போதைப்பொருள் வியாபாரமும் மரண தண்டனையும்!! (கட்டுரை)
பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வடக்கில் போதைப் பொருள் பரவுவது தொடர்பாக, தென் பகுதி அரசியல்வாதிகளைக் குறைகூறி, ஓரிரு நாள்கள் மட்டுமே சென்றிருந்த நிலையில், இலங்கையில் பெயர் பெற்ற பாதாள உலகத் தலைவர்களில் ஒருவராகவும் போதைப்பொருள் கடத்தல்காரனுமாகிய மாகந்துரே மதுஷ் என்றழைக்கப்படும் சமரசிங்ஹ ஆராச்சிகே மதுஷ் லக்ஷித்த என்பவனும் அவனது முக்கிய சகாக்களுமாக 30 பேருக்கு மேற்பட்டவர்கள், டுபாயில் நட்சத்திர ஹோட்டலொன்றில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஐந்தாம் திகதி நடைபெற்ற, மதுஷின் மகனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போதே, இவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களுக்குள், இலங்கையின் பிரபல பாடகர்களும் நடிகர்களும் அடங்குகின்றனர்.
அவர்கள் உண்மையிலேயே போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்களா அல்லது வெறுமனே மதுஷின் அழைப்பின் பேரில் அங்கு சென்றார்களா என்பது, விசாரணைகளின் போது தான் தெரியவரும். ஆனால், அழைப்பின் பேரிலாயினும், தாம் கலந்து கொள்வது, போதைப்பொருள் வர்த்தகர் ஒருவரது மகனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் என்பது, அவர்களுக்குத் தெரியாது எனக் கூற முடியாது.
நாட்டில் போதைப்பொருள் வர்த்தகம், விநியோகம், பாவனை ஆகியன இந்தச் சம்பவத்தோடு முடிவடையும் என்று உத்தரவாதமளிக்க முடியாது. கடந்த காலத்தில் போதைப்பொருள், தீவிரவாதம், பாரியளவிலான ஊழல், குற்றச்செயல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு நேர்ந்த கதியை நினைத்துப் பார்க்கும் போது, இந்தக் கைதுகளும் மற்றுமொரு சம்பவமாகி, அந்தக் குற்றச் செயல்கள் தொடரும் என்றே நினைக்கத் தோன்றுகிறது.
எனினும், இவ்வாறு போதைப் பொருள் கடத்தல்காரர்கள் சிலராவது கைது செய்யப்படுவதையிட்டு, எந்தவொரு மனிதரும் மகிழ்ச்சியடையத் தான் வேண்டும். அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படுமா, தகுந்த தண்டனை வழங்கப்படுமா என்பதெல்லாம், விசாரணைகளின் இறுதியில் தெரியவரும்.
இந்தக் கைது தொடர்பாக, இலங்கையில் இரண்டு விதமான தகவல்கள் பரவுகின்றன. டுபாய் பொலிஸார், இலங்கையின் பொலிஸ் அதிரடிப் படையினருடன் இணைந்து நடத்திய சுற்றிவளைப்பின் போதே, இவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று சிலர் கூறுகின்றனர்.
ஆனால், அது டுபாய் பொலிஸார் தனியாக மேற்கொண்ட சுற்றிவளைப்பு என்றும், மெறில் என்ற மற்றொரு போதைப்பொருள் கடத்தல்காரர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே, டுபாய் பொலிஸார், இந்தச் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர் என்றும் ‘சண்டே டைம்ஸ்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.
இதேவேளை, “குமரன் பத்மநாதனை, மலேசியாவிலிருந்து சுருட்டிக் கொண்டு வந்ததைப் போல், மதுஷையும் சுருட்டிக் கொண்டு வரத் திட்டமிட்டு இருந்த நிலையிலேயே, இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது” என்று அமைச்சர் லக்ஷ்மன் கிரிஎல்ல, கடந்த ஞாயிற்றுக்கிழமை கூறியிருந்தார்.
“ஏதோ தாமே இந்தச் சுற்றிவளைப்பு நடவடிக்கையைத் திட்டமிட்டதைப் போல், இன்று பலர் இந்தச் சம்பவத்துக்கு உரிமைகோருகின்றனர்” என, ஜனாதிபதியும் ஏளனமாகக் கூறியிருந்தார்.
சில அரச ஊடகங்களும், பொலிஸ் திணைக்களத்தை, ஜனாதிபதி பொறுப்பேற்றதன் விளைவாகவே, இது போன்ற பாரிய சுற்றிவளைப்பு நடவடிக்கையொன்று சாத்தியமாகியது எனக் கூறுகின்றன. ஆனால், இந்தச் சுற்றிவளைப்புக் குறித்து, இலங்கை பொலிஸாரின் பங்களிப்பு இன்னமும் தெளிவாகவில்லை.
ஜனாதிபதி சிறிசேன, அண்மைக் காலமாகப் போதைப்பொருள் வர்த்தகத்துக்கு எதிராகக் கடுமையாகக் குரல் கொடுத்து வருவது தெரிந்ததே. போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு, குற்றவாளிகளாகக் காணப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்ட பின்னரும், அவ்வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு, ஏற்கெனவே அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை நிறைவேற்றுவதாக, கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் கூறினார்.
இலங்கையின் நீதிமன்றங்கள், குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை விதித்த போதிலும், அவை நிறைவேற்றப்படுவதில்லை. நீதிமன்றங்கள் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன், அதற்கு, ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். 1976 ஆண்டுக்குப் பின்னர், எந்தவொரு ஜனாதிபதியும் அந்த ஒப்புதலை வழங்கவில்லை. எனவே, மரண தண்டனை விதிக்கப்பட்டோர், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டோராக மாறுகின்றனர்.
இதற்கு முன்னர், 2015 ஆம் ஆண்டு கொட்டதெனியாவையில் ஐந்து வயதுடைய சேயா சதெவ்மி என்ற சிறுமி, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட போதும், அதே ஆண்டு, புங்குடுதீவில் வித்தியா என்னும் மாணவியும் அதேபோல் படுகொலை செய்யப்பட்ட போதும், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் எனப் பலர் குரல் எழுப்பினர். ஆனால், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், அதை எதிர்த்தனர். இதன்பின்னர், அரசாங்கமும் மரண தண்டனை விடயத்தில், அவ்வளவு அக்கறை காட்டவில்லை.
ஜனாதிபதி சிறிசேன, கடந்த மாதம் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு விஜயம் செய்தார். அந்நாட்டு ஜனாதிபதி டுடர்டே, போதைப்பொருட்களுக்கு எதிராக, நடத்திய போராட்டத்தின் போது, சுமார் 2,000 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஜனாதிபதி சிறிசேன, தமது விஜயத்தின் போது, போதைப்பொருட்களுக்கு எதிரான, பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் நடவடிக்கைகளைப் பாராட்டினார்; இது உலகத்துக்கே முன்னுதாரணம் எனக் கூறினார்.
இதனால், உலகின் பல மனித உரிமை அமைப்புகளின் விமர்சனத்துக்கும் ஆளானார். ஆனால், ஜனாதிபதி சிறிசேன அதனால் பின்வாங்கவில்லை. போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கான மரண தண்டனையை நிறைவேற்றுவதில் அவர் உறுதியாகவே இருக்கிறார். கடந்த ஆறாம் திகதி, நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதும், அவர் அந்த உறுதிப்பாட்டை வெளியிட்டார்.“இரண்டு மாதங்களில், போதைப்பொருள் தொடர்பான குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவேன்” என, அவர் அப்போது அறிவித்தார். மாகந்துரே மதுஷ் உள்ளிட்டவர்கள், அதற்கு முதல் நாளே கைது செய்யப்பட்டு இருந்தனர்.
மரண தண்டனை மூலம், குற்றங்களைத் தடுக்க முடியாது என்பது மனித உரிமை செயற்பாட்டாளர்களின் வாதமாகும். இதுபெரும் சர்ச்சைக்குரிய விடயமாகும். ஏனெனில், புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன், மரண தண்டனை மூலம், குற்றங்களை வெகுவாகக் குறைத்தவர். அவரது செல்வாக்கு இருந்த காலத்தில், வடக்கிலும் கிழக்கிலும் புலிகளின் கட்டுப்பாட்டில் இல்லாத பிரதேசங்களிலும் குற்றச் செயல்கள் குறைந்திருந்தன.
இதைப் பாராட்டச் சென்றதன் விளைவாக, அண்மையில் விஜயகலா மகேஸ்வரன், தமது இராஜாங்க அமைச்சர் பதவியையும் இழந்தார். மரண தண்டனை மூலம், புலிகள் குற்றச் செயல்களை வெகுவாக குறைத்த போதிலும், குற்றம் செய்யும் மனப்பான்மையை, இல்லாதொழிக்க முடியவில்லை. அதுவே, இப்போது தெற்கைப் போலவே, வடக்கிலும் குற்றங்கள் அதிகரிக்கக் காரணமாகியுள்ளது.
சமூகத்தில் பலர் குற்றங்களின் பால் தள்ளப்படுகிறார்கள். சமூக அமைப்பு, அவ்வாறு தான் இருக்கிறது. பெரும்பாலும், குறைந்த வருமானம் உள்ளவர்களே இந்த நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். பாரியளவில் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோர், பாரியளவில் ஏனைய கடத்தல் தொழிலில் ஈடுபடுவோர் போன்ற ஒரு சிலரைத் தவிர்ந்த, குற்றமிழைக்கும் எனைய அனைவரும், இந்தக் குறைந்த வருமானம் பெறுவோராகவே இருக்கிறார்கள். மதுஷும் ஆரம்பத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து, சிறுசிறு தொழில்களைச் செய்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு வருடமும் பல இலட்சம் பேர், பாடசாலையை விட்டு இடைநடுவே விலகிவிடுகிறார்கள். மேலும், பல இலட்சக் கணக்கானவர்கள் சாதாரண தரம், உயர் தரம் ஆகிய பரீட்சைகளுக்குப் பின்னர், கல்வியைத் தொடர முடியாமல், அல்லது தொடர்ந்து என்ன கல்வியைக் கற்பது என்ற வழிகாட்டல் இல்லாமல், கல்வியைத் துறக்கிறார்கள்.
இந்த இலட்சக் கணக்கானவர்களை உள்ளீர்த்துக் கொள்ளும் வகையிலான பொருளாதார அமைப்பொன்று, நாட்டில் இல்லை. ஆனால், அவர்களில் சிலர், தாமாக ஏதோ ஒரு வகையில், கல்வித் துறையில் தொடர்ந்து நிலைத்திருக்கிறார்கள். மற்றும் சிலர், தமது உறவினர்கள், நண்பர்கள் மூலமாகப் பொருளாதாரத் துறையில் நல்ல இடங்களைப் பிடித்துக் கொள்கிறார்கள்.
மிகப் பெரும்பாலானோர் பொய்யும் புரட்டும் நிறைந்த ஓட்டோ செலுத்துதல், வீதியோர வியாபாரம் போன்ற, சிறியளவிலான சுயதொழில்களில் மிகக் கஷ்டத்துடன் ஈடுபடுகிறார்கள். மற்றவர்கள், கிரிமினல்களுக்கு இரையாகின்றனர். அவர்கள் தான், போதைப்பொருள்கள், கேரள கஞ்சா போன்ற சட்டவிரோத வர்த்தகம், விபசாரம் போன்ற சமூகவிரோத வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அவர்களாக விரும்பி, அந்தக் குற்றச்செயல்களைத் தொழிலாகத் தேர்ந்தெடுக்கவில்லை. சமூகம் தான், அவர்களை அந்த நிலைக்குத் தள்ளியது. எனவே தான், வசதி படைத்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், பாதாள உலகச் செயற்பாடுகளில் ஈடுபடுவதில்லை. எனவே, இந்த நிலை தொடரத்தான் செய்யும்.
அதற்காகப் பாதாள உலக செயற்பாடுகளில் ஈடுபடுவேரைத் தண்டிக்கக் கூடாது என்று எவராலும் கூறவும் முடியாது.
போதைப்பொருள் குற்றங்களை ஏன் தடுக்க முடியாது?
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, போதைப்பொருள் குற்றங்களுக்கான மரண தண்டனையை நிறைவேற்ற ஆரம்பித்தாலும், நாட்டில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள், ஓரளவுக்குக் கட்டுப்படுமேயல்லாது, பூரணமாக நின்றுவிடும் எனக் கூற முடியாது. ஏனெனில், அக் குற்றங்களுக்கான அடிப்படைக் காரணங்கள், அத்தண்டனை மூலம் அகற்றப்படுவதில்லை.
போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் மட்டுமன்றி, ஏனைய குற்றங்களுக்கும் விளைநிலமாக அமையும் மூன்று முக்கிய காரணிகள் இருக்கின்றன.
ஒன்று, சமூகத்தில் குற்றமிழைக்கத் தூண்டும் வறுமை, வேலை வாய்ப்பின்மை, போதிய கல்வியறிவின்மை போன்ற சமூகக் காரணிகளாகும்.
இரண்டாவதாக, தாராள பொருளாதார முறைமையும் குற்றங்களுக்குத் தூண்டுதலாக அமைகிறது. ஏனெனில், அது சுகபோக பொருட்களைக் காட்டி, ஏழைகளினது ஆசையைத் தூண்டிவிடுகிறது. அதேபோல், தாராள பொருளாதாரத்தின் கீழ், ஏற்றுமதி, இறக்குமதிக் கட்டுப்பாடுகள் பல தளர்த்தப்பட்டுள்ளன.
எல்லாவற்றுக்கும் மேலாக, குற்றங்கள் மூலம் அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் இலாபமடையும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் மிகவும் பலம் வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். இவ்விரு சாராரும், குற்றத் தடுப்பு இயந்திரத்தை, ஏதோ ஒரு வகையில் தமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில், சர்வசாதாரணமாக பாரியளவிலான குற்றச் செயல்கள் இடம்பெற்று வந்தன. அக்காலத்தில், அரசியல்வாதி ஒருவர், நூறு பெண்களை வல்லுறவுக்கு உட்படுத்திவிட்டு, ஹோட்டல் ஒன்றில் அதைக் கொண்டாடியதாக, அக்காலத்தில் செய்திகள் வௌியாகி இருந்தன.
பிரிட்டிஷ் உல்லாசப் பிரயாணி ஒருவரைக் கொன்றுவிட்டு, அவரது காதலியைக் கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்திய ஒரு பிரதேச அரசியல்வாதியையும் அவரது சகாக்களையும் கைது செய்வதற்கு, பிரிட்டிஷ் இளவரசர் சார்ள்ஸ் தலையிட வேண்டியதாயிற்று.
போதைப்பொருள் தொடர்பாக, அரசியல்வாதி ஒருவரின் வீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, ஜனாதிபதியே அவரைத் தேடிச் சென்று, அவரைப் பகிரங்கமாகக் கட்டித் தழுவினார். அத்தோடு, விசாரணைகளின் தலைவிதி தீர்மானிக்கப்பட்டது.
போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுவதாகக் கூறப்படும், கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த மற்றோர் அரசியல்வாதியும் அக்காலத் தலைவர்களுடன் மிக நெருங்கிய சகாவாக இருந்தார்.
தற்போதைய அரசாங்கம், பாரியளவிலான ஊழல் மோசடிகளைத் தடுப்பதாக வாக்குறுதியளித்தே பதவிக்கு வந்தது. கடற்படைக்குரிய மிகவும் இலாபகரமான கடற்பாதுகாப்புத் தொழிலைத் தனியாருக்கு வழங்க, ‘எவன்காட்’ நிறுவனம் உருவாக்கப்பட்டது என்பது அப்போது முன்வைக்கப்பட்ட முக்கியமானதொரு குற்றச்சாட்டாகும்.
ஆனால், இந்த அரசாங்கம் பதவிக்கு வந்தவுடன், ‘எவன்காட்’ நிறுவனத்தின் சட்ட ஆலோசகர்களாகச் செயற்பட்ட இருவருக்கே, சட்டம், ஒழுங்கு, நீதி அமைச்சுகளை வழங்கியது.
‘எவன்காட்’ விவகாரம் தொடர்பாக, மூன்று முன்னாள் கடற்படைத் தளபதிகள் விசாரிக்கப்பட்ட போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலஞ்ச ஆணைக்குழுவையும் இரகசிய பொலிஸாரையும் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவையும் பகிரங்கமாகச் சாடினார். அதன் விளைவாக, இலஞ்ச ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாகச் செயற்பட்ட தில்ருக்ஷி விக்கிரமசிங்க தமது பதவியைத் துறந்தார்.
நாட்டுக்கு பெரும் நட்டத்தை ஏற்படுத்திய மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தின் போது, குற்றவாளிகளைப் பாதுகாக்க, ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த பலர், பெரு முயற்சி எடுத்தமை சகலரும் அறிந்த விடயம்.
அந்த விவகாரத்தின், முதலாவது சந்தேக நபராக வேண்டிய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரன், எவ்வளவு இலகுவாகத் தப்பிச் சென்றார் என்பது நாடே அறிந்த உண்மையாகும்.
Average Rating