ஜெனீவாவை நோக்கிய ‘மறப்போம் மன்னிப்போம்’!! (கட்டுரை)
‘காலம் தாழ்த்திய நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம்’ என்ற அனுபவ மொழிக்கிணங்க, எந்த விடயத்துக்குமான நீதியாக இருந்தாலும், அது உரிய காலத்தில் வழங்கப்படும் பட்சத்திலேயே, அதற்கான பெறுமதியும் தீர்வும் தர்மத்துக்கும், நியாயத்துக்கும் அதற்கும் மேலாக இந்தப் பிரபஞ்சத்தை இயக்கும் சக்திக்கும் ஏற்புடையதாக இருக்கும்.
இலங்கையைப் பொறுத்தவரையில், உள்ளக விசாரணைகளின் ஊடான சாதாரண வழக்குகளும் சரி, பாரிய வழக்குகளுக்கும் சரி, கால நீடிப்பின் பின்னரே, தீர்ப்புக் கிடைக்கின்ற நிலை காணப்படுகின்றது. அது, இலங்கை நீதிச்சேவையின் பலவீனமான, இறுக்கமற்ற தன்மையில் காரணமானது என்பது, அதுகுறித்து முன்வைக்கப்படும் விமர்சனம் ஆகும்.
இந்நிலையில், தமிழ் மக்களின் வரலாற்றுத் தடத்தில் பதியப்பட்ட முள்ளிவாய்க்கால் கொடூரங்களுக்கான நீதி, எந்தப் பொறிமுறையின் பிரகாரம் நடத்தப்பட வேண்டும் என்ற, ஆரம்பப்புள்ளி விடயமே முடிவுக்கு வராமல், 10 வருடங்கள் கடந்து விட்டன. இந்தவிடயத்தில், நீதி வழங்குவதற்குள்ள அக்கறை குறித்தும் அது, எந்தளவுக்கு வலுவிழந்து செல்கிறது என்பது தொடர்பிலும் சிந்திக்க வேண்டிய தேவை உள்ளது.
இவ்விடத்தில், குறித்த கொடூரங்களுக்கான நீதி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்குமா, குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைக்குமா? அதன் சாத்தியப்பாடுகள் குறித்த கோணத்தில் பார்க்கின்றபோது, சற்றுச் சஞ்சலத்துக்குரிய விடைகளே கிடைக்கப் பெறுகின்றன.
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் முன்கொண்டு செல்லப்பட்ட, இறுதி யுத்தம் தொடர்பான நீதி விசாணைக்கான ஆதரவுக் களம், அது தொடர்பான ஆக்கபூர்வமான செயற்பாடுகள், எந்தளவுக்குத் தற்போதும் சிரத்தையுடன் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது என்ற கேள்வி எழுகிறது. இந்த விடயம் தொடர்பில், தமிழ் மக்களால் செலுத்தப்படும் கவனம், தமிழ் அரசியல் தலைமைகளால் செலுத்தப்படுவதில்லை என்ற உண்மை கசக்கத்தான் செய்கிறது.
ஐ. நாவால், இலங்கைக்கு முன்வைக்கப்பட்ட நிலைமாறுகால நீதிப்பொறிமுறைகள், இன்று பின்பற்றப்படுவதாகவோ, அது தொடர்பான செயற்பாடுகள் இடம்பெறுவதாகவோ பதிவுகள், போதியளவில்லை காணப்படாத நிலை உள்ளது.
ஜெனீவா மனித உரிமைகள் போரவையின் கூட்டத்தொடர் ஆரம்பிப்பதற்கு சில நாள்களுக்கு முன்னர், ஆண்டு தோறும் நடத்தப்படும் சில கருத்தரங்குகளும் தென்னிலங்கை அரசியல்வாதிகளின் வடக்கு, கிழக்கு நோக்கிய படையெடுப்புகளும் ஜெனீவாவை ஏமாற்றும் களங்களாக, தமிழ் மக்களால் பார்க்கப்படுகின்றன.
குறிப்பாக, ஜெனீவா கூட்டத்தொடர் இடம்பெறும் காலப்பகுதிகளான மார்ச், செப்டெம்பர் மாதங்களுக்கு அண்மைய நாள்களில், வடக்கு நோக்கி மய்யம் கொள்ளும் தெற்கு அரசியல்வாதிகளின் பார்வை, நிலைமாறு கால நீதிக்கான பொறிமுறைகளைக் கொண்டமைந்துள்ளதா என்பதைச் சற்று அவதானிக்க வேண்டும்.
காணிகள் விடுவிப்பு, இன்றளவும் வடக்கிலும் கிழக்கிலும் முழுமையாக நிறைவேற்றப்படாத நிலையில், கேப்பாப்புலவில் இன்றுவரையும் இராணுவ முகாமுக்கு முன்பான மக்கள் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
ஆண்டுதோறும் பாதுகாப்புச் செலவீனங்களுக்காக அதிகளவான நிதியை ஒதுக்கீடு செய்யும் இலங்கை அரசாங்கம், மக்கள் காணிகளில் இருந்து, இராணுவ முகாம்களை அகற்றுக்கின்ற போது, மீள்குடியேற்ற அமைச்சிடம் நிதியைப் பெற்றே, மற்றைய முகாமை அமைக்கும் துர்ப்பாக்கிய நிலை காணப்படுகிறது.
எனினும், மீள்குடியேறிய மக்களுக்கான வீட்டுத்திட்டங்களுக்காக மட்டுப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீடுகளே வழங்கப்படுவதால், அந்த மக்கள் கடன் சுமைக்குள் தள்ளப்படும் சம்பவங்கள் நிகழ்தேறி வருகின்றன. இவை மீள்குடியேறிய மக்கள் மத்தியில், கடந்த கால நினைவுகளை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தும் செயற்பாடுகளுக்கு வழிசமைக்கின்றமையை எவரும் உணரத்தலைப்படவில்லை.
கேப்பாப்புலவு காணி விடுவிப்பு தொடர்பான விடயம், இதுவரை முழுமை பெறாத நிலையில், இறுதி யுத்தத்தில் கையளிக்கப்பட்டும் அதற்கு முன்னரான காலப்பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் போராட்டம் அவர்களது உறவுகளால் இன்றை வரை இரண்டு வருடங்களையும் கடந்து இடம்பெற்று வருகின்றது. இதற்கான தீர்வு கிடைக்காத நிலையிலேயே இப்போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் பெற்றோர் 18 பேர் வரையில் மரணித்திருக்கின்றார்கள்.
பல ஆணைக்குழுக்கள், ஜெனீவாவை மய்யப்படுத்தி காலத்துக்குக் காலம் அமைக்கப்பட்டு வந்தாலும் கூட, காணாமல் ஆக்கப்பட்டடோரின் உறவினர்கள் அதனை ஏற்றுக்கொள்ளும் நிலைப்பாட்டில் இல்லை. அவர்கள் இன்று இலங்கை அரசாங்கத்தை நம்புகின்ற நிலைப்பாட்டில் இருந்து, விலத்தியே உள்ளனர். இதனை, வெளிப்படையாகவே தெளிவுபடுத்தியுள்ள நிலையில், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் தங்களது விடயத்தில், நேரடியாகத் தலையீடுகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரி, பாரிய கவனயீர்ப்புப் போராட்டங்களை நடத்திவருகின்றனர்.
இந்நிலையிலேயே தமிழ்த் தலைமைகள் ஜெனீவா கூட்டத்தொடருக்கான அரசியல் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளனர். ஒரு சாரார் நீதி கோரிய போராட்டங்களையும் ஜெனீவா கால அவகாசத்தை இலங்கைக்கு வழங்ககூடாது என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளனர். மறுசாரார், கால அவகாசம், தேவையான விடயம் என்ற கருத்தை முன்வைத்து வருகின்றனர்.
வடக்கு நோக்கிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வருகையின்போது, கிளிநொச்சியில் வைத்து “மறப்போம் மன்னிப்போம்” என்ற, சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்தபோது, கூட்டமைப்பின் தலைமைகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது கருத்தை முன்வைக்காமை தொடர்பில், பலத்த விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கின்றார்கள்.
தமிழர்கள் மறக்கமுடியாத துன்பியலுக்குள் சிக்கிக்கொண்டுள்ள நிலையில், அதற்கான நீதி கோரிய தமது போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், அதை மறந்து விடுவது என்பது, எந்தளவுக்குச் சாத்தியப்பாடுகள் நிறைந்தது என்பது தொடர்பில், பாதிப்புக்குள்ளான சமூகத்தின் சார்பில் இருந்து நோக்கப்படவேண்டிய விடயமாகும்.
யுத்த நிறைவின் பின்னராக 10 ஆண்டுகளில் செயற்படுத்தப்பட்டிருக்க வேண்டிய பல நடைமுறைச்சாத்தியமான செயற்பாடுகளை, அரசாங்கம் செயற்படுத்தாத நிலையில், அதனூடான வெறுப்புணர்வுகள் தமிழர்களிடம் அதிகரித்தே உள்ளன.
சமாதானமாக வாழ வேண்டும் என்ற நிலைப்பாடு, தமிழ் மக்களுக்கு இருக்கின்றது என்ற கருத்தியலை வைத்து, அவர்கள் எதையும் மறந்து, மன்னித்து விடுவார்கள்; அதனூடாக அவர்கள் மீது இழைக்கப்பட்ட அநீதிகளை மறைத்து விடலாம் எனத் தமிழர் பகுதியில் வைத்தே வெளியிடும் துணிவை, பிரதமருக்கு யார் வழங்கி இருக்கின்றார்கள் என்ற சந்தேகம், கூட்டமைப்புக்கு எதிரான தமிழ்த் தலைமைகளால், பலமான கேள்வியாக இன்று முன்வைக்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ரணில் விக்கிரமசிங்கவின் கருத்து தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வமான எக் கருத்தையும் முன்வைக்காத நிலையில், எம். ஏ. சுமந்திரன், “பிரதமர் போர்க் குற்றம் நடத்ததாக ஏற்றுக்கொண்டுள்ளார் என்பது வரவேற்கத்தக்கது” என்ற கருத்தையும் தெரிவித்துள்ளார். இதேவேளை, பிரதமர் ‘மன்னிப்போம், மறப்போம்’ எனக் கருத்துத் தெரிவிக்கும்போது, குறுக்கிடவோ, எழுந்து வெளியேறவோ, ஏதாவதொரு எதிர்ப்பையோ சி. சிறிதரன் எம்.பி உட்பட அங்கிருந்த தமிழ்த் தேசியம் பேசும் அரசியல்வாதிகள் எவரும் முன்வரவில்லை.
“நாகரிகம் கருதி அமைதியாக இருந்தோம். எனினும், கடந்த காலத் தவறுகளை, மறப்போம் மன்னிப்போம் என தெரிவித்த கருத்தின் மூலம், தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைப் பிரதமர் மறைமுகமாக ஏற்றுக் கொண்டுள்ளார்” என விழுந்தும் மீசையில் மண்படாத கதையாகக் கூறி, தம்மைக் காப்பாற்றிக்கொள்ள முற்பட்டுள்ளார்கள்.
எனினும், இறுதி யுத்தத்தின் கொடூரங்களுக்கு நேரடியாக முகம்கொடுத்த போராளிகள், தமது ஜனநாயக போராளிகள் கட்சியின் அறிக்கையில் ஊடாகக் காட்டமான கருத்தை வௌிப்படுத்தி இருக்கிறார்கள். ‘ஓர் தேசிய இனத்தின் ஆன்மாவை சிதைக்கின்ற கருத்துகளைக் கூறி, அரசியல் காழ்ப்புணர்ச்சியை உமிழும் மிலேச்சத்தனமான அரசியல் பகடையாட்டத்தைக் காலாகாலமாக ஆட்சியாளர்கள் ஆடி வந்திருக்கிறார்கள்.
மீளிணக்கம், பொறுப்புக்கூறல் தொடர்பான சர்வதேச அழுத்தங்களைப் புறந்தள்ளும் தந்திரோபாய சொல்லாடல்களை உபயோகிப்பதன் மூலம், ஜெனீவாவில், இலங்கைக்கெதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை நீர்த்துப்போகச் செய்வதற்கான இராஜதந்திர மதிநுட்பத்தைப் பிரயோகிக்க பிரதமர் ரணில் முற்படுகின்றார்’ எனத் தமது ஆதங்கத்தைப் பதிவிட்டிருக்கின்றார்கள்.
இவ்வாறான கருத்துகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையிலேயே, எதிர்வரும் மாதம் ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது. இதன்போது, எவ்வாறான கருத்துகளை முன்வைத்து, மீண்டும் கால அவகாசத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்கின்ற கைங்கரியத்தில் இலங்கை அரசாங்கம் முனைப்பு காட்டி வருவது வௌிப்படையாகத் தெரிகிறது.
இந்நிலையில், அதற்குப் பக்கபலமாக சில தமிழ் தலைமைகளும் செயற்பட்டு வருகின்றமை, தமிழ் மக்கள் ஏங்கி நிற்கும் நீதி, கை நழுவிப்போக வழிசமைக்கப்பட்டு விடுமோ என்கின்ற ஐயப்பாட்டை, தோற்றுவித்துள்ளது என்பதே யதார்த்தம்.
Average Rating