போருக்குப் பின்னரான அபிவிருத்தியில் புலம்பெயர் மக்களின் பங்களிப்பு!! (கட்டுரை)

Read Time:19 Minute, 46 Second

புலம்பெயர் நாடுகளில் செயற்படும் அமைப்புகளில், மக்களை அரசியல் மயப்படுத்துவதற்காகவே இயங்கும் அமைப்புகளும் இருக்கின்றன; அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கென்றே இயங்கும் அமைப்புகளும் இருக்கின்றன. இவற்றுக்கு மத்தியில், இலங்கையில் தொடர்ந்தும் பிரச்சினை இருந்துகொண்டே இருக்க வேண்டும் என்று சிந்திப்பவர்களும் இருக்கிறார்கள். இவற்றையெல்லாம் தாண்டி, ‘திருவிளையாடல்’ பாணியில் குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்குபவர்களும் இருக்கத்தான் செய்கின்றன.

யுத்தகாலத்தில் யுத்தத்துக்கென நிதிகளை அள்ளி வழங்கிக் கொண்டிருந்த புலம்பெயர் தமிழ் உறவுகள், இப்போது அந்தத் தேவையற்றவர்களாக மாறியிருக்கிறார்கள். அந்தப் பணத்தை, தமிழர் பிரதேசங்களின் மேம்பாட்டுக்காக, ஏன் செலவு செய்ய முடியாது என்ற கேள்வி, இப்போது பலமாக சகல மட்டங்களிலும் எழுந்திருக்கிறது.

புலம்பெயர் நாடுகளில் செயற்படும் அமைப்புகளில், மக்களை அரசியல் மயப்படுத்துகின்ற அமைப்பு, எது என்ற கணிப்பொன்று நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில், தமிழர் ஒருங்கிணைப்பு குழு, போராளிகள் கட்டமைப்பு, பிரித்தானியத் தமிழர் பேரவை, உலகத் தமிழர் பேரவை, மக்கள் அவை என ஒரு பட்டியல் நீண்டு செல்கிறது.

இலங்கையில் போருக்கு பின்னரான, சமூகப் பொருளாதார அபிவிருத்தியில், புலம்பெயர் மக்களின் பங்களிப்பு எவ்வாறிருக்கிறது என்பதற்கான கேள்வியை, நாம் கேட்டுக் கொண்டால், பதில்கள் ஒழுங்குபடுத்தப்படாமலேயே கிடைக்கும்.

இலங்கைத் தமிழர் வாழ்ந்து கொண்டிருக்கும் புலம்பெயர் நாடுகள் என்று சொல்லுகிற பொழுது, ஐரோப்பிய, ஸ்கண்டிநேவிய, அமெரிக்க நாடுகளில் இருப்பவர்களையே பொதுவாகக் குறிப்பிடுகின்றோம். இவர்களில், ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்று தொழில் தேடிச் சென்றவர்கள், நாட்டில் யுத்தம் தொடங்கிய 70களுக்குப் பின்னரான காலப்பகுதியில் இருந்து பாதுகாப்புச் சிக்கல்கள் காரணமாகப் புலம்பெயர்ந்தவர்கள், சகோதர இயக்கங்களின் அச்சுறுத்தல், பல்வேறு தரப்புகளின் பிரச்சினைகள் காரணமாக வௌியேறியவர்கள், அரச பாதுகாப்புப் பிரிவினரின் நெருக்கடிகளால் நாடு கடந்தவர்கள், சட்டவிரோதமாகச் சென்று கொண்டிருப்பவர்கள் எனப் பலரையும் உள்ளடக்கும் பொதுப் பெயர்தான் புலம்பெயர்ந்த தமிழர்கள்.
இவர்களில் குறிப்பிட்ட பகுதியினர், பலவாறான ஆக்கபூர்வமான உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அதிகம் பேர், நாட்டுக்கு மீளத் திரும்புவதற்கு விருப்பத்துடன் இருக்கிறார்கள்.

ஆனால், புலம்பெயர் நாடுகளிலேயே பிறந்து வளர்ந்தவர்களுக்கு, நம் நாடு பற்றிய சிந்தனைகள் இருக்குமா, இவர்கள் உதவிகளை மேற்கொள்வார்களா என்பது முதல் கேள்வியாகும்.

இந்த இடத்தில்தான், போருக்கு பின்னரான சமூகப் பொருளாதார அபிவிருத்தியில் புலம்பெயர் மக்களின் பங்களிப்பு என்கின்ற விடயப்பரப்பு உருவாகின்றது. இது பெரியதொரு விடயம் என்றாலும், அதைச் சீர்தூக்கிப் பார்க்கவேண்டியது முக்கியமானது. புலம்பெயர் மக்களின் பங்களிப்புக் குறித்து, அதிகம் அறிக்கையிட முடியாதென்றாலும் இந்த விடயப்பரப்பு குறித்துப் பேசப்படுவதே பெரியது என்று கொள்ளத்தான் வேண்டும்.

இலங்கை என்று பொதுப்படையில் சொன்னாலும், வடக்கு, கிழக்கை முன்னிலைப்படுத்துவதே புலம்பெயர் தமிழ் உறவுகளின் சமூகச் சிந்தனையாகும். புலம்பெயர் தமிழர்களின் எண்ணக்கருவானது, நிலைத்து நிற்கக்கூடிய அபிவிருத்தியில் கவனம் செலுத்தினால் வடக்கு, கிழக்கின் வறுமை நீங்கப்பெற்றிருக்கும் என்ற சிந்தனை இப்போது கருக்கொண்டுள்ளது.

போர் முடிந்து 10 வருடங்களாகின்ற போதும், வடக்கு, கிழக்கில் பல மாவட்டங்கள், மிகவும் மோசமான வறுமை நிலையிலேயே இருந்து வருகின்றன. இவற்றில் மாற்றம் ஏற்பட வேண்டுமாக இருந்தால், புலம்பெயர் உறவுகளின் உதவிகள் தாராளமாகத் தேவை என்பதுதான் பிரதானமான நோக்கமாகும்.

இலண்டன் ஈழபதீஸ்வரர் ஆலய தலைவர் ஜெயதேவன், எஸ்.வியாழேந்திரன் (நா.உ), மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் மா. உதயகுமார், மட்டக்களப்பு மாநகர மேயர் தி. சரவணபவன்

மனிதநேயம் மிக்க, மனிதாபிமான மனிதர்களைக் கொண்ட புலம்பெயர் அமைப்புகளின் சமூக சிந்தனை சிறப்பானதாக அமையவேண்டும். நாட்டில் ஏற்பட்ட யுத்தம், அனர்த்தம் என்பனவற்றால் வடக்கு, கிழக்கின் கல்வி,பொருளாதாரம் என்பன பெருவீழ்ச்சியைக் கண்டுள்ளன. இதை அறிக்கையிட்டுத்தான் தெரியப்படுத்த வேண்டும் என்றில்லை. ஆனால் இவை மீண்டும் உச்ச நிலைக்குக் கட்டியெழுப்பப்பட வேண்டும்.

அரசாங்கத்தின் திட்டங்களை, மக்கள் சரியாக பயன்படுத்தினால் வடக்கு, கிழக்கின் கல்வி, பொருளாதாரம், விவசாயம், உள்ளிட்ட அனைத்தும் முன்னேற்றம் காணும் என்பதில் ஐயப்படத் தேவையில்லை என்ற கருத்துகள் இருந்தாலும், புலம்பெயர் தமிழர்களின் உதவிகளானது சிறப்பான வளர்ச்சியைக் கொண்டுவரும் என்பது எதார்த்தம்.

நிலையான அபிவிருத்தியை நோக்கியதான, இலங்கைத் தமிழர்களின் கல்வி, வறுமை ஒழிப்பு, சுகாதாரம் போன்ற துறைகளில் எடுக்கப்படும் கரிசனைகளுக்கு புலம்பெயர் உறவுகளின் பக்கத்துணை அவசியமான தேவை. மக்களுக்கு ஏற்றதும் வளப்பயன்பாட்டுக்கு ஏற்றதுமான தொழிற்றுறை, தொழில் வாய்ப்புகளில் அதிகரிப்பு போன்ற கைங்கரியங்கள் ஊடாக, எல்லோரும் எதிர்பார்க்கின்ற நிலையான அபிவிருத்திக்கு வடக்கு, கிழக்கை இட்டுச் செல்ல முடியும்.

நிதிகளையும் சலுகைகளையும் பொதுமக்கள் மட்டும் பெற்றால் போதும் என்கிற மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும். வடக்கு, கிழக்கிலுள்ள மாவட்டங்கள் அனைத்திலும் மிகவும் பின்தங்கிய கிராமங்களில் வாழும் மக்களின் பொருளாதாரம், கல்வி என்பன உயர்த்தப்பட வேண்டுமாக இருந்தால், நிதி உதவிகள் மாத்திரமல்ல, தொழில் சார், உளம் சார் திறன்களையும் வளங்களையும் பகிர்ந்து கொள்கின்ற ஒரு நிலை உருவாக்கப்படுவதானது சிறந்ததொரு சூழலை உருவாக்கிக் கொடுக்கும்.

ஆலயங்களின் கட்டுமானங்களிலும், ஆடம்பரச் செலவுகளிலும் அதிக பணத்தை வீணடிக்கும் ஒரு தரப்பு இருந்தாலும், சாதாரணமான செயற்பாடுகளுக்கே நிதியின்றி நுண்கடன் கம்பனிகளிடம் கடனைப்பெற்று, வாழ்க்கை நடத்துகின்ற நிலைமைகளும் காணப்படுகின்றன. இந்த நிலைமைகள் தொடர்கையில் வறுமை எவ்வாறு ஒழிக்கப்படும் என்று கேள்வியை கேட்டுக் கொள்ளலாம்.

இருந்தாலும், இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பான புலம்பெயர் மக்களின் அக்கறைகள் வரவேற்கப்பட வேண்டியவைகளே. இதில், இலங்கையில் உள்ள அரசாங்க கட்டமைப்பைப் புரிந்துகொண்டு, புலம்பெயர் அமைப்புகள் செயற்பட்டால், அணுகுதல் இலகுவாக இருக்கும்.

புலம்பெயர் உறவுகள் ஆர்வத்துடன் இருக்கின்ற அதேவேளைகளில், அந்த உதவிகளால் பயன்பெறுவோரைத் தேர்வு செய்வதில் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். அது அவர்களின் உதவி வழங்கும் மனோநிலையிலேயே குழப்பங்களை ஏற்படுத்தி விடுகின்றன.

இவ்வாறாக உதவிகளைப் பெறுபவர்கள், தொடர்ந்தும் தங்களுக்கு மாத்திரமே உதவிகள் தேவை என்கிற ‘சோம்பேறி மனோநிலைக்கு’ வந்துவிடுதல் உருவாகாதிருக்க, அரச நிறுவனங்களின் ஊடாக வழங்குவதன் மூலம், ஒருவருக்குப் பல உதவிகள் கிடைக்க, சிலர் ஏதும் கிடைக்காமல் இருக்கும் நிலைமையைத் தவிர்க்க முடியும்.

போர்க்காலத்திலும், இயற்கை அனர்த்த காலங்களிலும் போருக்குப் பின்னரும் புலம்பெயர் அமைப்புகளின் உதவிகள் தாராளமாகக் கிடைத்திருந்தாலும் அவற்றின் சரியான பயன்பாட்டுத்தன்மை இல்லாமை காரணமாக எதிர்பார்ப்புகள் பூரணப்படுத்தப்படாத நிலை வடக்கு, கிழக்கில் காணப்படுகிறது.

அரச சார்பற்ற நிறுவனங்கள் தமது உதவிகளின்போது, நிர்வாகச் செலவாக அதிகம் செலவு செய்வது குறித்துப் பலரும் குறைபட்டுக்கொள்வர். ஆனால், புலம்பெயர் அமைப்புகளில் அப்படியான நிலைமை குறைவாகவே காணப்படுகின்றது என்பது சிறப்பாகும்.

புலம்பெயர் மக்களின் உதவிகள் நேரடியாக வடக்கு, கிழக்கு மக்களுக்குச் செல்வதையும் பிழையான வழிகளில் செல்வதையும் அரசாங்கம் விரும்புவதில்லை என்பது யதார்த்தமே. நாட்டின் கொள்கைகளை மீறியதான செயற்பாடுகளை நடத்தி விடுவதால், குழப்பங்கள் உருவாகக்கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படுவதாலேயே கட்டுப்பாடுகள் உருவாகின்றன.

போருக்குப் பின்னரான அபிவிருத்தியில் உதவ வரும் சில புலம்பெயர் அமைப்புகள், அதற்காக இலங்கை அரச நிறுவனங்களைத் தொடர்புகொள்ளத் தயக்கம் காட்டுகின்றன. ஆனால், அவர்கள் செய்யும் பணிகள், நீடித்த பயனைத்தர வேண்டுமானால், அதற்கு அரச நிறுவனங்களின் தொடர்பு அவசியம் என்பது உணரப்பட வேண்டும்.

புலம்பெயர் தமிழர்கள் உதவ வரும் போது, அரசாங்க நிறுவனங்களை அணுகி, முறைப்படி நகரத்துவதன் மூலம், வெற்றிகளை அடைந்து கொள்ள முடியும்.

போருக்குப் பின்னரான இலங்கையில், எமது மக்களின் தேவைகளில் பொருளாதாரமும் கல்வியும் முக்கியமானவை என்ற அடிப்படையில், நகர்த்தப்படும் ஒருமித்த செயற்பாட்டின் வெற்றியை அடைவதற்கு முயலவும் வேண்டும்.

கிராமங்களிலுள்ள மக்களை அணுகும் புலம்பெயர் அமைப்புகள், அவர்களின் தேவைகளைச் சரியாகப் புரிந்து உதவவேண்டும். உரிய கட்டமைப்புகளின் ஊடாகப் புலம்பெயர் அமைப்புகளின் நிதி இங்கு முதலீடு செய்யப்பட வேண்டும்.

கல்வி, காணி போன்ற விடயங்களிலும் முதலீடு தேவை. வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம், தொழிற்திறன் பகிர்வு போன்ற விடயங்ளில் புலம்பெயர் தமிழர், இலங்கை வாழ் மக்களுக்கு உதவ வேண்டும் போன்ற சிந்தனைகள் பரப்பப்பட வேண்டும்.

இவை, போருக்குப் பின்னரான இலங்கைக்கு, பங்களிப்புச் செய்யும் மனோநிலைக்கு புலம்பெயர் உறவுகளின் மத்தியில் உரம் கொடுக்கும்.

புலம்பெயர் உறவுகளின் பெரும் போக்கான உதவியும் வருகையும் வடக்கு, கிழக்கில் தமிழர்களின் வாழ்நிலையில் சிறப்பானதொரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றே எல்லோரும் கனவு காண்கிறோம். அது நிறைவேறும் காலம் வெகுதூரத்தில் இருக்கக்கூடாது.

புலம்பெயர் தமிழர்களால் தத்தெடுக்கப்பட்ட தமிழர் கிராமம்

கடந்த மூன்று வருடங்களாக, புலையவெளி கிராமத்தின் அடிப்படைக் கட்டுமானங்கள், தொழில் வாய்ப்புகளுக்கான வசதிகள் என அபிவிருத்தி செய்து, ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தி, உலகத்துக்குத் தெரியாமலேயே வைத்துக்கொண்டிருப்பது வல்லமையான காரியம்தான்.

மட்டக்களப்பு, செங்கலடியிலுள்ள புலையவெளி கிராமத்தில், 2019 ஜனவரி நடுப்பகுதியில், பிரித்தானியாவின் இலங்கைக்கான புலம்பெயர் அமைப்பின் ஏற்பாட்டில், ‘போருக்குப் பின்னரான இலங்கையின் சமூகப் பொருளாதார அபிவிருத்தியில் புலம்பெயர்ந்து வாழும் மக்களின் பங்களிப்பு’ என்ற தலைப்பிலான மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

‘புலம்பெயர் அமைப்புகள், அரச நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்பில் இருக்கக் கூடிய விடயங்கள்’, ‘இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட மக்கள், புலம்பெயர் தமிழரிடம் எதிர்பார்ப்பது என்ன’ ஆகிய தலைப்புகளில் அமர்வுகள் நடைபெற்றன.

இலண்டன் ஈழபதீஸ்வரர் ஆலயத்தின் நிர்வாகத்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தி செய்யப்படும் மூன்று கிராமங்களில் புலையவெளி கிராமமும் ஒன்று. மற்றையது தம்பானம்வெளி, ஏறாவூர்- 5 ஆகிய கிராமங்களாகும்.

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் புலம்பெயர் தமிழர் எதிர்நோக்கும் சிரமங்கள், இந்து மத நிறுவனங்களின் பலவீனம் போன்ற விடயங்களும் கவனிக்கப்பட வேண்டும்.

இந்த இடத்தில்தான், வடபகுதி மக்களால் நிர்வகிக்கப்படும் லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலயம், கிழக்கு மண்ணில் உள்ள கிராமங்களுக்கு உதவ முன்வந்தமை, கிழக்கு சார்ந்த பிரதேச வாத நோய்க்கும் சிறந்த மருந்தாக அமையும்.

போராசிரியர் தில்லைநாதன் இங்கு தெரிவித்த கருத்துகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவைகள். “மக்களின் அடிப்படைத் தேவைகளைப் புலம்பெயர் தமிழர், சரியாகப் புரிந்துகொண்டு செயற்பட்டால், நல்ல பலன் கிடைக்கும். உலகில் இலங்கையைப்போல் ஒரு நாடு கிடைக்காது. அதுவும் மட்டக்களப்பு போல் ஓரிடம் கிடைக்காது. எல்லா விதமான வளங்களும் இருக்கின்றன. புலம்பெயர் அமைப்புகள், இங்குள்ள பிரச்சினைகள் பற்றியும் அவற்றுக்கான தீர்வுகளைக் காண்பதற்கான முயற்சிகளையும் எடுக்கின்ற போது, அதில் எந்தப் பிரச்சினை, சமூகத்தைத் தீவிரமாகத் தாக்குகிறது என்பதை அடையாளம் கண்டு, அதற்குத் தீர்வைக் காணும் போது, எங்களுடைய பிரதேசததில், நீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்தியைக் காணமுடியும்.

வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரையில், கணவனை இழந்த 48,864 பெண்களின் பிரச்சினை, மாற்றுத்திறனாளிகளின் பிரச்சினை ஆகிய இரண்டும் முக்கியமானவை. அதன் பின்னர், பலவேறு பிரச்சினைகள் இருக்கின்றன. முதலாவதாக, விதவைகள் என்ற கணவனை இழந்த குடும்பங்களில், எந்த மாற்றமும் இல்லை. அந்தக் குடும்பங்களின் பிள்ளைகளிடம், ஆக்கத்திறனான சிந்தனையில்லாமல் இருக்கிறது; மகிழ்ச்சியில்லை. வருடக்கணக்கில், உதவிகள் வழங்கப்பட்ட பின்னரும் எந்தவிதமான மாற்றமும் இல்லை. எங்களுக்குரிய வளங்கள் நிறையவே இருந்தாலும் அவற்றினைப் பேணி, முழுமையாகப் பயன்படுத்தும் நிலை இல்லை.

புலம்பெயர் நாடுகளிலிருந்து நிதி வருகிறது. சரியாகப் பகிரப்படவில்லை என்பது குற்றச்சாட்டாக இருக்கிறது. மனப்பாங்கு மாற்றம் இருந்தால் எம்முடைய வளங்களைச் சரியாகப்பயன்படுத்தும் தன்மை உருவாகும். அத்துடன், மக்களின் அடிப்படைத் தேவைகளை புலம்பெயர் தமிழர் சரியாகப் புரிந்துகொண்டு செயற்பட்டால், நல்ல பலன் கிடைக்கும்”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வந்துவிட்டது நேப்கின் டிஸ்ட்ராயர்! (மகளிர் பக்கம்)
Next post குழந்தைகளுக்கு சளி கட்டினால் என்ன செய்வது? (மருத்துவம்)