ப்யூட்டி பாக்ஸ் !! (மகளிர் பக்கம்)
பெடிக்யூர் சுருக்கமாக காலை சுத்தப் படுத்துதல். அதாவது ப்யூமிஸ் ஸ்டோன் என அழைக்கப்படும் படிகக் கல்லைக் கொண்டு வெடிப்பு மற்றும் இறந்த செல்களை சுத்தம் செய்வது. இதில் அழகை விட ஆரோக்கியமே மிகவும் முக்கியமானது. என்றைக்கு நாகரீகம் வளர்ந்து, மனிதன் உடை உடுத்த துவங்கினானோ அப்போதே கூந்தல் பராமரிப்பு, நகங்களைப் பராமரிப்பது போன்ற விசயங்களிலும் கவனம் செலுத்தத் துவங்கிவிட்டான். தங்களை அழகுபடுத்திக் கொள்வதில் எகிப்திய ராணிகள்தான் முன்னோடிகள். அதனாலதான் கிளியோபாட்ரா அழகுக்கான அடையாளமாக இங்கே பிரதானப்படுத்தப்படுகிறார்.
எகிப்தியப் பெண்கள் நகம் சுத்தம் செய்வதற்கான ஆயுதங்களான நெயில் கட்டர், நெயில் புஷ்ஷர், நெயில் ஷேப்பர் என அனைத்தையும் தங்கத்தினால் தயாரித்து பயன்படுத்தியுள்ளார்கள். எகிப்து பெண்களின் நகப் பூச்சு குடுவைகள் கூட தங்கத்தில் இருந்ததாக வரலாற்றுச் சான்றுகள் உள்ளது. நகப் பூச்சு என்றால் எகிப்தியர்களுக்கு பெரும்பாலும் சிவப்பு மற்றும் கருப்பு வண்ணம்தான் அவர்களின் தேர்வாக இருந்துள்ளது. போருக்குச் செல்லும் எகிப்தியர் தங்களின் நகங்களையும், உதடுகளையும் ஒரே வண்ணத்தில், அதாவது சிவப்பு அல்லது கருப்பு வண்ணத்தில் கலர் செய்துகொண்டு செல்லும் பழக்கத்தை கொண்டிருக்கிறார்கள்.
இதனால் போரில் வெற்றி பெற்று வருவதாக ஒரு நம்பிக்கையும் அவர்களிடத்தில் இருந்துள்ளது. எகிப்தியர்களை தொடர்ந்தே நகங்களுக்கு வண்ணம் பூசும் பழக்கத்தை பின்பற்றியுள்ளோம். நாம் தினந்தோறும் காலையில் இருந்து இரவு படுக்கச் செல்லும்வரை நடப்பது, உட்காருவது என கால்கள் மூலமாகப் பல வேலைகளையும் செய்வோம். நாம் செய்யும் பெரும்பாலான வேலைகளுக்கு கால்கள்தான் பக்க பலமாக இருக்கும். ஆனால் நமது உடலில் உள்ள முகம், கூந்தல் போன்றவற்றை அதிகம் சிரத்தை எடுத்து பராமரிப்போம். அழகுபடுத்துவோம். அதிகம் பயன்பாட்டில் உள்ள உறுப்புக்களான கால்களை கவனிப்பதில்லை.
வெளியில் எங்கு சென்றாலும், அங்கிருக்கும் அழுக்கு, தூசு போன்ற கிருமிநாசினிகள் கால்களில்தான் முதலில் படும். காற்றில் கலந்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத அழுக்குகளும் கால்களில் படும்போது கால்விரல் நகங்களில் உள்ளே செல்லும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. நமது விரல்களைச் சுத்தமாக வைத்துக் கொள்ளவில்லை என்றால் கண்டிப்பாக அது உடல் ஆரோக்யத்தை பாதிக்கும். விரல் நகங்களில் உள்ள அழுக்கை நீக்குவது மிகமிக முக்கியம். அதனால்தான் அழகு நிலையங்களில் கல் உப்பை நீரில் போட்டு கொதி நிலைக்கு வந்த பிறகு அதில் கைகளை கால்களை ஊறவைத்து சுத்தம் செய்கிறார்கள்.
இதில் அழுக்குகள் நீங்குவதோடு கிருமித் தொற்றுகள் விரல் நகங்களில் இருந்தால் உடலுக்குள் செல்லாமல் உப்பு கலந்த சூடான தண்ணீரில் வெளியேறி ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. நகங்களுக்கு பங்கஸ் வராமல் தடுக்கிறது. எப்போதும் நமது அதிகமான கவனத்தை கால்களுக்குக் கொடுத்தல் வேண்டும். பெரும்பாலும் விரல் நகங்களை நெயில் கட்டர் கொண்டு வெட்டி எடுப்போம். இவை தவிர்த்து கூடுதலாக நகங்களின் ஓரத்தில் இருக்கும் அழுக்கு, பாதங்களில் இருக்கும் வெடிப்பு எல்லாம் சேர்த்து அதை சரி செய்வதற்கான அக்கறையும் சேர்த்து எடுக்க வேண்டும்.
இரவில் நாம் தூங்கும்போது நமது உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால்கள் வரை ரத்த ஓட்டம் மேலும் கீழுமாக சுழன்று வேலை செய்து கொண்டே இருக்கும். அப்போது காலில் அழுக்குகள் இருப்பின் அவை பாதங்களில் உள்ள நுண் துளைகள் வழியாக உள் சென்று ரத்தத்தில் இணைய வாய்ப்பு அதிகம் உண்டு. நமது பாதங்களில் நமது கண்களுக்கு புலப்படாத துளைகள் ஏராளம் இருக்கும். உற்று நோக்கினால் மட்டுமே அவை கண்களுக்குத் தெரியும்.
பெடிக்யூர் என்றால் என்ன?
வீட்டில் நம்மால் முயன்று செய்ய முடியாத ஒரு விசயத்தை, அழகு நிலையத்தை அணுகி காஸ்மெட்டிக் கொண்டு செய்துகொள்வதே பெடிக்யூராகப் பார்க்கப்படுகிறது. பெடிக்யூர் செய்வது அழகு தொடர்பான விசயமாக இங்கே பார்க்கப்படுவதால். கால்களை பெடிக்யூர் செய்வதில் பெண்களே அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். அழகையும் தாண்டி இதில் ஆரோக்கியம் சார்ந்த விசயங்களே அதிகமாக உள்ளது.
▶ விரல் நகங்களைச் சுத்தப்படுத்துதல் அல்லது ஒழுங்குபடுத்துதல்.
▶ பாத வெடிப்புகளை நீக்குதல்.
▶ இறந்த செல்களை நீக்குதல்.
▶ இதைச் செய்ய 30 நிமிடத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை எடுக்கும்.
பெடிக்யூரில் பலவகைகள் உண்டு. குறைந்தது நாற்பது முதல் ஐம்பது வகையான பெடிக்யூர்கள் உள்ளது. இவற்றில் முக்கியமானது எனப் பார்த்தால்…
* ரெகுலர் பெடிக்யூர்
* ப்ரென்ஞ் பெடிக்யூர்
* ஸ்பா பெடிக்யூர்.
ஒரு சில பெடிக்யூர் பயன்கள் அதன் சிறப்புக்களை சுருக்கமாக பார்க்கலாம்…
* ரெகுலர் பெடிக்யூர் : காலை வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து, ஸ்க்ரப் செய்து, க்யூட்டிக்கல் தடவி நகங்களைச் சுத்தப்படுத்தி, தேவை யான வடிவில் வடிவமைப்பது. தொடர்ந்து விரல் நகங்களுக்கு மாய்ச்சரைஸர் போடுவது. பாலீஷ் போடுவது. இதுவே ரெகுலர். இதைச் செய்ய நாற்பத்தி ஐந்து நிமிடம் எடுக்கும்.
* பாரஃபின் பெடிக்யூர் : இதுவும் ரெகுலர் பெடிக்யூர் மாதிரி செய்துவிட்டு கடைசியாக மாய்ச்சரைஸர் பதிலாக பாரஃபின் வாக்ஸை ஹீட் செய்து காலில் தடவி சுத்தம் செய்வது. இதில் வலி குறைவதோடு கால் மிகவும் சாஃப்டாக தோற்றம் தரும்.
* ப்ரென்ஞ் பெடிக்யூர் : இதில் நகங்களை கட் செய்து, சுத்தம் செய்த பிறகு. நெயில் பாலீஷ் போடுவது. இதில் நெயில் பாலீஷ் மட்டுமே வித்தியாசமாக இருக்கும். இது மிகவும் சுலபமாக முடியும்.
* மினி பெடிக்யூர் : இது இருபதே நிமிடத்தில் செய்து முடிக்கப்படும்.
* சாக்லேட் பெடிக்யூர் : இதில் பயன்படுத்தப்படும் அனைத்தும் சாக்லேட் ஃப்ளேவராக இருக்கும்.
* அரோமா பெடிக்யூர்
இதில் க்ரீம் பயன்பாடு இல்லாமல் அனைத்தும் அரோமாவாக இருக்கும். இதில் சருமப் புத்துணர்ச்சி கிடைக்கும். எல்லாவிதமான சருமத்திற்கும் எந்த இடரும் தராமல் இயல்பான புத்துணர்வை தரவல்லது.
* வொயின் பெடிக்யூர் : இது ரொம்பவே காஸ்ட்லியான பெடிக்யூர். இதில் சருமப் பளபளப்பு கூடுதலாக இருக்கும்.
பெடிக்யூர் செய்வதில் பின்பற்ற வேண்டியவை
* ப்யூமிஸ் ஸ்டோன் மற்றும் ஸ்க்ரப்பர் வைத்து கால்களைத் தேய்க்கும்போது மென்மையான சருமம் என்றால் மிகவும் கவனமாகச் செய்தல் வேண்டும். சருமம் பாதிப்படைய வாய்ப்புண்டு.
* நீரிழிவு நோய் (diabetic) பிரச்சனை உள்ளவர்கள் என்றால் அவர்களின் சருமத்தை கவனமாக கையாள வேண்டும்.
* தோலில் ஒவ்வாமை(alegy) உள்ளவர்களுக்கு கெமிக்கல் பொருட்களான அமோனியம். குளோரைடு போன்றவை ப்ளீச் அயிட்டமாக சேர்க்கக் கூடாது.
* நகங்களை சீரமைக்க பயன்படுத்தும் ஆயுதங்களை கட்டாயம் கொதிநீரில் ஸ்டெர்லைட் செய்த பிறகே பயன்படுத்த வேண்டும் அல்லது கொதிக்கும் நீரில் போட்டு சுத்தப்படுத்திய பிறகு பயன்படுத்துதல் வேண்டும்.
* கட்டாயம் கையுறைகளைப் பயன்படுத்திய பிறகே பெடிக்யூர் செய்தல் வேண்டும். இதனால் கிருமி தொற்று, நோய் தொற்று ஏற்படுவதில் இருந்து தப்பிக்கலாம்
* சில நேரம் கண்ணுக்கு தெரியாத கிருமிகள், கொக்கி புழு போன்றவை நம் விரல் நகங்கள் வழியாக உடலுக்குள் செல்ல வாய்ப்புண்டு. எனவேதான் நமது கால்களையும், பாதத்தையும் எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர். பலருக்கும் கால் கட்டை விரல்களின் இரண்டு பக்கமும் கருப்பாக தடிமனாக இருக்கும்.
கால்களை பாதுகாக்க
* கழிப்பறைகளை பயன்படுத்தும்போது காலணிகளை அணிந்து செல்ல வேண்டும்.
* வெளியில் செல்லும் போதும் காலணி களை அணிந்து பாதுகாப்பாகச் செல்ல வேண்டும்.
* வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்குள் வந்ததும் கால்களையும், பாதங்களையும் சுத்தமாகக் கழுவுதல் வேண்டும்.
* தூங்குவதற்கு முன்பும் கால்களை நன்றாகக் கழுவி சுத்தம் செய்த பிறகு தூங்கச் சென்றால் நோய்கள் நம்மை எப்போதும் அண்டாது.
* சிலருக்கு சில வகைக் காலணிகள் ஒத்து வராது. அவர்கள் அதை தவிர்ப்பதே மிகவும் நல்லது.
பெடிக்யூர் செய்யும்போது தரப்படும் மாசஜ் கால் வலியினை நீக்கி, உடல் மொத்தத்திலும் உள்ள ப்ரஷ்ஷர் பாயிண்டுகளை தூண்டி உடலுக்கு புத்துணர்ச்சி தருகிறது. மிகப் பெரிய நகங்களில் விரல் நகங்களுக்கென நெயில் ஹேர் சென்டர்கள் தனியாகவே இயங்குகிறது. உடைக்கேற்ற வண்ணம், பலவிதமான டிசைன் என நெயில் பாலீஷ்களை மேட்ச் செய்வதில் பெண்களுக்கே முதலிடம். ஒரே வண்ணத்தில் பல ஷேட்கள் பெண்கள் அணியும் உடைக்கு மேட்சிங்காக சந்தைகளில் கிடைக்கிறது.
Average Rating