடர்பு கிடைக்கும்ன்னு தப்பாக எண்ணிட முடியாது. ஐந்து நிமிட உரையாடலில் கூட தொழில் முனைவோர்களுக்கு ஒரு தொடர்பு ஏற்படும். அதாவது ஒருவர் தொழில் குறித்த உதவிகளை மற்றவர் மூலம் பகிர்ந்து கொள்ள முடியும். அதே சமயம் தெரியாத விஷயங்கள் குறித்த விவரங்களையும் இதன் மூலம் தெரிந்துக் கொள்ளலாம். இரண்டாவது மென்டரிங். +2 முடித்துவிட்டு என்ன படிக்கலாம் என்று குழம்பும் மாணவர்களுக்கு ஆசிரியர் அல்லது உறவினர்கள் ஆலோசனை கூறுவார்கள். அதே போல் தொழில் முனைவோர்களுக்கும் அடுத்து என்ன செய்யலாம்ன்னு குழப்பமா இருக்கும்.
அவங்களுக்கு தங்களின் பொருளை மார்க்கெட் செய்வதில் சிக்கலாக இருக்கும். தங்களின் நிறுவனத்தை மேலும் எவ்வாறு வளர்ச்சி அடைய செய்வதிலும் குழப்பம் ஏற்படும். இப்படிப்பட்ட நேரத்தில் ஒருவர் ஆலோசனை செய்தால், குழப்பத்தில் இருந்து விடுதலை ஏற்படும். அந்த வேலையை தான் மென்டார் செய்வார். எங்க அமைப்பில் 195 பேர் மென்டராக உள்ளனர். இவர்கள் பல துறையை சார்ந்தவர்கள். பெரும்பாலானவர்கள் பெரிய நிறுவனங்களில் முக்கிய பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றவர்கள். அவங்க தான் எங்க அமைப்பின் பலமே.
தங்களின் அனுபவங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். ஒவ்வொருவரின் பிரச்னைக்கு ஏற்ப நாங்க அவங்களுக்கான மென்டரை இணைத்து விடுவோம். அடுத்து முக்கியமானது கல்வி. ஒரு தொழில் துவங்கும் முன் அது குறித்து நன்கு தெரிந்து இருக்கணும். அப்பத்தான் அதில் உள்ள நெளிவு சுளிவுகளை இவர்களால் எதிர்கொள்ள முடியும். இதற்காக நாங்க நிறைய ஒர்க்ஷாப் நடத்துறோம். நாலாவது திட்டம் இன்குபேஷன். ஒரு தொழில் எப்படி ஆரம்பிக்கலாம், அதில் உள்ள சிக்கல்கள், போட்டிகள் இப்படி பல்வேறு விஷயங்களை குறித்து ஆய்வு செய்யப்படும்.
அதன் பிறகு தான் அந்த தொழிலை துவங்குவதற்கான தெளிவு பிறக்கும். இது குறித்து நாங்க பல்வேறு கல்வி மையத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். கடைசியானது மற்றும் முக்கியமானது நிதியுதவி. டை லாப நோக்கம் இல்லாத அமைப்பு. நாங்க பண உதவி செய்வதில்லை. மாறாக நிதியுதவி வழங்கும் நிறுவனங்கள் மூலம் இவர்களுக்கு பண உதவிக்கான ஏற்பாட்டினை செய்து தருகிறோம்’’ என்றவர் வருடா வருடம் ஆயிரத்துக்கும் மேற்பட்டவரை ஒன்றாக இணைக்க பாலமாக உள்ளார். ‘‘மாதா மாதம் அமைப்பின் மூலம் நிகழ்வுகள் நடந்து வந்தாலும் அதில் 100க்கும் மேற்பட்டவர்கள் தான் கலந்துக் கொள்வார்கள்.
இதையே பெரிய அளவில் வருடத்தில் ஒரு முறை நடத்துகிறோம். தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு தொழில் முனைவோர்கள் மற்றும் மென்டார்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இதில் கலந்துக் கொண்டு தங்களின் அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்வார்கள். ஐந்து வருடங்களுக்கு முன்பு வரை எல்லாரும் ஐடி துறையில் தான் வேலைக்கு செல்வதை வழக்கமாக வைத்து இருந்தனர். கை நிறைய சம்பளம் கிடைத்தும், அதில் இருந்து பலர் வெளியே வந்து சொந்தமாக தொழில் துவங்க முன்வந்தனர்.
அவர்களுக்கும் எங்க அமைப்பு மூலம் உதவி செய்து வருகிறோம்’’ என்றவர் தங்களை இணையம் மூலம் எளிதாக அணுகலாம் என்றார். ‘‘தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து வருவதால், ஒருவரை தொடர்பு கொள்வது மிகவும் எளிதாகிவிட்டது. எங்க அமைப்பிற்கு பிரத்யேக இணையதளம் உள்ளது. அதில் எங்கள் நிகழ்ச்சி குறித்த அனைத்து விவரங்களும் அப்லோட் செய்து இருக்கோம். முகநூல் மற்றும் யுடியூபிலும் எங்களை பற்றிய விவரங்களை தெரிந்துக் கொள்ளலாம். விவரங்கள் தெரிந்துக் கொண்டு எங்களை தொடர்பு கொண்டால் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவியும் செய்துத் தரமுடியும்.
அதாவது ஒருவருக்கு தொழில் துவங்குவதற்கான திட்டம் மற்றும் திறமை இருக்கும். அவர் அது குறித்து நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் ஆலோசனை கேட்பார். அவங்களும் எந்த ஒரு மறுப்பு சொல்லாமல் ஆரம்பிக்க சொல்வாங்க. அதே நபர் எங்களிடம் வந்தால், நாங்க முதலில் கேட்பது உங்களின் பொருட்களுக்கு மார்க்கெட்டில் என்ன வரவேற்புள்ளது? அது குறித்து ஆய்வு செய்துள்ளாரா ? யாரிடம் எல்லாம் பேசினார் ? போன்ற கேள்விகளுக்கு அவர்களிடம் விடை இருக்காது. காரணம், அவர்களின் பொருளுக்கு மார்க்கெட் நிலவரம் என்னென்னு தெரியாது.
ஒரு தொழில் முனைய விரும்புபவர்களுக்கு இது குறித்து அடிப்படை விவரங்களை கொடுத்து அவர்களின் கையை பிடித்து படிப்படியாக முன்னோக்கி அழைத்து வருவது எங்களின் வேலை. ஒவ்வொரு தொழில் முனைவோரும் மனதில் நினைவு வைத்துக் கொள்ள வேண்டிய விஷயம், தங்களின் தொழிலை படிப்படியாக முன்னேறி கொண்டு வரவேண்டுமே தவிர ஆரம்பத்திலேயே அகல கால் வைக்ககூடாது. உதாரணத்துக்கு மார்க்கெட்டில் பல நிறுவனம் மசாலா பொருட்களை விற்பனை செய்கிறார்கள்.
தொழில் துவங்கும் போது நாம் இவர்களுடன் நேரடியாக போட்டி போடாமல், முதலில் நம்மை சுற்றியுள்ளவர்களை வாடிக்கையாளர்களாக மாற்றணும். நம்ம பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் தான் நம்முடைய பெஸ்ட் கிரிடிக். அவங்களின் விருப்பத்தை தெரிந்துக் கொண்டு நம் பொருட்களில் தேவையான மாற்றம் செய்து அதன் பிறகு அதை பிராண்டிங் செய்யலாம். இப்படி செய்வதால், நம்மால் மார்க்கெட்டில் அதிகநாட்கள் நிலைத்து இருக்க முடியும்’’ என்றவர் மாணவர்களையும் தொழில் முனைவோராக மாற்றும் எண்ணம் இருப்பதாக தெரிவித்தார்.
‘‘மாணவர்கள் தான் நம்முடைய எதிர்கால தூண்கள். அவர்களை நாம் சரியாக அடையாளம் காணவேண்டும். பத்து முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு சுயதொழில் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் எண்ணம் உள்ளது. ஒருவரிடம் நாம் கைக்கட்டி வேலைப் பார்ப்பதற்கு பதில் நாமே சொந்தமா தொழில் செய்யலாம். இப்போதுள்ள தலைமுறைகள் எல்லாரும் ரொம்ப ஸ்மார்ட். அவர்களை ஊக்குவித்து அவர்களுக்கான ஒரு செழிப்பான வாழ்க்கை அமைக்கும் எண்ணம் உள்ளது. அது தான் எங்களின் அடுத்த கட்ட திட்டம்’’ என்றார் அகிலா ராஜேஷ்வர்.
Average Rating