சி.பி.ஐ, சி.ஏ.ஜி, சி.வி.சி; புயலில் சிக்கிய அரச அமைப்புகள்!! (கட்டுரை)

Read Time:14 Minute, 12 Second

அரசமைப்புப்படியும் பிரத்தியேகமான சட்டங்களின் அடிப்படையிலும் ஏற்படுத்தப்பட்டுள்ள தன்னாட்சி உரிமை படைத்த அமைப்புகளின் மீது, சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள், இந்திய அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயமாக உருவாகியிருக்கிறது.

குறிப்பாக, ‘சி.பி.ஐ’ (Central Bureau of Investigation), ‘சி.ஏ.ஜி’ (Comptroller and Auditor General), ‘சி.வி.சி’ (Central Vigilance Commission) ஆகிய மூன்று அமைப்புகளும் நிர்வாகக் கட்டமைப்புக்குள் உள்ள மிக முக்கியமான அமைப்புகள் ஆகும். அரசாங்கத்தின் செலவுக் கணக்குகளைப் பார்ப்பது, சி.ஏ.ஜி என்றால், அதில் ஏற்பட்டுள்ள இழப்பு, குறிப்பாக ஊழல், முறைகேடுகளால் ஏற்பட்டுள்ள இழப்பு ஆகியவற்றை விசாரிக்கும் அமைப்புகளாக சி.பி.ஐ, சி.வி.சி ஆகியன இயங்குகின்றன.

இந்த அமைப்புகள், தங்களின் சுதந்திரத்தை இழந்து தவிக்கின்றன என்று பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசாங்கத்தால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்திலும் இது போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. ஆனால், இப்போது இந்த மூன்று அமைப்புகளும் ‘புயலுக்கும் பூகம்பத்துக்கும்’ இடையில் சிக்கியிருக்கின்றன.

இந்தியாவின் முதன்மைப் புலானாய்வு அமைப்பான சி.பி.ஐ அமைப்பின் இயக்குநராக இருந்த அலோக் வர்மா, அதிரடியாக மாற்றப்பட, அவர் தனது பதவியை இராஜினாமா செய்தார். அந்த நிகழ்வு அரங்கேறிய சில நாள்களில், சி.பி.ஐ அமைப்பின் சிறப்பு இயக்குநர் ராகேஸ் அஸ்தனா உள்ளிட்ட நான்கு சி.பி.ஐ அதிகாரிகளின் பணியைக் கொத்தாக இரத்து செய்து, அவர்களைச் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கே திருப்பி அனுப்பும் உத்தரவை மத்திய அரசாங்கம் வெளியிட்டது.

இதையடுத்து, “பொறுப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள நாகேஸ்வரராவ் பதவியில் நீடிக்கக் கூடாது” என்று, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூசன், உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இப்படி வரலாறு காணாத அளவுக்கு இன்றைக்கு சி.பி.ஐ அமைப்பு, உச்சக்கட்டத் தாக்குதலுக்கு உள்ளாகி, நாடு முழுவதும் மட்டுமல்ல, உலக அரங்கில் கூட, தன் நன்மதிப்பை இழக்கும் சூழல் எழுந்திருக்கிறது.

பொதுவாக, நேர்மையான அமைப்பான இந்தப் புலானாய்வு அமைப்பு, அரசியல் சரவெடிகளில் சிக்காமல், உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் மிகுந்த கவனம் செலுத்தும் என்பது, நாடறிந்த உண்மை. அதனால்தான், சி.பி.ஐ அமைப்பில் பணியாற்றுவதே, ஒரு தனி கௌரவம் என்று பொலிஸ் அதிகாரிகள், குறிப்பாக ஐ.பி.எஸ் அதிகாரிகள் கருதுவது உண்டு.

இந்த அமைப்புக்குப் பொதுவாகப் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பொலிஸ் அதிகாரிகள் வருவார்கள். அதற்குப் பெரும் போட்டா போட்டி, நேர்மையான பொலிஸ் அதிகாரிகள் மத்தியில் நடக்கும். அந்த அளவுக்குப் பெருமை மிக்க புலனாய்வு அமைப்பு, கடந்த சில வருடங்களாக, அது ஐ.மு.கூட்டணி அரசாங்கமாக இருந்தாலும் சரி, தற்போதுள்ள தே.ஜ. கூட்டணி அரசாங்கமாக இருந்தாலும் சரி ‘கூண்டுக்கிளி’யாக மாறி, சித்திரவதைக்கு உள்ளாகியிருக்கிறது.

“சி.பி.ஐ என்ன கூண்டுக்கிளியா” என்று, இதன் இயக்குநராக ரஞ்சித் சின்கா இருந்த போது, உச்சநீதிமன்றமே கேள்வி எழுப்பினாலும், எந்த மாநில அரசாங்கமும் சி.பி.ஐ என்ற அமைப்பின் மீது, சந்தேகக்கணைகளை எழுப்பியதில்லை.

ஆனால், அந்த நிலை இன்றைக்கு தடம்மாறிப் போன நிலையில், சி.பி.ஐ அமைப்பின் மீதே ‘அழுக்கு மூட்டைகளை’ வீசும் போக்கு அதிகரித்துள்ளது. இதற்குப் பிள்ளையார் சுழியை, அந்த அமைப்பில் உள்ள இயக்குநருக்கும், சிறப்பு இயக்குநருக்கும் நடைபெற்ற பனிப்போர்தான் போட்டது. இருந்தாலும், மாநில அரசாங்கங்களே, “எங்கள் மாநிலத்துக்குள் அனுமதி பெறாமல் சி.பி.ஐ எந்த வழக்கையும் விசாரிக்கக் கூடாது” என்று பிறப்பித்த உத்தரவுகள், பெரும் சர்ச்சையை மட்டுமல்ல, சி.பி.ஐ அமைப்பின் மீது களங்கத்தை வலுப்படுத்தியிருக்கிறது.

ஆந்திர மாநில முதலமைச்சராக இருந்த சந்திரபாபு நாயுடு, தனது மாநிலத்துக்குள் சி.பி.ஐக்குக் கொடுக்கப்பட்ட விசாரணை அதிகாரத்தை, ஓர் அரசாணை மூலம் இரத்து செய்தார். அதேபோல், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, சி.பி.ஐக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தை வாபஸ் பெற்றார். சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சரான சத்திஷ்கரும், இந்த விசாரணை அதிகாரத்தை சி.பி.ஐயிடம் இருந்து பறித்தார்.

இப்படி சி.பி.ஐ என்ற அமைப்பின் மீது, மாநில அரசாங்கங்கள் போர் தொடுக்கும் நிலை, இப்போதுதான் முதல் முறையாக அரங்கேறி இருக்கிறது. இதன் விளைவாக, சி.பி.ஐ தொடுக்கும் வழக்குகள் மீது, இனி வரும் காலத்தில் என்ன மாதிரியான நம்பகத்தன்மை வரப்போகிறது என்பது, இப்போது கேள்விக்குறி ஆக்கப்பட்டுள்ளது.

இதேமாதிரி, சி.ஏ.ஜி அமைப்பு, அதாவது மத்திய, மாநில அரசாங்கங்களின் செலவுகளைக் கணக்காய்வு செய்து, சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் அறிக்கையாக முன்வைக்கும் அதிகாரத்தை, அரசமைப்புப்படி பெற்ற அமைப்பு இதுவாகும்.

இந்த அறிக்கை, நாடாளுமன்றத்தின் பொதுக்கணக்குக் குழுவுக்கே அனுப்பப்பட வேண்டிய அளவுக்கு அதிகாரம் பெற்ற முக்கியமான அமைப்பு இதுவாகும். 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் பரபரப்பான கற்பனைக் கணக்கை வெளியிட்டு, இந்திய அரசியல் களத்தில் ஆட்சி மாற்றத்துக்கு வித்திட்ட சி.ஏ.ஜி அமைப்பு, இப்போது ‘ரபேல் விமானப் பேர ஊழல்’ குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு, எதிர்க்கட்சிகளின் சார்பில் புகாரே கொடுக்கப்பட்ட நிலையிலும் கூட, எவ்வித ஆரவாரமும் இல்லாமல் அமைதியாக இருக்கிறது.

“ரபேல் குறித்த அறிக்கை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது” என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசாங்கம் இரகசிய அறிக்கை தாக்கல் செய்து, அது உச்சநீதிமன்றத்தின் ரபேல் தீர்ப்பில் இடம்பெற்ற பிறகும், இந்த அமைப்பு, அப்படியோர் அறிக்கையைக் கொடுத்தார்களா இல்லையா என்பது பற்றி வாயே திறக்கவில்லை.

அரசியல் களத்தைச் சூடாக்கும் எந்த அறிக்கையையும் குறிப்பாக, 2ஜி போன்ற கற்பனைக் கணக்குகள் அடங்கிய அறிக்கைகளை வெளியிடவில்லை. இதனால் சி.ஏ.ஜி அமைப்பின் சுதந்திரத்தின் மீது இன்றைக்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் விமர்சனம் செய்யும் சூழல் உருவாகி விட்டது.

மூன்றாவதாக, சி.வி.சி என்று சொல்லப்படும் மத்திய விழிப்புணர்வு ஆணைக்குழுவாகும். “இந்த ஆணைக்குழுவின் தலைவராக இருக்கும் சவுத்ரியை நீக்க வேண்டும்” என்று பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் மட்டுமல்ல,மார்க்ஸிஸ்ட் கொம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சீத்தாராம் எச்சூரியே கூறியிருக்கிறார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தில் சி.வி.சி தலைவராக நியமிக்கப்பட்ட தோமஸ், உச்சநீதிமன்றத்தாலேயே நீக்கப்பட்டார் என்பது ஒருபுறம் இருந்தாலும், இப்போது சி.பி.ஐ இயக்குநராக இருந்த அலோக் வர்மாவுக்கும் சிறப்பு இயக்குநராக இருந்த ராகேஷ் அஸ்தனாவுக்கும் ஏற்பட்ட புகார் பந்தயத்தில், சி.வி.சி அமைப்பு களங்கப்பட்டு நிற்கிறது.

சி.பி.ஐ இயக்குநர் மீது ஆதாரமில்லாத ஊழல் குற்றச்சாட்டுகளை முன் வைத்து, அவரை நள்ளிரவில் நீக்க உத்தரவிட்டது சி.வி.சி அமைப்பு. இது குறித்து விசாரிக்க, உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே. பட்நாயக், “அலோக் வர்மா மீது ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை. அவரை, சி.பி.ஐ இயக்குநர் பதவியிலிருந்து நீக்கியது, அவசரமான முடிவு” என்று சுட்டிக் காட்டியிருந்தார்.

சி.வி.சி அமைப்பின் மீதான நேர்மைத்தன்மைக்கு இது சவுக்கடியாக அமைந்தது. மத்திய அரசாங்கத்தின் எண்ணவோட்டத்துக்கு ஆதரவாக சி.வி.சி தலைவர் செயல்பட்டது, எதிர்க்கட்சிகள் மத்தியில் மட்டுமல்ல, சி.பி.ஐ போன்ற அமைப்பின் நம்பகத்தன்மை உயிரோடு இருக்க வேண்டும் என்று நினைக்கும் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும், மாநில அரசாங்கங்களுக்கும் கூட அதிர்ச்சியாகவே இருந்தது.

சி.பி.ஐ இயக்குநரை நள்ளிரவில் மாற்றவும் பிறகு பிரதமர் தலைமையிலான தேர்வுக்குழு அவரை அங்கிருந்து மாற்றி, அதிகாரமில்லாத பதவியில் பொம்மைபோன்று வைப்பதற்கும் சி.வி.சி கொடுத்த அறிக்கைதான் பயன்படுத்தப்பட்டது என்பது சி.வி.சியின் தன்னாட்சிச் சுதந்திரத்தின் மீது படிந்த கறையாக மாறியிருக்கிறது. ஆகவே, சி.ஏ.ஜி, சி.வி.சி, சி.பி.ஐ அமைப்புகளின் தன்னாட்சிச் சுதந்திரம் பறிபோவதும், நடுநிலைமை தவறுவதும் கூட, இந்த அமைப்புகளின் நேர்மைத்தன்மைக்கு சரியானது அல்ல.

ஆட்சிகள் மாறலாம்; அரசியல்வாதிகள் புதிது புதிதாக வரலாம்; ஆனால் இந்த அமைப்புகள் மீது வைத்துள்ள நம்பிக்கை எந்தக்காலத்திலும் மாறக்கூடாது என்பதே மக்களின் வலுவான எண்ணமாக இருக்கிறது.

ஒவ்வொரு முறையும் உச்சநீதிமன்றம் இந்த அமைப்புகளின் சுதந்திரத்தைப் பாதுகாக்க முயற்சி செய்திருக்கிறது. அது தொடர்பாக ‘வினித் நாராயன் வழக்கு’, ‘அலோக் வர்மா வழக்கு’ போன்றவற்றில் உரிய உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறது. ஆனால், இந்த அமைப்புகளைத் தங்களின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள்ளும் தாங்கள் ஆட்டுவிக்கும் பொம்மைகளாகவும் நடத்தும் மனப்பான்மையில் இருந்து, அரசியல்வாதிகள் மாறவில்லை.

ஐ.மு.கூட்டணி அரசாங்கத்தில் பிரதமராக மன்மோகன் சிங் இருந்த போதும் சரி, இப்போது பா.ஜ.க தலைமையிலான அரசாங்கத்தின் பிரதமராக நரேந்திரமோடி இருக்கும் போதும் சரி, நிலை ஒன்றுதான். மத்திய ஆட்சியில் கட்சிகளின் ஆட்சிதான் மாறியிருக்கிறது. இந்த மூன்று அமைப்புகளின் காட்சிகள் மாறவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செல்லுலாய்ட் பெண்கள்!! (மகளிர் பக்கம்)
Next post வயது கூடக்கூட உடலுறவில் ஆர்வம் குறைந்து விடும் என்பது உண்மையா?(அவ்வப்போது கிளாமர்)