சவூதி – கனடா முறுகல் நிலை: சவூதியின் வெளிவிவகார கொள்கையின் விளைவு!! (கட்டுரை)
சவூதி அரேபியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான முரண்பாடு குறித்த சவூதி அரேபியாவின் அணுகுமுறை, இராஜதந்திர வட்டாரங்களில் கடந்த வாரம் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. குறித்த இந்நிலையானது உத்தியோகபூர்வமாக, சில சவூதி அரேபிய மனித உரிமை ஆர்வலர்கள், சவூதி அரசாங்கத்தால் சில நாள்களுக்கு முன்னர் கைதுசெய்யப்பட்டமைக்கு எதிராக, கனடாவின் வெளிவிவகார அமைச்சரும் வெளிவிவகார அமைச்சும் வெளியிட்ட கண்டனத்துக்கு எதிரான ஒரு செயற்பாடாக, சவூதி அரேபியா, றியாத்தில் உள்ள கனேடியத் தூதரை நாட்டை விட்டு வெளியேறுமாறும்; ஒட்டாவாவிலிருந்து தமது தூதரை றியாத்துக்கு திருப்பி அழைத்தமை; கனடாவில் செய்ய முன்வந்த புதிய வர்த்தக முதலீட்டை முடக்கியமை; கனடாவில் கல்விகற்கும் 15,000 சவூதி மாணவர்களின் புலமைப்பரிசில்களை நிறுத்திவைத்தமை ஆகியன, குறித்த இச்சச்சலப்பை ஏற்படுத்தியிருந்தன. இந்நிலையில் இப்பத்தி, சவூதி அரேபியாவின் இம்முரணான, இறுக்கமான செயற்பாடு, அதன் பின்னணி பற்றி ஆராய்கிறது.
சவூதி – கனடா உறவுகள், எப்போதும் குறிப்பிடத்தக்க அளவில் பேசப்படவில்லை. மத்திய கிழக்கின் பாதுகாப்புக் கட்டமைப்பில் நேட்டோவின் உறுப்புரிமையாகச் செயற்படும் கனடா, அதைத் தாண்டி, தனிப்பட்டளவில் சவூதியுடன் எந்தவித பாதுகாப்பு உடன்படிக்கைகளையும் கொண்டிருக்காமை; ஆயுத உற்பத்தியிலும் யேமன் மீதான சவூதியின் போரில் நேரடியாக உதவுவதற்கு கனடா விருப்பம் காட்டாதிருந்தமை; வர்த்தகத்தைப் பொறுத்தவரை 3-4 பில்லியன் டொலருக்கும் குறைவான வர்த்தகத்தையே கடந்த வருடத்தில் மேற்கொண்டிருந்தமை (குறிப்பு: அமெரிக்க -கனடா வர்த்தகத்தை பொறுத்தவரை 3-4 பில்லியன் டொலர் என்பது, அமெரிக்க – கனடா வர்த்தகத்தில் 2 நாள்களுக்கான வர்த்தகப் பெறுமதியாகும்); கல்வித்துறையை தவிர (சுமார் 15,000 சவூதி மாணவர்கள் தற்போது கனடாவில் கல்வி கற்கின்றனர்) வேறெந்தத் துறையிலும் சவூதியின் பங்கை, கனடா பெருமளவில் சார்ந்திருக்காமை என்பன, கனடா – சவூதி உறவுகளில் நெருக்கமற்ற ஒரு தன்மையையே காட்டுகின்றது.
மேலும், 2014ஆம் ஆண்டு, அன்றைய பிரதமர் ஸ்டீவன் ஹார்பரின் பழைமைவாத அரசாங்கம், சவூதி அரேபியாவுக்கு ஒளிக் கவச வாகனங்களை (LAV) விற்க, 15 பில்லியன் டொலர் ஒப்பந்தத்தை ஒப்புக் கொண்டிருந்த போதிலும், 2015இல் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி, இந்த ஒப்பந்தத்தை சிவில் சமூகத்தினரின் போராட்டங்களாலும், முற்போக்கான, பெண்ணியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசாங்கமாக விளங்கும் லிபரல் கட்சி, சவூதி அரேபியாவின் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகள், தடைகள் அடிப்படையில், குறித்த ஒப்பந்தத்தை நிறுத்திவைக்க முடிவுசெய்திருந்தது. இம்முடிவு மேலதிகமாக, இருதரப்பு உறவுகளை முன்னேற்றுவதில் ஏற்பட்ட தோல்வியாகவும், சவூதியைப் பொறுத்தவரை, கனடா தனது உள்ளக அரசியலில் தலையிடுவதாகவும் கருதியிருந்தது.
மறுமுனையில், சவூதியின் அண்மைய வெளிவிவகாரக் கொள்கை, இன்றைய நிலைக்கு காரணமானது எனவும் கொள்ளமுடியும். சவூதி அரேபியாவின் அண்மைய வெளிவிவகாரக் கொள்கை, 9/11 மற்றும் அதற்கு அப்பாலான ஒரு செயற்பாட்டாளர் நிலையிலிருந்து வேறுபட்டு, ஒரு கொள்கை வகுப்பாளராகத் தன்னைக் காட்டிக்கொள்வதில் முனைப்புக் காட்டுகின்றது. இதன் ஒரு பக்கமாகவே, அமெரிக்காவுடன் மட்டுமன்றி – மத்திய கிழக்கின் அரேபியக் கொள்கைகளுக்கு முரணாக உள்ள இஸ்ரேலுடனும், புதிதாக இராணுவ மற்றும் புலனாய்வுத் தகவல்கள் பரிமாற்றம் தொடர்பில் இணங்கிச்செல்ல முடிவெடுத்தமை, யேமனில் சர்வதேச எதிப்புக்கு மத்தியிலும் நடாத்தும் போர், கட்டாரை முற்றுகைக்குட்படுத்திய செயற்பாடு என்பன பார்க்கப்பட வேண்டியனவாகும். இது, சவூதியின் பிராந்திய வல்லரசாங்கத்தின் ஒரு பகுதியாக கொள்ளமுடியும். எனினும் இது, அதனிலும் மேலான சவூதிய தேசியவாதத்தின் ஒரு செயற்பாடாகவே பார்க்கப்பட வேண்டியது.
இந்நிலையிலேயே கனடாவின் வெளிவிவகார அமைச்சின் கண்டனத்தை, சவூதி தனது தேசியவாதத்துக்கு எதிரான ஒரு செயற்பாடாக பார்க்கின்றது. அதன் விளைவே, ஒரு கண்டனத்துக்கு எதிராக, மிகவும் வலிமையான செய்தியை சர்வதேசத்துக்கு அனுப்பும் ஒரு செயற்பாடாகவே, சவூதி அரேபியாவின் அண்மைய செயற்பாடுகள் அமைந்திருந்தன. மேலும், இது கனடாவைத் தாண்டி, மேற்குலத்துக்கு வழங்கப்பட்ட செய்தியாகவே பார்க்கப்பட வேண்டியதாகும்.
ஏன் குறித்த நிலையை கனடாவுக்கு எதிராக எடுக்க சவூதி மேலும், விளைந்தது என்றால், அதற்கு இரண்டு காரணங்களாகவும்: ஒன்று, மேற்குறிப்பிட்டது போல, கனடா – சவூதியின் உறவுகளில் எப்போதுமே பெருமளவில் இரு நாடுகளும் தங்கியிருக்கவில்லை. ஆதலால், கனடாவை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு ஒதுக்கிவைத்தலால், சவூதி ஒன்றையும் பெருமளவில் இழக்கப்போவதில்லை; இரண்டு, கனடா அதன் தளத்தில் இருந்து ஒரு போதும் சவூதிக்கு எதிராகப் பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொள்ளாது என சவூதி உறுதியாக நம்புவதே ஆகும். இதற்குக் காரணம், கனடா நேட்டோ உறுப்புரிமையுடைய நாடாக இருப்பதும், நேட்டோவைப் பொறுத்தவரை அண்மைக்காலத்தில் அமெரிக்காவின் அரசாங்கம், கனடா உட்பட பல உறுப்பினர்கள் தொடர்பில் நேட்டோவுக்கு தேவையான நிதியை வழங்குவதில்லை என கணிசமான விமர்சனங்களை முன்வைத்தமையை அடுத்து, கனடா நேரடியாக அமெரிக்காவின் மத்திய கிழக்கு நட்பு நாடான சவூதியுடன் நேரடியாக முரண்படாது என சவூதி கருதுவதும் ஆகும்.
இந்நிலையில் குறித்த முறுகல் நிலை அண்மைக்காலத்தில் முடிவுறுமா என்பது கேள்விக்குறியானதே.
Average Rating