வெட்கக்கேடான இனவாத அரசியல்!! (கட்டுரை)
‘‘சிங்களத் தலைவர்கள், சிறுபான்மை மக்களை அடக்கி, ஒடுக்கி வாழ்கிறார்கள்; அவர்களது அடிப்படை உரிமைகளைப் பறிக்கிறார்கள்; அவர்களது எதிர் காலத்தைப் பாழாக்கச் சதித் திட்டங்களை வகுத்துச் செயற்படுகிறார்கள்” எனக் கூறியே, ஒரு சாரார் கடந்த பல தசாப்தங்களாக அரசியல் நடத்தி வருகிறார்கள்.
அதேவேளை மற்றொரு சாரார், “தமிழர்கள் நாட்டைப் பிரித்தெடுக்கச் சதி செய்கிறார்கள்; அதற்குச் சிங்களவர்களில் ஒரு சாரார் துணைபோகிறார்கள்; தமிழர்களுடன், இரகசிய ஒப்பந்தங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள்” எனக் கூறிக் கொண்டு இருக்கிறார்கள். இப்போது மஹிந்த அணியினரும், அவ்வாறு தான் கூறிக் கொண்டு இருக்கிறார்கள்.
புதிய அரசமைப்பு தயாரிப்புத் தொடர்பான கலந்துரையாடல்கள், நாடாளுமன்றத்திலும் வெளியிலும் தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் சேர்ந்து, புதிய அரசமைப்பொன்றின் மூலம், முதலில் சமஷ்டி முறையொன்றை உருவாக்கி, பின்னர் அதனூடாக நாட்டைப் பிரிக்கச் சதி செய்து வருவதாக, மஹிந்த அணியினர் கூறி வருகிறார்கள்.
தமிழர்களுக்குப் பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் எனவே, எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தனியான பொலிஸ் படையொன்று உருவாகும் என்றும் சிங்கள மக்கள் அம்மாகாணங்களுக்குச் செல்வதற்காக விசா எடுக்க வேண்டியிருக்கும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள், தமது வாக்காளர்களைக் குறிப்பாகவும் சிங்கள மக்களைப் பொதுவாகவும் முட்டாள்களாக்கி, அவர்களைப் பயமுறுத்தி வருகிறார்கள்.
சிங்களக் கட்சியொன்று, தமிழர்களோடு சேர்ந்து நாட்டைப் பிரிக்கச் சதி செய்யுமா? இது நடக்கக் கூடியதா? சிங்களவர்கள் சிலர், தமிழர்களோடு சேர்ந்து, நாட்டைப் பிரிக்கச் சதி செய்கிறார்கள் என்பது ஒருபோதும் நடக்காத, நடக்க முடியாத அப்பட்டமான பொய்யாகும். அவ்வாறு சதி செய்துவிட்டு, அக்கட்சிக்கு என்ன கிடைக்கப் போகிறது?
அவ்வாறு நாட்டைப் பிரித்துக் கொடுத்துவிட்டால், அதற்குப் பின்னர், சிங்கள மக்கள் அந்தக் கட்சியை ஆதரிப்பார்களா? அவ்வாறு நாட்டைப் பிரித்துக் கொடுத்துவிட்டு, அக்கட்சி பதவிக்கு வந்தாலும் முன்னரை விட, சிறியதொரு நாட்டைத்தான் ஆள வேண்டியிருக்கும். அவ்வாறு நாட்டைப் பிரித்து, ஒரு பகுதியைத் தமிழர்களுக்குக் கொடுத்துவிட்டு, மற்றைய பகுதியை ஆழ, ஒரு கட்சி விரும்புவதற்கு, எந்தவொரு காரணமும் எவருக்கும் இருக்க முடியாது.
விந்தை என்னவென்றால், நாட்டைத் தமிழர்களுக்குத் தாரைவார்த்துக் கொடுக்க முயற்சிப்பதாக, மஹிந்த அணியினர், அதாவது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட அரசியல் கூட்டு, குற்றஞ்சாட்டுவதைப் போலவே இதற்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியும் அதனைச் சார்ந்த கட்சிகளும் ஸ்ரீ ல.சு.கவைப் பார்த்து, இதேபோல் குற்றஞ்சாட்டியுள்ளன.
நாம், இதற்கு முன்னர் பல முறை சுட்டிக் காட்டியதைப் போல், இது இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல், இவ்விரு கட்சிகளும் ஒன்றுக்கு எதிராக ஒன்று சுமத்தும் குற்றச்சாட்டாகும்.
பதவியில் இருக்கும் கட்சிக்கு எதிராகவே, இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது. அக் குற்றச்சாட்டுகள் உண்மையெனில், ஏன் இந்த இரு கட்சிகளின் தலைவர்களும் மாறி மாறிப் பதவிக்கு வந்து, தமிழர்களோடு சேர்ந்து, நாட்டைப் பிரிக்கச் சதி செய்கிறார்கள்? அதுவும் பதவிக்கு வந்ததன் பின்னர், அவர்கள் தமிழர்களோடு சேர வேண்டியதில்லையே. பதவிக்கு வரத் தான் மற்றவர்களுடைய உதவி தேவைப்படுகிறது.
உண்மையிலேயே நடப்பது என்னவென்றால், பதவிக்கு வரும் ஒவ்வொரு கட்சியும் ஆளும் கட்சி என்ற வகையில், இனப் பிரச்சினையைத் தீர்க்க, நடவடிக்கை எடுக்க நிர்ப்பந்திக்கப்படுகிறது. அந்த நடவடிக்கையைப் பூதமாகச் சித்திரித்து, பதவிக்கு வர எதிர்க் கட்சிகள் முயல்கின்றன. நேற்றுப் பதவியில் இருந்த போது, இவ்வாறான நடவடிக்கைகளை எடுத்த கட்சியே, இன்று எதிர்க்கட்சியில் இருந்து, நாக்கூசாமலும் எவ்வித வெட்கமுமின்றியும் இன்றைய அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளைக் காட்டி, சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் விரோதத்தை வளர்க்கிறார்கள்.
தமிழர்களுடன் சேர்ந்து, நாட்டைப் பிரிக்கச் சதி செய்வதென்னும் இந்தக் குற்றச்சாட்டின் வரலாற்றைப் பார்த்தால், அது எவ்வளவு கேலிக்கூத்தான குற்றச்சாட்டு என்பது தெளிவாகின்றது.
1956ஆம் ஆண்டு,“24 மணித்தியாலங்களில், சிங்கள மொழியை அரச கரும மொழியாக்குவேன்” என வாக்குறுதி அளித்துவிட்டு, பதவிக்கு வந்த பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க, 1957ஆம் ஆண்டு, அப்போதைய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்துடன் பிராந்திய சபைகளை உருவாக்குவது தொடர்பாக, ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டார்.
பண்டா-செல்வா ஒப்பந்தம் என்றழைக்கப்பட்ட அவ்வொப்பந்தத்தால், நாடு பிரியும் என அப்போதய ஐ.தே.க குற்றஞ்சாட்டியதை அடுத்தும், பௌத்த பிக்குகள் அதை எதிர்த்ததன் காரணமாகவும் பண்டாரநாயக்க அந்த ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்தார்.
அன்று அவ்வாறு கூறிய ஐ.தே.க, 1965ஆம் ஆண்டு, அதே தமிழரசுக் கட்சியுடன் சேர்ந்து, அரசாங்கத்தை அமைத்தது. பின்னர் இதேபோல், தமிழ்த் தலைவர்களின் சில கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக, அந்த அரசாங்கத்தின் பிரதமராகவிருந்த டட்லி சேனாநாயக்க, அதே செல்வநாயகத்துடன் ஒப்பந்தமொன்றைச் செய்து கொண்டார்.
முன்னர் செல்வநாயகத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்ட ஸ்ரீ ல.சு.க அப்போது ஐ.தே.க, தமிழர்களோடு சேர்ந்து நாட்டைப் பிரிக்க முயற்சிக்கிறது எனக் கூறி ஆர்ப்பாட்டம் செய்தது. மாக்ஸிய வாதிகள் என்று கூறிக் கொள்ளும் சில கட்சிகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டன.
இனப்பிரச்சினை ஆயுதப் போராக மாறிய போது, அதன் தாக்கத்தாலும் இந்திய நெருக்குவாரத்தின் காரணமாகவும் 1987ஆம் ஆண்டு, இலங்கை -இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில், மாகாண சபைகளை நிறுவ ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவின் தலைமையிலான ஐ.தே.க அரசாங்கம் நிர்ப்பந்திக்கப்பட்டது.
மாகாண சபைகள் மூலம், நாடு பிரிந்துவிடும் எனக் கூறி, அவற்றுக்கு எதிராக ஸ்ரீ ல.சு.க, மக்கள் விடுதலை முன்னணியினர் நடத்திய ஆர்ப்பாட்டங்களின் போது, நாடு முழுவதிலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இப்போது, அதே ஸ்ரீ ல.சு.க தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த மஹிந்த அணியினர், மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு கூச்சலிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இவர்களது பேச்சைக் கேட்டு, ஆர்ப்பாட்டம் செய்து, அன்று உயிர் துறந்தோரைப் பற்றிப் பேசுவோர் எவரும் இல்லை.
1994ஆம் ஆண்டு, ஸ்ரீ ல.சு.க தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைவியாக சந்திரிகா பதவிக்கு வந்தார். அதையடுத்து, இனப்பிரச்சினைக்குத் தீர்வாகப் பல திட்டங்களை சந்திரிகா முன்வைத்தார். புலிகளுடனும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தார்.
அதற்கான போர் நிறுத்த உடன்படிக்கையின் மூலம், அரசாங்கம் முதன் முறையாகப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை ஏற்றுக் கொண்டது. 1987 ஆம் ஆண்டு அவசரகாலச் சட்டத்தையும் ஊரடங்குச் சட்டத்தையும் பிறப்பித்து, மாகாணசபை முறையை அறிமுகப்படுத்திய ஐ.தே.க, சந்திரிகாவின் அந்தத் திட்டங்கள் மூலம் நாடு பிரிந்துவிடும் எனக் கூறி அவற்றை எதிர்த்தது.
ஆனால், அடுத்த கட்டத்தில், வரலாற்றில் முதன் முறையாக ஒரு மாற்றத்தைக் காண்கிறோம். நோர்வேயின் மத்தியஸ்தத்துடன் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை சந்திரிகா, ஆரம்பித்த போது, ஐ.தே.க அதை எதிர்க்கவில்லை.
இதைப் பற்றிக் குறிப்பிடும் போது, அப்போது தெற்காசியாவுக்குப் பொறுப்பாக இருந்த அமெரிக்கா இராஜாங்கச் செயலாளர் கார்ல் இண்டர்பேர்த், சந்திரிகாவின் சமாதானத் திட்டத்தை எதிர்க்க வேண்டாம் என, ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் அமெரிக்கா தெரிவித்துள்ளதாக, ‘இந்து’ பத்திரிகையிடம் கூறியிருந்தார்.
அதேபோல், ரணில் விக்கிரமசிங்க, 2002ஆம் ஆண்டு புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்த போது, சந்திரிகாவும் அதை எதிர்க்கவில்லை. தாமே பாதுகாப்புக்குப் பொறுப்பானவர் என்பதால், ஒப்பந்தம் சட்ட விரோதமானது என்று கூறுவதோடு அவர் நின்றுவிட்டார்.
ஐ.தே.க அரசாங்கம், ‘சமஷ்டி’ முறைப்படி இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது என, புலிகளுடன் ஒஸ்லோ நகரில் உடன்பாடு செய்து கொண்ட போது, அதற்கு முன்னரே சமஷ்டி முறையைத் தாமே அறிமுகப்படுத்தியவர்கள் எனக் கூறி, அவர் அதனை ஆதரித்தார். மஹிந்தவும் அவரது ஆதரவாளர்களுமே, அரசாங்கம் இனப் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கும் போது, அதை நாட்டை பிரிக்கும் ஒரு தந்திரமாகச் சித்திரிக்க, பழைய முறையில் மீண்டும் கூச்சலிட ஆரம்பித்துள்ளனர்.
அரசியல்வாதிகள் என்றால், பதவிக்காகவும் அதிகாரத்துக்காகவும் இவ்வாறு காலத்துக்குக் காலம் சமாதான சிற்பிகளாகவும் இனவாதிகளாகவும் மாறி மாறிச் செயற்படுகிறார்கள் என்று கூறலாம். ஆனால், அவர்களது வாக்காளர்களான சாதாரண மக்களும் ஏன் இவ்வாறு காலத்துக்குக் காலம் தமது கருத்தை மாற்றிக் கொள்கிறார்கள்? இன்று சரியென்று பட்டது, நாளை எவ்வாறு பிழையாகவும் நாளை மறுநாள் மீண்டும் சரியென்றும் ஏன் இவர்கள் விளங்கிக் கொள்கிறார்கள்?
மஹிந்த ஆதரித்த சமஷ்டித் திட்டங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே, ஒரு காலத்தில் பொதுஜன ஐக்கிய முன்னணியாகச் செயற்பட்டது. தனியாகப் போட்டியிட்டு, ஒரு பிரதேச சபை ஆசனத்தையாவது வெற்றி பெற முடியாத ஒரு சில, மிகச் சிறு கட்சிகள் மட்டுமே புதிதாக ஐ.ம.சு.முவில் இணைந்திருந்தன.
ஐ.மு.சு.மு தலைவர்கள், குறிப்பாக மஹிந்த அணியினர், சமஷ்டிப் பேயைக் காட்டி, சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தைத் தூண்டி வரும் நிலையில், பொதுஜன ஐக்கிய முன்னணி பதவியில் இருக்கும் போது, பல சந்தர்ப்பங்களில் முன்வைத்த சமஷ்டித் தீர்வுத் திட்டங்களை நினைவூட்டுவது பொருத்தமாகும். ஐ.ம.சு.மு என்று பெயரைச் சூட்டிக் கொண்டதன் பின்னரும், சில சமயங்களில் அக்கட்சி, சமஷ்டி முறையை ஆதரித்துள்ளது.
1995ஆம் ஆண்டு சந்திரிகா, புலிகளுடன் போர் நிறுத்த உடன்படிக்கையொன்றை செய்து கொண்டார். அதன்மூலம் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் ஒன்றைப் பொதுஜன ஐக்கிய முன்னணியே முதன் முதலில் அங்கிகரித்தது. அந்த அரசாங்கத்தில் மஹிந்த ராஜபக்ஷவும் அமைச்சராக இருந்தார்.
அதே ஆண்டு, சந்திரிகாவின் அரசாங்கம் இனப்பிரச்சினைக்குத் தீர்வுத் திட்டமொன்றை முன்வைத்தது. ‘பக்கேஜ்’ என்று பொதுவாக அழைக்கப்பட்ட அந்தத் திட்டத்தின் படி, இலங்கை ஒற்றை ஆட்சி முறையாகக் குறிப்பிடப்படவில்லை, பிராந்தியங்களின் ஒன்றியம் என்றே இலங்கை அழைக்கப்பட்டது. அதாவது, அது சமஷ்டித் திட்டமொன்றாகும்.
இதன் அடிப்படையிலேயே பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம், இனப்பிரச்சினை தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றுக்கு 1997ஆம் ஆண்டு, தமது பிரேரணைகளைச் சமர்ப்பித்தது. அதுவும் ஒற்றை ஆட்சித் திட்டமாக இருக்கவில்லை. இதே அடிப்படையில் தான், சந்திரிகா 2000ஆவது ஆண்டில் சமர்ப்பித்த அரசமைப்பு நகல் அமைந்திருந்தது. சந்திரிகா அதை, ‘சமஷ்டி அரசமைப்பு’ எனப் பகிரங்கமாகவே குறிப்பிட்டார்.
அதன் மூலம், 1987ஆம் ஆண்டு தற்காலிகமாக இணைக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்கள், மேலும் 10 ஆண்டுகளுக்கு இணைக்க அரசமைப்பின் மூலமே திட்டமிடப்பட்டு இருந்தது. அப்போதும் மஹிந்த அமைச்சராகவே இருந்தார்.
2002 டிசெம்பர் மாதம், ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கமும் புலிகளும் சமஷ்டி முறைப்படி இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதென ஒஸ்லோ நகரில் முடிவு செய்தன. அப்போது சந்திரிகா, அதனை ஆதரித்தார்; சந்திரிகாவின் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த மஹிந்தவோ வேறு அமைச்சர்களோ அதை எதிர்க்கவில்லை.
சுனாமி அனர்த்தத்தை அடுத்து, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிவாரண மற்றும் புனர்நிர்மானப் பணிகளை மேற்கொள்வதற்காக, புலிகள் 2005ஆம் ஆண்டு ஒரு திட்டத்தை முன்வைத்தனர். ‘கூட்டுப் பொறி முறை’ (Joint mechanism) எனச் சுருக்கமாகவும் ‘சுனாமிக்கு பின்னரான இயக்கப் பொறி முறை அமைப்பு’ (Post-Tsunami Operational Mechanism Structure-P-TOMS) என உத்தியோகபூர்வமாகவும் அழைக்கப்பட்ட அத்திட்டம், உண்மையிலேயே தனி நாட்டுக்கான வரைவொன்றாகவே அமைந்திருந்தது.
சந்திரிகா தலைமையிலான ஐ.ம.சு.மு அரசாங்கம் அதனை ஏற்றுக் கொண்டது. பிரதமர் என்ற முறையில் மஹிந்தவே அதை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இன்று மஹிந்தவுடன் இணைந்திருக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தான், 1995,1997,2000ஆம் ஆண்டுகளில் சந்திரிகா அரசாங்கம் முன்வைத்த சமஷ்டித் தீர்வுத் திட்டங்களை வரைந்தவர். 1995ஆம் ஆண்டு, கலாநிதி நீலன் திருச்செல்வத்துடன் சேர்ந்தே அவர் முதன் முதலில் அதனை வரைந்தார்.
2002ஆம் ஆண்டு, ஐ.தே.மு அரசாங்கத்தின் சார்பில் புலிகளுடன் சமஷ்டி முறைப் படி இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதென்ற உடன்படிக்கையைச் செய்து கொண்ட அரசாங்கத் தூதுக் குழுவின் தலைவராக இருந்தவரும் பீரிஸ் ஆவார்.
இவர்கள் தான், இன்று சம்ஷ்டி முறையைப் பேயாகச் சித்திரித்து, சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தைத் தூண்டி வருகிறார்கள்.
Average Rating