கிச்சன் டைரீஸ்!! (மகளிர் பக்கம்)

Read Time:17 Minute, 45 Second

முட்டை டயட் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நம் ஊருக்கு இது ஒன்றும் புதிதல்ல. பழங்காலத்தின் குஸ்தி பயில்வான்கள், சிலம்பம், மற்போர் போன்ற பாரம்பரிய மார்ஷியல் ஆர்ட் வீரர்கள் மேற்கொண்ட டயட்டின் இன்னொரு வடிவம்தான் இந்த Egg Diet. அதிகப்படியான புரோட்டின், அளவான கொழுப்பு, குறைவான கார்போஹைட்ரேட், குறைவான கலோரி. இதுதான் எக் டயட்டின் செயல் திட்டம். பெயரே சொல்வதைப் போல முட்டைதான் இந்த டயட்டின் நாயகன். முட்டை டயட் என்பது ஒன்றல்ல. பலவிதமான வகைகள் உள்ளன. அதுபோலவே, எந்தவிதமான முட்டை டயட்டிலும் எல்லோருக்கும் பொதுவான அளவுகள் கிடையாது.

டயட் மேற்கொள்பவரின் வயது, எடை, உயரம், பால், உடல் நிலை ஆகியவற்றுக்கு ஏற்ப டயட்டின் விதமும் மாறுபடும். ஸ்டார்ச் நிறைந்த கார்போஹைட்ரேட் உணவுகளான அரிசி, உருளைக் கிழங்கு ஆகியவற்றுக்கு இந்த டயட்டில் முக்கியத்துவம் இல்லை. அதுபோலவே, இனிப்புகள் மற்றும் இனிப்பு அதிகம் உள்ள உணவுப்பொருட்களுக்கும் ஸ்ட்ரிக்ட் தடா. தண்ணீர் நன்றாக அருந்த வேண்டும். சிலவகை எக் டயட்களில் ஜீரோ கலோரி திரவ உணவுகளுக்கு அனுமதி உண்டு. பச்சை முட்டைகள், அவித்த முட்டைகள் சாப்பிடலாம்.

ஆனால், எண்ணெய் அல்லது வெண்ணெய் ஊற்றி தாளித்த முட்டை சாப்பிடக் கூடாது. முட்டைப் பொரியல் கூடாது. ஏனெனில் முட்டையில் உள்ள கொழுப்போடு எண்ணெயில் உள்ள கொழுப்பும் சேர்வது நல்லதல்ல. பாரம்பரிய முட்டை டயட்டில் வேறு பொருட்களிலிருந்து கிடைக்கும் புரோட்டின் சத்துகளுக்கு அனுமதி உண்டு என்பதால் பருப்புகள், தானியங்கள், பால், சோயா போன்றவற்றைச் சாப்பிடலாம். பாரம்பரிய முட்டை டயட்டும் பிற ‘ஹை புரோட்டின் லோ கார்போ‘ டயட்களைப் போன்றதுதான்.

குறைந்த புரோட்டினும் குறைவான கார்போஹைட்ரேட்டும் உள்ள புரோக்கோலி, பருப்புக் கீரைகள் போன்றவற்றுக்கு அனுமதி உண்டு. பழங்கள் நாளொன்றுக்கு ஒருமுறை சாப்பிடலாம். அரிசி, ரொட்டி, பாஸ்தா ஆகியவற்றைக் குறைவாகச் சாப்பிட வேண்டும். காலை உணவாக இரண்டு முட்டை களோடு கார்போஹைட்ரேட் குறைந்த காய்கறிகள் சாப்பிட வேண்டும். மதியம் புரதச்சத்து குறைந்த உணவுகளோடு பச்சைக் காய்கறிகள் அடங்கிய சாலட் சாப்பிடலாம். இரவுக்கு முட்டைகளோடு குறைந்த புரோட்டின் மற்றும் குறைவான கார்போஹைட்ரேட் சாப்பிடலாம்.

இது ஒருவகை பாரம்பரிய எக் டயட். முட்டை மற்றும் சிட்ரஸ் பழங்கள் சாப்பிடும் எக் டயட் ஒன்றுண்டு. இதில் மேற்சொன்னதைப் போலவே கார்போஹைட்ரேட்டைக் குறைவாகச் சாப்பிட வேண்டும். அதனோடு ஒவ்வொரு உணவு வேளையின்போதும் சிட்ரஸ் பழங்களான கிரேப், ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை ஆகிய ஏதேனும் ஒன்றைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக, காலை உணவில் முட்டையுடன் அரை கப் சிட்ரஸ் பழங்கள் சாப்பிட வேண்டும். மதியத்துக்கு குறைந்த புரோட்டின் உணவுகளுடன் கீரைகள் மற்றும் கொஞ்சம் சிட்ரஸ் பழங்கள் சாப்பிட வேண்டும்.

இரவு, லீன் புரோட்டினுடன் மீன் அல்லது முட்டையுடன் கொஞ்சம் சிட்ரஸ் பழங்கள் சாப்பிட வேண்டும். தீவிரமான எக் டயட்டும் உண்டு. இதில் முட்டையைத் தவிர வேறு எதையுமே உண்ணக்கூடாது. இது எல்லோருக்கும் ஏற்றது அல்ல. மேலும், ஒரே வகையான உணவை மட்டுமே நாளின் மூன்று வேளையும் உண்பது ரிஸ்க் என்கிறார்கள் மருத்துவர்கள். எனவே, குறிப்பிட்ட சில நாட்கள் மட்டும் இதை ட்ரை செய்துவிட்டு கைவிடுவது நல்லது. எல்லாவகையான எக் டயட்களிலும் கலோரிகள் குறைவதால், உடனடியான எடைக்குறைப்புக்கு ஏற்ற டயட்தான் இது.

மேலும், புரோட்டின் நிறைந்திருப்பதால் உடலும் வலுவாக இருக்கும். எடையும் குறையும். முட்டையில் புரோட்டின்களோடு அத்தியாவசியமான கொழுப்புச்சத்தும் வைட்டமின் பி12, டி போன்ற ஊட்டச்சத்துகளும், பொட்டாசியம், இரும்புச்சத்து, கால்சியம் போன்ற தாதுஉப்புகளும் நிறைந்திருப்பதால் ஒரு நிறைவான வெயிட்லாஸ் டயட்டாக இது இருக்கும். முட்டையில் நார்ச்சத்து குறைவு, மேலும் இது கொஞ்சம் உஷ்ணத்தையும் உருவாக்கும் என்பதால் பைல்ஸ் போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள், அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் இதனை மேற்கொள்ள வேண்டாம்.

மேலும் கொழுப்புச்சத்து நிறைந்திருப்பதால் இதய நோயாளிகளும், சர்க்கரை நோயாளிகளும் தவிர்க்கலாம். ஃபுட் சயின்ஸ் ‘நீ என்ன பருப்பா’ என்று கோபத்தில் சிலர் கேட்பார்கள். பருப்பு அவ்வளவு பெரிய பருப்பா என்று கேட்டால், ’ஆமாம்பா ஆமாம்’ என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள். இதற்குக் காரணம் பருப்பில் நிறைந்துள்ள புரோட்டின் எனப்படும் புரதச்சத்து. அந்தப் புரோட்டின் என்பது என்ன என்றுதான் இப்போது சுருக்கமாகப் பார்க்கப் போகிறோம். நம் உடலில் புரோட்டின் இல்லாத இடமே இல்லை. நீருக்கு அடுத்தபடியாக உடலில் நீக்கமற நிறைந்திருப்பது புரதச்சத்துதான்.

உடலில் உள்ள ஒவ்வொரு செல்லிலுமே இது அமர்ந்திருக்கிறது. உடலின் ஒவ்வொரு பாகத்தையும் நிறைத்திருப்பது இதுதான். குறிப்பாக, நம்முடைய சதைப்பகுதி என்பது புரதத்தால் நிறைந்ததுதான். முடியிலும், சருமத்திலும்கூட புரதச்சத்து நிறைந்திருக்கிறது. உடல் எனும் கட்டடத்தை உருவாக்கும் செங்கற்கள்தான் திசுக்கள் என்றால் அதில் நிறைந்திருக்கும் செம்மண்தான் புரதங்கள். மேலும், இவையே உடல் இயங்கத் தேவையான ஆற்றலை உருவாக்கும் கார்போஹைட்ரேட்களின் அடர்த்தியை வடிவமைப்பதாகவும் உள்ளன.

புரோட்டினின் முக்கியமான பண்புகளில் ஒன்று அதில் இருக்கும் அமினோ அமிலச் சங்கிலித் தொடர்கள். புரதச்சத்து என்பதே இந்த அமினோ அமிலங்களாலான பாலிமர் சங்கிலித் தொடர்கள்தான். இதில், ஒன்பது வகையான அமினோ அமிலங்கள் உள்ளன என்கிறார்கள். இந்த ஒன்பதின் பெயர்களையும் நாம் உச்சரிக்க முயன்றால் நாக்கு சுளுக்கிக்கொள்ளும் என்பதால் இங்கு அதைச் சொல்லவில்லை. மேலும், உடலில் உள்ள அமினோ அமிலங்கள் ஒன்பதா எட்டா என்பதில் விஞ்ஞானிகளுக்கிடையே இன்னமும் பட்டிமன்றம் நடந்துகொண்டிருக்கிறது.

காரணம், ஒன்பதாவது அமினோ அமிலமான ஹிஸ்டிடைன் வளர்ந்தவர்கள் உடலில் காணப்படுவதில்லை என்பதால் ஒரு க்ரூப் அதை முக்கியமான வகைமையாகக் கருதுவதில்லை. பருப்புகள், லெக்யூம்ஸ் எனப்படும் அவரை, பீன்ஸ் போன்ற காய்கறிகள், சோயா, பால், முட்டை, மீன், நட்ஸ் போன்றவற்றில் பல்வேறு வகையான புரதச்சத்துகள் நிறைந்துள்ளன. இதில், சில உணவுகள் லீன் புரோட்டின் எனப்படும். இவற்றை எடுத்துக்கொள்ளும்போது அளவான புரதச்சத்து உடலுக்குக் கிடைக்கும்.

கார்ன் ஃப்ளேக்ஸ் கண்டுபிடித்த கதை

ஹாலிவுட் படங்களில் பார்த்திருப்பீர்கள். குழந்தைகளுக்கு ஒரு கிண்ணத்தில் கார்ன் ஃப்ளேக்ஸைக் கொட்டி அதில் கொஞ்சம் பாலூற்றிச் சாப்பிடக் கொடுக்கும் காட்சி அடிக்கடி இடம்பெறும். இந்தியாவிலும் பிற ஆசிய நாடுகளிலுமேகூட இன்று கார்ன் ஃப்ளேக்ஸ் விற்பனை அழுத்தமாகக் காலூன்றிவிட்டது. பல வீடுகளில் இன்று காலை உணவாக ஃப்ளேக்ஸ்தான் இருக்கிறது. எங்கிருந்து வந்தது இந்த ஃப்ளேக்ஸ்? யார் இதை உருவாக்கினார்கள் என்று பார்த்தால் இது ஒரு முழுமையான அமெரிக்க தயாரிப்பாய் இருக்கிறது.

சுமார் நூற்று முப்பது ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் உடல் பருமன் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்தது. இதற்குக் காரணம் அமெரிக்கர்கள் எடுத்துக்கொள்ளும் அதிகப்படியான கொழுப்புச்சத்துதான் என்று சொன்னார்கள் அந்நாளின் உணவியல் நிபுணர்கள். ஜான் கெல்லாக்கும் அவரது சகோதரரும் உணவுப் பொருள் விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வந்தார்கள். ஆரோக்கியமான உணவு ஒன்றைக் கண்டுபிடிக்க ஏதேதோ செய்துகொண்டிருந்தார்கள். அதில் ஒன்றுதான் ஊட்டச்சத்து ரொட்டி. அந்த ரொட்டியிலும் அவர்களுக்குத் திருப்தியில்லை.

ஒருநாள் ரொட்டிக்காகத் தயாரிக்கப்பட்ட கோதுமை மாவு, காய்ந்து பாத்திரத்தில் நன்கு ஒட்டிக்கொண்டது. அதைச் சுத்தம் செய்ய முயன்றபோது அவை சருகுகள் போல் உதிர்ந்தன. அவற்றை ஒரு சூடான பாத்திரத்தில் போட்டபோது அவை சட்டென பொரிந்தன. அவற்றைச் சுவைத்தபோது சுவையும் வித்தியாசமாக இருந்தது. மீண்டும் இதைச் செய்து பார்க்கவே அதே ருசி கிடைத்தது. இப்படித்தான் கோதுமை ஃப்ளேக்ஸ் உருவானது.

பிறகு, பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு மக்காச்சோளத்தைக் கொண்டு கார்ன் ஃப்ளேக்ஸ் உருவாக்கினார் கெல்லாக். இப்படியாக, ஒருவழியாக 1906ம் ஆண்டு முதல் கார்ன் ஃப்ளேக்ஸ் சந்தைக்கு வந்தது. கெல்லாக் சகோதரர்கள் தங்கள் நிறுவனம் வழியாக நூற்றுக்கணக்கான உணவுப் பொருட்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். அதில், இந்த கார்ன் ஃப்ளேக்ஸ்தான் அதிரிபுதிரி ஹிட்.

எக்ஸ்பர்ட் விசிட்

பூஜா, மஹிஜா, ப்ரியங்கா சோப்ரா உள்ளிட்ட பாலிவுட் டார்லிங்ஸின் ஃபேவரைட் ஃபுட் குரு. சைஸ் ஜீரோ நடிகைகள் தங்கள் அபிமான அட்வைஸராகக் கருதும் பூஜாவின் வெயிட் லாஸ் டிப்ஸ் இதோ… தினமும் காலையில் எழுந்ததும் ஒரு மணி நேரத்துக்குள்ளாக காலை உணவை உண்டுவிடுங்கள். இதனால், உடலின் வளர்சிதை மாற்றம் சிறப்பாக இருக்கும். எடைக் கட்டுப்பாடு நம் கை மீறிப்போக வளர்சிதை மாற்றத்தைச் சரியாகப் பராமரிப்பது ஒரு முக்கியமான காரணம். தினசரி நான்கு வேலை சமச்சீரான உணவை உண்ணுங்கள்.

மூன்று வேளை உண்ணும் வழக்கம் உள்ளவர்கள் அதையே நான்கு வேளையாகப் பிரித்து உண்ணலாம். இதனால், செரிமானம் எளிதாகும். வளர்சிதை மாற்றம் மேம்படும். ஒவ்வொரு வேளை உணவு நேரம் முடிந்த இரண்டு மணி நேரத்துக்குப் பிறகும் ஹெல்த்தியான ஸ்நாக்ஸ் சாப்பிடுங்கள். ஸ்நாக்ஸ் முடிந்ததும் அந்த கலோரியைக் கரைப்பதற்கான உடற்பயிற்சியில் இறங்கிடுங்கள். குறைந்தபட்சம் நடப்பதாவது நல்லது. உடற்பயிற்சி முடிந்ததும் உண்ணும் பழக்கத்தைப் பராமரியுங்கள். ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை ஒரு டம்ளர் நீர் பருகுங்கள். உடலில் நீர்ச்சத்து எப்போதும் இருப்பது நல்லது.

தினசரி உணவின் கலோரியில் பத்து சதவீதம் எண்ணெயில் இருந்து கிடைப்பதாக இருக்கட்டும். அன்றாடம் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் சேர்க்கலாம். ஆலிவ் ஆயிலாகவே இருந்தாலும் அதற்கு மேல் வேண்டாம். டீ, காபி, லஸ்ஸி போன்றவற்றில் சர்க்கரையைச் சேர்க்காதீர்கள். இதனால் கலோரி அதிகரிக்கும். செயற்கையான இனிப்புகளிடமிருந்தும் விலகியிருங்கள். ஜூஸ், ஸ்மூத்தி, மில்க்‌ஷேக் ஆகியவற்றைச் சாப்பிடாதீர்கள். அதற்குப் பதிலாக பழங்களாகச் சாப்பிடப் பழகுங்கள்.

உணவு விதி #19

அளவான தட்டு களையே உண்பதற்குப் பயன்படுத்துங்கள். தட்டில் என்ன இருக்கிறது? அதையா சாப்பிடப் போகிறோம் என்று தோன்றக்கூடும். ஆனால், தட்டுப் பெரிதாக இருந்தால் நாம் அனிச்சையாக நம்மையும் அறியாமல் கூடுதலாக அள்ளி வைத்துவிடுவோம். இப்படி இரண்டு சர்விங் சேர்ந்து உண்டால் உண்ண வேண்டியதைவிட இரண்டு மடங்கு உண்ண நேர்ந்துவிடும். எனவே, எதை உண்கிறோம் என்பதைப் போலவே எதில் உண்கிறோம் என்பதிலும் கவனம் இருக்க வேண்டும். உங்களுக்கு ஏற்ற தட்டின் வடிவத்தை நீங்களே தேர்ந்தெடுத்து, அதில் மட்டுமே அளவாக உணவை நிறைத்து உண்ணுங்கள்.

தேங்காய் எண்ணெய் உஷார்!

கடையில் போய் தேங்காய் எண்ணெய் என்று கேட்டால் தலைக்குத் தேய்க்கவா? சமையலுக்கா என்று கேட்கும் காலம் இது. அது என்ன எல்லா எண்ணெயும் ஒன்றுதானே என்று தோன்றும். விஷயம் இதுதான். சமையலுக்கான தேங்காய் எண்ணெய் தேங்காயிலிருந்து தயாரிக்கப்படுவது. அப்படியானால் இன்னொரு தேங்காய் எண்ணெய்? அது, பெட்ரோலியத்தின் உப பொருளான க்ரூடு ஆயில் உட்பட பல்வேறு கெமிக்கல்கள் சேர்ந்து உருவாக்கப்படும் செயற்கையானது.

பிற்பாடு வாசனைக்காக வேறு ஒரு வேதிப்பொருள், பிசுபிசுப்புக்கு ஒரு வேதிப்பொருள், வெண்ணிறம் கிடைக்க ஒரு வேதிப்பொருள் எனச் சேர்த்து இந்த கெமிக்கல் சங்கமத்தை தேங்காய் எண்ணெயாக்கிவிடுகிறார்கள். எனவே, தேங்காய் எண்ணெய் வாங்கும்போது கவனமாக இருங்கள். வாய்ப்பிருந்தால் செக்கில் ஆட்டிய எண்ணெயை வாங்கிக்கொள்ளுங்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மூட்டுவலியை முடக்கும் முடக்கத்தான்! (மகளிர் பக்கம்)
Next post அசைவ உணவு ஆரோக்கியமாக…!! (மருத்துவம்)