சம்பந்தனுக்குப் பின்னரான தலைமைத்துவ வெற்றிடம்!! (கட்டுரை)
இரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது.
அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக, அரசியல்வாதியாக இருக்கும் அவர், விடுதலைப் புலிகளுக்குப் பின்னரான கடந்த பத்து ஆண்டுகளை, தமிழ்த் தேசிய அரசியலில் முடிவுகளை எடுக்கும் தலைவராகக் கடந்திருக்கின்றார்.
அவர் தலைமையில் எடுக்கப்பட்ட முடிவுகளில், நல்லது, கெட்டது சார்ந்து, பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாடோடும் இருக்கின்றார்.
இன்னொரு பக்கத்தில், சம்பந்தனால் அரசியலுக்கு அழைத்துவரப்பட்ட சி.வி. விக்னேஸ்வரன், கடந்த வருடம் தன்னுடைய 79ஆவது பிறந்த தினத்தில், புதிய கட்சியை ஆரம்பித்திருக்கின்றார்.
தமிழ்த் தேசிய அரசியலை, கூட்டமைப்பு தவறாக வழிநடத்துவதாகக் கூறி, மாற்று அணிக்கான கோரிக்கையை முன்வைத்தவர்களின் குரல்களுக்குச் செவிசாய்த்தே, அவர் புதிய கட்சியை ஆரம்பித்திருக்கின்றார்.
தமிழ்த் தேசிய அரசியலின் தலைமைத்துவத்தை, வயதிலும் உடலளவிலும் மூப்படைந்துவிட்ட சம்பந்தனிடம் இருந்து மீட்டு, வயதிலும் உடலளவிலும் மூப்படைந்துவிட்ட இன்னொருவரான விக்னேஸ்வரனிடம் கையளிக்க வேண்டும் என்கிற சிந்தை மேலோக்கி இருக்கின்றது.
இந்தச் சிந்தை, சமானிய மக்களிடம் கேள்விக்குள்ளாக்கப்படும் அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் அதைச் சாக்குப் போக்குச் சொல்லிக் கடக்கும் உத்தியை, அரசியல் கருத்தியலாளர்களும் புலமையாளர்கள் என்று தம்மை வரையறுக்கும் தரப்பும் செய்து வருகின்றன.
அத்தோடு, தேர்தல் அரசியலில் தோல்வியடைந்துவிட்ட தரப்புகள், வெற்றிக்கான கருவியாக விக்னேஸ்வரனை முன்வைக்கத் தலைப்படுவதன் போக்கில் கடக்கின்றன. உண்மையில், இந்த நிலை ஆரோக்கியமானதா என்கிற கேள்வி, தமிழ்த் தேசியப் பரப்புக்குள் நியாயமான உணர்வோடு எழுப்பப்பட வேண்டும்? குறுகிய இலாபங்களை மாத்திரம் இலக்காக்கிக் கொண்டு, முக்கியமான விடயங்களை ஒட்டுமொத்தமாகக் கடக்க முடியாது.
முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னரான கடந்த பத்து ஆண்டுகளில், சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய அரசியலில் குறைநிரப்புத் தரப்பாகச் செயற்படுவதாக, இந்தப் பத்தியாளர் தொடர்ந்தும் எழுதி வருகிறார்.
கூட்டமைப்பு, தேர்தல்களில் அமோக வெற்றியை, (சில நேரங்களில் ஏக நிலைக்கு அண்மித்த வெற்றியை) பெற்ற போதிலும் கூட, தன்னைத் தனித்தரப்பாக நிலைநிறுத்துவதற்கான கட்டங்களை, முழுமையாகக் கடந்திருக்கவில்லை.
ஆயுதப் போராட்ட அமைப்பொன்று, மக்களிடம் பெற்றிருந்த ஆதரவையோ, அது செலுத்தும் ஆளுமையையோ, தேர்தல் ரீதியான அமைப்பொன்று பெற்றுக்கொள்ள முடியாது என்கிற விடயம் கவனத்தில் கொள்ளப்படக்கூடியது. ஆனாலும், தன்னுடைய அரசியல் நிலைப்பாடுகள் சார்ந்து, மக்களிடம் தெளிவான நிலையை ஏற்படுத்துவதைவிடுத்து, குழப்பகரமான கட்டத்தையே கூட்டமைப்பு இன்றுவரை வைத்துக் கொண்டிருக்கின்றது. அதுதான், தீர்க்கமான அரசியல் தலைமைத்துவம் சார்ந்த பரப்பு, தமிழ்த் தேசிய அரசியலில் வெற்றிடமாகவே இருப்பதற்கு காரணமாகும்.
அரசியல் உரிமைகளைப் பிரதானமாகக் கொண்டு போராடிக்கொண்டிருக்கும் சமூகத்தில் நிகழும், சடுதியான தலைமைத்துவ மாற்றம் என்பது, அனைத்துத் தரப்பாலும் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட முடியாதுதான். ஆனால், பத்து வருடங்களில் தீர்க்கமான தலைமைத்துவத்தை அல்லது, அந்த வெளியை நிரப்புவதற்கான கட்டம் என்பது, எந்தவித முன்னேற்றமும் இன்றி குழப்பமாகவே இருக்கின்றது என்பது, மிகவும் சிக்கலானது.
அத்தோடு, அந்தக் குழப்பத்தை இன்னும் குழப்பமாக்கும் தன்மையுள்ள ஒருவரை, தலைமைத்துவ வெளிக்குப் பிரேரிக்கும் தன்மை என்பது, அரசியல் அறிவு சார்ந்ததா? என்கிற கேள்வியையும் எழுப்புகின்றது.
யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சம்பந்தனையும் விக்னேஸ்வரனையும் கடந்து, அடுத்த தலைமுறை, அரசியல் தலைமைத்துவத்துக்குள் செல்ல வேண்டிய கடப்பாட்டைக் காலம், தமிழ் மக்கள் மீது சுமத்துகின்றது. அந்தத் தலைமைத்துவத்தைத் தேர்தல் அரசியல் வழியாகத் தேடும் கட்டமொன்றும் இன்றைக்கு ஏற்பட்டிருக்கின்றது.
ஏனெனில், மக்கள் போராட்டங்களின் வழியாக, ஜனவசியம் மிக்க தலைவர்கள் உருவாகுவதற்கான அவகாசம், தற்போதைக்கு இல்லை என்கிற உணர்நிலை ஏற்பட்டுவிட்டது. யாராவது ஒருவரை, இவர்தான் சர்வ வல்லமை பெற்றவர் என்று, யாழ். மய்யவாத அரசியல் அரங்கு முன்வைக்கும் போது, அதைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பது சார்ந்த கட்டத்தில்தான், தமிழ்த் தேசிய அரசியலின் இன்றைய களம் இருக்கின்றது.
அத்தோடு, ஊடகங்களில் யாரை முன்னிறுத்திக் கொண்டு விவாதங்கள் எழுகின்றதோ அவர்தான், அடுத்த ஆளுமை என்கிற கட்டமும் மக்களின் மனதில் ஒரு வடிவில் திணிக்கப்பட்டுவிட்டது.
சாதாரண மக்களில் இருந்து ‘தலைவன் ஒருவன்’ உருவாகுவதற்கான கட்டம் கடந்துவிட்டதாக, அரசியல் கட்சிகள் மாத்திரமல்ல, அரசியல் எழுத்தாளர்களும் பேரவை போன்ற அமைப்புகளும் தொடர்ச்சியாகச் சொல்லி வருகின்றன.
இதனால், அரசியல் தலைமைத்துவம் என்பது, பிரமுகர் சார்ந்த ஒன்று என்கிற நிலை உருவாகிவிட்டது. இது, தமிழ்த் தேசிய அரசியலைத் தாங்கி நிற்கின்ற மக்களுக்கும் தலைமைத்துவத்துக்குமான இடைவெளியை அதிகப்படுத்தி விட்டது. என்றைக்குமே அரசியல் தலைமைத்துவம் என்பது, மக்களோடு பயணிக்க வேண்டியது.
அதுவும், அரசியல் உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கின்ற சமூகத்தின் தலைமைத்துவம் என்பது, சமூகத்தின் உணர்வுகளை இரத்தமும் சதையுமாகப் புரிந்துகொள்ளக்கூடிய தன்மைகளோடு இருக்க வேண்டியது.
இன்றைக்கு கட்சிகளின் தலைமையை மாத்திரமல்ல, பிரமுகர் அமைப்புகளின் உறுப்பினர்களையே சாதாரண மக்கள் அணுகுவதற்கான வெளி என்பது, நெருக்கடியானதாக மாறிவிட்டது. இவ்வாறான நிலையில் நின்றுகொண்டுதான், புதிய தலைமைத்துவம், மாற்றுத் தலைமை என்கிற விடயங்கள் பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருக்கின்றோம்.
கூட்டமைப்பு என்பது, மெல்ல மெல்லக் கரைந்து, தமிழரசுக் கட்சி என்கிற ஒன்றைக்கட்சி நிலைக்குக் கிட்டத்தட்ட வந்துவிட்டது. டெலோவும் புளொட்டும் தேர்தல் காலக் கூட்டாகவே, கணக்கில் கொள்ளப்படுகின்றன. கூட்டமைப்பு தொடர்பான முடிவுகளை எடுக்கும் கட்டத்தில், டொலோவையும் புளோட்டையும் சம்பந்தனோ, தமிழரசுக் கட்சியினரோ அவ்வளவாகக் கருத்தில் எடுப்பதில்லை.
தமக்கு எதிரான அணியொன்று, பலமாக உருவாகிவிடக்கூடாது என்கிற கட்டத்தில், செல்வம் அடைக்கலநாதனையும் த. சித்தார்த்தனையும் சம்பந்தன் கையாண்டாலும், அதைத் தாண்டிய கூட்டுத்தலைமை என்கிற கடப்பாட்டை வெளிப்படுத்தியதில்லை.
புதிய அரசமைப்புக்கான வரைபை நிராகரிப்பதாக, டெலோ அண்மையில் அறிவித்திருந்தது. அந்த விடயத்தைச் சம்பந்தனோ, கூட்டமைப்போ சிறிதாகவேனும் கவனத்தில் எடுக்கவில்லை. அதை, ஓர் ஊடக அறிக்கை என்கிற அளவிலேயே கடந்திருந்தனர்.
அப்படியான கட்டத்தில், அவர்களை வைத்துக் கொண்டு, எதிர்காலத்தைத் திட்டமிடும் கட்டத்தில், தமிழரசுக் கட்சி இல்லை. இன்னும் ஒருசில தேர்தல்களுக்கு மாத்திரமே, அவர்களைத் துணைக்கு வைத்துக் கொள்ளும் சூழல் உண்டு. அப்படியான கட்டத்தில், கூட்டமைப்பில் இருந்து தமிழரசுக் கட்சி என்கிற ஒற்றை மரத்தை வளர்ப்பது சார்ந்த நடவடிக்கைகள் பலமாக முன்னெடுக்கப்படுகின்றன.
கூட்டமைப்புக்கு எதிரான மாற்று அணி என்று வரையறுத்துக் கொண்ட தரப்புகள், தமக்குள் குழாயடிச் சண்டையிட்டுக் கொண்டிருக்க, தமிழரசுக் கட்சி தன்னை வளர்ப்பது சார்ந்து, நாளுக்கு நாள் இயங்கி வருகின்றது. யாழ்ப்பாணம் என்கிற வட்டத்துக்குள் மாத்திரம் சுருக்காமல், தன்னுடைய இயங்குநிலையை வடக்கு, கிழக்குப் பூராவும், தமிழரசுக் கட்சி விஸ்தரித்துக் கொண்டு செயலாற்றுகின்றது.
தைப்பொங்கல் விழா, அறிவோர் கூடல், இளைஞரணி மாநாடுகள் என்று தமிழரசுக் கட்சியின் வேகம் என்பது எதிர்பார்க்கப்பட்ட அளவைத் தாண்டிய நிலையிலேயே இருக்கின்றது. வழக்கமாக, மாற்று அணியாகத் தன்மை முன்னிறுத்தும் தரப்புகளே, ஏற்கெனவே ஆணித்தரமாக நிலைபெற்றுவிட்டவர்களையும் தாண்டிய வேகத்தோடும், செயல்நெறியோடும் இயங்குவார்கள். ஆனால், இங்கு, விடயம் அப்படியே தலைகீழாக நடக்கின்றது.
மாற்று அணியினரின் இயங்குநிலை என்பது, கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலுக்கு அப்பால் நகர்வது மாதிரியே தெரியவில்லை. கிட்டத்தட்ட அனைத்து முனைப்புகளும் நல்லூரைச் சுற்றியே நடந்து முடிகின்றன. அதற்கும் அப்பாலான செயற்பாடு என்பது, அரசியல் கட்டுரைகள், ஊடக அறிக்கைகள் என்கிற அளவிலேயே இருக்கின்றன.
தேர்தல் அரசியலில் நிலைபெறுவதன் ஊடாகத்தான், மக்களின் அங்கிகாரத்தைப் பெற முடியும் என்கிற கட்டம் இன்றைக்கு இருக்கின்றது. அதற்கான செயற்பாட்டு வேகத்தைத் தமிழரசுக் கட்சி அளவுக்கு, இன்றைக்கு எந்தவொரு கட்சியும் தமிழ்த் தேசிய அரசியலரங்கில் செய்வது மாதிரியாகத் தெரியவில்லை.
இயங்குவதற்கான இடைவெளியை வீண்விரயம் செய்துவிட்டு, தேர்தல்களுக்குப் பின்னராக தோல்வியின் புள்ளியில் நின்று, மக்களை நோக்கிக் குற்றஞ்சொல்லுவதால் பயனில்லை.
புதிய தலைமைத்துவத்துக்கான வெற்றிடம் என்பது, எந்தவித அசாம்பாவிதங்களும் இன்றி அப்படியே இருக்கின்றது. ஆனால், இனிவரப்போகும் தேர்தல்களில் வெற்றிபெறப்போகும் தரப்பு, அந்த இடத்தைத் தவிர்க்க முடியாமல் நிரப்பிவிடும் என்பதுதான் இப்போதுள்ள நிலைமை.
Average Rating