டிரம்ப் ஒரு தீவிரவாதி!! (உலக செய்தி)
டொனல்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் ஒரு ´தீவிரவாதிகளின் குழு´ என்று விமர்சித்துள்ள வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ, தங்கள் நாட்டில் நிலவும் நெருக்கடிக்கு அமெரிக்காவே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
“வெள்ளை மாளிகையில் உள்ள தீவிரவாதிகள் வெனிசுவேலாவில் ஆட்சிக்கவிழ்ப்பை நடத்த உறுதியேற்றுள்ளனர்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
பிபிசி செய்தியாளர் ஒர்லா குரின் உடனான பிரத்யேக பேட்டி ஒன்றில், மனிதாபிமான உதவிகள் தங்கள் நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கப் போவதில்லை என்றும், அது தங்கள் நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதை அமெரிக்கா நியாயப்படுத்துவதற்கான வாய்ப்பாக அமையும் என்றும் கூறினார்.
“வெனிசுவேலாவைக் கைப்பற்றுவதற்கான போர் வெறியுடன் அவர்கள் இருக்கிறார்கள்,” என்று மதுரோ தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் ஹுவான் குவைடோவை அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகளின் அரசுகள் இடைக்கால அதிபராக அங்கீகரித்துள்ளன.
விரைவில் ஜனாதிபதி தேர்தலை நடத்துமாறு சர்வதேச அழுத்தங்களுக்கு மதுரோ உள்ளாகியுள்ளார்.
வெனிசுவேலாவில் பொருளாதார நெருக்கடி மோசமாகிவரும் சூழலில், மனித உரிமை மீறல்களும், ஊழலும் அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
அரசுக்கு எதிரான புதிய போராட்டங்களைத் தொடங்க குவைடோ கடந்த செவ்வாய்க்கிழமை அழைப்பு விடுத்தார்.
குவைடோவை இடைக்கால ஜனாதிபதியாக அங்கீகரித்த முதல் சில நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. ஏற்கனவே மோசமாக உள்ள அமெரிக்கா – வெனிசுவேலா இடையிலான உறவு, இதனால் மேலும் மோசமடைந்தது.
அமெரிக்கா உடனான தூதரக உறவுகளை வெனிசுவேலா முறித்துக்கொண்டுள்ள நிலையில், ´ ´´வெனிசுவேலா மீது ராணுவ நடவடிக்கை எடுப்பதும் ஒரு தேர்வாக இருந்தது,´´ என்று டிரம்ப் கூறியிருந்தார்.
அதிகமாக ஊடகங்களைத் தவிர்க்கும் மதுரா, “வெள்ளை மாளிகையில் உள்ள இந்தத் தீவிரவாதிகள் குழு, உலகெங்கும் உள்ள வலிமையான மக்கள் கருத்தால் தோற்கடிக்கப்படும்,” என்று நம்புவதாகக் கூறியுள்ளார்.
வெனிசுவேலாவின் முக்கிய வருவாய் ஆதாரமாக உள்ள அந்நாட்டின் அரசு எண்ணெய் நிறுவனமான பி.டி.வி.எஸ்.ஏ-க்கு எதிரான நடவடிக்கைகள் உள்பட, வெனிசுவேலாவுக்கு எதிரான பொருளாதார நடவடிக்கைகளை அமெரிக்கா எடுத்து வருகிறது.
“டிரம்ப் ஒரு வெள்ளை நிறவெறியர். அவர் பொது வெளியில் வெளிப்படையாக அவ்வாறு பேசுகிறார். அவர்கள் எங்களை வெறுக்கிறார்கள். எங்களை சிறுமைப் படுத்துகிறார்கள். ஏனெனில் அவர்களுக்கு அவர்களின் நலன்களும் அமெரிக்காவின் நலன்களும் முக்கியம்,” என்று கூறினார் மதுரோ.
கடந்த சில ஆண்டுகளாகவே அடிப்படைப் பொருட்களான உணவு மற்றும் மருந்துக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
சிக்கல் தீவிரமான 2014 முதல், மக்கள்தொகையில் சுமார் 10% உள்ள 30 லட்சம் மக்கள் வெனிசுவேலாவை விட்டு வெளியேறியுள்ளனர் என்கிறது ஐ.நா.
சுமார் மூன்று லட்சம் வெனிசுவேலா மக்கள் இறக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக குவைடோ கூறுகிறார்.
2013 முதல் பதவியில் இருக்கும் மதுரா, கடந்த ஆண்டு மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். எனினும், தேர்தல் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
எதிர்க்கட்சியைச் சேர்ந்த தேசிய அவையின் தலைவர் குவைடோ தம்மை இடைக்கால அதிபராக ஜனவரி 23 அன்று அறிவித்துக்கொண்டார்.
Average Rating