காங்கிரஸிற்கு உயிர் கொடுப்பாரா பிரியங்கா காந்தி? ( உலக செய்தி)
நேரு குடும்பத்தைச் சேர்ந்த பிரியங்கா காந்தியின் வருகை உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் தொண்டர்களுக்கு உத்வேகமளிக்கலாம். ஆனால், வரும் பாராளுமன்றத் தேர்தலில் சக்தி வாய்ந்த சமாஜ்வாதி – பகுஜன் சமாஜ் கூட்டணியை எதிர்கொள்ள அவரால் முடியுமா?
உத்தரப்பிரதேச மாநிலத்தில் வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலுக்கென அரசியல் கட்சிகள் பரபரப்பாகத் தயாராகிவருகின்றன. இந்த நிலையில், அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியும் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ்வாதி கட்சியும் அமைத்த தேர்தல் கூட்டணியில் காங்கிரசிற்கு எந்த இடமும் ஒதுக்கப்படவில்லை.
அமேதி, ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்களை நிறுத்தப் போவதில்லையென இந்தக் கூட்டணி அறிவித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் மிகவும் பலவீனமடைந்திருக்கும் நிலையில், இந்த இரு இடங்களைத் தவிர வேறு இடங்களே அங்கு கிடைக்காது என்பதுதான் அரசியல் நோக்கர்களின் பார்வையாக இருந்தது.
ஆக, வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கூட்டணிக்கும் பா.ஜ.கவுக்கும் இடையில்தான் நேரடியான போட்டி இருக்கும் என்று கருதப்பட்டது. 1984 ஆம் ஆண்டுக்குப் பிறகு, இப்படியான இரு முனைப் போட்டியை அந்த மாநிலம் எதிர்கொள்ளவிருந்தது. ஆனால், பிரியங்காவின் வருகை இந்தக் கணக்குகளைச் சற்றே கலைத்துப் போட்டிருக்கிறது.
“பிரியங்கா காந்தியின் வருகை தொண்டர்கள் மட்டத்தில் பெரும் மகிழ்ச்சியையும் உத்வேகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது என்பதில் சந்தேகமேயில்லை. அவர் இதுவரை எதையும் சாதித்தவரில்லை. ஆனால், பலருக்கு அவர் மீது பெரும் நம்பிக்கை இருக்கிறது. குறிப்பாக பெண்கள், அவரது வருகையால் பெரும் உற்சாகம் அடைந்திருக்கிறார்கள்” என்கிறார் ஃப்ரண்ட் லைன் இதழின் ஆசிரியரான விஜயஷங்கர்.
விஜயஷங்கர் கூறுவதைப் போல பிரியங்கா காந்தியை கிழக்கு உத்தரப்பிரதேசத்தின் பொதுச் செயலாளராக கட்சி அறிவித்திருப்பது உத்தரப்பிரதேசத்தில் மட்டுமல்லாது இந்தியா முழுவதுமே காங்கிரஸ் தொண்டர்களிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
“இந்தியா முழுவதுமுள்ள லட்சக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களைப் போல நான் பெரும் உற்சாகமடைந்திருக்கிறேன். காங்கிரஸ் தலைவரின் மாஸ்டர் ஸ்ட்ரோக் இது. உத்தரப்பிரதேச காங்கிரஸ் இந்தத் தருணத்திற்காக வெகு நாட்களாகக் காத்திருந்தது. அவரது வருகையால் கட்சி மாநிலத்தில் புத்துணர்ச்சி பெறும்” என்கிறார் காங்கிரஸ் கட்சியின் தகவல் ஆய்வுப் பிரிவின் மாநில இணை ஒருங்கிணைப்பாளரான லட்சுமி ராமச்சந்திரன்.
லக்ஷ்மி ராமச்சந்திரன் சொல்வதைப் போல, அம்மாநிலத் தொண்டர்கள் மட்டத்தில் நீண்டகாலமாகவே இந்தக் கோரிக்கை இருந்து வந்தது. குறிப்பாக. உத்தரப்பிரதேசத்தின் அலகாபாத் பிரிவு பல வருடங்களாக பிரியங்கா அரசியலுக்கு வர வேண்டுமெனக் கோரி வந்தது.
“பிரியங்காவின் வருகை உத்தரப்பிரதேசத்தில் மட்டுமல்ல, இந்தியாவின் பிற இடங்களிலும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். நகர்ப்புற, படித்த வாக்காளர்கள் காங்கிரசின் பக்கம் கவனத்தைத் திருப்புவார்கள்” என்கிறார் விஜயஷங்கர்.
காங்கிரஸை ஒதுக்கித்தள்ளிவிட்டு, எஸ்.பியும் பி.எஸ்.பியும் கூட்டணி அமைத்த பிறகு, உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் புறக்கணிக்கப்பட்ட, கண்டுகொள்ளப்படாத கட்சி தள்ளப்பட்டது. ஆனால், பிரியங்கா காந்தியின் வருகையின் மூலம் காங்கிரசும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு கட்சியாக, ஒரு தரப்பாக உருவெடுக்கும் வாய்ப்பு இருக்கிறது. பிரியங்கா பிரச்சாரம் செய்யும் பகுதிகளிலும் அவரது பொறுப்பில் உள்ள பகுதிகளிலும் காங்கிரஸின் நிலை குறித்த செய்திகள் இனி ஊடகங்களில் தொடர்ந்து பேசப்படும்.
இருந்தபோதும் பிரியங்காவின் வருகை, இந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே காங்கிரசின் நிலையை அங்கு வெகுவாக மேம்படுத்திவிடும் என்று சொல்ல முடியாது. 2 இடங்களில் வெல்லும் என்ற நிலையிலிருந்து கூடுதலாக சில இடங்களைக் காங்கிரஸ் அங்கே பிடிக்கக்கூடும். தற்போதைய இரு முனைப் போட்டி, மும்முனைப் போட்டியாகவெல்லாம் மாறும் வாய்ப்பு இப்போதைக்கு இல்லையென்றே சொல்லலாம்.
உத்தரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 70 இடங்களில் பிஎஸ்பியும் எஸ்பியும் தலா 38 இடங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளன. காங்கிரஸ் இந்தக் கூட்டணியில் இல்லாவிட்டாலும் ரே பரேலி, அமேதி ஆகிய தொகுதிகளில் போட்டியிடப்போவதில்லை என இக்கூட்டணி அறிவித்திருக்கிறது. மீதமுள்ள இரண்டு இடம் அஜீத் சிங்கின் ராஷ்ட்ரிய லோக் தளத்திற்கு ஒதுக்கப்படும்.
பலம்வாய்ந்த இந்தக் கூட்டணி ஒரு புறமும் வலுவான கட்டமைப்பை வைத்துள்ள பா.ஜ.க. மற்றொரு புறமும் மோதும் நிலையில்தான் காங்கிரஸ் இந்த முடிவை எடுத்துள்ளது.
“பிரியங்கா காந்தியின் வருகை காங்கிரசிற்கு பெரிய அளவில் உதவும் குறைந்தது 20 கூடுதலான இடங்களை அந்த மாநிலத்தில் காங்கிரஸ் பெறும். பா.ஜ.க. அளவுக்கு காங்கிரஸ் கட்சிக்கு அந்த மாநிலத்தில் அமைப்பு இல்லை என்பது பிரச்சனையில்லை. 1996 ஆம் ஆண்டுத் தேர்தலின் போது, அமைப்பு ரீதியாக பலமில்லாத தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றியதை நினைவில் கொள்ள வேண்டும்” என்கிறார் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான ரமணி.
உத்தரப்பிரதேசத்தின் மேற்குப் பகுதி இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதி. பாபர் மசூதி இடிப்பிற்குப் பிறகு உத்தரப்பிரதேச முஸ்லிம்களைப் பொறுத்தவரை காங்கிரஸ் மீதான அவர்கள் நம்பிக்கை பெருமளவு தளர்ந்துவிட்டது. ஆகவே அவர்களது வாக்குகள் பெரும்பாலும் எஸ்பி – பிஎஸ்பி கூட்டணிக்கே வந்து சேரும். ஆகவேதான் பா.ஜ.க. வலுவாக இருக்கும் கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் உயர் ஜாதியினரின் வாக்குகளைப் பிரிக்கும் நோக்கத்தில் பிரியங்காவைக் களமிறக்கியிருக்கிறது காங்கிரஸ். இதனால், பா.ஜ.க. அந்தப் பகுதியில் பெரும் கவனத்தை செலுத்த வேண்டியிருக்கும்.
ராகுல் காந்தி கட்சியில் நுழைந்த காலகட்டத்தை ஒப்பிடும் போது இப்போது கட்சியின் அனைத்து மட்டங்களிலும் ஏற்கப்பட்ட தலைவராக உருவெடுத்திருக்கிறார். ராகுலைக் கேலிசெய்ய பா,.ஜ.கவினர் பயன்படுத்தும் ´பப்பு´ என்ற வார்த்தை, ராகுல் மீதான அவதூறாகவே பார்க்கப்படும் சூழல் கிட்டத்தட்ட வந்துவிட்டது. இருந்தபோதும் பொதுவான வாக்காளர்கள் அனைவரிடமும் ராகுல் சென்று சேர்ந்து விட்டதாகச் சொல்ல முடியாது. இந்த நிலையில் தான், பிரியங்கா காந்தியின் வருகை நிகழ்ந்திருக்கிறது.
“மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா, குஜராத், சட்டீஸ்கர் மாநிலங்களில் காங்கிரசின் பிடி வலுத்திருக்கிறது. 2019 இல் உத்தரப் பிரதேசத்திற்கான வியூகமும் வகுக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்தி பேசும் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி பெருமளவு இடங்களைக் கைப்பற்றும்” என்கிறார் லக்ஷ்மி ராமச்சந்திரன்.
உத்தரப் பிரதேசத்தைப் பொறுத்தவரை 2014 பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. 78 இடங்களில் போட்டியிட்டு 71 இடங்களைக் கைப்பற்றியது. 42.3 சதவீத வாக்குகளையும் பெற்றது. அதே நேரத்தில் காங்கிரஸ், 7.5 சதவீத வாக்குகளோடு இரண்டு இடங்களை மட்டுமே பிடிக்க முடிந்தது.
2009 இல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 26 இடங்களைக் கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி மட்டும் 21 இடங்களையும் கைப்பற்றியது. அப்போது பா.ஜ.கவால் வெறும் பத்து இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. தற்போது காங்கிரசைப் பொறுத்தவரை, 2009 ஆம் வருடத் தேர்தல் வெற்றிக்கு நெருக்கமாகவாவது செல்ல முயற்சிக்கிறது. ஆனால், அந்தத் தருணத்தில் 4 முனைப் போட்டி நிலவியது. இப்போது இருமுனைப் போட்டியே நிலவுகிறது.
மேலும் தற்போதைய சூழலில் அங்குள்ள 80 இடங்களில் 75 தொகுதிகளில் காங்கிரசுக்கு எந்த செல்வாக்கும் இல்லையென்றே சொல்லலாம். தாங்கள் வெற்றிபெறக்கூடிய கட்சி என்ற எண்ணத்தை காங்கிரஸ் ஏற்படுத்தாதவரை, இஸ்லாமியர்களும் பிஎஸ்பி – எஸ்பியைவிட்டு காங்கிரஸ் பக்கம் திரும்ப மாட்டார்கள். ஆனால், பா.ஜ.கவுக்கோ பிஎஸ்பி – எஸ்பி கூட்டணிக்கோ வாக்களிக்க விரும்பாதவர்களுக்கு காங்கிரஸ் ஒரு வாய்ப்பாக அமையும்.
இந்தத் தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடுவாரா, பிரச்சாரம் மட்டும் செய்வாரா என்பதெல்லாம் தெரியாத நிலையில், ஒரு விஷயம் மட்டும் நிச்சயம். இவரது வருகை கட்சிக்கு ஒருபோதும் பாதகமாக இருக்காது என்பதுதான் அந்த அம்சம்.
Average Rating