தேசிய அரசாங்கம் மக்களை ஏமாற்றும் பொறிமுறை!! (கட்டுரை)

Read Time:18 Minute, 34 Second

தேசிய அரசாங்கம் என்ற போர்வையில், அரசாங்கம் உண்மையிலேயே மேலும் பலருக்கு, அமைச்சர் பதவிகளை வழங்கவே போகிறது என்பது, பொதுவாக, நாட்டில் சகலரும் அறிந்த விடயமாகும்.

அது, எல்லோரும் அறிந்த விடயம் என்பதை, அரசாங்கமும் அறிந்த நிலையில், எல்லோருக்கும் அது தெரியும் என்பதை, தமக்குத் தெரியாது என்பதைப் போல் பாசாங்கு செய்து கொண்டு, அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, அரசாங்கம் முயல்கிறது. எல்லோரும் மோசமானது என அறிந்திருக்கும் ஒரு விடயத்தை, அவர்கள் அறிந்திருக்கிறார்கள் என்பதைத் தாமும் அறிந்திருக்கச் செய்வதானது, வெட்கமின்மை தவிர வேறொன்றுமல்ல.

தேசிய அரசாங்கம் ஒன்றை உருவாக்கி, அமைச்சர்களின் எண்ணிக்கையை 48ஆக அதிகரிப்பதற்காக, நாடாளுமன்றத்தின் சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றச் செயலாளர் நாயகத்திடம் பிரேரணையொன்றைக் கையளித்துள்ளார்.

நிலையானதோர் அரசாங்கத்தை உருவாக்கிக் கொள்வதே, அந்தப் பிரேரணையின் நோக்கமாகும் என, அமைச்சர்கள் சிலர் கூறுகின்றனர்.

உண்மை தான்! கடந்த வருடம் ஒக்டோபர் 26ஆம் திகதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கத்திலிருந்து விலகியதிலிருந்து, நிலையான அரசாங்கம் ஒன்று நாட்டில் இல்லை. அதற்கு முன்னர், எந்தவொரு சட்டத்தையும் நிறைவேற்றிக் கொள்ளும் அளவுக்கு, அதாவது 113 உறுப்பினர்களுக்கு மேல், அரசாங்கத்துக்குப் பலம் இருந்தது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவி நீக்கம் செய்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை பிரதமராக நியமித்து, மேற்கொண்ட அரசியல் சதியை அடுத்து, அரசியல் நெருக்கடி நிலை உருவாகியது.

அப்போது, ஐக்கிய தேசியக் கட்சிக்கு, அரசாங்கத்தை நிறுவத் தாம் ஆதரவு வழங்குவதாக, ஜனாதிபதிக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்ததன் அடிப்படையிலேயே, ஐ.தே.க மீண்டும் அரசாங்கத்தை நிறுவ வாய்ப்புக் கிடைத்தது. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசாங்கத்தில் பங்காளியாகவில்லை; அமைச்சுப் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளவுமில்லை. அவ்வாறு அரசாங்கத்தின் பங்காளியானால், அதைத் துரோகமாகச் சித்திரித்து, அந்தக் கட்சியின் போட்டிக் கட்சிகள் அரசியல் இலாபமடையும்.

எனவே, அக்கட்சி எந்த நேரத்திலாவது கையை விரிக்கும் என, ஐ.தே.க நினைப்பதாக இருந்தால் அது நியாயமே. அந்த வகையில், இப்போது இருப்பது, நிலையற்றதோர் அரசாங்கம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

எனவே, தேசிய அரசாங்கம் என்ற போர்வையில், ஏதாவதொரு கட்சிக்கு இலஞ்சமாக அமைச்சர் பதவிகளை வழங்கி, அந்தக் கட்சியின் உதவியில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிறுவ முடிந்தால், ஐ.தே.க அதனை விருப்பத்துடன் செய்யும்.

அவ்வாறு இலஞ்சம் வழங்குவதற்கு, 19ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் மூலமே வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இப்போது ஐ.தே.கவுடன் அவ்வாறு சேர்வதற்குப் புதிதாக எந்தக் கட்சியும் தயாராக இல்லை.

தேசிய அரசாங்கம் ஒன்று, எந்தச் சூழ்நிலையில் உருவாக்க முடியும் என்பது, அரசமைப்பில் குறிப்பிடப்படவில்லை. அதற்கான அரசியல், பொருளாதார, சமுக முன் நிபந்தனைகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை. மாறாக, தேசிய அரசாங்கம் என்பதன் உள்ளடக்கம், எவ்வாறு அமைய வேண்டும் என்பது மட்டுமே, 19ஆவது அரசமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது, நாடாளுமன்றத்தில் ஆகக் கூடுதலான ஆசனங்களைக் கொண்ட அரசியல் கட்சி, மற்றைய கட்சிகளுடன் சேர்ந்து அமைக்கும் அரசாங்கம், தேசிய அரசாங்கமாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் ஒரு கட்சி, எப்போதும் ஏனைய கட்சிகளை விடக் கூடுதலான ஆசனங்களைப் பெற்றுத் தான் இருக்கும். எனவே, எந்தவித அரசியல், சமூக, பொருளாதார அவசியமுமின்றி, வெறுமனே ஒரு கட்சியின் இருப்புக்காகவும் மற்றைய கட்சிகளின் தலைவர்கள், அமைச்சுப் பதவிகளைப் பெறுவதற்காகவும் தேசிய அரசாங்கம் ஒன்றை நிறுவ முடியும்.

சாதாரண நிலைமையின் கீழ், அரசாங்கம் 30 அமைச்சர்களை மட்டுமே நியமிக்க முடியும் என, 19ஆவது அரசமைப்புத் திருத்தம் கூறுகிறது. ஆனால், தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதாக இருந்தால், நாடாளுமன்றத்தின் விருப்பப்படி அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் எனவும் அது கூறுகிறது.

சாதாரண நிலைமையின் கீழ், 30 அமைச்சர்கள் மூலம் நாட்டை ஆள முடியும் என்றால், தேசிய அரசாங்கம் அமைத்தாலும் 30 அமைச்சர்கள் மூலம், நாட்டை ஆள முடியுமாக இருக்க வேண்டும். தேசிய அரசாங்கம் என்பது, உன்னத நோக்கமொன்றுக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாக இருந்தால், அதற்காக அரசாங்கத்தில் இணையும் கட்சிகள் அமைச்சுப் பதவிகளை எதிர்பார்க்கக் கூடாது.

ஒன்றில் அவை, அமைச்சுப் பதவிகளைப் பெறாதிருக்க வேண்டும். அல்லது, அரசாங்கத்தில் உள்ள சகல கட்சிகளும் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் அந்த 30 அமைச்சுப் பதவிகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

அமைச்சுப் பதவிகளை வழங்கினால் தான், அரசாங்கத்தில் கட்சிகள் இணையுமென்றால், அக்கட்சிகளுக்கு வழங்கப்படும் அமைச்சுப் பதவிகள் இலஞ்சம் என்பது தெளிவாகிறது. அந்த இலஞ்சத்துக்கு வழி வகுக்கும் வகையில் அமைச்சுப் பதவிகளை அதிகரிக்க, அரசமைப்பிலேயே வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

சுருக்கமாகக் கூறுவதாக இருந்தால், தேசிய அரசாங்கம் என்பது, அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்வதேயன்றி, வேறொன்றுமல்ல என்று தான் அரசமைப்பை வாசிக்கும் போது, எண்ணத் தோன்றுகிறது. எனவே, அமைச்சுப் பதவிகளை அதிகரித்துக் கொள்ளும் ஒரே யுக்தி, தேசிய அரசாங்கம் என்ற போர்வையைப் போர்த்திக் கொள்வதே என்ற நிலை உருவாகியிருக்கிறது.

அரசாங்கத்தின் அமைச்சர்களின் எண்ணிக்கையை முப்பதுக்கு மேல் அதிகரிப்பதில்லை என்று வாக்குறுதியளித்தே, ஐ.தே.க உள்ளிட்ட கட்சிகள், 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது பிரசாரம் செய்தன. ஆனால், 19ஆவது அரசமைப்புத் திருத்தத்தைக் கொண்டு வரும் போது, அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆகும் என ஒரு வாசகத்தில் கூறிவிட்டு, தேசிய அரசாங்கம் என்ற தந்திரத்தின் மூலம், அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளவும் மற்றொரு வாசகத்தின் மூலம் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த ஒக்டோபர் மாதம், மஹிந்த ராஜபக்‌ஷவைப் பிரதமராக நியமித்ததை அடுத்து, ஏற்பட்ட அரசியல், அரசமைப்பு நெருக்கடி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐ.தே.கவுக்கு அரசாங்கத்தை அமைக்க உதவுவதாக அறிவித்ததை அடுத்து, முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

அதன் பின்னர், மீண்டும் பதவிக்கு வந்த ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான அரசாங்கம், 30 அமைச்சர்களைக் கொண்டதாகவே நிறுவப்பட்டது. ஆனால், ஜனாதிபதியும் பிரதமரும் அமைச்சரவைக்கு உட்பட்டவர்கள் அல்லர் எனக் கூறி, மேலும் இரண்டு அமைச்சர் பதவிகளையாவது அதிகரித்துக் கொள்ளவும் அரசாங்கம் முயற்சி செய்தது.

கடந்த மாதம் அரசாங்கம், அமைச்சரவையிலுள்ள அமைச்சர்களுக்கான சகல வசதிகளுடன், ஆனால் அமைச்சரவை அந்தஸ்து இல்லாத அமைச்சர்கள் என்றதொரு வகைப்பிரிவினரை உருவாக்கி, அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரித்தது. இப்போது தேசிய அரசாங்கம் என்ற போர்வையில், அமைச்சர்களை அதிகரிக்க முயற்சிக்கிறது. இது மக்களின் வரிப் பணத்தில் ஒரு சிலர் சுகபோகத்தை அனுபவிப்பதற்கான முயற்சியே தவிர வேறொன்றுமல்ல.

அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, கிரியெல்லவின் பிரேரணை நாடாளுமன்றத்தில் நிறைவேற வேண்டும். அதற்காகப் பெரும்பான்மை ஆதரவு அவசியமாகிறது. எனவே, கடந்த டிசெம்பர் மாதம் சட்ட விரோத அரசாங்கத்தைத் தடுக்க முன்வந்ததைப் போலவே, இந்த முயற்சியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாலேயே தடுக்க முடியும்.

உத்தேச தேசிய அரசாங்கம் சட்டபூர்வமானதா?

ஆளும் ஐக்கிய தேசிய முன்னணிக்குப் புறம்பாக, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டுமே தற்போது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சியாகும். நாடாளுமன்றத்தில் மு.கா உறுப்பினராக மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட அலி சாஹிர் மௌலானா மட்டுமே இருக்கிறார்.

அக்கட்சியின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சியின் யானைச் சின்னத்தின் கீழ் போட்டியிட்டு, ஐ.தே.கவின் உறுப்பினர்களாகவே நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார்கள். சட்டப் படி அவர்கள் மு.கா உறுப்பினர்களாக நாடாளுமன்றத்துக்குள் கருதப்படுவதில்லை.

தற்போது அரசாங்கம், தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்க முயல்கிறது. அதற்காகத் தற்போது, மு.கா தவிர வேறேந்தக் கட்சியும் முன்வரவில்லை. எனவே, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரைக் கொண்ட மு.காவுடன் இணைந்தே, தேசிய அரசாங்கத்தை அரசாங்கம் அமைக்கப் போவதாகக் கூறப்படுகிறது.

இந்த முயற்சி, தற்போது பல சர்ச்சைகளைக் கிளப்பிவிட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் ஆகக் கூடுதலான ஆசனங்களைக் கொண்ட கட்சி, ஏனைய கட்சிகளுடன் (கட்சியுடன் அல்ல) இணைந்து அமைக்கும் அரசாங்கமே, தேசிய அரசாங்கம் என்பதாகும் என, அரசமைப்பில் குறிப்பிடப்பட்டு இருப்பதால் ஐ.தே.மு, மு.காவுடன் மட்டும் இணைந்து, தேசிய அரசாங்கம் அமைக்க முடியாது என, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மஹிந்த அணியின் முக்கியஸ்தரான டலஸ் அழகப்பெரும கூறுகிறார். ஆனால், 2015ஆம் ஆண்டு, தேசிய அரசாங்கம் ஒன்றை ஐ.தே.மு உருவாக்கிய போது, எவரும் இந்த வாதத்தை முன்வைக்கவில்லை.

மு.காவுடன் இணைந்து, தேசிய அரசாங்கம் அமைப்பதாக அரசாங்கம் கூறிய போதிலும், அக்கட்சியில் ஓர் உறுப்பினர் மட்டுமே இருப்பதால், இது அலி சாஹிர் மௌலானாவுடன் இணைந்து அமைக்கும் தேசிய அரசாங்கமாகும்.

ஆனால், அலி சாஹிர் மௌலானாவின் கட்சித் தலைவர் எங்கே இருக்கிறார்? அவர், ஏற்கெனவே அரசாங்கத்தில் இருக்கிறார். மௌலானா கட்சித் தலைவரும் அல்ல; செயலாளரும் அல்ல. அவரைக் கட்சியிலிருந்து நீக்கி, அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் பறிக்க, ஐ.தே.முவுக்குள் இருக்கும் ரவூப் ஹக்கீமால் முடியும்.

எனவே, நாடாளுமன்றத்தில் இருக்கும் மு.கா சுயாதீனமாக இயங்கக்கூடிய கட்சியல்ல. எனவே, அவ்வாறான தேசிய அரசாங்கமொன்று சட்டபூர்வமானதா என ஒருவர் கேள்வி எழுப்பலாம்.

சட்டத்தைப் பார்க்கிலும், இந்த இடத்தில், அரசியல் நாகரிகத்தைப் பற்றிய பிரச்சினையே இருக்கிறது. ஏற்கெனவே அரசாங்கத்தில் இருக்கும் ஒருவருடன் இணைந்து, அரசாங்கம் புதிதாக என்ன பலத்தை எதிர்பார்க்கிறது? அதனால், அரசாங்கத்தின் நிலைத்தன்மை உறுதிப்படுத்தப்படவில்லை. இதன் மூலமும் இந்தத் தேசிய அரசாங்கம் என்பது, அமைச்சர்களை அதிகரித்துக் கொள்வதற்காகவே என்பது தெளிவாகிறது.

அதேவேளை, தேசிய அரசாங்கம் அமைப்பதாகக் கூறிக் கொண்டு, அரசாங்கம் ஒருவரைக் கொண்ட கட்சியொன்றுடன் இணைந்து, அமைச்சரவையின் எண்ணிக்கையை 18ஆல் அதிகரித்துக் கொள்ள உத்தேசித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் ஆகக் கூடுதலான ஆசனங்களைக் கொண்ட கட்சி, ஏனைய கட்சிகளுடன் இணைவதற்காக அக்கட்சிகளுக்கு இலஞ்சம் வழங்குவதற்காகவே அமைச்சர் பதவிகளை அதிகரிக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது என முன்னர் பார்த்தோம்.

இப்போது அதை விடவும் மோசமான நிலைமை உருவாகியிருக்கிறது. இப்போது தேசிய அரசாங்கம் என்ற பெயரில் ஒருவருடன் இணைந்து அமைச்சரவையின் எண்ணிக்கையை 30இலிருந்து 48ஆக அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கிறது. அப்போதும் தேசிய அரசாங்கம் அமைக்க அரசாங்கத்தில் இணைந்த அலி ஷாஹிர் மௌலானாவுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியொன்று கிடைக்கும் என்ற உத்தரவாதம் இல்லை.

அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம், அரசாங்கம் என்ன சாதிக்கப் போகிறது? அரசாங்கத்திடம் பொருளாதார அபிவிருத்திக்காவோ இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காகவோ எந்தவிதத் திட்டங்களும் இல்லை.

2015ஆம் ஆண்டு தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்தும், அரசாங்கம் எதையும் செய்யவில்லை. அதன் விளைவாகவே அரசாங்கத்தில் அங்கம் வகித்த ஐ.தே.மு., ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகிய இரு கட்சிகளும் கடந்த வருடம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் படுதோல்வி அடைந்தன.

அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதை எதிர்க்கும் மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக் காலத்திலும், பாரியதோர் அமைச்சரவை இருந்தது. அப்போது இன்று போலல்லாது, நிலையானதோர் அரசாங்கமும் இருந்தது.

அமைச்சர் ஒருவருக்காக அரசாங்கம் மாதமொன்றுக்கு 75 இலட்சம் ரூபாய் செலவிடுவதாக அண்மையில் செய்தியொன்றில் கூறப்பட்டது. ஏன், அரசாங்கம் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முயல்கிறது என்ற கேள்விக்கு, அந்தச் செய்தியில் பதில் இருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருநங்கைகள் குறித்த ஆய்வின் உண்மைகள்!! (வீடியோ)
Next post காதல் இல்லா உலகம்? (அவ்வப்போது கிளாமர்)