சட்டமும் கருணையும்!! (கட்டுரை)
இன, மதம்சார் தொல்பொருட்களும் அடையாளங்களும், அந்த இனத்தின் அல்லது மதத்தைப் பின்பற்றும் மக்கள் கூட்டத்தின் வரலாற்றை, அடுத்த சந்ததிக்குக் கொண்டுக் கடத்திச் செல்பவையாகும். ஒரு மதப் பிரிவினர், அவ்விடத்தில் வாழ்ந்ததற்கான எச்சமாகக் காணப்படுகின்றமையால், அவை, பாதுகாக்கப்பட வேண்டியவை என்பதில், இருவேறு கருத்துகள் கிடையாது.
ஆனாலும், இலங்கையைப் பொறுத்தமட்டில், எல்லா மதங்களின் தொன்மையான அடையாளங்களையும் பேணிப் பாதுகாப்பதற்கு, சமஅளவான முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது என்று கூற முடியாத அளவுக்கு, நடைமுறை யதார்த்தம் இருக்கின்றது.
அந்த வகையில், அநுராதபுரம் ஹொரவப்பொத்தானைப் பகுதியிலுள்ள கிராகல பௌத்த தொல்பொருள் தூபியின் மீது ஏறி நின்று புகைப்படம் எடுத்தார்கள் என்றக் குற்றச்சாட்டின்பேரில், தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள விவகாரமும் இங்கு பேசப்பட வேண்டியதாகிறது.
பல்கலைக்கழகம் என்பது, பலவிதமான கலைகளையும் கற்கின்ற அறிவுக்கூடமாகும். எனவே, ஒரு சாதாரண பொது மகனைப் போல, பல்கலைக்கழக மாணவர்கள் நடந்து கொள்ள இயலாது. ஏனைய மதங்களின் அடையாளங்களைக் கௌரவப்படுத்துவதும் முன்மாதிரியாகச் செயற்படுவதும் அவசியமாகும். அந்த அடிப்படையில் நோக்கினால், இந்த மாணவர்கள் சிறிய தவறு செய்திருக்கின்றார்கள் என்றே சொல்ல வேண்டும். ஆனால், அது ஒரு ‘பெரும் குற்றமா?’ என்பதுதான், நம்முன் இன்று எழுந்துள்ள கேள்வியாகும்.
இலங்கையில், புராதன சின்னங்களைக் கௌரவிக்கத் தவறிய குற்றச்சாட்டில், பலர் கைது செய்யப்பட்டச் சம்பவங்கள், இதற்கு முன்னரும் இடம்பெற்றிருக்கின்றன. சீகிரியக் குன்றின் குகை ஓவியங்களுக்கு அருகில் கிறுக்கிய தமிழ் மாணவி ஒருவர், சில வருடங்களுக்கு முன்னர், பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அநுராதபுரத்திலுள்ள பௌத்த பாரம்பரியத்துடன் தொடர்புடைய மலைக் குன்றின் மீது, நிர்வாணமாக புகைப்படம் எடுத்தமைக்காக, பெரும்பான்மையின இளைஞர்கள் கைது செய்யப்பட்ட சம்பவமும், சில மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்றது. இப்போது, கிராகல தூபி மீது ஏறி நின்று புகைப்படம் எடுத்தமைக்காக, தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில், இஸ்லாமிய பள்ளிவாசல்கள், இந்துக் கோவில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள் அல்லது மேற்படி மதக் குழுமங்களின் புராதன அடையாளங்களின் கௌரவம், இந்தளவுக்கு பாதுகாக்கப்படுவதில்லை என்பதெல்லாம் ஒருபுறமிருக்க, கிராகல தூபி மீதோ அல்லது பௌத்த புராதன சின்னம் ஒன்றின் மீதோ, முதன்முதலாக ஏறி புகைப்படம் எடுத்தவர்கள், இந்தப் பல்கலைக்கழக மாணவர்கள் அல்லர். புத்தபெருமானின் கௌரவத்தையும் பௌத்த சின்னங்களின் மதிப்பையும் குறைவடையச் செய்யும் விதத்தில், சில பெரும்பான்மைச் சமூக இளைஞர், யுவதிகளே, அச்சின்னங்களுக்கு முன்னால் நின்று எடுத்த புகைப்படங்கள், சமூக வலைத்தளங்களில் தாராளமாகக் கிடைக்கின்றன.
அதற்காக, தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் செய்தது சரி என்று சொல்ல வரவில்லை. அது, ஒரு மன்னிக்க முடியாத குற்றமா என்பதையும் இதற்குப் பின்னால் வேறு நோக்கங்கள் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகின்ற விடயத்தையும் இங்கு கவனித்தில் எடுக்க வேண்டியுள்ளது.
குறிப்பாக, இந்தப் புகைப்படங்கள், சுமார் ஒரு வருடத்துக்கு முன்னர் எடுக்கப்பட்டு, அப்போதே, பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டதாக அறியக் கிடைக்கின்றது. பேஸ்புக்கிலுள்ள பதிவுகள், காலவோட்டத்தில் புதுப்புது பதிவுகள் வரும்போது மறைவாகச் சென்று விடும் என்பது நமக்கு தெரியும். அப்படியாயின், இந்த விவகாரம், பெரும்பான்மை இளைஞர்கள், போலி பேஸ்புக் கணக்குகளினூடாகவும், ஒருசில பெரும்பான்மை ஊடகங்களினூடாகவும், கடந்த இருவாரங்களுக்கு முன்னர் ஒரே நேரத்தில், சொல்லி வைத்தாற்போல் வெளிப்படுத்தப்பட்டமை, பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக, இதுபற்றி அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
யாழ்ப்பாணம், கிழக்கு பல்லைக்கழகங்களைப் போலவே, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திலும், பெரும்பான்மை மாணவர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாக, சமூக ஆர்வலர்கள் கரிசனை கொண்டுள்ள இன்றைய காலகட்டத்தில், சந்தேகத்தில் கைது செய்யப்பட்டோரில், திறமையான ஓரிரு மாணவர்களை இலக்கு வைத்து தாக்குவதற்கான ஆயுதமாக, இப்பழைய புகைப்படங்கள் கிண்டி வெளியில் எடுக்கப்பட்டுள்ளனவா என்ற கோணத்திலும், இது நோக்கப்படுகின்றது.
எவ்வாறிருப்பினும் முஸ்லிம்கள் பக்கத்தில் இருந்தே இதற்கான ‘துருப்புச் சீட்டு’ கொடுக்கப்பட்டிருக்கின்றது என்பதை ஏற்றுக் கொண்டாக வேண்டும். எந்த அடிப்படையிலோ அரசாங்கத்துக்குக் கொடுக்கப்பட்ட அழுத்தத்தைக் கருத்திற் கொண்டு, சட்டத்தை அமுல்படுத்தும் வகையில் மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டத்தரணிகளின் ஆலோசனையை மீறி, திரும்பி வந்துவிடலாம் என்ற நம்பிக்கையில் பொலிஸுக்குச் சென்ற மாணவர்களுக்கு விளக்கமறியல் வழங்கப்பட்டிருக்கின்றது.
இப்போது அந்த மாணவர்களுக்கு, சட்டத்தால் விடுதலையோ அன்றேல் ஜனாதிபதியால் பொது மன்னிப்போ வழங்குவது பற்றி பேசப்படுகின்றது. இந்த மாணவர்கள், தெரியாத் தனமாக, இதைச் செய்து விட்டதாகக் குறிப்பிட்டும், அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட வேண்டுமென்றும் தென்கிழக்கு மாணவர் சமூகம் உள்ளடங்கலாக, பல தரப்பிலும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், இப்பத்திக்கு அருகே குறிப்பிடப்பட்டுள்ள வைத்தியரான கே.சுகுணன் போன்ற முற்போக்காளர்களின் கருத்தும் கவனிப்பைப் பெற்றிருக்கின்றது. இந்நிலையில் மக்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்றவரான அமைச்சர் சஜித் பிரேமதாஸ வெளியிட்டதாகச் சொல்லப்படும் கருத்துகள் மக்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
துறைசார் அறிவும், உலகில் நடக்கின்ற எல்லா விடயங்களையும் அறிந்திருக்கின்ற இளைஞர்கள், பௌத்த புராதன சின்னத்தை மதிக்க வேண்டும் என்பதை மட்டும் அறியாதிருந்திருக்கின்றார்கள் என்பதை, தர்க்க ரீதியாக ஏற்க முடியாது என்று ஒரு கருத்தும் இருக்கின்றது. அது, ஒருவிதத்தில் உண்மைதான்.
ஆனால், அவ்விடத்தில் அறிவித்தல் பலகை எதுவும் இல்லாத காரணத்தால் அல்லது வேறுயாரும் ஏறிநின்று புகைப்படம் எடுப்பதைப் பார்த்து, மாணவர்கள் சிதைவடைந்த கிராகல தூபி மீது ஏறி புகைப்படம் எடுத்திருக்கலாம். அசட்டைத்தனத்தாலும் நம்மை என்ன செய்துவிட முடியும் என்ற நினைப்பிலும் கூட, அவ்வாறு நடந்திருக்க வாய்ப்பிருக்கின்றது.
ஆனால், சட்டத்தின்படி இது குற்றமாகினும் பொதுவாக நாட்டில் இடம்பெறுகின்ற பெருங்குற்றங்கள், ஏனைய மத அடையாளங்கள் நிந்திக்கப்படுகின்றச் சம்பவங்களைப் பார்க்கும் போது, இதுவெல்லாம் ஒப்பீட்டளவில் ஒரு பாரிய தண்டனைக்குரிய குற்றங்களாகக் கணக்கிலெடுக்கும் தரமற்றதாகவே பலருக்கும் தோன்றுகின்றது.
ஊடகவியலாளர்கள் கொலை, காணாமல் போனமை, பாரிய நிதி மோசடி, விளையாட்டு வீரர் படுகொலை, பகிரங்கப் படுகொலைகள், வன்புணர்வு, நேரடியான இனவாத நெருக்குவாரங்கள் போன்ற பென்னம்பெரிய விவகாரங்கள் விடயத்தில் சட்டத்தின் அமுலாக்கம் பாரபட்சமானதாக, மெத்தனமாக இருப்பதாக தோன்றுவதும் உண்டு.
பௌத்த மதச் சின்னங்களும் புராதன தொல்பொருட்களும் பாதுகாக்கப்படவும் மதிப்பளிக்கப்படவும் வேண்டும். அப்படியென்றால், ஏனைய மதங்களுக்கும் அந்த மதிப்பு வழங்கப்பட வேண்டும் என்பதை யாரேனும் மறுத்துரைக்க முடியுமா? அவ்வாறு பார்த்தால், நிறைய சம்பவங்களை இங்கு சுட்டிக்காட்ட முடியும்.
திகண, அம்பாறையில் இனக் கலவரங்களின் போது மட்டுமன்றி, கடந்த பல வருடங்களாக அங்குமிங்கும் இடம்பெற்றுவருகின்ற முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத முன்னெடுப்புக்களின் ஒரு அங்கமாக, எத்தனையோ பள்ளிவாசல்கள், மத்ரசாக்கள், முஸ்லிம்களின் தொன்மையை உணர்த்தும் தலங்கள் சேதமாக்கப்பட்டன. அவற்றின் கௌரவம் கேலிக்குள்ளாக்கப்பட்டது.
அதற்கு முன்னதாக, பள்ளிவாசல்களுக்குள் ஆயுததாரிகள் புகுந்து படுகொலைகளை நிகழ்த்தியதும் பௌத்த தலங்களைத் தாக்குதல்களுக்கு இலக்காக்கியதையும் இந்துக் கோவில்களினதும் கிறிஸ்தவ தேவாலங்களினதும் புனிதம் கெடுக்கப்பட்டதையும் நாம் இன்னும் மறந்துவிடவில்லை. இப்பேர்ப்பட்ட பல சம்பவங்களுக்கு, அநுராதபுரத்தில் பல்கலை மாணவர்கள் எடுத்த புகைப்படத்தை விட பலமான ஆதாரங்கள் கிடைத்தன.
ஆனால், சட்டம் ஏன் தனது கடமையை இந்தளவுக்கு கடமையுணர்ச்சியுடன் மேற்கொள்ளாமல் விட்டது என்பதற்கான பதில் நாம் அறியாததல்ல.
நாட்டின் சட்டமும் உரிமையும் எல்லோருக்கும் சமமானதாக இருக்க வேண்டும். அது எழுத்தில் இருந்தால் மட்டும் போதாது. நடைமுறையில் மக்கள் உணரும்படி அமுல்படுத்தப்பட வேண்டும். முஸ்லிம், தமிழர், சிங்களவர் என்ற எந்த பாகுபாடுமின்றி சட்டமும் நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும்.
நாட்டில் பெரும் பெரும் குற்றமிழைத்தோர் என அரசியல்வாதிகளால் குற்றம் சுமத்தப்படுகின்றவர்கள், மக்களால் சந்தேகிக்கப்படுகின்றவர்கள் கைது செய்யப்படாதிருக்கின்றனர். அமித் வீரசிங்க போன்றோர் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குவது பற்றியும் அரசாங்கம் பரிசீலிப்பதாக தெரிகின்றது.
இந்நிலையில், தூபி மீது நின்று சாதாரண புகைப்படம் எடுத்த மாணவர்களுக்கு மன்னிப்பு அளிக்கப்படுவது செய்யக்கூடாத ஒரு காரியம் என்று யாரும் சொல்ல இயலாது. ஏனெனில் சட்டத்தின் நோக்கம் திருத்துவது என்றால், கருணை மூலமான மன்னிப்பும் கூட அப் பணியைச் செய்யலாம்.
தமிழ் வைத்தியரின் முற்போக்கு கருத்து
புராதன பௌத்த தூபி மீது நின்று புகைப்படம் எடுத்தமைக்காக பல்கலை மாணவர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பில், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வைத்தியசாலை ஒன்றில் வைத்திய அத்தியட்சகராக கடமையாற்றும் வைத்தியரும் முற்போக்கு செயற்பாட்டாளருமான குணசிங்கம் சுகுணன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள கருத்து, முஸ்லிம்கள் மத்தியில் நன்றியுணர்வுடன் சிலாகித்துப் பார்க்கப்படுகின்றது. தொழில்வாண்மையாளர் என்ற ரீதியில் அவருடைய முற்போக்கான கருத்து கவனிக்கப்பட வேண்டியதும் கூட.
அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:
“பௌத்த அடையாளம் ஒன்றின் மீது சப்பாத்து காலுடன் ஏறிநின்று அவமதித்தார்கள் என்ற அடிப்படையில், அவர்களாகவே முகநூலில் தரவேற்றிய புகைப்படம் ஒன்றை ஆதாரமாக வைத்து கைது செய்துள்ளீர்கள்.
இது, சுற்றுலா சென்ற மாணவர்கள் அறியாது விட்ட தவறு.
கடந்த காலத்தில் தமிழ் சிறுமி ஒருவர் சிகிரியா குன்றில் எழுதியதாக குற்றம்சாட்டப்பட்ட போது முதன்முதலில் குரல்கொடுத்தவர்கள் முஸ்லிம் மக்களே.
எமது கோவில்களுக்குள் சப்பாத்து கால்கள் எத்தனை தடவை பதிந்துள்ளன? பள்ளிகளும் கோவில்களும் எத்தனை தடவை நாசமாக்கப்பட்டுள்ளன? இன்றுவரை எத்தனை முஸ்லிம் வியாபார தலங்கள் அறியாக் காரணங்களால் எரிந்து கொண்டிருக்கின்றன. கண்டுபிடித்தீர்களா?
மாணவர்களை நெறிப்படுத்த வேண்டுமேயன்றி அவர்களின் ரோச உணர்வுகளை உரசி தீவிர எண்ணங்களை விதைத்துவிடாதீர்கள். மனிதன், மாணவன் என்று நடவுங்கள்.
ஜனாதிபதியின் இணையத்தை ஊடுருவிய சிங்கள மாணவனுக்கு விருது வழங்கி கௌரவித்தவர்கள் நீங்கள். எனவே விட்டுவிடுங்கள் இவர்களை! அவர்கள் இலங்கையன் என்ற மனநிலையோடு வாழட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு மாணவர் சமூகத்தின் கோரிக்கை
இக்கைது தொடர்பில் தென்கிழக்கு மாணவர்கள் சார்பில் கோரிக்கையென்று பகிரங்கமாக முன்வைக்கப்பட்டுள்ளது.
“நாம் இலங்கையர்கள், இலங்கை எம் தாய் நாடு. நாம் நமது நாட்டை அளவுகடந்து நேசிக்கின்றோம். அதுமட்டுமன்றி இலங்கை திருநாட்டின் அனைத்து கலாசாரங்களையும் மதிக்கின்றோம். பல்கலைக்கழக இளம் சமுதாயமாகிய எமக்கு பிற கலாசாரங்களை அவமதிக்க வேண்டும் என்ற எண்ணம் கடுகளவும் இல்லை.
இத்தவறு, எமது சகோதர மாணவர்கள் அறிந்து செய்ததல்ல. எனவே, அவர்களின் எதிர்கால நலன்கருதி பொதுமன்னிப்பு வழங்குமாறு வேண்டி நிற்கின்றோம்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Average Rating