சத்துக்கள் நிறைந்த வாழைக்கிழங்கு!! (மருத்துவம்)
‘வாழை மரத்தில் பழம், பூ, தண்டு, இலை, காய் என எல்லாவற்றுக்கும் மருத்துவப் பயன்கள் இருப்பதை அறிவோம். அதுபோல வாழை மரத்தில் வேர் பகுதியில் இருக்கக்கூடிய வாழைக் கிழங்கும் பல்வேறு மருத்துவ குணங்களை உடையது. பூவன், செவ்வாழை, ரஸ்தாளி, நேந்திரம் என எந்த வாழைக் கிழங்கையும் நாம் மருந்தாகவோ, உணவாகவோ பயன்படுத்தலாம். இதில் எந்த வேறுபாடும் இல்லை’’ என்கிறார் சித்த மருத்துவர் ஜூலியட்.
வாழைக்கிழங்கில் அப்படி என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன?
‘‘வாழை மரத்தில் வேர் பகுதியில் இருக்கிறது வாழைக் கிழங்கு. இது வாழைமரத்தின் வித்து. இதை வாழை கட்டை என்றும் கிழங்கு என்றும் அழைக்கின்றனர். இதில் மாவுச்சத்து, நார்ச்சத்து, புரதச்சத்து, இரும்புச்சத்து, சோடியம், பொட்டாசியம் போன்ற பல்வேறு சத்துக்கள் அடங்கியிருக்கின்றன.
இந்த வாழைக்கிழங்கை இடித்து, பிழிந்து சாற்றினை எடுத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நாள்பட்ட சிறுநீர் எரிச்சல் குணமடையும். சிறுநீரில் ரத்தம் கலந்து வருதல், வெளுப்பு நோய், உடல் சோர்வு அசதி போன்ற பிரச்னைகளை உடனே நீக்கும். உடலில் கெட்ட கொழுப்பினை வாழைக்கிழங்கு குறைக்கிறது, உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், தினமும் உடற்பயிற்சிக்கு முன் வாழைக்கிழங்கு
சாற்றினை அருந்தலாம்.
வாழைத்தண்டுக்கு உள்ள அனைத்து சத்துக்களும் வாழைக்கிழங்குக்கும் உள்ளது. இதை வாழைத்தண்டு பயன்படுத்துவது போல சாம்பாராகவோ, சூப்பாகவோ, பொரியலாகவோ பயன்படுத்தி அதன் பயன்களை பெறலாம்.மேலும் இது சிறுநீரகப் பாதையை தூய்மைப்படுத்தும் பணியை செய்கிறது. உயர் ரத்த அழுத்தத்தால் அவதிப்படுபவர்கள் வாழைக்கிழங்கினை சாறாகவோ அல்லது உணவாகவோ பயன்படுத்தி வந்தால் ரத்த அழுத்தம் சமநிலைக்கு வரும். இதில் வைட்டமின் பி 6 அதிக அளவில் உள்ளது.
ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்தும். சிறுசீரக பாதிப்பு இருப்பவர்கள் வாழைக்கிழங்கினை வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு உட்கொள்ள வேண்டும்.வாழைக்கிழங்கு நெஞ்செரிச்சலைப் போக்குகிறது. வயிற்றில் அமில பிரச்னை இருப்பவர்கள் தொடர்ந்து பயன்படுத்தி வருவது நல்லது. வயிற்றின் அமிலத்தன்மையை சமநிலைப்படுத்தி நெஞ்செரிச்சல், நெஞ்சு உறுத்துவது போல் இருப்பது போன்ற பிரச்னைகளை தீர்க்கிறது.
வாழைக்கிழங்கு சாறுடன் கொடுக்க பேதி, பெரும்பாடு நோய் குணமடைகிறது. வாழைக்கிழங்கு சாறுடன் நெய் அல்லது வெண்ணெய் கூட்டி கொடுக்க, நீர் சுளுக்கு, கல்லடைப்பு குணமாகும். இது வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பை குறைக்கிறது. தொப்பை தோற்றத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வருகிறது. இது உடலில் உள்ள அதிக கொழுப்புச் சத்தைக் குறைக்க உதவுகிறது.
வாழைக்கிழங்கு பயன்படுத்தும்போது சிறிதளவு இஞ்சி சேர்த்து கொள்வது எளிதில் செரிமானம் ஆகும். இது வளர்சிதை மாற்றத்துக்கும் உதவும். இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. தொண்டை பகுதி முதல் மலக்குடல் வரை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. மலச்சிக்கல் ஏற்படாத வண்ணம் பார்த்துக்கொள்கிறது.
தீவிரமான சிறுநீரகக் கற்களை கூட உடைப்பதற்கு வாழை வேர் பகுதியில் இருக்கக்கூடிய கிழங்கு பயன்படுகிறது. சிறுநீரகக் கற்கள் பிரச்னை இருப்பவர்கள், தினமும் காலையில் வாழைக்கிழங்கு சாறை ஜூஸாக அருந்தி வந்தால் சிறுநீரக கற்கள் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து உடைந்து சிறுநீரோடு சேர்ந்து வெளியே வந்துவிடும்.
வெட்டிய வாழை மரத்தின் வேர் பகுதியை வெளியே எடுக்காமல் பூமிலே வைத்து அரை அடி ஆழத்திற்கு குடைந்து துணியால் மூடி வைத்தால் மறுநாள் காலையில் 100 மிலி அளவு உள்ள வாழை மர வேர்ச் சாறு தயாராக ஊறியிருக்கும். அதை சிறுநீரக கற்களால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர சிறுநீரகக் கற்கள் நீங்கும்.
அதேபோல வாழைக்கிழங்கு சாறுடன் எலுமிச்சைச் சாற்றைக் கலந்து பருகலாம். எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் இணைந்து சிறுநீரகத்தில் கால்சியம் கற்கள் உருவாவதைத் தடுக்கும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கும். வாழைக்கிழங்கு உடலில் நச்சுப்பொருட்களை வெளியேற்றுகிறது. உடல் எடையை குறைக்கிறது. வயிற்றுக் கழிச்சலையும், சீதபேதியையும் தடுத்து நிறுத்துகிறது. குடல் புண்களை விரைவில் ஆற்றும் தன்மையும் வாழைக்கிழங்கு சாற்றுக்கு உண்டு. எலும்புருக்கி நோயை குணமடையச் செய்கிறது.
சிறுநீர் கழிப்பதில் வலி, எரிச்சல், அடிக்கடி சிறுநீர் போக வேண்டும் என்ற எண்ணம், மாதவிலக்குக் கோளாறுகள் ஆகியவற்றை வாழைக்கிழங்கு குணமாக்கும் என ஆயுர்வேத நூல்கள் தெரிவிக்கின்றன. அடிபட்ட வீக்கங்களுக்கு வாழைக் கிழங்கை இடித்து அதிலுள்ள சாறைப் பிழிந்து எடுத்துவிட்டுத் திப்பியை அடிபட்ட வீக்கங்களுக்கு வைத்துக் கட்டுவதால் சீக்கிரத்தில் வீக்கமும் கரையும்; வலியும் குறையும். வாழைக்கிழங்கு உணவில் எடுத்துகொள்ளும்போது சருமம் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்துகிறது. சருமம் மிருதுவாகவும் பளபளப்பாகவும் இருக்க உதவுகிறது.
வாழைக் கிழங்கு சாறினை ரத்த அழுத்தம் உள்ளவர்களும், சிறுநீரக கற்கள் உள்ளவர்களும், உடல் பருமன் உள்ளவர்களும் வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு வாழைக்கிழங்கினை சாறாகவோ, உணவாகவோ எடுத்துக் கொள்ளலாம். பொதுவாக, அனைவரும் வாரத்திற்கு ஒரு முறை எடுத்துக்கொண்டாலே போதும்.
வாழைக்கிழங்கு சாறு அருந்தும்போது 50 மிலி முதல் 100 மிலி வரை அருந்தலாம். வாழைக்கிழங்கு சமையலுக்கு பயன்படுத்தும்போது அதிகம் எண்ணெய் காரம் இல்லாமல் இருந்தால் நல்லது. வாழைக்கிழங்கு சாறு அருந்தி இரண்டு மணி நேரத்திற்கு வேறு எதுவும் அருந்தாமல் இருக்க வேண்டும். அப்போதுதான் அதனுடைய மருத்துவ பயன் நமக்கு முழுமையாக கிடைக்கும்.’’
Average Rating