புலம்பெயர் தமிழர்களின் சீன வாந்தியும் சிந்தனை கோளாறும்!! (கட்டுரை)

Read Time:7 Minute, 30 Second

“இலங்கையின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் சீனா. இலங்கையில் சீனா தலையிடாதிருந்தால், தமிழீழம் கிடைத்திருக்கும். நாம் எல்லோரும், ஊர் போய்ச் சேர்ந்திருப்பம். ஒருவேளை, தனிநாடு கிடைக்காட்டியும் அமெரிக்காவும் இந்தியாவும் வாங்கித் தந்திருக்கும்”. இதுதான், புலம்பெயர் தமிழர்கள் ஒரு பகுதியினரின், இலங்கையின் அயலுறவு தொடர்பான, இன்றைய நிலைப்பாடாகும்.

இதன் அடுத்த கட்டத்துக்கு இப்போது சில புலம்பெயர்ந்த ‘செயற்பாட்டாளர்கள்’ என்று சொல்வோர் சென்றிருக்கிறார்கள். அண்மையில், மேற்குலக நாடொன்றில் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் தொடர்பான கருத்தரங்கொன்றில், இந்த அறிவுஜீவிகள் “இலங்கையில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கு, தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை, நாளுக்கு நாள் பின்தள்ளுகிறது” என்று பேசியிருக்கிறார்கள்.

ஒரே பொய்கள், திரும்பத் திரும்பச் சொல்லப்படுகின்றன. இலங்கைத் தமிழர் விடயத்தில், சீனாவின் செயல்கள் குறித்து முன்வைக்கப்படும் இரண்டு முக்கியமான வாதங்களை நோக்கலாம். முதலாவது, இறுதிப் போரில் சீன இராணுவ உதவியே, விடுதலைப் புலிகளுக்கு எதிராக, இராணுவம் வெற்றிபெறக் காரணமாக இருந்தது. இரண்டாவது, சீனாவின் கடன்பொறிக்குள் இலங்கை சிக்கிவருகிறது. இதனால், தமிழர் நலன்கள் புறக்கணிக்கப்படுகின்றன.

தமிழருக்கெதிராக இராணுவ உதவி வழங்கிய நாடுகளில் அமெரிக்கா, இந்தியா, சில ஐரோப்பிய நாடுகள், இஸ்‌ரேல் என்பன முதன்மையானவை. பாகிஸ்தானும் சீனாவும் ரஷ்யாவும் பின்னால் வருவன. இந்த உண்மை, வசதியாக மறக்கப்படுகிறது. எந்த நாடுகள் போரைப் பின்னிற்று நடத்தினவோ, அவையே மனித உரிமைகள் கவுன்சிலில், மனித உரிமைகள் குறித்துப் பேசுகின்றன.
இதில் நினைவில் வைக்கவேண்டிய சிலவற்றைச் சொல்லியாக வேண்டும். இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை, மேற்குலகு, ஜெனீவாவில் நிறைவேற்றியது, தமிழ் மக்கள் மீதான அக்கறையாலோ, மனித உரிமை மீறல்களைத் தட்டிக் கேட்கவோ அல்ல.

மாறாக, இலங்கை அரசாங்கத்தைத் தனக்குப் பணிவான அரசாங்கமாக மாற்றவேயாகும். இதை, ஆட்சிமாற்றத்தைத் தொடர்ந்த மூன்று ஆண்டுகளில் கண்டுள்ளோம். ஜ.நாவோ, வேறெந்த மேற்கு நாடுமோ, உண்மையிலேயே விரும்பியிருந்தால், இலங்கையில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் பற்றிய விசாரணைகளைத் தொடக்கி இருக்கலாம். அவர்களது நோக்கம் அதுவல்ல; இது, எமக்கு விளங்க வேண்டும். அவர்கள், ஜெனீவா என்று, இலவு காத்த கிளியாக இருக்க, எம்மைக் கோருகிறார்கள்.

இலங்கையைக் கடன்பொறிக்குள் சீனா தள்ளியுள்ளது என்ற கூற்றுக்கு வருவோம். இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடனில் 15 சதவீதத்துக்கும் குறைவான கடனையே சீனா வழங்கியுள்ளது. அதேவேளை, சர்வதேச பிணைமுறிகளில் இலங்கை ஆழமாக ஈடுபட்டதே, இலங்கையைக் கடன்பொறிக்குள் தள்ளியுள்ளது. இலங்கைக்கு சீனா, இரண்டு சதவீத வட்டிக்கு 19 ஆண்டுகள் மீளளிப்புக் காலத்துடன் கடன் வழங்கியுள்ளது. அதேவேளை, சர்வதேச பிணைமுறிகளில் இலங்கை, ஆறு சதவீத வட்டிக்கு ஏழு ஆண்டுகள் மீளளிப்புக் காலத்துடன் கடன் பெற்றுள்ளது.

2011ஆம் ஆண்டு, 11 சதவீதமாக இருந்த பிணைமுறிக்கடன் இப்போது 54சதவீதத்துக்கும் மேலதிகமாக அதிகரித்துள்ளது. இது, இலங்கையின் கடன்பொறிக்குச் சீனா காரணமல்ல என்பதைக் காட்டுகிறது.

தமிழர்களின் சுயநிர்ணயப் போராட்டம், சீனாவால் பின்னடைவைச் சந்தித்துள்ளது என்போர், முதலில், அது எவ்வாறு, என்று சொல்லவேண்டும். மேற்குலகும் இந்தியாவும் செய்த சேதத்தை விடவா, சீனா செய்துவிட்டது.

மேற்குலகையும் இந்தியாவையும் தொடர்ந்து குளிர்வித்து, தீர்வைப் பெறலாம் என்று சொல்லுவோரே, அது சாத்தியமில்லை என்பதை நன்கறிவர். இலங்கையில் உள்ள தமிழ்மக்கள் பற்றி, அக்கறையுள்ள புலம்பெயர் தமிழர்கள், இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீன்பிடியால் இலங்கையின் வடபுலத்து மீனவர்கள் தொடர்ந்து எதிர்நோக்கும் இன்னல்கள் குறித்துப் பேசவேண்டும். தமிழருக்குத் தீர்வுக்குத் திசைகாட்டும் வெளிநாட்டு வித்தைக்காரர்களை நினைக்கும் போது நினைவுக்கு வந்த கவிதை இது:

“இல்லாத ஊருக்கு நாளை புறப்பட்டு நேற்றிரவு போய்ச்சேர
இந்த இரவின் இருளால் வழிகாட்டு” என்றென்னைக் கேட்டாய்.

“ஏலாது” என்றேன்.
“எதிரி” என என்னை ஏசிவிட்டுப் போனாய்.
முன்னொரு நாள்,
“போகும் இடம் தெரிதல், வழிதெரிதல், வகைதெரிதல்
நேரம் பெரிதல்ல, போதல் தனியே பெரிது” என ஓதிக்
“கீதை மொழி” என்றாய்.

என்னுட் சிரித்தேன் என்றோ தெளிவாய் என்ற எதிர்பார்ப்பில்
ஏமாற வந்தாய் இரவில் வழிகேட்டு.
என்னைத் தவிர்த்தால் உன்னை வழிகாட்ட
இல்லாமலோ போவார்.

போனாய்,விடியலிலே வாலைத் துரத்தி
வளைய வளைய வரும் நாய்போற் திரிகின்றாய்.
திசைகெட்டு, ஏறுகிற வெயிலுடன் ஏறுகிற வேகத்தில் ஓடுவாய்;
நேரத்தை வெல்லும் குறி போலும்.

“ஒரு கணமே நில்” லென்றால்
நீ குரைப்பாய் அல்லாற் கடிப்பாய்.
அறிவேன் அகல்கின்றேன்.
உன்போல் என்னால் ஓடல் இயலாது.

ஆனால் எனக்குப்
போகும் இடம் தெரியும்
வேளை, வழி, வகையும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post என் காதலே… என் காதலே… என்னை என்ன செய்யப் போகிறாய்..? (மகளிர் பக்கம்)
Next post உடல் சூட்டை தணிக்கும் வெந்தயம்!! (மகளிர் பக்கம்)