நில் கவனி மழை! (மகளிர் பக்கம்)

Read Time:13 Minute, 45 Second

எல்லோருக்கும் பிடித்தமான சீசன் எப்போதும் மழைக்காலம்தான். அதன் பசுமை, குளிர்ச்சி எல்லாம் வெயிலில் காய்ந்து கொண்டிருந்த நமக்கு இதமாக இருக்கும். ஆனால் மழைக்காலத்தின் பெரிய பிரச்னை நோய்கள். காய்ச்சல், சளி, இருமல்… நாம் சரியான முறையில் நம்மை எளிதில் பாதுகாத்துக் கொண்டால் மழைக்கால நோய்களை எளிதில் தவிர்க்க முடியும் என்கிறார் இயற்கை மற்றும் யோகா மருத்துவர் இந்திரா தேவி.

“மழை மகிழ்ச்சியான விஷயமா இருந்தாலும் உடல்ரீதியான பல பிரச்னைகளை ஏற்படுத்தும். மழைக் காலத்தில் காற்று, நீர் மற்றும் உணவு மூலம் பாக்டீரியா மற்றும் பூஞ்சைத் தொற்று நோய்கள் பரவும் வாய்ப்புகள் அதிகம். ஈரப்பதத்தால் காய்ச்சல், சளி போன்றவையும் ஏற்படலாம். மழைக்காலம் என்றாலே குழந்தை கள், முதியவர்கள், கர்ப்பிணிகள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். வரும் முன் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டால் மழைக்காலத்தை எல்லோரும் கொண்டாட முடியும்.

நோய்த்தொற்று அதிகம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் மழை நேரத்தில் சுத்தம் அவசியம். தேங்கும் மற்றும் திறந்திருக்கும் நீரில் கொசுக்கள் முட்டையிடுவதால் டெங்கு போன்ற நோய்கள் பரவும். பாத்திரங்களில் பிடித்து வைத்திருக்கும் தண்ணீரை தினமும் மாற்ற வேண்டும். அத்துடன் நீரை மூடி வைக்க வேண்டும். மழைக்காலத்தில் கொசு இனப்பெருக்கம் செய்யும். எனவே வீட்டுக்கு அருகே தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். கொசுக்கடியால் மலேரியா, டெங்கு போன்ற காய்ச்சல் வரலாம்.

கொசு வராமல் இருக்க வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். சாக்கடைகள் தேக்கம் இருந்தால் உடனடியாக அவற்றை சரி செய்ய வேண்டும். வீட்டையும் சுத்தமாக வைத்திருங்கள். குளியல் அறை மற்றும் கழிவறையையும் அவ்வப்போது சுத்தம் செய்யுங்கள். பூத்தொட்டிகளிலும் தண்ணீரை தேங்கவிடாதீர்கள். கொசுவில் இருந்து தப்பிக்க ரெப்பலண்டுகளை பயன்படுத்தலாம். இயற்கை ரெப்பலண்டுகளும் கிடைக்கின்றன. கொசு உள்ளே வராமல் தடுக்க கொசுவலைகளை பயன்படுத்தலாம். சாம்பிராணியும் போடலாம்.

மழையினால் தேங்கும் தண்ணீரில் பாக்டீரியாக்கள் உற்பத்தியாகும். குழந்தைகளை அதில் விளையாட அனுமதிக்க வேண்டாம். பொதுவாக இருக்கும் நீச்சல் குளங்களை பயன்படுத்த வேண்டாம். சுகாதாரமே அனைத்திற்குமான திறவுகோல். கைகளை அடிக்கடி கழுவி சுத்தம் செய்யுங்கள். மழைக்காலம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான காலம். தண்ணீரில் குதித்து விளையாடுவது, மழையில் நனைவது, காகித கப்பல் விடுவதுன்னு உற்சாகமா இருப்பாங்க.

இந்த சமயத்தில் அவர்களின் உடல்நிலையில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். மழையினால் தேங்கும் தண்ணீரில் பாக்டீரியாக்கள் உற்பத்தியாகும். குழந்தைகளை அதில் விளையாட அனுமதிக்க வேண்டாம். பொதுவாக இருக்கும் நீச்சல் குளங்களைப் பயன்படுத்த வேண்டாம். சுகாதாரமே அனைத்திற்குமான திறவுகோல். கைகளை அடிக்கடி கழுவி சுத்தம் செய்யுங்கள்.

உணவு விஷயத்தில் கவனிக்க வேண்டியவை

சுத்தமான சூடான தண்ணீரையே குடிக்க வேண்டும். கொதித்து ஆற வைத்த நீரை குடிக்கலாம். மழைக்காலம் வெளி உணவினை தவிர்ப்பது நல்லது. முடிந்த வரை வீட்டு உணவினை சாப்பிட பழகிக் கொள்ளுங்கள். வெளியே செல்லும் போது உணவுகளை கைவசம் எடுத்துச் சென்று விடுங்கள். தெருவில் நறுக்கி விற்கப்படும் பழங்கள், காய்கறிகளைக் கூட வாங்கி சாப்பிடாதீர்கள். ஈரப்பதம் காரணமாக அதில் பாக்டீரியாக்கள் தங்கும் வாய்ப்புள்ளதால், வயிறு பிரச்னை ஏற்படும். காய்கறிகளை சுத்தம் செய்து பயன்படுத்தவும். உணவில் மஞ்சள், இஞ்சி, பூண்டு, பட்டை, புதினா, தூதுவளை அதிகம் சேர்ப்பது நல்லது.

சமைத்த உணவுப்பொருட்களை ஈ மொய்க்காமல் எப்போதும் மூடி வைத்திருங்கள். முன்னாள் இரவு செய்த உணவுகளை சாப்பிட வேண்டாம். காலை எழுந்ததும் சூடான காபி குடிச்சா இதமா இருக்கும். காபிக்கு பதில் சுக்கு மல்லி காபி சாப்பிடலாம். இஞ்சி டீ குடிக்கலாம். மூலிகை டீ வகைகளும் குடிக்கலாம். பாட்டில் குளிர் பானங்களை தவிர்த்து ஃப்ரெஷ் ஜூஸ் வீட்டில் செய்து சாப்பிடலாம். குளிர்ச்சியான பொருட்களை தவிர்த்துவிடுங்கள்.

மழை நேரத்தில் சிலருக்கு அஜீரணக் கோளாறுகள் ஏற்படுவதுண்டு. எனவே அசைவ உணவுகளை தவிர்த்து விட்டு சூப் போல செய்து சாப்பிடலாம். இந்த சமயத்தில் சளி, இருமல், காய்ச்சல் ஏற்படும். அதற்கு எதிர்ப்பு சக்தி அவசியம். ஆரோக்கியமான பேலன்ஸ்டு உணவுகள் கட்டாயம் சாப்பிட வேண்டும். உணவில் பச்சை காய்கறிகள், பாகற்காய் போன்றவற்றை சேர்த்துக் கொள்வது அவசியம். தூதுவளை துவையல், சூடான மிளகு ரசம் போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுவது நல்லது. துளசி, மிளகு, இஞ்சி சேர்த்து கசாயம் வைத்துக் குடிப்பது, கற்பூரவல்லிச்சாறு குடிப்பது போன்றவை சளிக்கு நல்லது.

இரவு நேரங்களில் பசும் பாலில் 4 பல் பூண்டு, மிளகு, மஞ்சள் போட்டு காய்ச்சி ஒரு டம்ளர் குடிக்கலாம். ஆஸ்துமா, வீஸிங் போன்ற பிரச்னைகள் குறையும். மழைக்காலத்தில் குளிர்ச்சியினால் பலர் சரியாக தண்ணீர் அருந்த மாட்டார்கள். கட்டாயம் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ஒரு நாளுக்கு 10 முதல் 12 டம்ளர் தண்ணீராவது குடியுங்கள். சூப் வகைகள், ஃப்ரெஷ்ஷான பழங்கள் சாப்பிடலாம். வைட்டமின் ‘சி’ அதிகமுள்ள அதாவது ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்த பழங்கள் சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வாரத்தில் இரு முறை நிலவேம்பு கசாயம் அல்லது பப்பாளிச் சாறு 30 மிலி அளவு அருந்தலாம். பிள்ளைகளுக்கு கால் டம்ளர் அளவு கொடுக்கலாம்.

உடல் மற்றும் உடை விஷயத்தில் கவனிக்க வேண்டியவை

பிறந்த குழந்தைகளுக்கு காதுகளை மூடும் படி கேப் போட்டு வைக்க வேண்டும். குளிர் தாக்காதவாறு கால்களில் சாக்ஸ் போட்டு வைக்க வேண்டும். உடைகள் ஈரமானால் உடனுக்குடன் மாற்ற வேண்டும். அயர்ன் செய்த ஆடைகளை அணிவிப்பது நல்லது. குழந்தைகளை சுத்தமாகவும் உலர்வாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளை எப்போதும் கதகதப்பாக வைத்திருங்கள். ஏஸி போடாதீர்கள். எல்லாருமே சூடான தண்ணீரில் குளிக்கலாம். வெளியே செல்லும் போது பிள்ளை களுக்கு ஸ்கார்ப் கட்டிவிடுங்கள். பள்ளிக்கு யூனிஃபார்மின் மீது ஸ்வெட்டர் போட்டு அனுப்பலாம்.

பிள்ளைகளின் பையில் மழை கோட் எப்போதும் வைத்து அனுப்புங்கள். பெரியவர்களும் மழை கோட் அல்லது குடை எடுத்துக்கொண்டு வெளியேச் செல்வது நல்லது. பிள்ளைகளின் விளையாட்டுப் பொருட்களையும் ஈரமில்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மழையில் நனைந்துவிட்டால் வீட்டுக்கு வந்தவுடன் குளித்து உலர்ந்த ஆடைகளை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் சருமத்தில் ஃபங்கஸ் பிரச்னை ஏற்படும் வாய்ப்புண்டு.

துணிகளை உலர வைக்க வெயில் வரவில்லை என்றால் துணிகளை இஸ்திரி போட்டு வெதுவெதுப்பாக அணிந்து கொள்ளலாம். வெளியில் சென்றுவிட்டு வந்தால் கை, கால்களை கழுவ வேண்டும். கால்கள் ஈரமில்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் சேற்றுப்புண் போன்ற தொந்தரவுகள் வரலாம். வெறும் கால்களோடு வெளியே செல்ல வேண்டாம். மழையில் ரப்பர் செருப்புகள் அணிந்தும் வெளியே செல்ல வேண்டாம். சேறு இருக்கும் இடங்களில் வழுக்கி கீழே விழ நேரிடும். சாதாரண காலணிகளை அணிந்து செல்லுங்கள்.

லெதர் ஷூக்கள் போட வேண்டாம். சிந்தடிக் காலணிகளை பயன்படுத்தலாம். பிலிப் லாக் காலணிகள், கம் பூட்ஸ் இதெல்லாம் போடலாம். இவை காற்றோட்டமாக இருக்கும். தரையில் குளிர்ச்சி அதிகமிருக்கும் நேரத்தில் வீட்டினுள்ளே (அதற்கென்று பிரத்யேகமாக உள்ள) செருப்புகளை அணியலாம். கர்ப்பிணி பெண்கள் வெயில் காலத்தில் மட்டுமல்ல, மழைக்காலத்திலும் இறுக்கமான ஆடைகள் அணியக்கூடாது. உங்களுக்கு வசதியான அதே சமயம் கொஞ்சம் தளர்வான பருத்தி ஆடைகளை அணியலாம். குளிரான சமயங்களில் வெதுவெதுப்பான ஆடைகளை அணிந்து கொள்ளலாம். சிந்தடிக், நைலான் போன்ற ஆடைகள் வேண்டாம்.

கர்ப்பிணிகள் மழையில் தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம். அப்படியே செல்ல நேர்ந்தால் ரெயின் கோட், குடை போன்றவற்றை கைவசம் வைத்திருக்க வேண்டும். ஒரு வேளை மழையில் நனைந்து வீட்டுக்கு வந்தால் உடனே குளிக்க வேண்டும். பின் தலையை உடம்பை நன்கு துவட்டி உலர விட வேண்டும். முடிந்த வரை கை கால்களை ஆன்டிசெப்டிக் போட்டு கழுவ வேண்டும். மழையில் நனைந்த துணிகளை டிட்டெர்ஜென்டில் துவைத்து டெட்டால் போட்டு அலசி நன்கு காய வைத்து பயன்படுத்த வேண்டும்.

தலையில் நீர்க்கோர்த்திருந்தால் நீலகிரி தைலம் அல்லது நொச்சி இலைகளைப் போட்டு ஆவி பிடிக்கலாம். சைனஸ் மற்றும் தலைவலி பிரச்னைகள் குறையும். காய்ச்சல் வந்தால் நெற்றி மற்றும் வயிற்றுப் பகுதியில் ஈரத் துணிப் போட்டு எடுத்தால் உடலின் வெப்ப நிலை குறையும். சூடான கஞ்சி அல்லது கரைத்த ரசம் சாதம் போன்றவற்றை உண்ணக் கொடுக்கலாம். மழைக்காலத்தில் கைவசம் காய்ச்சல் மருந்து, சளி மருந்து போன்ற அடிப்படை மருந்துகளை வீட்டில் வைத்திருத்தல் மிக அவசியம்.’’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இடையே…இடையிடையே…!! (அவ்வப்போது கிளாமர்)
Next post ஜெனீவாவை நோக்கிய ‘மறப்போம் மன்னிப்போம்’!! (கட்டுரை)