பேச்சுச் சுதந்திரமும் உண்மைத் திரிபுகளும்!! (கட்டுரை)

Read Time:13 Minute, 42 Second

ஊடக சுதந்திரம் அல்லது பேச்சுச் சுதந்திரம் என்பது, மட்டுப்பாட்டுக்குள் உள்ளானதா, இல்லாவிட்டால், எவ்வித மட்டுறுத்தல்களும் இல்லாமல் அனுமதிக்கப்பட வேண்டிய ஒன்றா என்பது, இலங்கையின் தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரை, இப்போது தான் கேள்வியாக எழுந்துள்ளது. இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பான கருத்துகளை வெளிப்படுத்தும் Demons in Paradise (சொர்க்கத்தில் அரக்கர்கள்/பேய்கள்) என்ற திரைப்படம், யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட அனுமதிக்கப்படாமை காரணமாகவே, இது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.

இலங்கை முழுவதிலும், அதிலும் தமிழ் ஊடகங்களைப் பொறுத்தவரை, ஊடக சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம் என்பன மட்டுப்படுத்தப்பட வேண்டியதா என்ற கேள்வி, இதுவரை காலமும் எழுந்ததில்லை. ஏனெனில், இதுவரை காலமும் எமக்கிருந்த பிரச்சினை, ஊடக சுதந்திரம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதாக இருந்ததில்லை; மாறாக, ஊடக சுதந்திரத்தின் அடிப்படையான அம்சங்களாவது மதிக்கப்படுமா என்பது தான், எமக்கிருந்த கேள்வியாக இருந்தது.

ஆனால், உலகின் பல்வேறு பகுதிகளிலும், இது தொடர்பான கலந்துரையாடல்கள் ஏற்கெனவே இடம்பெற ஆரம்பித்துவிட்டன. எம்மோடு நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட தமிழ்நாட்டில் கூட, இது தொடர்பில் ஏற்கெனவே பல கலந்துரையாடல்கள் இடம்பெற்று வந்தன. குறிப்பாக, நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால், தமிழக ஆளுநருக்கு எதிரான செய்தியை வெளியிட்டுக் கைதுசெய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டிருந்தார். அதைத் தொடர்ந்து, தந்தி தொலைக்காட்சியின் ரங்கராஜ் பாண்டேவால், அவர் நேர்காணப்பட்டிருந்தார். ஊடக சுதந்திரம் என்பது மட்டுப்பாடில்லாமல் இருக்க வேண்டுமா என்று ஆரம்பிக்கும் அந்த நேர்காணல், பொறுப்பான ஊடகவியல் என்றால் என்ன என்பதற்கும், சட்டத்தின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்டாலும், கீழ்த்தரமான ஊடகவியல் என்ன என்பதற்குமிடையிலான வித்தியாசங்களைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது.

ஆனால், இலங்கையிலுள்ள ஊடகங்களின் போக்குகள், உசுப்பேற்றும் செய்திகளை வெளியிடுவதிலேயே முக்கியமான கவனத்தைச் செலுத்தும் நிலையில், இப்படியான முக்கியமான கலந்துரையாடல்களை எல்லாம் காணக் கிடைப்பதில்லை. Demons in Paradise உருவாக்கியிருக்கும் இச்சூழல், இப்படியான கலந்துரையாடல்களுக்கு வழிவகுப்பது அவசியமானது.

ஆரம்பத்தில் விடுதலைப் போரை (அல்லது பயங்கரவாதப் போர். எந்தப் பக்கத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதில் தான், இவ்வித்தியாசம் இருக்கிறது) நியாயப்படுத்தி ஆரம்பிக்கும் திரைப்படம், இறுதிக் கட்டத்தில், தமிழ் மக்கள் மீதும் அவர்கள் ஆதரித்த போர் மீதும், ஏராளமான கேள்விகளை எழுப்புகிறது.

இத்திரைப்படம் மீது ஏராளமான விமர்சனங்கள் இருக்கின்றன. இத்திரைப்படத்தை எதிர்ப்போர் சொல்கின்ற முக்கியமான ஒரு விடயம் இருக்கிறது: “தமிழ் மக்கள், விடுதலைப் புலிகள் மீது கொண்டுள்ளதாக இயக்குநர் கருதும் தவறான எண்ணத்தை மாற்றுவதற்காக எடுக்கப்பட்ட திரைப்படம் என்றால், தமிழ் மக்கள் செறிந்துவாழும் இடங்களில், இத்திரைப்படம் ஏன் திரையிடப்படவில்லை?” என்ற கேள்வி முக்கியமானது.

அதேபோல், விடுதலைப் புலிகள் மீதும் தமிழ் மக்கள் மீதும் விமர்சனங்களை அதிகமாக முன்வைப்பதன் மூலம், அவற்றை முக்கியப்படுத்துவதற்கு இத்திரைப்படம் முயன்றாலும், இலங்கை அரச (இலங்கை அரசாங்கம் இல்லை, இலங்கை அரசு. அரசாங்கங்கள் எப்போது மாறிவந்தாலும், இலங்கையிலுள்ள அரச கட்டமைப்பு, எப்போதும் தமிழர்களுக்கு எதிரானதாகவே இருந்தது என்பது தவிர்க்கப்பட முடியாத உண்மை) தரப்பில் மேற்கொள்ளப்பட்ட நீதியின்மைகளுக்கும் கொடூரங்களுக்கும் அவை ஈடாகுமா என்ற கேள்வியும் தவிர்க்கப்பட முடியாதது.

மேலதிகமாக, எல்லாவற்றுக்கும் context என்று சொல்லப்படுகின்ற, சூழமைவு முக்கியமானது. தமிழ் மக்கள் ஆதரித்த வன்முறை அல்லது குற்றங்கள், அவை என்ன சூழ்நிலையில் ஆதரிக்கப்பட்டன என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும். “நாடொன்றின் மத்திய வங்கி மீது, ஆயுத இயக்கமொன்று தாக்குதல் நடத்திப் பேரழிவை ஏற்படுத்தியது” என்பது, தனித்துப் பார்க்கும் போது, மிகப் பயங்கரமான நடவடிக்கை; எந்த வகையிலும் நியாயப்படுத்தப்பட முடியாதது. ஆனால், இலங்கையின் வரலாற்றோடு அச்சம்பவத்தை வைத்துப் பார்த்து, தமிழ் மக்கள் மீது அரச கட்டமைப்புகளால் நடத்தப்பட்ட தாக்குதல்களின் பின்னணியில் அத்தாக்குதலை ஆராய்ந்தால், அத்தாக்குதல் மீதான எண்ணங்கள் வேறாக இருக்கும். அத்தாக்குதல் சரியானதா, இல்லையா என்பது, இங்கிருக்கும் விவாதம் இல்லை. மாறாக, அத்தாக்குதலைப் பற்றி உரையாட வேண்டுமானால், இங்கு காணப்பட்ட சூழமைவு விளங்கவைக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், நேர்மையான கருத்தாடலாக அது அமையாது.

இவ்வாறு, இத்திரைப்படம் மீதான ஏராளமான விமர்சனங்களை முன்வைக்க முடியுமென்றாலும், அத்திரைப்படம் திரையிடப்படுவதை நிறுத்துவது சரியானதா என்ற ஆரம்பக் கேள்விக்கான பதிலை மீண்டும் தேட ஆரம்பிப்பது முக்கியமானது. இத்திரைப்படம், தேர்வுசெய்யப்பட்ட உண்மைகளையும் திரிபுபடுத்தல்களையும் சூழமைவுகளைக் குறிப்பிடாமல் சம்பவங்களை விவரிக்கும் பண்பையும் கொண்டுள்ளது என்ற விமர்சனம் எவ்வளவுக்கு நியாயமானதாக இருந்தாலும், அதைத் திரையிடுவதற்கான வாய்ப்பை மறுத்தல் சரியானதா?

எல்லோரும் நினைப்பது போல, இதற்கான பதில், இலகுவானது கிடையாது. இவற்றின் பின்னணி பற்றி அறிவதற்கு, ஐக்கிய அமெரிக்காவில் அண்மைக்காலத்தில் எழுந்துள்ள பிரச்சினைகள் பற்றி ஆராயலாம்.

ஐ.அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவான பின்னர், கடும்போக்கு வலதுசாரிகளின் எழுச்சியொன்று ஏற்பட்டது. வெள்ளையினத் தேசியவாதத்தை முன்னிறுத்தும் பலரும் முக்கியத்துவப்படுத்தப்பட்டனர். அவர்களில் பலரும், இளைய சமுதாயத்தினரை இலக்குவைத்து, பல்கலைக்கழகங்களில் உரையாற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர்.

இளைய சமுதாயத்தை அவர்கள் இலக்குவைக்க, ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாத, இனவாதத்துக்கு எதிரான தரப்பினர், குறித்த கடும்போக்காளர்கள் உரையாற்ற முயலும் போது, அதைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்கள் உரையாற்ற வாய்ப்பு வழங்கிய பல்கலைக்கழகங்களுக்கு அழுத்தங்களை வழங்கி, அவர்களின் உரையாற்றும் வாய்ப்பைப் பறிக்கும் வரையில், அவர்கள் போராடினர்.

அத்தோடு, இப்படியான இனவாதக் கருத்துக்கொண்டோரை, தமது இணையத்தளங்களில் அனுமதித்த சமூக ஊடக வலையமைப்புகளுக்கு அழுத்தங்கள் விடுக்கப்பட்டன. அநேகமான நேரங்களில், இவ்வெதிர்ப்புகள் வெற்றிபெற்றன.

இப்படியான சூழலிலும், “பேச்சுச் சுதந்திரத்தை முடக்காதீர்” என்ற விமர்சனங்கள் எழுப்பப்பட்டன. ஆனால், இனவாதத்தையும் வெறுப்புப் பேச்சுகளையும் பரப்புவதற்கு, பேச்சுச் சுதந்திரத்தை அனுமதிக்க முடியாது என்ற பதில் வழங்கப்பட்டது. இவ்விடயம், இன்னமும் கூட, இடதுசாரிகள் அல்லது தாராளவாதிகளிடத்தே கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தும் ஒரு விடயமாக இருந்து வருகிறது.

இந்த உதாரணம் ஏனென்றால், பேச்சுச் சுதந்திரம் இன்னமும் சிறப்பாகக் கடைப்பிடிக்கப்படும் ஐ.அமெரிக்காவிலும், இது தொடர்பான கலந்துரையாடல்கள் இன்னமும் இடம்பெற்று வருகின்றன. அங்கு கூட, உறுதியான முடிவொன்று இதுவரை எடுக்கப்படவில்லை.

ஆனாலும் கூட, ஐ.அமெரிக்காவின் கடும்போக்கு வலதுசாரிகளுக்கும் Demons in Paradise திரைப்படத்துக்கும் இடையில், முக்கியமானதொரு வித்தியாசம் இருக்கிறது. அங்குள்ள கடும்போக்கு வலதுசாரிகள், அந்நாட்டு ஜனாதிபதியால் ஆதரிக்கப்படும் தரப்பினர் ஆவர்.

ஆனால், இலங்கையில் தமிழ் மக்களுக்கிடையில், சுய விமர்சனம் என்பது அரிதான ஒன்றாகவே இருந்து வந்திருக்கிறது. அவ்வப்போது எழும் உள்வீட்டு விமர்சனங்களும், ஏதோவொரு வகையில் அடக்கி ஒடுக்கப்படுகின்றன. அப்படியிருக்கும் போது, Demons in Paradise திரைப்படத்தைத் திரையிட்டு, அதன் பின்னர், அத்திரைப்படத்தின் தவறுகளை விமர்சித்து, அதன் படைப்பாளியைப் பொறுப்புக்கூற வைப்பது தான், பொருத்தமானதாக இருந்திருக்கும். அதற்கான வாய்ப்பை, தமிழ்ச் சமூகம் தவறவிட்டுவிட்டது.

இதில் இன்னொரு விடயமும் இருக்கிறது. திரைப்பட விழாவிலிருந்து Demons in Paradise அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, தெற்கிலுள்ள “பேச்சுச் சுதந்திரச் செயற்பாட்டாளர்கள்” பலரும், தமிழ்ச் சமூகத்தின் “குறுகிய மனப்பான்மையை” விமர்சித்ததைப் பார்க்கக்கூடியதாக இருந்தது; பேச்சுச் சுதந்திரம் என்பது எவ்வளவு அவசியமானது என, விரிவுரையாற்றியதையும் பார்க்கக்கூடியதாக இருந்தது. கவலையான விமர்சனம் என்னவென்றால், இதே “பேச்சுச் சுதந்திரச் செயற்பாட்டாளர்கள்”, சனல் 4 தொலைக்காட்சி அலைவரிசையால், ஊடக நியமங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட, “No Fire Zone: The Killing Fields Of Sri Lanka” ஆவணப்படத்தை, தெற்கு முழுவதிலும் திரையிடுவதற்கு அனுமதிக்க வேண்டுமென்று போராடியதே இல்லை. ஊடக விதிமுறைகளின்படி தயாரிக்கப்பட்ட அவ்வாவணப் படம், “பேச்சுச் சுதந்திரம்” என்பதற்குள் அவர்களைப் பொறுத்தவரை அடங்குவதில்லை; ஆவணப்படம் வெளியாகி 5 ஆண்டுகளின் பின்னரும், இலங்கையில் அதைத் திரையிட முடியாமையை, “குறுகிய மனப்பான்மை” என்று விமர்சிப்பதற்கும் எவரும் இல்லை. எல்லாமே விநோதம் தான், இல்லையா?

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலகில் ஆடைகளுக்கு தடை விதிக்கப்பட்ட கடற்கரைகள் எங்கு இருக்கு தெரியுமா ?(வீடியோ)
Next post சிறுநீரகக்கல் பிரச்னைக்கு சித்த மருத்துவ தீர்வு!!(மருத்துவம்)