மேற்கத்தேய பொருளாதாரக் கொள்கைகளில் சீனாவுக்கு எதிரான நிலைப்பாடு!! (கட்டுரை)
ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் ஜீன்-க்ளூட் ஜுங்கருக்கும் இடையேயான சந்திப்புக்குப் பின், ஐரோப்பிய ஒன்றியத்திற்குத் தேவையான சோயா அவரை, திரவப் பெற்றோலிய எரிவாயு என்பவற்றை, ஐ.அமெரிக்காவிடம் இருந்து ஐரோப்பிய ஒன்றியம் கொள்வனவு செய்வதாகவும், அதற்குப் பதிலாக ஐ.அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய வாகன இறக்குமதிக்கான தீர்வையை 20 சதவீதத்தால் அதிகரித்தலை நிறுத்திவைத்தல் என்பன, உடன்பாடாக எட்டப்பட்டிருந்தன. இது, தற்காலிகமாகவே ஐரோப்பிய ஒன்றியம் – ஐ.அமெரிக்கா இடையிலான வர்த்தக நிலைமைகளைச் சீர்செய்வதற்கான ஒரு முனைப்பாகப் பார்க்கப்படுவதுடன், அத்திலாந்திக் கூட்டணி இன்னும் வர்த்தக யுகத்தில் தமது நிலையான இருப்பைப் பேண இது உதவும் எனவுமே கருதப்படுகின்றது.
பெயர் குறிப்பிட விரும்பாத ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், குறித்த ஐ.அமெரிக்க – ஐரோப்பிய ஒன்றியப் பேச்சுவார்த்தைகள் தொடரும் எனவும், இதன்படி, கைத்தொழில் பொருட்களுக்கான வியாபாரத் தீர்வை தொடர்பாக இருதரப்பு ஒப்பந்தமொன்று ஏற்படுத்தப்படும் எனவும், குறித்தஒப்பந்தத்தின்அடிப்படையில், உலக வர்த்தக அமைப்பில் (WTO) சீனாவும் சேர்த்துக்கொள்ளப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
குறித்த அமைப்பில் சீனாவைச் சேர்ப்பதற்கான காரணங்களில், ஐ.அமெரிக்க வர்த்தக தூதர் தூதர் டென்னிஸ் ஷியாவின் கூற்றுப்படி, “சீனாவின் சீர்குலைக்கும் பொருளாதார மாதிரி” உலக வர்த்தக அமைப்பின் ஏனைய அனைத்து உறுப்பினர்களுக்கும் மிகப்பெரிய பொருளாதார அச்சுறுத்தலாக அமைந்துள்ளதுடன், சீனா, குறித்த பொருளாதார நலன்களைப் பெறுவதற்கு கையாளும் முறைமைகள், வர்த்தகச் சட்டதிட்டங்களுக்கு முரணானவை என்பதே ஆகும். சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியே, சீனாவின் அரசாங்கத்தைத் தொடர்ச்சியாக அமைக்கும் இந்நிலையில், பல சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்களை சீனா மீறுவதன் மூலம், அதன் வணிக – வர்த்தகக் கொள்கையை விரிவுபடுத்துகின்றது எனவும், தூதர் ஷியா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும், 2005 தொடக்கம் 2016 வரையான காலப்பகுதியில், சீனா தனது முரண்பாடான வர்த்தகக் கொள்கை மூலமாகவே, உலகின் 2ஆவது பெரிய பொருளாதார நாடாக விருத்தியடைந்ததும், சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 9.5 சதவீதத்தையும் தக்கவைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. ஐ.அமெரிக்காவுக்குச் சார்பாக ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் ஆகியவை, சீனாவுக்கு எதிரான ஒருமித்த கருத்தை WTOஇல் ஆதரித்துள்ளதுடன், சீன அரச நிறுவனங்களின் “வர்த்தகத்தைச் சிதைக்கும்” நடைமுறைகளைக் கட்டுப்படுத்தும் வகையில், புதிய தொழிற்றுறைத் தீர்வைகளை வழங்குவதற்கு, WTO விதிகளில் சீர்திருத்தத்தை மேற்கொள்வதற்கு, ஐரோப்பிய ஒன்றியம் பிரேரணையை முன்வைத்துள்ளமை அவதானிக்கத்தக்கது.
மறுபுறத்தில் ஐ.அமெரிக்கா, WTOஇல் சீனாவை இலக்காகக் கொண்டு, சீன நிறுவனங்களின் மீதான கட்டுப்பாடுகளை உள்ளடக்கிய இரண்டு வர்த்தக முனைகளில் தனது வர்த்தகப் போரை மேலும் தீவிரப்படுத்தத் தீர்மானித்தது. இந்த வர்த்தகப் போர், சீனாவின் நீண்டகாலப் பொருளாதார மட்டுப்பாடுகளுக்கு வழிவகுக்கின்ற அதேவேளை, சீனா தனது தொழிற்சாலைகளை வடக்கு மலேஷியாவில் உள்ள பினாங்கு போன்ற வேறு இடங்களுக்கு மாற்றவும், இதனால் உற்பத்திச் சுங்க வரிகளைத் தவிர்ப்பதன் மூலம், உற்பத்திக்கான செலவில் அதிகப்படியான விலையைத் தவிர்க்கவும் குறித்த தொழிற்சாலைகள் முனைகின்றமை, சீனாவின் நேரடியான பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமானவையாக உள்ளன. இது, ஐ.அமெரிக்காவுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஐக்கியப்பட்ட வர்த்தக ஒப்பந்தமொன்றை உருவாக்க முடியும் என்ற சீனாவின் நம்பிக்கையைத் தகர்த்துள்ளது. குறித்த நம்பிக்கையானது, சீனாவுக்கு பிரித்தானியாவால், முன்னதாக ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகியவற்றுடன் இணைந்த, ஐ.அமெரிக்க தொழிற்ச்சந்தையை உள்வாங்காத ஒரு நிலையை கட்டியெழுப்ப வழங்கப்பட்டதாயினும், குறித்த இந்நிலையில், மேற்கத்தேய ஜனநாயகம் மீண்டும் தமது சொந்த நிகழ்ச்சிநிரலில் ஐ.அமெரிக்காவை உள்வாங்கியமை, சீனாவின் நீண்டகால ஐரோப்பிய ஒன்றியம் தொடர்பில் கொண்டிருந்த வர்த்தக நிலைப்பாட்டில் சறுக்கல் நிலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 40 ஆண்டுகளாக சீனாவின் பொருளாதார முன்னேற்றத்தில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளாக, தனியார் துறையினது வளர்ச்சி, அரச துறையின் வெளிவிவகார பொருளாதார கொள்கைகள் என்பன அமைந்திருந்தன. உலகளாவியப் பொருளாதாரத்தில் நுழைவதற்கு சீனா, டெங் ஜியாவோபிங்கின் ஆலோசனைகளின் அடிப்படையில், தனது பொருளாதாரத்தை நான்கு தளங்களில் பேணியிருந்தது. அதன் அடிப்படையில் முதலாவதாக, கம்யூனிஸ முறையை உடைத்து, விவசாயிகளுக்குச் சொந்த நிலங்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்டன; நகர்ப்புற வணிக நடவடிக்கைகள் செழித்தோங்கியபோது, இரண்டாவது ஆரம்பமானது; மூன்றாவது தளமாக, சீனாவின் வெளிவிவகாரக் கொள்கை, தென்சீனக் கடலில் சீனா கொண்டுள்ள ஆக்கிரமிப்பாலும் அதிகாரத்தாலும் நிறுவப்பட்டிருந்தது. நான்காவதான தளம், உலக வர்த்தக அமைப்பில் சீனா இணைந்தபோது தொடங்கியது.
எது எவ்வாறாக இருந்தபோதிலும், சீனா, சர்வதேச விவகாரங்களில் குறைந்த சுயவிவரத்தை வைத்திருப்பதற்கான ஆலோசனையைப் புறக்கணித்து, அரசியல் தாராளமயமாக்கலில் ஈடுபட்டமையே, பெய்ஜிங்கின் அபாயகாரமான பொருளாதார நெருக்கடிக்குக் காரணமாகும். அரசாங்கத்தின் தலைமையிலான வளர்ச்சி மாதிரியைப் பொறுத்தவரையில், தனியார் துறை கட்டுப்படுத்தப்பட்ட போது, அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் முன்னேறின. இது, குறித்த காலத்தில் சீனாவின் பொருளாதார வளர்ச்சியைத் தடைசெய்ததுடன், இப்பொழுது, நடந்து வரும் வர்த்தக யுத்தம், மறுபுறத்தில் சீனாவைப் பலவீனப்படுத்தத் தொடங்கியுள்ளது.
Average Rating