இழுத்தடித்தல்!! (கட்டுரை )

Read Time:20 Minute, 48 Second

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, உரியகாலம் வருவதற்குக் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு முன்னரே, ஜனாதிபதித் தேர்தலை நடத்தினார். ஜோசியக்காரரின் கதையைக் கேட்டே அவர், அவ்வாறு செய்து, தோற்றுப் போனார் என்றாலும், அவரது அரசாங்கம் தேர்தல்களுக்காகப் பின்வாங்கியதாக விமர்சிக்கப்படுவது மிகக் குறைவாகும்.

ஆனால், தற்போதைய ஐ.தே.மு அரசாங்கம், குறிப்பாக மாகாண சபைகளுக்கான தேர்தலை இழுத்தடித்து வருகின்றது என்ற விமர்சனங்கள், பரவலாக எழுந்திருக்கின்றன.

13ஆவது அரசமைப்புச் சீர்திருத்தத்தின் பிரகாரம், 1988ஆம் ஆண்டு அறிமுகமான மாகாண சபைகள் முறைமையானது, மத்திய அரசாங்கத்திடம் குவிந்துள்ள அதிகாரத்தை, மாகாணங்களுக்குப் பிரித்துக் கொடுக்கும் கோட்பாட்டின் ஆகக் குறைந்த பட்ச ஏற்பாடு எனலாம். 13ஆவது திருத்தம், முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது வேறு கதை.

அது ஒருபுறமிருக்க, யுத்த காலத்தில் இணைந்த வடகிழக்கு மாகாணத்தில், மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படவில்லை என்பதுடன், ஏனைய மாகாணங்களிலும் தாமதங்கள் நிலவின. யுத்தத்துக்குப் பின்னர், இந்நிலைமைகளில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டதாகக் குறிப்பிட முடியும்.

இவ்வாறான ஒரு பின்னணியில், 2015ஆம் ஆண்டு, நல்லாட்சி என்ற அடைமொழியோடு ஆட்சிக்கு வந்த இன்றைய அரசாங்கம், தேர்தல் முறைமையை மாற்றி அமைத்தகையோடு, உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டுவந்தது. அதன்பிறகு, மாகாண சபைகளின் தேர்தல், ஆட்சியதிகாரம் உள்ளிட்ட முன்மொழிவுகளைக் கொண்டதாக, அரசமைப்பில் 20ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்தது.

மாகாண சபைகளுக்கு, ஒரே தினத்தில் தேர்தல் நடத்தப்படல் வேண்டும், என்ற விடயத்தை, 20ஆவது திருத்தம் வலியுறுத்துவதாகச் சொல்லப்பட்டது. அதாவது, 20ஆவது திருத்தத்தின் நோக்கம், அதுமட்டுமே என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்த முனைந்த அரசாங்கம், அதில் தோற்றுப் போனது என்றே கூற வேண்டும். ஏனெனில், அதில் வேறுபல விடயங்களும் உள்ளடங்கி இருந்தன.

அதாவது, அனைத்து மாகாண சபைகளும் கலைக்கப்பட்டதாக இருக்க வேண்டிய திகதி, நாடாளுமன்றத்தால் தீர்மானிக்கப்படும் என்றும், அத்திகதி இறுதியாக நிறுவப்பட்ட மாகாண சபையின் பதவிக்கால முடிவு திகதிக்குப் பின்னராக இருக்கக் கூடாது என்றும், இது குறிப்பிட்டிருந்தது.

தேர்தல் நடைபெறும் திகதிக்கு முன்னர், முடிவடையும் மாகாண சபையின் ஆட்சிக்காலம், தேர்தல் திகதி வரை நீடிக்கப்பட்டதாகக் கருதப்படுகின்ற அதேநேரத்தில், குறித்துரைக்கப்பட்ட தேர்தல் திகதியில் முடிவடையாதிருக்கின்ற மாகாண சபையின் ஆட்சிக்காலம் அத்திகதியில் முடிவடைதல் வேண்டும் என்றும் இதில் விதந்துரைக்கப்பட்டிருந்தது.

இதற்கு மேலதிகமாக, ஏதேனும் காரணத்தால், மாகாண சபையொன்று கலைக்கப்படும் பட்சத்தில், அந்தச் சபையின் தத்துவங்கள், குறித்துரைக்கப்பட்ட தேர்தல் திகதி வரை, நாடாளுமன்றத்தால் பிரயோகிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மையில், நாட்டிலுள்ள ஒன்பது மாகாணங்களுக்கும் ஒரேநாளில் தேர்தல் நடைபெறுவது நல்ல விடயமே. ஆனபோதும், கடைசியாக ஒரு மாகாண சபையின் ஆட்சிக்காலம் முடிவடையும் வரைக்கும், மற்றைய எந்தச் சபைக்கும் தேர்தல் நடத்தாமல் தாமதிக்க வேண்டும் என்ற உள்ளர்த்தத்தை இத்திருத்தம் கொண்டிருந்தது.

இந்நிலையில், கிழக்கு மாகாண சபை கண்மூடித்தனமாக அத்திருத்தத்தை ஆதரித்த போதும், வடமாகாண சபை, பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளாமல் நிராகரித்ததுடன், ஊவா, தென் போன்ற வேறுசில மாகாண சபைகள் திருத்தத்தைத் தோற்கடித்தன. அத்துடன், அதற்கெதிராக உயர்நீதிமன்றத்தில் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.

அரசாங்கம் தேர்தலைப் பிற்போடுவதற்காகவே, இவ்வாறான முயற்சியொன்றை மேற்கொள்வதாக, ஒன்றிணைந்த எதிரணி குற்றஞ்சாட்டிக் கொண்டிருந்த சூழலில், மேற்சொன்ன சூழலமைவுகளில் 20ஆவது திருத்தத்தை நிறைவேற்றும் சாத்தியங்கள் குறைவானது என்பதை உணர்ந்து, அம்முயற்சியைக் கைவிட்ட அரசாங்கம், மாற்று நடவடிக்கை ஒன்றை எடுத்தது எனலாம்.

அதன்படி, 1988ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தைத் திருத்துவதற்கான முயற்சியில், அரசாங்கம் தீவிரமாகச் செயற்பட்டது.

மாகாண சபைகள் தேர்தல்கள் (திருத்தம்) தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானியில், அரசமைப்பின் 154உ உறுப்புரையின், குறிப்பிட்ட ஒரு பகுதியானது, ‘அரசமைப்பின் 154ஈஈ எனும் உறுப்புரையின் நியதிகளின் படி குறித்துரைக்கப்பட்ட திகதியிலிருந்து ஒரு வாரத்துக்குள் எல்லா மாகாண சபைகளுக்குமான தேர்தல் ஒன்றை நடத்துதல் என்று திருத்தப்படுகின்றது’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதாவது, 20ஆவது திருத்தத்தில் கொண்டுவர எத்தனித்த, ‘ஒரே நாளில் தேர்தல் நடத்துதல்’ என்ற விடயத்தை, மாகாண சபைகள் தேர்தல் (திருத்தச்) சட்டத்தின் ஊடாக, அரசாங்கம் கொண்டுவந்தது எனலாம். இத்திருத்தச் சட்டம், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டமையால், இப்போது ஒரே தினத்திலேயே மாகாண சபைத் தேர்தலை நடத்தவேண்டிய நியதி காணப்படுகின்றமை நினைவில் கொள்ளத்தக்கது.

நாட்டிலுள்ள மாகாண சபைகளுக்கு, இதற்கு முன்னர் தேர்தல் இடம்பெற்ற திகதியின் அடிப்படையில், ஐந்து வருட ஆட்சிக்காலத்தை நிறைவுசெய்த ஆறு மாகாண சபைகளின் ஆயுட்காலம் நிறைவடைந்து விட்டது. மூன்று சபைகளே, காலாவதியாகும் காலத்தை எதிர்பார்த்தனவாக இன்னும் ஆட்சியில் உள்ளன. அந்தவகையில், கிழக்கு, வடமத்திய, சப்ரகமுவ மாகாணங்களின் ஆட்சிக்காலம், 2017இல் முடிவுக்கு வந்துவிட்டது. வடக்கு, வடமேற்கு, மத்திய மாகாணங்களின் ஆயுட்காலம், கடந்த வருடம் நிறைவடைந்தது. இந்தச் சபைகள் எல்லாம் இப்போது மாகாண ஆளுநர்களின் அதிகாரத்தின் கீழ் இருக்கின்றன.

இந்நிலையில், தெற்கு, மேற்கு ஆகிய மாகாண சபைகளின் ஆட்சிக்காலம், இன்னும் ஓரிரு மாதங்களுக்குள் நிறைவடைய இருக்கின்றது. அத்துடன், ஊவா மாகாணத்துக்குத் தேர்தல் நடைபெற்று, செப்டெம்பர் 20 உடன் ஐந்து வருடங்கள் நிறைவடைகின்றன.

இதற்கிடையில், தேர்தல் முறையில் மாற்றத்தைக் கொண்டு வந்த அரசாங்கமானது மாகாணங்களுக்கும் கலப்பு முறையில் தேர்தலை நடத்துவதற்கு முன்னேற்பாடாக மாகாண எல்லைகளை மீள்நிர்ணயம் செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டது. அதற்காக நியமிக்கப்பட்ட குழுவால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், முஸ்லிம்களுக்குப் பாதகமான பல முன்மொழிவுகள் இருப்பதாக விசனம் தெரிவிக்கப்பட்டு வந்தது.

அதேநேரத்தில், திட்டமிட்டபடி அதைக் குறுகிய காலத்துக்குள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாத நடைமுறைச் சிக்கலை அரசாங்கம் எதிர் கொண்டுள்ளது எனலாம். அப்படி நிறைவேற்ற முடியாவிடின், பழைய விகிதாசார முறையிலேயே மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான அதிகாரக் குத்துவெட்டுகள், அறுதிப் பெரும்பான்மையுடனான அரசாங்கம் ஒன்றை நிறுவுவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளமை போன்ற நெருக்கடியான இன்றைய களச் சூழலில், அரசாங்கம் குறிப்பாக, மாகாண சபைத் தேர்தல் ஒன்றை நடத்துவதற்குப் பின்வாங்குவதாகப் பரவலான அபிப்பிராயங்கள் வெளியிடப்படுகின்றன.

அத்துடன், தேசிய அரசாங்கம் பற்றியும் ஜனாதிபதித் தேர்தல், அதன் வேட்பாளர் யார் என்பது பற்றியெல்லாம் பேசப்படுகின்றதே தவிர, மாகாண சபைத் தேர்தல் குறித்து திட்டவட்டமான அறிவிப்பு வெளியானதாகத் தெரியவில்லை. இந்நிலையில், மிக அண்மையில் வெளியாகியுள்ள இரண்டு அறிவிப்புகள் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியன.

“எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துக்குள் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படவில்லை என்றால், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் என்ற எனது பதவியை இராஜினாமாச் செய்வேன்” என்று மஹிந்த தேசப்பிரிய கூறியிருக்கின்றார்.

அதன்பிறகு கடந்த சில தினங்களுக்கு முன்னர், நிகழ்வொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி, “கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி மாகாண சபைத் தேர்தல் குறித்து ஆராய்வோம்” என்ற அறிவிப்பை வெளியிட்டியிருக்கின்றார். ஜனநாயக விரும்பிகளான மக்களுக்கு, இது ஆறுதலை ஏற்படுத்தியிருக்கின்றது எனலாம்.

நாட்டிலுள்ள ஒன்பது மாகாண சபைகளில், ஆறு மாகாண சபைகளின் ஆட்சிக்காலம், ஏற்கெனவே முடிவடைந்து விட்டது. மீதமிருக்கின்ற இரண்டு சபைகளினதும் ஆயுட்காலம் மார்ச் மாதத்தோடு முடிவுக்கு வரவுள்ளது. ஊவா மாகாண சபையின் ஆட்சி செப்டெம்பர் மாதத்தோடு முடிவுக்கு வருகின்றது.

இதன்படி, ஆறு மாகாணங்களிலுள்ள மக்கள் ஐந்து வருடங்களுக்கு ஆட்சி செய்வதற்கு வழங்கிய ஆணை காலாவதியாகி விட்டது. மேலும், மூன்று மாகாணங்களிலுள்ள மக்களின் ஆணையும் காலாவதியாகப் போகின்றது என்பதே இதன் அர்த்தமாகும்.

மார்ச் மாதத்தோடு, எட்டு மாகாண சபைகளின் காலம் முடிந்துவிடுமானால், மீதமுள்ள ஊவா மாகாண சபையை முன்கூட்டியே கலைத்துவிட்டு, திருத்தப்பட்ட மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தின் பிரகாரம் ஒரேநாளில் மாகாண சபைத் தேர்தலை நடத்த எந்தத் தடையுமில்லை. ஒரு வருடத்துக்கும் குறைவான ஆயுட்காலத்தையே கொண்டுள்ள அரசாங்கத்துக்கு அதுவே சிறந்த தெரிவாகவும் இருக்கும்.

அண்மையில், ரணில் விக்கிரமசிங்க, மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோருக்கு இடையிலான அதிகாரப் போட்டி வந்தபோது, அதை ஜனநாயகத்துக்கான போராட்டம் என்றும் மக்கள் வழங்கிய ஆணையை உறுதி செய்யவேண்டும் என்றும் கூறியே, ஐ.தே.கவும் முஸ்லிம், தமிழ்க் கட்சிகளும் களத்தில் இறங்கிப் போராடின. உரிய காலத்தில் தேர்தலை நடத்துவது அதைவிட, ஜனநாயகத் தன்மை வாய்ந்தது.

எனவே, இனியும் மாகாண சபைத் தேர்தலை இழுத்தடிக்கக் கூடாது. இறைமையைத் தம்வசம் வைத்திருப்பவர்களான மக்களின் அடிப்படை உரிமையான வாக்குரிமையூடாக, மாகாணங்களை ஆட்சி செய்வதற்கான ஆணையைப் புதுப்பித்துக் கொள்ளும் விதமாக, மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்.

இரு கருத்துகள்: ஜனாதிபதி மைத்திரியும் தவிசாளர் மஹிந்தவும்

மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெற வேண்டும் என்ற, மக்களின் எதிர்பார்ப்புக்கு சமாந்தரமாக, உரிய காலத்தில் அது நடைபெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கின்றது. இந்தச் சூழ்நிலையில், நாட்டின் ஜனாதிபதி, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆகியோர் தெரிவித்துள்ள கருத்துகள் முக்கியமானவையாகத் தோன்றுகின்றன.

“இன்னும் இரண்டு வாரங்களுக்குள் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டி, மாகாண சபைத் தேர்தல்கள் குறித்து ஆராய்ந்து, அறுதியும் உறுதியுமான ஒரு தீர்மானத்தை எடுக்கப் போகிறேன்” என்று இவ்வாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளரான மஹிந்த தேசப்பிரிய, “இந்த வருடம் செப்டெம்பர் மாதத்துக்குள் மாகாண சபைத் தேர்தல் இடம்பெறவில்லை என்றால், நான் வகித்துவரும் தவிசாளர் பதவியில் இருந்து இராஜினாமாச் செய்வேன்” என்று சற்றுக் காட்டமான அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையிலேயே, ஜனாதிபதி மேற்கண்ட விதத்தில், அமைச்சரவையில் உறுதியான கருத்தைத் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், “முன்கூட்டியே தேர்தலை நடத்தும் முட்டாள்தனமான செயலைச் செய்து, நான் தோற்றுப் போனதுபோல, நீங்களும் செய்ய வேண்டாம்” என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, தனக்குக் கூறியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அண்மையில் உரைநிகழ்த்தியதாகவும் இன்னுமொரு தகவல் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.

எவ்வாறாயினும், மாகாண சபைத் தேர்தல்களை நடத்தும் உத்தேசத்துடனேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சவையில் மேற்படி கருத்தை வெளியிட்டுள்ளார். அந்த அடிப்படையில், கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சில முக்கிய விடயங்கள் ஆராயப்படலாம்.

குறிப்பாக, பழைய முறையில் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதா? இல்லை புதியமுறையிலா? என்பது குறித்துப் பரிசீலிக்கப்படலாம். ஏனெனில், பழைய முறையில் நடத்துவதென்றால் சட்டத்தைத் திருத்த வேண்டும். அத்துடன், புதிய முறையில் என்றால், எல்லை மீள்நிர்ணயச் சிக்கலுக்கு முடிவுகாண வேண்டும்.
தேர்தல் நடத்துவதாயின் மீதமாகவுள்ள மாகாணசபைகளின் ஆயுட்காலம் நிறைவுக்கு வரவேண்டும்; அன்றேல், கலைக்கப்பட வேண்டும். அத்துடன் மாகாணஆளுநர்களின் சம்மதம் பெறுதல், ஏனைய ஒழுங்கு முறைகள் குறித்தும் கட்சித் தலைவர்கள் கலந்துரையாடும் வாய்ப்புள்ளது.

முஸ்லிம்களின் எண்ணம்

மாகாண சபைத் தேர்தலொன்று நடைபெறுமாயின், அதற்கான வாக்கெடுப்பைப் பழைய விகிதாசார முறைப்படியே நடத்த வேண்டும் என்பதே, முஸ்லிம்களின் எண்ணமாக இருக்கின்றது.

மாகாண எல்லை மீள்நிர்ணயத்துக்கான பரிந்துரையை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் இறுதி அறிக்கையானது, அக்குழுவின் உறுப்பினராகப் பதவி வகித்த பேராசிரியர் மர்ஹூம் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் முன்னெச்சரிக்கை செய்தது போலவே, முஸ்லிம்களுக்குப் பாதகமான பல பரிந்துரைகளை உள்ளடக்கி இருக்கின்றது.

முன்பிருந்த விகிதாசாரத் தேர்தல் முறைமையைப் போலேனும், முஸ்லிம்களின் பிரதிநிதித்துவங்களை உறுதிப்படுத்தும் விதத்தில், மாகாணங்களினதும் அதற்குள் அடங்கும் தொகுதிகளினதும் எல்லைகள் பரிந்துரை செய்யப்படவில்லை. அத்துடன், அதே காரணத்துக்காக இரட்டை அங்கத்தவர் தொகுதிகளையும் அக்குழு முன்மொழியவில்லை.

எனவே, இவ்வாறான குறைபாடுகள் இருக்கின்ற நிலையில் புதிய கலப்பு முறையில் மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றால், முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம், பொதுவாக நாடு தழுவிய ரீதியிலும் அதிலும் குறிப்பாக வடக்கு, கிழக்குக்கு வெளியில் வெகுவாகக் குறைவடையும் என்று முஸ்லிம்கள் நியாயமாக அச்சப்படுகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கழுத்து வலி, கீழ் முதுகு வலி நீங்க சுலபமான வழிகள்!! (மகளிர் பக்கம்)
Next post ஆண்களே…மனம் தளர வேண்டாம்!(அவ்வப்போது கிளாமர்)