இலங்கை தமிழ் தலைவர்கள் மூவர் தில்லி வருகை -இந்திய அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை

Read Time:3 Minute, 54 Second

000021.gifஇலங்கை தமிழ் அரசியல்வாதிகள் மூவர் தில்லிக்கு வந்து இந்திய அரசின் ஆலோசனைகளைப் பெற்றுச் செல்லவுள்ளனர். இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் (எல்டிடிஇ), இலங்கை அரசுக்கும் இடையில் மீண்டும் அமைதிப் பேச்சைத் தொடங்குவதற்கான வழிவகைகளை ஆராயும் நோக்கில் இம்மூவர் குழு வருகிறது. தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணியின் (டியூஎல்எப்) வி. அனந்தசங்கரீ, தமிழ் ஈழ மக்கள் விடுதலை அமைப்பின் (பிளாட்) டி. சித்தார்த்தன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈபிஆர்எல்எப்) டி. ஸ்ரீதரன் ஆகிய மூவரும் திங்கள்கிழமை தில்லிக்கு வந்து இலங்கையின் தற்போதைய நிலவரம் குறித்து இந்திய மூத்த அதிகாரிகளுடன் விவாதிக்க உள்ளனர்.

இம்மூவரும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிரானவர்கள். இதில் அனந்தசங்கரியும், சித்தார்த்தனும் முன்னாள் எம்.பி.க்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இம்மூவரைத் தொடர்ந்து புத்த பிக்குகள் கட்சியைச் சேர்ந்த (ஜெஎச்யு) பிரதிநிதிகள் குழுவுடனும் இந்திய அரசு தகவல்களை கேட்டறியும்.

தமிழீழம் கோரும் விடுதலைப் புலிகளுக்கும், தமிழர்களுடன் ஆட்சி, அதிகாரத்தை பங்குகொள்வதை உறுதியாக எதிர்க்கும் சிங்களர்களுக்கும் இடையிலான இனப் பிரச்சினை பல்லாண்டுகளாக இருந்து வருகிறது.

கடந்த ஜூலை முதல் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்தினருக்கும் இடையிலான சண்டையில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் இருந்து 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் புகலிடம் தேடி பிற பகுதிகளுக்குச் சென்றுவிட்டனர். இதில் ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக தமிழகம் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

புலிகள்-இலங்கை அரசுக்கு இடையே நார்வே தலைமையிலான தூதுக்குழு சமாதான முயற்சியில் ஈடுபட்டு வந்தாலும், இவ்விஷயத்தில் இந்தியாவால் ஒரு தீர்வைத் தர முடியும் என்று இலங்கைத் தமிழ் அமைப்புகள் பலவும் கருதுகின்றன. இருப்பினும் இந்திய அரசிடம் இருந்து எந்த மாதிரியான தீர்வை எதிர்பார்க்கிறார்கள் என தெரியவில்லை.

இந்நிலையில், “விடுதலைப் புலிகள் நீண்ட கால உடன்படிக்கை குறித்து தீவிரமாக இருக்க மாட்டார்கள். இலங்கையைத் துண்டித்து தனி ஈழம் காணவே விரும்புவார்கள்’ என்ற அச்சமும் இலங்கை அரசுக்கு உள்ளது.

இப்பிரச்சினையில் இந்தியாவுக்கு இக்கட்டான நிலை. “இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கும் குந்தகம் விளையக்கூடாது, அதேவேளையில் தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட வேண்டும்’ என்பதில் உறுதியாக இருக்க வேண்டிய நிலைமை இந்தியாவுக்கு.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மிகவிரைவில் மீண்டும் அதிரடி.கொம் (www.athirady.com)
Next post அரசின் சமாதான பேச்சுக்கான நிபந்தனைகளுக்கு பிரபாகரன் இணங்கமாட்டார்