நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க – அ.தி.மு.க கூட்டணி? (கட்டுரை)
அ.தி.மு.கவும் பாரதிய ஜனதா கட்சியும் கூட்டணி அமைக்குமா என்பதுதான், இப்போது மிக முக்கியமான கேள்வியாக, தமிழக அரசியல் தலைவர்கள் மட்டத்தில் ‘விஸ்வரூபம்’ எடுத்து நிற்கிறது.
முதலமைச்சராக ஜெயலலிதா இருந்த போதும், அதன் பிறகு ஓ. பன்னீர்செல்வம், இப்போது முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி ஆகிய அனைவருமே பிரதமர் நரேந்திர மோடியுடன் இணக்கமாகவே பயணித்து வந்தார்கள்.
உடல்நிலை காரணமாக, 37 எம்.பிக்களை வைத்திருந்த நேரத்திலும் பிரதமர் மோடியை முறைத்துக் கொள்ள, ஜெயலலிதா விரும்பவில்லை. என்றாலும், ஓ. பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தங்களின் முதலமைச்சர் பதவிகளைத் தக்க வைத்துக்கொள்ள, பிரதமர் மோடியுடன் அனுசரணையாகவே இருந்து வருகிறார்கள்.
தமிழகத்தின் உரிமைகள் விடயத்தில், ஜெயலலிதா ஆணித்தரமாக மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்தாலும், எதிர்த்தாலும், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரைப் பொறுத்தமட்டில் ‘பாம்புக்கும் நோகக்கூடாது; தடியும் உடையக்கூடாது’ என்ற தோரணையிலேயே, இதுவரை அரசியல் செய்து வருகிறார்கள்.
நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றால், தன் ஆட்சிக்கு ஆபத்து வரும் என்பதும், வெற்றிடமாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடந்தாலும், தன் ஆட்சிக்குப் பிரச்சினை என்பதும் முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிகிறது. அப்படி வெற்றி பெற்று விடக்கூடாது என்பதற்கான வியூகத்தை வகுக்க, அவர் எண்ணுகிறார். அதற்குப் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைப்பது தடையாக இருக்கும் என்ற நினைப்பும் அவருக்கு இருக்கிறது.
தமிழகத்தில் உள்ள ‘மோடி எதிர்ப்பில்’ மத்திய பிரதேச மாநிலத்தில் முதலமைச்சராக இருந்த சவுகான் தோற்றது போல், அ.தி.மு.கவுக்குத் தோல்வி கிடைத்து விடும். அது நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, தமிழகத்தில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்கு, மிகப்பெரிய ஆபத்தாக முடிந்து விடும் என்ற அச்சம் இருக்கிறது.
ஏன் அ.தி.மு.கவில் அமைச்சர்களாக இருப்பவர்கள் பலருக்கும் பா.ஜ.க கூட்டணி வேம்பாக கசக்கிறது. குறிப்பாக, மக்களவை துணைத் தலைவர் தம்பித்துரைக்கு இன்னும் அதிகமாகவே கசக்கிறது. இப்படிக் கட்சிக்குள் பல குழப்பங்கள் நிலவுவதால், ஒன்றுபட்ட முடிவு எடுக்காமல், பா.ஜ.கவுடன் கூட்டணி அமைக்க முடியாது என்று நினைக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதனால்தான் இன்னும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாயிலிருந்து பா.ஜ.கவுடன் கூட்டணி என்ற பேச்சு வரவில்லை.
அதேசமயத்தில், துணை முதலமைச்சராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தைப் பொறுத்தவரை, பா.ஜ.கவுடன் கூட்டணி சேர்வதற்குத் தயார் என்பது போல், “தேசிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப் பேசி வருகிறோம்” என்று வெளிப்படையாகப் பேசுகிறார்.
தி.மு.க, காங்கிரஸ், கொம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டணி ஏறக்குறைய முடிவுக்கு வந்துள்ள நிலையில், ‘தேசிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை’ என்பது பா.ஜ.கவுடன்தான் என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. ஆகவே, பா.ஜ.க கூட்டணியைப் பொறுத்தமட்டில் எடப்பாடி பழனிசாமி மௌனமாகவும் மக்களவை துணைத் தலைவர் எதிராகவும் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாகவும் இருப்பது போன்றே தோற்றம் உருவாகியிருக்கிறது.
அதேநேரத்தில், தி.மு.க கூட்டணியில் இடம்பெற முடியாத கட்சிகள், அ.தி.மு.க தலைமையில் சேருவதற்குத் தயாராகவே இருக்கின்றன. குறிப்பாக, வன்னியர் நல வாரியம் அமைப்பு, இராமசாமி படையாச்சிக்கு சட்டமன்றத்தில் படம் உள்ளிட்ட பல வன்னியர் ஆதரவு நடவடிக்கைகளை அ.தி.மு.க அரசாங்கம் எடுத்து வருகிறது.
இதனடிப்படையில் பாட்டாளி மக்கள் கட்சி, விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம், ஜி.கே. வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் போன்ற கட்சிகளை வைத்து, கூட்டணி அமைத்தால், ஏதோ சில எம்.பி.க்களாவது கிடைக்காதா என்ற வியூகத்தையும் எடப்பாடி பழனிசாமி ஆராய்ந்து வருவதாகவே தெரிகிறது.
ஆனால், பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை, தி.மு.கவில் கிடைப்பது அத்தனையும் எம்.பி பதவி; அ.தி.மு.கவிடம் கிடைப்பது வெறும் ‘சீ்ட்’தான் என்ற உணர்வும் இருக்கிறது. அதனால்தான், கூட்டணி எந்த திசை என்பதை உறுதியாகச் சொல்லாமல் “கூட்டணி பேசி வருகிறோம்; அறிவிப்போம்” என்று பொதுவாக அன்புமணி சொன்னார்.
டொக்டர் ராமதாஸும், தமிழ்நாட்டில் இல்லாத “மதசார்பற்ற ஜனதா தளம், ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி” என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் கிண்டலடித்து விட்டார். பா.ஜ.கவுடன் போவது தமிழகத்தைப் பொறுத்தமட்டில் ‘கல்லைக் கட்டிக்கொண்டு கிணற்றில் குத்திப்பதற்குச் சமமானது, என்பதும் அவருக்கு தெரிகிறது.
ஆகவே, உண்மையில் தி.மு.க பக்கம் போக வேண்டும் என்ற எண்ணம் பா.ம.க தொண்டர்கள் மத்தியில் அதிகமாக இருப்பதால், டொக்டர் ராமதாஸைப் பொறுத்தவரை ‘எந்தக் கூட்டணி சேருவது’ என்பது பற்றி, இன்னும் உறுதியாக முடிவு எடுக்க முடியாமல் இருக்கிறார். எத்தனையோ தேர்தல்களில் உடனுக்குடன் கூட்டணி முடிவு எடுத்த பாட்டாளி மக்கள் கட்சிக்கு, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பது சவாலாகவே அமைந்திருக்கிறது.
இதேநிலையில்தான் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் இருக்கிறது. எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.கவுடன் கூட்டணி வைப்பதில் ஜி.கே. வாசனுக்கு சிக்கல் இல்லை. கொடநாடு கொலை புகார் பற்றிய சர்ச்சை எழுந்த நேரத்தில் கூட, அவர் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான ஞானதேசிகன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான கருத்தையே வெளியிட்டார்.
ஆனால், பா.ஜ.கவும் சேர்ந்திருக்கும் அ.தி.மு.க கூட்டணி என்றால் வாசன், காங்கிரஸை விட்டு பிரிந்து வந்த போது கிடைத்த வாக்குகளைத் தக்க வைத்துக் கொள்ள போராட வேண்டியிருக்கும். குறிப்பாக, ராகுல் காந்தி பிரதமர் என்ற முழக்கம் தமிழகத்தில் எழும் போது, தன்னிடம் உள்ள காந்தி குடும்பத்தின் மீது பாசமாக இருந்த வாக்காளர்களைத் தக்க வைத்துக் கொள்வது அவருக்கு அவ்வளவு எளிதல்ல.
ஏற்கெனவே, 2016 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் இல்லாத கூட்டணியில் ஐக்கியமாகி, தன் அந்தஸ்தை இழந்தது தமிழ் மாநில காங்கிரஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயத்தில், விஜயகாந்துக்குப் பிரச்சினை ஏதும் இல்லை. பா.ஜ.கவுடன் மட்டுமின்றி அ.தி.மு.கவுடனும் கூட்டணி வைக்கத் தயாராகவே இருப்பதாகத் தெரிகிறது. தனியாக நின்றும், அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்தும் பிறகு, சென்ற சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த் தலைமையிலேயே ‘மக்கள் நலக்கூட்டணி’ வைத்தும் கையைச் சுட்டுக் கொண்ட தே.மு.தி.க, இந்த முறை வாக்கு வங்கி உள்ள தேசிய கட்சியுடனோ அல்லது மாநிலக் கட்சியுடனோ சேருவது மிக கட்டாயமாகிறது.
அந்த வகையில்தான், அ.தி.மு.க, பா.ஜ.க ஆகிய இரு கட்சிகள் உள்ள கூட்டணியில் இருந்தாலும் பரவாயில்லை என்ற மனநிலையில் தே.மு.தி.க இருக்கிறது. இந்த நிலையில் அ.தி.மு.கவைப் பொறுத்தமட்டில், இந்தக் கட்சிகளை எல்லாம் ஒன்று சேர்த்து, ஒரு கூட்டணி அமைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறது.
ஆனால், அது பா.ஜ.க இல்லாத கூட்டணியா, பா.ஜ.கவும் சேர்த்த கூட்டணியா என்ற தேடலில் இப்போது இருப்பதாகவே தெரிகிறது. ஆகவே, இப்போதைக்கு தி.மு.க தலைமையில் ஒரு கூட்டணி உருவாகி விட்டது. அதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடம்பெறுமா என்பது இன்னும் ஊர்ஜிதமாகாமல் இருக்கிறது.
அதேநேரத்தில் அ.தி.மு.கவிலிருந்து பிரிந்த தினகரன் தலைமையிலான அ.தி.மு.கவுக்கு எதிர்காலம் என்ன என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. அக்கட்சியால் தி.மு.க அணியிலும் சேர முடியாது; அ.தி.மு.க அணியிலும் சேர முடியாது.
தினகரன் தலைமையிலும் அணி சேர மற்றக் கட்சிகள் முன் வருவதில் சிரமங்கள் உள்ளன. ஏனென்றால், கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்களின் தலைமையை ஏற்று, கூட்டணி வைத்த டொக்டர் ராமதாஸ் போன்றவர்கள், தினகரன் தலைமையில் நாடாளுமன்றக் கூட்டணி அமைக்க முன் வரமாட்டார்கள்.
தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றால் வெற்றி பெறலாம் என்றும் அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றாலும் வெற்றி பெறப் போட்டி போடலாம் என்ற நிலையில், இந்த இரு அணிகளில் இடம்பெறவே மற்றக் கட்சிகள் முன்வரும். அதைத் தவிர்த்து, தினகரன் அணியில் சேர்ந்தால் தேர்தல் களத்தில் நுழைவதற்கு முன்பே தோல்வியைச் சந்தித்ததாக அமைந்து விடும் என்ற எண்ணம் தோன்றும்.
ஆகவே, தி.மு.க, அ.தி.மு.க தலைமையில் அணி அமைந்த பிறகு, தனித்து விடப்படுபவர் தினகரனாகத்தான் இருப்பார். அவர் தலைமையை ஏற்று, கூட்டணி வைக்க நடிகர் கமல்ஹாசன் கூட, முன் வராமல் போகலாம்.
தமிழகத்தில் இன்றைய சூழலில் பிரகாசமான வாய்ப்புகளுடன் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி இருக்கிறது. மாநில அரசாங்கத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்தி வெற்றி பெற்று விடலாம் என்று அ.தி.மு.க கருதுகிறது. மத்திய அரசாங்கத்தின் அதிகாரமும் சேர்ந்தால் வெற்றி பெறுவது இன்னும் எளிதாகும் என்று பா.ஜ.க தரப்பில் தூதுவிடப்படுகிறது.
ஆனால், தேர்தல் களத்தில் எங்கும் திசை தெரியாமல் நிற்கும் கட்சிகள் பட்டியலும் தொடருகிறது. தேர்தல் கூட்டணிகள் அமைப்பதற்கு முன் பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு தரம் தமிழகத்துக்கு வந்து சென்று விட்டார்.
ஆகவே, இது அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைப்பதற்கு அச்சாரமாகவே நடக்கிறது என்றே கருத இடமிருக்கிறது. அதைப் பிரதிபலிக்கும் வகையில், வெள்ளிக்கிழமை தாக்கல் செய்த, தமிழக நிதிநிலை அறிக்கையில், பிரதமர் நரேந்திர மோடிக்குப் பாராட்டுத் தெரிவித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
Average Rating